தோல்வியை ஏற்குமா பாரதிய ஜனதாக்கட்சியின் மன நிலை?
-ஆனந்த் கே. சஹாய் (Anand K. Sahay)
அனேகமாக பா.ஜ.கவின் தோல்வியை தெளிவாக உணர முடிகிறது. ஜனநாயகத்தின் தீர்ப்பை ஏற்று ஆட்சி மாற்றம் அமைதியாய் ஏற்படுமா? முதுகெலும்பில்லா தேர்தல் கமிஷன் EVM மெஷின், வாக்கு எண்ணிக்கை போன்றவற்றில் நியாயம் காட்டுமா? என்ன மாதிரியான குறுக்கு வழிகளை திட்டமிட்டுள்ளனர்..? ஒரு அலசல்:
தன்னை அதிகாரமிக்க, இன்றியமையாத நபராகக் காட்டிக் கொள்ளும், ஒரு சண்டைக்காரனைப் போன்ற அரசியல் தோற்றம் தரும் மோடி, அமைதி வழியில் ஆட்சி மாற்றம் நிகழ்வதற்குத் தடையாக இருப்பார் என்கிற ஐயம் பலரிடமும் எழுந்துள்ளது.
போட்டி தொடங்கும் முன்னரே, தனது அரசியல் எதிரிகளை, பந்தயத்திலிருந்து விலக்கிவைத்த ஒரு மனிதன், களத்தில் இருக்கும் ஒரு பலவீனமான ஜனநாயகத்தில், நடைபெறுவதைத் தேர்தல் என்றே கருத இயலவில்லை. அந்த மனிதன் போட்டுவைத்த திட்டங்கள் தவறும்போது, வேறு ஓர் ஆட்டம் தொடங்கவிருக்கும் நிலையில், அமைதியான ஆட்சி மாற்றம் என்கிற ஒன்று அதிசயிக்கத்தக்க நிலையில் உண்டாகுமானால், இக்கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
எதிரிகள் கண்களுக்குத் தெரியாத நிலையில், ஆயுதமேந்திய கூலிப் படைகள், விபத்தாக ஏதேனும் ஒரு தாக்குதலை நடத்தலாம். கடைசியில், தலைவர் எல்லா வாக்குகளையும் பெற்றுவிடுவார். ஜனநாயகத்தைக் கோரும் எதிரி, ஒன்றுமில்லாதவராக ஆகிப்போவார். அல்லது தலைவர் எப்படியோ பெரு வெற்றி பெற்றுவிடுவார். விரும்பிய முடிவைத் தரக்கூடிய அனைத்தும் செய்தாகிவிட்டது. வாக்காளர்கள் தங்களது விதியை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தேர்தலை நடத்தும் அதிகார அமைப்பை பா.ஜ.க அரசு முழுவதுமாக நம்புகிறது.
இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிலர் விரும்பும் முடிவுகள், மிகக் கவனமாக வெளியாவதற்கான சான்றுகள் இருக்கின்றன. தேர்தலை நடத்தும் அதிகார அமைப்பு, நேர்த்தியாக மோசடி செய்யப்பட்டுவிட்டது. தேர்தல் நடைமுறைகள் தொடங்குவதற்குச் சில மாதங்கள் முன்பே, தேர்தலை நடத்தும் தனித்தன்மை கொண்ட அதிகார அமைப்பு, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயல்பட்டாக வேண்டும் என்றும் சட்டம் திருத்தப்பட்டுவிட்டது. அவ்வமைப்பு, அரசமைப்பு சட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்பதற்கான சிறிய கூறு ஒன்றைக் கூடக் காண இயலவில்லை.
தேசிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் செயல்பட முடியாத வகையில், அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எவ்வித விசாரணையும் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் மாநில முதல்வர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவையெல்லாம் இந்த அரசின் நோக்கங்கள் மீது கேள்விகளை எழுப்புகின்றன.
வரப்போகும் ஐம்பது ஆண்டுகளுக்குத் தாம்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம் என்று அறிவிக்கும் ஒரு சிறு குழு, அரசின் தன்னாட்சி பெற்ற புலனாய்வு அமைப்புகளைத் தனது அதிகாரத்திற்குத் தலைவணங்கும் மெய்க்காப்பாளர்களாகச் சீரழித்துவிட்டது.
பல்வேறு மொழி பேசுவோரையும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களையும், பல்வேறு பண்பாடுகளைப் பின்பற்றுவோரையும், பல்வேறு பழக்க வழக்கங்கள் உள்ளவர்களையும் கொண்டது இந்திய நாடு. அத்தகைய சமூக அமைப்பையும், பண்பாட்டு, அரசியல் வரலாறுகளையும் உடையது இந்நாடு.
காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெரும்பொருட்டு நடைபெற்ற விடுதலைப்போரின் மூலமாக, பிரிந்து கிடந்த மக்கள் ஒன்றிணைக்கப்பட்டனர். இதிலிருந்து பிறந்ததுதான் நமது அரசியல் அமைப்பு. அதனாலேயே அது இந்நாட்டின் பன்முகத்தன்மையை, மதங்களை, மாநிலங்களை, பண்பாடுகளை, அவற்றின் ஆழமான விழுமியங்களை வலுவாக்கி, அவற்றின் மூலம் ஒரு கூட்டாட்சி அமைப்பை உருவாக்கிற்று.
இத்தகைய சிக்கலான தன்மை கொண்ட அமைப்பு, திணிக்கப்படும் ‘ஒரே நாடு’ என்கிற ஒற்றைத் தன்மை கொண்ட, கொடுங்கோன்மை மனப்பாங்கை முற்றிலும் எதிர்க்கிறது.
பிரதமர் மோடியும், அவரது வழிகாட்டிகளும் இதனை நன்கு புரிந்துள்ளனர். என்றாலும் ஒரு நாடு – ஒரே தேர்தல், ஒரு நாடு – ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை, ஒரு நாடு – ஒரே மதம் என்பது போன்ற ஒற்றைத் தன்மையைத் திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர். கூட்டாட்சி முறைக்கு எதிரான ஹிந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கப் பல அதிரடி மாற்றங்களைச் செய்ய முயல்கின்றனர்.
இத்தகைய ஒற்றைத் தன்மை, ‘ஒரு நாடு – ஒரே தலைவர்’ என்கிற கொடுங்கோன்மை இலக்கை நோக்கி, நாட்டை இழுத்துச் செல்கிறது. இதுவே, இன்றைய தலைமையின் உச்சரிக்கப்படாத, பேராசையாக இருக்கிறது. இத்தகைய நம்பிக்கையும், பேராசையும் கொடுங்கோன்மைக்கே வழிவகுக்கும்.
‘ஒரு நாடு – ஒரே தலைவர்’ என்கிற தன்மையிலான ஆட்சியில், அதிகாரம் என்பது ஒரு விளையாட்டு பொம்மை. அதன் தொண்டு, பணம்படைத்தோருக்கானது.
ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்ட ஒரு ஹிந்துவுக்கு, ஹிந்து ராஷ்ட்ரம் என்பது ஒரு கற்பனைக்கனவு. பிரிக்கப்படாத இந்தியாவில், ஓர் இஸ்லாமியனை ஈர்ப்பதற்காக, பாகிஸ்தான் எப்படி விளம்பரப்படுத்தப்பட்டதோ, அப்படி. பிறகு அந்த ஹிந்துவும் மறக்கப்படுவான்.
இந்தியாவின் பன்முகத்தன்மைதான், மோடியின் கனவுத் திட்டத்திற்குத் தடையாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில், மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக, இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகளின் அணியாகத் திரண்டது. மோடியின் திட்டத்தில் உள்ள பொருளாதார, சமூக, பண்பாட்டு, அரசியல் திசையை மாற்றி, நாடு எதிர்கொண்டிருக்கும் அபாயத்திலிருந்து அதனை மீட்பதே எதிர்க்கட்சிகளின் ஒற்றை இலக்காயிற்று.
மாற்றத்தைத் தரவல்ல ஓர் உந்துசக்தியாக, ராகுல் காந்தி புதிய எழுச்சி பெற்றுள்ளார். மூன்றாவது முறையாக மோடி தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்க முடியாதது எனில், நாடு வெகு அண்மையில் கொடுங்கோன்மையை நோக்கிப் பயணிக்கிறது என்று சிலர் கருதுகின்றனர்.
மூன்றில் இரு பங்கு வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், மோடியின் திட்டங்களைப் பெரும்பகுதி மக்களும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆட்சிக் கட்சியின் உயர்நிலையில் இருக்கும் மூத்தவர்களிடமே மோடி பற்றிய தீவிரமான ஐயங்கள் எழுந்துள்ளன.
தனது செல்வாக்கு சரியும் இத்தருணத்தில், சண்டைக்காரனைப் போல அரசியல் தோற்றம் தரும் மோடி, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என உச்சநீதி மன்றத்தால் குறிப்பிடப்பட்ட வகையில், மிக அதிக வளங்களை சேமித்துள்ளதாகக் கருதப்படும் மோடி, அமைதியான அதிகார மாற்றத்திற்குத் தடையாக இருப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது.
இக் கேள்விக்கான பதில் வெறும் ஊகம் மட்டுமே. எதிர்க்கட்சியினரும், மோடியின் கட்சியில் உள்ள சில குழுக்களும் பல வாய்ப்புகள் உள்ளதாகக் கருதுகின்றனர். தனது அரசியல் எதிரிகளை மோடி எவ்வாறு எதிர்த்துத் தடுக்கப்போகிறார் என்பதைப் பார்க்க, உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்கள் தமது கடிகாரங்களை உற்றுநோக்கிக் காத்திருக்கிறார்கள்.
மூலம்: Should BJP Face Defeat in Lok Sabha Polls, Can We Expect Peaceful Transfer of Power?
தமிழில்: முனைவர். தயாநிதி