உலகப் புத்தக தின நினைவு அலைகள்!
–நா.மணி
அறிவியல் இயக்கத்தின் அறிமுகமே, உலக புத்தக தினத்தை அறிமுகம் செய்தது. புத்தக காதலர்கள் 1926 ஆம் ஆண்டு முதலே உலக புத்தக தினத்தை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஆனால், யுனெஸ்கோவின் அறிவிப்பு 1995 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23 திகதியில் இருந்து தான். இந்த 1995 ஆம் ஆண்டில் கல்லூரி பேராசிரியராக பணியில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் கடந்து இருந்தது. கல்லூரி ஆசிரியர் சங்கப் பணிகளில் தீவிர ஈடுபாடும் காட்டத் தொடங்கியிருந்தேன். அப்போதெல்லாம் உலகப் புத்தக தினம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்த பிறகே உலகப் புத்தக தினத்தின் முக்கியத்துவம் பற்றி அறியத் தொடங்கினேன். மாநில செயற்குழு கூட்டத்தில் உலகப் புத்தக தினத்தை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது? கருத்தரங்கம் புத்தக விற்பனை பற்றியெல்லாம் விரிவான திட்டமிடல் நடக்கும். பல்வகையான புத்தக விற்பனை உத்திகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு புதிய உத்தியை கையாண்டனர். புத்தகத் தேர் ஒன்றை உருவாக்கினர். அதனை வீதிகளில் ஊர்வலமாக இழுத்துச் சென்று புத்தக விற்பனையில் ஈடுபட்டனர்.
இந்த செயல்பாடுகள் பிரமிப்பு ஊட்டுவதாக இருந்தது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் என்ற முறையில் நானும் எனது பங்கிற்கு முக்கிய கடமை ஆற்ற வேண்டி இருந்தது. புத்தக விற்பனைக்கு திட்டமிடும் போது, ஏற்பட்ட அனுபவங்கள் இப்போதும் கூட மிகுந்த உற்சாகம் ஊட்டுகிறது.
முதல் முதலாக நாங்கள் ஏற்பாடு செய்த உலக புத்தக தின கருத்தரங்கில் மறைந்த ஈரோட்டின் மக்கள் மருத்துவர் ஜீவானந்தம் கலந்து கொண்டு பேசினார். பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் புத்தகம் வாசிப்பது இல்லை என்ற கோபத்தில் அவரது வார்த்தைகள் கொப்பளித்தது. சுடு சொற்களை ஆதங்கத்தோடு பகிர்ந்து கொண்டார்.
“எத்தனை ஆசிரியர்கள் பேராசிரியர்கள் புத்தகம் வாசிக்கிறீர்கள்? எத்தனை பேர் காசு கொடுத்து புத்தகம் வாங்கிப் படிக்கிறீர்கள்? உங்கள் மாத சம்பளம் எவ்வளவு? அதில் புத்தகம் வாங்க நீங்கள் ஒதுக்கீடு செய்யும் தொகை எவ்வளவு? நீங்கள் வாசிக்காமல் மாணவர்கள் எப்படி வாசிப்பார்கள்? நீங்கள் வாசிக்காமல் சமூகம் எப்படி வாசிக்கும்?
உங்களைப் பார்த்து இப்படி நான் ஆக்ரோஷமாக பேசுவதால் நீங்கள் வருத்தப்படலாம். ஆனால், உங்களைத் திட்ட எனக்கு உரிமை இருக்கிறது. உங்கள் ஊதிய விகிதங்கள் மேம்பட நானும் போராடி இருக்கிறேன். உங்கள் ‘ஜேக்டீ’ போராட்டத்தில் நான் சட்டை கூட இல்லாமல் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். எனக்கு உங்களைத் திட்ட உரிமை இருக்கிறது” என்று மருத்துவர் ஜீவானந்தம் பேசினார்.
அப்போதே அவர் சுமார் இரண்டாயிரம் ரூபாயுக்கு புத்தகமும் வாங்கினார். எழுத்தாளர் சுப்பரபாரதி மணியன், எஸ். இராமகிருஷ்ணன் என பலரை அழைத்து வந்து உலக புத்தக தின கருத்தரங்கங்கள் நடத்தினோம்.
உலகப் புத்தக தினத்திற்கு மாநில மையத்தில் இருந்து வரவழைக்கப்படும் புத்தகங்களை வைக்க இடம் இருக்காது. அதனை நம் வீட்டில் அடுக்கி பாதுகாக்க வேண்டும். உலகப் புத்தக தின கருத்தரங்கம் விற்பனை முடிந்து வீடு திரும்பும் போது, நம்மிடம் இருக்கும் சிறிய இரு சக்கர வாகனத்தில் முன்னாள் புத்தகப் பெட்டிகள், அதற்கு மேல் மகள், பின்புறம் மனைவி. இப்படியான பயணங்கள் இன்று நினைத்தால் அலாதி சுகம் தருகிறது.
வீட்டில் அடுக்கி வைத்திருக்கும் புத்தக மூட்டைகளை சரியாக பராமரிக்க முடியாமல் கஷ்டப்படுவோம். இதனை ஒட்டியும் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும். “இதோ இன்றே எடுத்துக் கொண்டு சென்று விடுகிறேன் என்று வாக்குறுதி அளிப்போம்”. கண்டிப்பாக அவை அந்த இடத்தை விட்டு நகராது என்று அவருக்கும் தெரியும். அத்தகைய சண்டைகள் கூட இனிமையான நினைவுகளாக இப்போது தோன்றுகிறது.
ஈரோடு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை ஒட்டி இரண்டு மாதங்கள் கடைகள் விரிப்பார்கள். மாரியம்மன் கோவில் வந்து பலவிதமான பொருட்களை வாங்கிச் செல்லும் மக்கள் மத்தியில் ஏன் ஒரு புத்தகக் கடை கூட இல்லை? ஏதேதோ வாங்கும் மக்களின் நுகர்வு நாட்டத்தை மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு, நாமும் அடுத்த ஆண்டு இதில் ஒரு கடை வாடகைக்கு எடுத்து புத்தகக் கடை விரிக்க வேண்டும் என்று திட்டமிடுவோம். சரி அதற்கு முன்னர், மாரியம்மன் கோவில் எதிரில் கடை விரிக்கலாம் என்று முடிவெடுத்து மாலை நேரம் மாரியம்மன் கோவில் எதிரே புத்தகக் கடை விரித்தோம். “கடை விரித்தோம் கொள்வார் இல்லை” என்றானது.
இரண்டு நாட்கள் 220 ரூபாய்க்கு மட்டுமே புத்தகம் விற்பனை ஆனது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்னால் புத்தகக் கடை விரிப்போம். மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்கள் வலுவாக இருக்கும் எல்.ஐ.சி, பி.எஸ்.என்.எல் அலுவலகங்களில் விற்பனை கொஞ்சம் சிறப்பாக இருக்கும். இதர அலுவலகங்களில் சாமான்ய பொது மக்கள் மத்தியில் புத்தக விற்பனை போலவே இருக்கும். ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி நடத்தும் கூட்டங்களில் புத்தக விற்பனை செய்ய முயன்று தோற்றுப் போனோம். 200 ரூபாய்க்கு புத்தகம் விற்பது பெரும்பாடாக இருந்தது.
அதேசமயம் காங்கேயம் நகரில் வாரச் சந்தையில் புத்தக விற்பனை நடத்தினோம். நாங்கள் கொண்டு சென்ற பெரும்பகுதி புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தது. நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து, “சாமி! எம்பேத்தி ஏழாம் வகுப்பு படிக்கிறா. அவ படிக்கிற மாதிரி ஒரு புத்தகம் குடுங்க” என்று ஆசை ஆசையாக வாங்கிச் சென்ற பாட்டிமார்களை பார்த்து உற்சாகம் பெற்றோம்.
நூற்றுக்கும் மேல் ஆசிரியர்கள் கூடிய ஓர் இடத்தில் புத்தக விற்பனையில் ஈடுபட்டோம். “இருப்பதில் குறைந்த விலை புத்தகம் ஒன்று கொடுங்கள்” என்று ஓர் ஆசிரியர் கேட்டார். நாங்கள் வெளியிட்டு வரும் துளிர் அறிவியல் மாத இதழ் பத்து ரூபாய் என்றோம். குறைத்து தர முடியுமா என்று கேட்டார். நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். “தூறல் விழுந்து கொண்டு இருக்கிறது. தலைக்கு மேல் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குத் தான்” என்றார். நாங்கள் துவண்டு போனோம்.
தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் தாய் அமைப்பு என்றால் அது கேரளாவில் இருக்கும் “கேரளா சாஸ்திர சாகித்திய பரிஷத்” என்பதே. அதன் செயல்பாடுகள் புத்தக விற்பனை உத்திகள், முயற்சிகள் எங்களை பிடித்து ஆட்டும். அந்த அமைப்பின் தேவைகளுக்கான பணம் முழுவதையும் புத்தக விற்பனையில் இருந்தே திரட்டுவார்கள். ஒரு வருட இயக்கச் செலவை ஒரு மாத புத்தக விற்பனையில் இருந்து திரட்டி விடுவார்கள். வருடம் ஒன்றுக்கு, மூன்று கோடிக்கு சர்வசாதாரணமாக விற்பனை செய்வார்கள்.
இப்படி புத்தக விற்பனை மேற்கொள்ளும் போது, அந்த அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் புத்தக விற்பனையில் ஈடுபட வேண்டும். அவ்வமைப்பின் உறுப்பினர் ஒருவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகிவிட்டார். துணைவேந்தர் ஓர் சிறப்பு விதிவிலக்கு கேட்டார். “நான் துணைவேந்தராக பொறுப்பு ஏற்றுக் கொண்டதால், இந்தப் பணி நிறைவடையும் வரையில் புத்தக விற்பனையில் பங்கேற்க விதி விலக்கு அளிக்க வேண்டும் ” என்று கோரினார். அவர் கோரிக்கையை கேரள அறிவியல் இயக்கம் நிராகரித்து விட்டது.
“நம் அமைப்பின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடைபெற்றுக் கொள்ளுங்கள். துணைவேந்தர் பதவி முடிந்து மீண்டும் உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள்” என்று அவருக்கு பதில் அளித்தது, கேரள அறிவியல் இயக்கம். இத்தகைய கேரள அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் புத்தக மூட்டைகளை சுமந்து திரிவதைப் பற்றிய பொது புத்தியில், “ஒரு பேராசிரியர் இப்படி புத்தக மூட்டைகளை சுமந்து திரிகிறாரே” என்பது போன்ற வெட்கம் வரவில்லை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தோன்றவில்லை.
தற்போதைய பணிகளால் முன்புபோல் புத்தக விற்பனையில் ஈடுபட முடியவில்லை. ஆனால், தற்போதைய பணி நிலைக்கு ஏற்றவாறு புத்தக விற்பனை, நூல் விமர்சனம், புத்தக அறிமுகம் ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய கல்வி வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால், புத்தக வாசிப்பு, புத்தக விற்பனை புத்தகங்களை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
தமிழ் நாடு அறிவியல் இயக்கம் போன்ற இயக்கங்கள் செய்த முயற்சிகள் மட்டுமே பிரதானமாக இருந்தது. புத்தக வாசிப்பை முன்னெடுக்க தற்போதைய தமிழ் நாடு அரசின் முயற்சிகள் பெரும் உத்வேகம் ஊட்டுகிறது. மாவட்ட அளவிலான புத்தக கண்காட்சிகள் பள்ளிகளில் தொடங்கியிருக்கும் வாசிப்பு இயக்க முயற்சிகள் வாசிப்புக்கு வழிகாட்டும் சிறந்த நடைமுறைகள். உலகப் புத்தக தினத்தன்று நாம் வாசிக்கும் நூல்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுதல். வீட்டில் அனைவரும் அருகில் உள்ள புத்தக கடைகளுக்கு சென்று ஒரு சில புத்தகங்களை வாங்குதல். இணைய வழியில் புத்தகங்கள் வாங்க திட்டமிடுதல். இப்படி பல செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
தமிழ் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளது என நாமெல்லாம் சிலாகித்து வருகிறோம். வாசிப்பில் இன்னும் கொஞ்சம் வேகமெடுத்தால் அந்த வளர்ச்சி விகிதம் கூடும். தமிழக சிறைத்துறை, சிறைக்குள் நூலகங்களையும் நூல் வாசிப்பையும் ஊக்குவித்து வருகிறது.
அதில் பலன் பெற்ற மரணதண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாழும் ஒருவர் சொல்கிறார், “நூல் வாசிப்பு, தனிமையை போக்குகிறது. வரலாற்றை புரிந்து கொள்ள உதவுகிறது. சுய முன்னேற்ற வழிகளை அறிந்து கொள்ள உதவி செய்கிறது. தன்னம்பிக்கையை வாழ்க்கையில் விதைக்கிறது. தன்நிலையை அறிய நூல் வாசிப்பு உதவி செய்கிறது” என்கிறார்.
இத்தகைய நூல் வாசிப்பு பயன்பாடுகள் இருக்கும் வரை சுணக்கம் இன்றி நூல் வாசிப்பை மையப்படுத்தும் வரை, உலகப் புத்தக தினம் போன்ற நாட்கள் வழியாக வாசிப்பை மேம்படுத்த தொடர்ந்து நம்பிக்கையோடு வருடாவருடம் உலக புத்தக தினத்தை உற்சாகத்தோடு கொண்டாடி மகிழலாம்.