இந்திய அரசியல்வாதிகளின் தேர்தலுக்கான ஆயுதம்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கும் நிலையில், கச்சதீவு விவகாரம் பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றது. தமிழ்நாட்டில் மக்களின் வாக்குகளை வசீகரிப்பதற்காக மாநில ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் மத்திய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கச்சதீவு விவகாரத்தை துரும்பாக வைத்து ஏட்டிக்குப் போட்டியான விதத்தில் அனல் பறக்கும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
இலங்கைக்குச் சொந்தமான கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக் கொள்வதென்பது இனிமேல் நடைமுறைச் சாத்தியமான விடயமல்ல. இந்தியாவில் இந்திரா காந்தியும், இலங்கையில் சிறிமாவோ பண்டாரநாயக்கவும் பிரதமர்களாகப் பதவி வகித்த காலப்பகுதியில் இருநாட்டு அரசாங்கங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நட்புறவுப் பரிமாற்றம் அதுவாகும்.
அவ்வாறிருக்கையில், இலங்கைக்குச் சொந்தமாகவுள்ள கச்சதீவை இந்தியா எதிர்காலத்தில் மீளப்பெற்றுக் கொள்வதென்பது நடைமுறைச் சாத்தியமான விடயமல்ல. இந்தியாவில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஆரம்பமாகவிருக்கின்ற தேர்தல் கருதியே அங்குள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான வெறும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இலங்கையின் வடபகுதிக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் சம்பவங்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து வருகின்றன. இந்திய மீனவர்களின் சட்டவிரோதமான இந்நடவடிக்கை தொடர்பாக இலங்கை மீனவர்களாலும் அரசாங்கத்தினாலும் தொடர்ச்சியாக கண்டனங்கள் எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும், தமிழக மீனவர்கள் தங்களது அத்துமீறலை இன்னுமே நிறுத்திக் கொள்வதாக இல்லை.
இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பது சட்டபூர்வமான செயலென்றே தமிழக அரசியல்வாதிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தமிழகக் கரையோர மீனவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக அரசியல்வாதிகள் நடத்துகின்ற நாடகம் இதுவாகும். இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்வது சட்டவிரோதமான செயலென்றும் தமிழக அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.
தமிழக அரசியல்வாதிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக வெளியிடுகின்ற இவ்வாறான கருத்துகளாலேயே தமிழக மீனவர்கள் துணிச்சலுடன் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடித்து வருகின்றனர். தமிழக அரசியல்வாதிகளின் நீதிக்குப் புறம்பான கருத்துகளாலேயே தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுகின்றனர்.

தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையில் ஆரம்பத்திலேயே தமிழக அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தைக் கையில் எடுத்தனர். கச்சதீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீளப்பெற வேண்டுமென்பதே தமிழக அரசியல்வாதிகள் பலரின் நீண்டகாலக் கோரிக்கையாகும். தமிழக மாநிலத்தில் ஆளும் கட்சியான தி.மு.கவின் நீண்டகாலக் கோரிக்கையும் இதுவாகும்.
கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமாகி விட்டால், தமிழக மீனவர்களுக்குப் பிரச்சினை இருக்கப் போவதில்லை. தமிழக மீனவர்கள் கச்சதீவு வரை சென்று தாராளமாக மீன்பிடிக்கலாம். தங்களது வலைகளைக் காயவைப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் கச்சதீவைப் பயன்படுத்தலாமென்று தமிழக அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
தமிழக அரசியல்வாதிகளின் இக்கோரிக்கையின் பின்னணியிலும் அரசியல்தான் உள்ளது. கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டுமென வலியுறுத்துவதன் மூலம் மீனவர்களின் வாக்குகளை வசீகரிக்க முடியுமென தி.மு.க நம்புகின்றது. தி.மு.க மாத்திரமன்றி, தமிழக அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டுமென்றே வலியுறுத்தி வருகின்றன.
இவ்விடயத்தில் இன்னொரு வேடிக்கையும் உள்ளது. கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டுமென்று தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், ஆளும் பாரதீய ஜனதா கட்சி முன்னர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்ததே கிடையாது. அதுமாத்திரமன்றி, தமிழக அரசியல்வாதிகளின் இக்கோரிக்கையை பா.ஜ.க பரிசீலனை செய்ததும் இல்லை. கச்சதீவு விடயத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை பா.ஜ.க அலட்சியம் செய்து வந்ததென்பதே உண்மை.

கடந்தகால நிலைமை இவ்வாறிருக்கையில், கச்சதீவை மீளப்பெற வேண்டுமென்பதில் பா.ஜ.கவினரே தற்போது அதிகம் குரலெழுப்பி வருவதைக் காண முடிகின்றது. தமிழக மண்ணிலேயே பா.ஜ.கவினர் கச்சதீவு விவகாரத்தில் அதிக கரிசனை செலுத்தி வருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த வேளையிலும் கச்சதீவு விவகாரத்தை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
காங்கிரஸின் தவறினாலேயே கச்சதீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டார். இந்திய தேசத்துக்கு அதிக பாதிப்புகளை காங்கிரஸ் இழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். கச்சதீவு விவகாரத்தில் இதுவரை மௌனம் காத்து வந்த பா.ஜ.கவினர் தற்போது இவ்விடயத்தை கையில் எடுத்திருப்பது அரசியல் ஆதாயத்துக்காக என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில் கச்சதீவு விவகாரம் தற்போது முன்னிலைப்படுத்தப்படுவதை தமிழகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியமானது. ‘தொப்புள்கொடி’ உறவுக்குப் பங்கம் ஏற்படாத விதத்தில் இருநாட்டுத் தமிழர்களும் அவதானம் பேணுவது அவசியமாகின்றது.
-தினகரன் ஆசிரியர் தலையங்கம்
2024.04.16