மே நாள் பற்றி தந்தை பெரியார்
–எஸ்.வி.ராஜதுரை
தமிழகத்தில் முதன்முதலில் மே நாள் விழாவை நடத்தியவர் அறிஞர் அண்ணாவால் ‘சிந்தனைச் சிற்பி’ என்று அழைக்கப்பட்டவரும் ’தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ எனக் கருதப்படுபவருமான ம.சிங்காரவேலர்.
தற்போது மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை ஆகியவை உள்ள இரு இடங்களில் செங்கொடி ஏற்றி மே நாளைக் கொண்டாடினார்.
அப்போது அவருக்குப் பெரும் அமைப்பு வலிமை ஏதும் இருந்திருக்கவில்லை. உழைக்கும் மக்களின் விடுதலையில் அளப்பற்ற அக்கறை கொண்டிருந்த அவர், அச்சமயம் காங்கிரஸ்காரர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தொழிற்சங்கத் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்டும் அவதூறு செய்யப்பட்டும் இருந்தார்.
எனினும் ‘ தொழிலாளர், விவசாயிகள் அமைப்பொன்றை’க் கட்டும் நோக்கத்துடன்தான் அவர் மே நாள் கொண்டாட்டத்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. கெடுவாய்ப்பாக இது பற்றிய விரிவான தகவல்கள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை.
சென்னை நகரில் மட்டுமே 1923 இல் ம.சிங்காரவேலரால் கொண்டாடப்பட்ட மே நாளைத் தமிழகம் முழுவதிலும் பரவலாகக் கொண்டாடச் செய்தவர் தந்தை பெரியார். 14.5.1933 ஆம் நாளிட்ட ‘குடி அரசு’ இதழில் அவர் விடுத்த அறிக்கை வழியாக இதைத் தெரிந்து கொள்ளலாம்.
அப்போது பிரிட்டிஷ் பேரரசின் மாமன்னராக இருந்த ஐந்தாம் ஜோர்ஜின் வெள்ளிவிழாக் கொண்டாட்டமும் இந்தியா முழுவதிலும் கொண்டாடப்பட்டது, எனவே அந்த ஆண்டு 21ஆம் நாளன்று மே நாள் கொண்டாடப்பட வேண்டும் என்று கூறிய பெரியாரின் அறிக்கை வெளியிடப்பட்ட போது அவரது சுயமரியாதை சமதர்ம இயக்கம் எதிர் கொண்டிருந்த அரசியல் நெருக்கடிகள் பற்றிய சில செய்திகளை நாம் காண வேண்டும்.
‘குடி அரசு’ ஏட்டில் சென்னை மாகாணத்தில் கல்வி கற்பிப்பதில் இருந்த குறைபாடுகளை விளக்கி பெரியார் எழுதிய ஒரு கட்டுரைக்காக அவரும் ‘குடி அரசு’ ஏட்டின் அன்றைய பதிப்பாளரான பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் இராஜதுரோகக் குற்றம் சட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். (இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்து வாதிட மறுத்ததால் பெரியாருக்கு 6 மாதச் சிறைத்தண்டனையும் கண்ணம்மாளுக்கு அதைவிடக் குறைவான சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன (புரட்சி, 27.1.1934).
அவர்கள் இருவரும் விடுதலையான சில மாதங்களுக்குப் பிறகு பகத் சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன்’ என்ற நூலைத் தமிழாக்கம் செய்த ப.ஜீவானந்தமும் (ஜீவா), அதை வெளியிட்டவரும் பெரியாரின் தமையனாருமான ஈ.வெ. கிருஷ்ணசாமியும் கைது செய்யப்பட்டனர் (குடி அரசு, 24.2.1935). மேலும்,‘குடி அரசு’ அலுவலகத்தில் காவல் துறை ரெய்டுகள் நடந்தன; சுயமரியாதை இயக்கம் வெளியிட்ட நூல்கள் கைப்பற்றப்பட்டன.
அச்சமயம் காங்கிரஸ் பிரிட்டிஷாருக்கு எதிரான சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றைக் கைவிட்டிருந்தது. காலம் காலமாக நிலவி வரும் வருண தர்மத்தையும் சாதி அமைப்பையும் பாதுகாப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காங்கிரஸ்தான் சுயமரியாதை இயக்கத்தின் முதல் எதிரி என்று கருதி வந்தார் பெரியார்.
அந்தச் சூழலில் பிரிட்டிஷாரின் ஒடுக்குமுறை சுயமரியாதை இயக்கத்தின் மீதே தன் கவனம் முழுவதையும் செலுத்தியது. அந்த இயக்கம் முழுவதுமே தடை செய்யப்படும் சூழ்நிலை உருவாகியிருப்பதாக நீதிக்கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த ஆர்.கே.சண்முகம் பெரியாருக்குத் தகவல் தெரிவித்திருந்தார்.
எனவே பெரியார் தனது இயக்கத்தைக் காப்பாற்றும் நடைமுறைத் தந்திரமாக, தனது இயக்கம் பொதுவுடைமைக் கொள்கைகளை இனி பரப்புவதில்லை என்று பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்திற்கு எழுத்து வடிவத்தில் மன்னிப்புக் கேட்கும் உறுதிப் பத்திரம் (statement of intent) எழுதிக் கொடுத்ததுடன், ப.ஜீவானந்தமும் கே.ஏ.கிருஷ்ணசாமியும் மன்னிப்புக் கடிதமெழுதிக் கொடுத்துவிட்டு விரைவில் விடுதலை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுப்பதற்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் அவர்கள் அல்லர் என்றும், ஒரு தலையங்கத்தில் எழுதினார் (குடி அரசு, 31.3.1935).
ஆனால் அந்தத் தலையங்கம் எழுதப்பட்ட ஒரு மாதம்கூட நிறைவடையாத போது, மே நாளைத் தமிழகத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் கிராமங்களிலும் இசை நிகழ்ச்சிகளோடு கொண்டாட வேண்டும் என்ற அறிக்கையை பெரியார் வெளியிட்டார் (குடி அரசு, 28.4.1935). முன்போலவே பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளும் சோவியத் ருஷ்யா பற்றிய கட்டுரைகளும் ‘குடி அரசு, ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ஆகிய சுயமரியாதை இயக்க ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டன.
காரைக்குடியில் நடந்த மே நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய பெரியாரின் உரையிலிருந்து சில பகுதிகள்:
“மே தினமென்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசத்திலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷியாவில் கொண்டாடப்படுவது போல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரேவிதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.
ஆரம்ப திசையில் உள்ள தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது. இன்று ரஷியாவில் மே தினத்தைக் கொண்டாடுவதன் முக்கிய நோக்கம் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையைப் பொருத்ததாகும்.
”இங்கிலாந்து, பிரெஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடுவதன் நோக்கம் ரஷியாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்ற ஆசையைப் பொருத்ததாகும். எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் பிரதான வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில், சிறப்பாக சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மேதினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும். அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்த நாட்டு நிலைமைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.
”மேலை நாடுகளில் இருக்கும் மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொருத்து இருக்கிறார்கள். அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகிறது
”ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில்நிலையையும் செல்வ நிலையையும் முக்கியமாய்க் கொள்ளாமல் மக்கள் பிறவி நிலையையே பிரதானமாய் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும், தாழ்த்தபட்டும், அடிமைப்படுத்தபட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும் செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்ற கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. ஆதலால் தொழிலாளி முதலாளி கிளர்ச்சியைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும்.
”ஏனெனில் இந்தியாவில் தொழிலாளி என்ற ஜாதியும் அடிமை என்ற ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு வருகிறது. நான்காவது வர்ணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழிலாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்வதன் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டதாகும்.
ஐந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியினருக்கு அடிமையாய் இருந்து தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைக்குக் கட்டுப்பட்டவன்… இது இன்றைய தினம் நிர்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும் ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது…
”இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரார் உழைப்பில் பதவி அந்தஸ்துடன் வாழுவதையும் பாடுபடுகின்றவன் ஏழையாய் இழிமக்களாய் இருப்பதையும்தான் முறையே சொல்லுகின்றோம்.
”ஆகவே ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத்தன்மையையும் அழிக்காமல் வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்…
”இந்து மக்களில் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலை நிறுத்தவே ஏற்பட்டதாகும். இந்தக் காரணத்தினாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் இந்நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது என்று சொல்லுகிறேன்…”
”இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும் மதத்தையும் காப்பாற்றுவதை முக்கியமாய்க் கொண்டிருப்பதால்தான் அப்படிப்பட்ட தேசியம் ஒரு நாளும் தொழிலாளி முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பதல்லாமல் இந்த தேசியம் தொழிலாளி முதலாளித்தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன்…
”தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண் பெண் கொடுமையும் ஒழிய வேண்டியதவசியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறார்கள். இது வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றும் இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப்பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கபட்டாக வேண்டும். இதற்கும் பெண் மக்கள் பெரிய புரட்சிக்குக் கிளர்ச்சி செய்ய வேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.
”நிற்க, இந்த தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல கொண்டாட வேண்டும்…. தீபாவளி, ஸ்ரீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள், திராவிட மக்களை வென்ற நாள்களையும் வென்ற தன்மையையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றும் முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்தவர் கூடி இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இந்நாட்டில் மக்கள் உற்சாகத்துக்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுமயரியாதை அற்ற தன்மை என்பவைகள் அல்ல.
பெண்களையும் வேலை செய்யும் ஆண்களையும் சிறிதும் ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர்களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைதான் சிறிது ஓய்வையும் சந்தோஷமும் கொடுக்கின்றன. தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பதுபோல பெண்ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய்களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாராளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரே தாக்கப்படுவதையும் அவர்கள் சகிக்கிறார்கள்.
எனவே நாம் பெண்களுக்கும் தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் பகுத்தறிவையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் பேசினாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே இப்படிப்பட்ட பண்டிகைகள் சிலதை ( மே நாள் போன்றவற்றை ) கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமாயிருக்கும்”. (குடி அரசு, 12.05.1935)
மே முதல் நாளை தொழிலாளர் நாளாக உலகெங்கும் கொண்டாடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், விஸ்வகர்மா என்கிற புராண கதாபாத்திரத்தின் பிறந்தநாளைத்தான் தொழிலாளர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கொக்கரிக்கிறது இந்துத்துவம். உழைப்பாளி மக்களின் வர்க்க உணர்வினை மழுங்கடிக்க அவர்களை சாதி, மத நடவடிக்கைகளில் மூழ்கடிக்கத் துடிக்கும் இந்துத்துவ நிகழ்ச்சிநிரலை மறிக்கும் ஆற்றல் கொண்ட மாற்றுப்பண்பாட்டுச் செயல்பாடுகளில் ஒன்றாக பெரியாரால் முன்வைக்கப்படும் மே நாள் கொண்டாட்டத்தால் நம் வீடும் நாடும் சிவக்கட்டும்.