இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, காங்கிரஸ் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியுள்ளது எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து 13 மாநிலங்களை சேர்ந்த 89 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 13 மக்களவை தொகுதிகளும் உண்டு.  இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரங்களை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று (ஏப்ரல்21) நடைபெற்ற பா.ஜ.க பிரச்சார பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தாலியை கூட விட்டுவைக்காது!

அவர், ”நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் உங்களது(இந்துக்கள்) செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் (இஸ்லாமியர்கள்) பகிர்ந்தளிப்பார்கள். யாரிடம் இருந்து செல்வத்தை வாங்கி அதை யாருக்குப் பிரித்துத் தருவார்கள்? கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தை இப்படி இழக்க யார் தயாராக இருப்பார்கள்? இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் அதிகாரம் எனக் கூறினார்.  சகோதர சகோதரிகளே, இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலியை கூட விட்டுவைக்காது” என்று மோடி காட்டமாக பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரதமர் மோடி தொடர்ந்து இப்படி தான் பேசி, மக்களை கலவரத்திற்கு தூண்டி விடுகிறார் என எதிர்க்கட்சிகள் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

சவாலை ஏற்க மோடி தயாரா? – காங்கிரஸ்

இதுகுறித்து தேசிய காங்கிரஸின் ஊடக தலைவர் பவன் கெராவும் பேசுகையில், “பிரதமர் மீண்டும் பொய் கூறுகிறார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இந்து முஸ்லீம் என்று எங்கேயாவது ஒரு வரி எழுதப்பட்டிருந்தால் அதைக் எங்களுக்கு காட்டுங்கள் என்பதே எங்களின் சவால். எங்களின் இந்த சவாலை ஏற்க மோடி தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதே போன்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மோடியால் தவறுதலாகக் கூட உண்மையைச் சொல்ல முடியாது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோடியின் இந்த பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குவியும் கண்டனங்கள்!

இதே போன்று பிரதமர் மோடியின் பேச்சை பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மதவெறியைத் தூண்டி மக்களைப் பிரித்து தேர்தல் ஆதாயம் தேடும் அற்பத்தனம்!

தோல்வி பயம் துரத்துவதால், மதவெறியைத் தூண்டி மக்களைப் பிரித்து தேர்தல் ஆதாயம் தேடும் அற் பத்தனத்தில் இறங்கியிருக்கிறார் பிரதமர் மோடி என்று இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகசாடியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

18வது மக்களவை பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல்  19 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கான தேர்தல் பிரச்சாரம் வடமாநிலங்கள் உட்பட பல மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பா.ஜ.கவைத் துரத்தும் தோல்வி
முதல் கட்ட தேர்தலே, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பா.ஜ.கவுக்கு பலத்த அடி கிடைக்கும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளது. தோல்வி  மிகத் தீவிரமாக பாஜகவைத் துரத்த  ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக அடுத்த தேர்தல் நடைபெற உள்ள  மாநிலங்களில் பா.ஜ.கவின் ஒற்றைப் பிரச்சாரகரான பிரதமர் நரேந்திர மோடி, பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார். முற்றிலும் மதவெறியின் உச்சத்தில், இந்து – முஸ்லிம் மக்களிடையே தீவிரமான பிளவை உருவாக்கி நாட்டில் நிரந்தரமாக இரத்த ஆறு ஓடச் செய்திட வேண்டும் என்ற வெறியுடன் அவர் தனது பிரச்சாரத்தில் பேசியிருக்கிறார். இதற்கு இந்திய அரசியல் அரங்கில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

மோடி பேசியது என்ன?
இராஜஸ்தான் மாநிலத்தில் பன்ஸ் வாடா எனும் இடத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மோடி, ‘‘மன் மோகன் சிங் பிரதமராக இருந்த  போது இந்த நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை முஸ்லிம் களுக்குத்தான் உள்ளது என்று கூறி னார். இதன் பொருள் என்ன? அவர்கள் (காங்கிரஸ்) யாருக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பார்கள்? யார் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ, யார் இந்த நாட்டின் மீது படையெடுத்து ஆக்கிரமித்தார்களோ அவர்களுக்கு சொத்துக்களை பிரித்துக் கொடுப்பார்கள்; நீங்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தருவதை ஏற்றுக் கொள்கிறீர்களா? வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா?’’ என்று மிகவும் ஆவேசத்துடன் பேசியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, ‘‘இந்த நகர்ப்புற நக்சல்கள், நமது தாய்மார்களின், சகோதரிகளின் தாலிக் கொடிகளில் உள்ள தங்கத்தைக் கூட விட்டு வைக்கமாட் டார்கள்’’ என்றும் அவற்றையும் பறித்து முஸ்லிம்களுக்கு தந்துவிடுவார்கள்’’ என்ற பொருளிலும் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

பிரதமரே விஷம் கக்கலாமா?

இது எத்தனை அக்கிரமமான, அராஜகமான  பேச்சு!

ஒரு நாட்டின் பிரதமரே தனது தேர்தல் பிரச்சாரத்தில் நேரடியாக இஸ்லாமிய  மக்கள் மீது வன்மத்தையும் விஷத்தையும் கக்குகிறார். முற்றிலும் உண்மையல்லாத விசயத்தை மக்கள் முன்னால் திரித்துக் கூறுகிறார்.

இது அப்பட்டமான மூன்றாந்தரப் பேச்சு. முற்றிலும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.

அவரது உரை வெளியான உடனே  சமூக ஊடகங்களில் திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சமூக ஊடக கூலிப் படைகளால் தீவிரமாகப் பரப்பப்படு கிறது. நாடு முழுவதும் இந்து எனும்  உணர்வு கொண்டோரிடையே திட்டமிட்டு இஸ்லாமிய வெறுப்பு பரப்பப்படுகிறது. இது தேர்தலில் இந்து மக்களின் வாக்குகளை அணிதிரட்டப் பயன்படும் என்று மோடியும் பாரதிய ஜனதா கட்சியும் கணக்கு போடுகிறார்கள்.

உண்மையில் மன்மோகன் சிங் பேசியது என்ன?
ஆனால், உண்மையில் மன்மோகன் சிங் அப்படிப் பேசினாரா என்பதை உடனடியாக, உண்மை கண்டறியும் ஊடகக் குழுக்கள் ஆய்வு செய்து, மோடியின் உரை முற்றிலும் பொய் என்பதை அம்பலப்படுத்திவிட்டன.

பிரதமர் மோடி குறிப்பிடுவது, 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத் த்தில் ஆற்றிய உரையே ஆகும். அந்த உரையில் மோடி குறிப்பிடுகிற – உண்மையில் மன்மோகன் சிங் பேசிய பகுதி இதுதான்:

‘‘நமது கூட்டு முன்னுரிமைகள் மிகத் தெளிவாக உள்ளன என்று நான் நம்புகிறேன். விவசாயம், நீர்வளங்கள், கல்வி, கிராமப்புற முதலீடுகள், பொது உள்கட்டமைப்பு முதலீடுகள் ஆகிய வற்றுடன்; தலித், பழங்குடி, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளின் நலன்களே நமது முன்னுரிமை’’.

மேலும் அவர், முஸ்லிம் சிறு பான்மை மக்கள் குறித்துப் பேசுகையில், ‘‘வளர்ச்சியின் பலன்கள் அவர்களுக்கும் (சிறுபான்மை மக்களுக்கும்) சேரும் வகையில் பொருத்தமான முறையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்’’  என்று குறிப்பிடுகிறார்.

அந்த உரையின் தொடர்ச்சியாக, ‘‘அவர்கள் நமது வளங்களில் முன்னுரிமை பெறுகின்றனர்’’ என்று மன்மோகன் சிங் முடிக்கிறார். இங்கு ‘‘அவர்கள்’’ என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டது, மேலே குறிப்பிட்ட அனைத்து தலித், பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் ஆகிய அனைவரையும் சேர்த்துத்தான் என்பது மிகத் தெளிவாக பதிவாகியிருக்கிறது.

ஆனால், நரேந்திர மோடி தனது இராஜஸ்தான் உரையில், மன்மோகன் சிங் அன்றைக்கு பேசியது முஸ்லிம் மக்களுக்காக மட்டுமே என்று திரித்துக் கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டிலேயே இதே குறிப்பிட்ட பேச்சு தொடர்பாக பா.ஜ.கவும் மோடியும் இதேபோன்று அவதூறு கிளப்பினார்கள்; அந்த சமயமே மன்மோகன் சிங் சார்பாக பிரதமர் அலுவலகம் அதற்கான விளக்கத்தையும் தெளிவாக தந்துவிட்டது. ஆனால், 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பிரச்சனையை – முற்றிலும் இல்லாத ஒன்றை – மன்மோகன் சிங் அவர்கள் குறிப்பிடாத ஒன்றை – எழுப்பி, நாட்டு  மக்களை திசை திருப்பவும் தேர்தல் ஆதாயத்திற்காக மதப்பிளவை உருவாக்கவும் நரேந்திர மோடி பயன்படுத்துகிறார். 

‘பிரதமர்’ என்பது நாட்டின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து, அரவணைத்துச் செல்ல வேண்டிய உயரிய பதவி. ஆனால் அந்தப் பதவிக்கு  சற்றும் மரியாதை இல்லாத விதத்தில், மோடி மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அவரை தேர்தல் தோல்வி பயம் எந்த  அளவிற்கு துரத்துகிறது என்பதை இதன்  மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

பலத்த அடிபெறுவது உறுதி
தென் மாநிலங்களில் பா.ஜ.க பலத்த அடி  பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், வட மாநிலங்களிலும் கடும் சரிவை சந்திக்கும் என்பது தினந்தோறும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் மூலமாக தெரியவருகிறது. குறிப்பாக இராஜஸ்தானில் பா.ஜ.கவுக்கு எதிராக மிகப்பெரும் அலை உருவாகியுள்ளது.

தென் மாநிலங்களில் பா.ஜ.க பலத்த அடி  பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், வட மாநிலங்களிலும் கடும் சரிவை சந்திக்கும் என்பது தினந்தோறும் அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் மூலமாக தெரியவருகிறது. குறிப்பாக இராஜஸ்தானில் பா.ஜ.கவுக்கு எதிராக மிகப்பெரும் அலை உருவாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் மத அரசியல் பேசக்கூடாது; மதவெறுப்பைத் தூண்டக் கூடாது என்பது விதிமுறையாகும். ஆனால், இத்தகைய கடுமையான மத வெறி பிரச்சாரத்தை பிரதமர் மோடி கட்ட விழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கிறது. அதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கட்சியின் மத்தியக் குழு புகார்க் கடிதமும் அனுப்பியுள்ளது.

இந்த தோல்வி பயம் மோடியை  மேலும் துரத்துவது உறுதி. இதுபோன்ற மதவெறிப் பேச்சுக்களை புறந்தள்ளி மக்கள் நிச்சயம் எதிர்வினை ஆற்றுவார்கள் என்பது திண்ணம். வட மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி கணிசமான இடங்களை பெறுவதும் மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதும் உறுதி.

Tags: