பலவீனமடையும் பா.ஜ.க! பலம் பெறும் காங்கிரஸ்!

-ச.அருணாசலம்

த்தாண்டு ஆட்சி பலத்த சலிப்பை தந்துள்ளது. இது வரை பாதுகாப்பான தொகுதிகள் என பா.ஜ.க நினைத்த தொகுதிகள் இன்று பலத்த போட்டியை காண்கின்றன! மதவெறுப்பு பரப்புரையை புறந்தள்ளி,  தங்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பேசுவோர் பக்கம் மக்கள் கவனம் திரும்பி இருப்பது பா.ஜ.கவை அதிர வைத்துள்ளது!

பாதிக்கு மேற்பட்ட தொகுதிகளில் (284) தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக 84 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்கள் வரும் மே 20 இல் நடக்க விருக்கிறது. இத்துடன் ஆந்திர பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மே 7 இல் நடந்த மூன்றாவது கட்ட தேர்தலும் மோடி கும்பலுக்கு நிம்மதியைக் கொடுக்கவில்லை என்றே கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. எப்படியும் குஜராத்தில் அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்று மோடி – அமித்ஷா கும்பல் செய்த – வாக்கு பதிவின்போது விதிகளை மீறி மோடி ரோடு ஷோ நடத்துவது, எதிர்கட்சியினரை பயமுறுத்தி, நிர்ப்பந்தித்து போட்டியிடவும், வாக்களிக்கவும் விடாமல் தடுப்பது போன்ற – அத்துமீறல்களை, கேள்வி கேட்க தேர்தல் ஆணையம் முன் வரவில்லை.

இத்தகைய அப்பட்டமான ஒருதலைபட்சமான அணுகுமுறையை தே. ஆணையம் கடைப்பிடித்து வருவது குஜராத் வாக்காளர்களிடம் மட்டுமின்றி, ஏனைய மாநில வாக்காளர்கள் மத்தியிலும் மோடி- அமித்ஷா ஆட்டத்தை விமர்சிக்க வைத்துள்ளது.

பிரஜாவால் ரேவண்ணாவின் வக்கிரம் நிறைந்த “செக்ஸ் டேப்” விவகாரம் பாஜக வின் கோட்டையான வட கர்நாடகாவில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியோதடன்றி , அதையொட்டிய மகாராஷ்டிர மாநிலத்திலும் சங்கிகளை தோலுரித்துக் காட்டியுள்ளது. மஹாராஷ்டிராவில் காங்கிரஸ் பிரச்சாரத்தில் மக்களின் எழுச்சியை பார்க்க முடிகிறது.

எதிர்பார்த்த வெற்றிகளை எட்ட முடியாததை உணர்ந்த மோடி, தனது பிரச்சாரத்தில் மேலும் மத ரீதியான உணர்வுகளை தூண்டி, மக்களை பிளவு படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறார்.

நாங்கள் தான் உலகத்தின் மிகப் பெரிய கட்சி , எங்களுக்கு நிகர் யாருமில்லை என மார்தட்டிய மோடி, இப்பொழுது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “இந்திய கிரிக்கெட் குழுவில் விளையாட்டு வீர்ர்களை மத அடிப்படையில் தான் தேர்வு செய்வார்கள், இஸ்லாமியருக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்“ என அப்பட்டமான மத உணர்வுகளை தூண்டும் விஷம பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

காங்கிரசின் கேள்விகளுக்கு குறிப்பாக வேலையின்மை, பண வீக்கம், விலை உயர்வு, குறித்த பா.ஜ.க அரசு குறித்த கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், பிரச்சினையை திசை திருப்புகிறது மோடி கும்பல்!

இடைவிடாமல் மோடிக்கும், அதானிக்கும் உள்ள கள்ள உறவை அம்பலப்படுத்தும் ராகுலின் பிரச்சாரத்தை எதிர் கொள்ள முடியாமல் ஓடி ஒளிந்த மோடி – மோடானி என்ற புதிய பதமே இந்திய அரசியலில் குரோனி கேப்பிட்டலிசத்தை (Crony capitalism) குறிக்கும் குறியீடாக மாறியுள்ள இந்த சூழலில் – “அதானி, அம்பானி பற்றி வாய்கிழிய பேசிய இளவரசர் இன்று – தேர்தல்கள் அறிவித்த பின்- வாய்மூடி மௌனியாகப் போனது ஏன்? அதானி, அம்பானியிடமிருந்து கருப்பு பணம் டெம்போக்களில் காங்கிரஸ் அலுவலகத்தை வந்து அடைந்துள்ளதா?’’ என பேசியுள்ளார் மோடி !

ஏன் இந்த உளறல்? தோல்வி பயம் மோடியை பற்றிக் கொண்டதா? பிரதமர் பதவியில் இருப்பவரின் பேச்சா இது? என்று அரசியல் நோக்கர்களும், ஊடக வல்லுனர்களும் வியப்படைந்துள்ளனர்!

மற்றொரு புறம் மோடியின் வலது கரமான அமீத் ஷா, இன்றைய தேர்தல் மோடிக்கும், ராகுலுக்கும் இடையேயான போட்டி என்றும்

ராகுலின் சீனா காரண்டிக்கும், மோடியின் (பாரதீய?) காரண்டிக்கும் இடையேயான போட்டி என்றும் பேசியுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா பேசும் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் கைதட்டல்கள் விண்ணைப் பிளக்கின்றன! பா.ஜ.கவின் வீழ்ச்சியையும், காங்கிரசின் எழுச்சியையும் கண்கூடாகக் காணமுடிகிறது. பா.ஜ.கவை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் இண்டியா கூட்டணிக்கு வர மறுத்த மாயாவதி கட்சியின் முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறிக் கொண்டுள்ளனர்.

தேர்தல்கள் நான்காவது கட்டத்தை நெருங்கிய வேளையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவைத் தவிர்த்த மற்ற மாநிலங்களில் பா.ஜ.க விற்கு சில இடங்கள் வலுவானதாக தோன்றினாலும், இன்று மோடி அஞ்சுவதற்கு காரணம் இல்லாமலில்லை.

”400 இடங்களை வெல்லுவோம்” என்றவர்களின் சுருதி குறைந்துள்ளது. ‘அப்படி மூன்றாவது முறை மோடி வென்றால், அரசியல் சாசனம் மாற்றப்படும், இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்’ என்ற காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் பிரச்சாரம் பாமர மக்களை சென்றடைந்துள்ளது.

மண்டல் அரசியல் வலுவாக உள்ள மேற்கூறிய தொகுதிகளிலும், அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களிலும் பிற்படுத்தப்பட்டவரிடையே ஒரு பதட்டம் மேலோங்கியிருப்பதைக் காண முடிகிறது.

முன்னேறிய வகுப்பினரிடையேயும், பொதுவான வாக்காளர்கள் மத்தியிலும் பத்தாண்டு கால மோடியின் ஆட்சி மீது சலிப்பு உணர்வு மேலோங்கியிருப்பதைக் காண முடிகிறது.

உத்தர பிரதேசம், பீகார் மாநில இளைஞர்களிடையே அக்னி வீர் திட்டம் ஏற்படுத்தியுள்ள ஏமாற்றம் கொஞ்ச நஞ்சமல்ல . இதன் பாதிப்பு அனைத்து  இளைஞர்களிடமும் கோபத்தைக் கிளறியுள்ளது. இராணுவத்தில் சேருவோருக்கான பயிற்சி முகாம்கள் நடத்துவோரும், முன்னாள் இராணுவத்தினரும் இந்த அக்னி வீர் திட்டத்தை ஒட்டு மொத்தமாக எதிர்ப்பது பாரதூர விளைவுகளை தேர்தலில் ஏற்படுத்தும்.

வாக்குகள் குறைவாக பதிவாவதன் இரகசியம் தங்களது ஆதரவாளர்கள் இந்த தேர்தலில்- மோடி மூன்றாவது முறை பிரதமராவதில்- அக்கறை காட்டாததே என கவலை தெரிவிக்கின்றனர், பா.ஜ.கவினர்!

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த சோரனின் கைது, ஆதிவாசிகள் மத்தியில் ஒரு கௌரவ பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பா.ஜ.க வினர் இந்த கைதை ஊழலுக்கு எதிரானதாக காட்ட முயன்றாலும், அவர்களது அரசியல் வேடம் இன்று பழங்குடியினரிடையே கலைந்துள்ளது. இதன் விளைவு தேர்தலில் வெளிப்படும்.

இதே போன்ற நிலை தான்,  அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதும்! அவரை சிறையில் தள்ளியதும், தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டதும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அனுதாப அலையை தோற்றுவித்துள்ளது. கெஜ்ரிவால் மனைவியின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் பிரச்சாரம்!

குஜராத் தேர்தலில் கெஜ்ரிவாலின் பிரச்சாரத்தை முடக்கிய பா.ஜ.க, இன்று அவர் இடைக்கால ஜாமீனில் வர முடியாமல் முட்டுக் கட்டைகள் போட்டதை ஒருவழியாக நீதிமன்றம் நிராகரித்து ஜாமீன் வழங்கியுள்ளது ஒரு வகையில் ஆறுதல் தருகிறது.

எந்தப் பக்கம் திரும்பினாலும், தங்களது அடாவடி நடவடிக்கைகளால் , அரசியல் அத்துமீறல்களால், அதிகார அத்துமீறல்களால் மோடி கும்பல் இன்று அம்பலப்பட்டு ஓடி ஒளிய முடியாமல் தடுமாறுகிறது.

இந்த நிலையில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என்று வாய்க்கு வந்தபடி உளறுகிறார் பிரதமர் மோடி !

மேற்கு வங்கத்தில் சந்தேஷ்காலி விவகாரம் பா.ஜ.க வினரால் ஊதி பெரிதுபடுத்தப்பட்டது என்பதை திரிணாமுல் கட்சி அம்பலப்படுத்தியுள்ளது. பொய்யிலேயே கோட்டை கட்ட முயலும் மோடி கும்பல் இன்று மேற்கு வங்கத்தில் தனது 18 தொகுதிகளை தக்க வைக்க தள்ளாடுகிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சந்தேஷ்காலி போலியான விவகாரம் என்பதை கோடி மீடியா மறைத்து வந்த நிலையில், அதானியின் என்.டி.டி.வி (NDTV) சந்தேஷ்காலி விவகாரத்தில் திரிணாமுல் கட்சி வெளியிட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

இந்த மோதல் நாடகமா? அல்லது நிறம் மாறும் செயலா? என்பது போகப் போக புரிய வரும்.

மோடியின் மத ரீதியாக மக்களை பிளவு படுத்தும் பேச்சுக்களும், மத வெறி பரப்புரைகளும் தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு தெரியவில்லையா? தேர்தல் ஆணையம் மோடி அரசின் கைப்பாவையாக மாறிவிட்டது. இத்தகைய ஆணையத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவது வேடிக்கையா? அல்லது வேதனையின் உச்ச கட்டமா?

மக்களின் வெறுப்பையும், சலிப்பையும் சம்பாதித்துள்ள மோடி அரசு , தனது நடவடிக்கைகளை சிறிதும் மாற்றிக் கொள்ளவில்லை, மாறாக, தனது ஜனநாயக விரோத செயல்களை, மக்கள் விரோத நடவடிக்கைகளை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, டெல்லி காவல்துறை போன்ற அமைப்புகளை சட்டத்திற்கு புறம்பாக ஏவி, வெற்றியை எதிர்கட்சிகளிடமிருந்து  தட்டிப் பறிக்க திட்டம் தீட்டுகிறது.

இந்த ஈனச்செயலுக்கு தேர்தல் ஆணையம் உறுதுணை செய்கிறது. தேர்தல் ஆணையம் தனது அரசியல் கடமையிலிருந்து நழுவும் இந்த அத்துமீறலை, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக்கூறுகளில் ஒன்றான சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்தும் கடமையில் இருந்து தவறிய செயலைத் தட்டிக் கேட்க உச்ச நீதி மன்றம் முன்வர வேண்டாமா? இதை தானாக முன் வந்து (sou motto) உச்ச நீதிமன்றம்  நேர் செய்ய வேண்டாமா?

Tags: