இந்திய அரசமைப்புச் சட்டமும் அரசியல் கட்சிகளின் பாராமுகமும்!
– ரவிக்குமார்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ‘அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும்’ என்ற பிரச்சனை முதன்மைப் பிரச்சினையாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், ‘400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ என்று அறிவித்ததும் மக்களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டு விட்டது. அக்கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்திருப்பது அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகத்தான்’ என்று கூறியிருந்தார். அது உண்மையாகப் போகிறது என மக்கள் அச்சமடைந்து விட்டனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் அதற்கு மக்களிடையே பரவிய இந்த அச்சம்தான் முதன்மையான காரணமாக இருக்கும்.
அரசமைப்புச் சட்டத்தை பாஜகவினர் தங்களது இந்து ராச்சிய கனவுக்குத் தடையாகவே பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி அரசமைப்புச் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் சமத்துவக் கோட்பாடு அவர்கள் நம்பும் மனு கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானதாகும். பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வருணக் கோட்பாட்டால் பயனடைந்தவர்கள் ‘அனைவரும் சமம்’ என அரசமைப்புச் சட்டம் அறிவித்தபோது ஆத்திரமுற்றனர். அதனால் தான் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தை எதிராகக் கருதுகின்றனர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கு அவர் தலைமையிலான பா.ஜ.க அரசு முயற்சி செய்தது. அதற்காக நீதிபதி வெங்கடாசலையா தலைமையில் அரசமைப்புச் சட்ட சீராய்வுக் கமிஷன் ஒன்றையும் நியமித்தது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்த திரு கே.ஆர். நாராயணன் அவர்கள் வெளிப்படையாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும், நாடு முழுவதும் பட்டியல் சமூக மக்கள் பா.ஜ.க அரசின் திட்டத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்ததும் பா.ஜ.கவை பின்வாங்கச் செய்து விட்டது. வெங்கடசலையா கமிஷன் அளித்த அறிக்கையை அவர்கள் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். அப்போதும்கூட பா.ஜ.க அரசின் முயற்சிக்கு எதிராகப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மௌனமே காத்தன.
2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பா.ஜ.க அரசு பொறுப்பேற்றதும் மீண்டும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவார்கள் என்ற அச்சம் எழுந்தது. வாஜ்பாய் ஆட்சியின் போது எழுந்த எதிர்ப்பைப் புரிந்து கொண்ட மோடி அரசாங்கம் வெளிப்படையாக அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்குப் பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக அதை நீர்த்துப் போகச் செய்யும் தந்திரத்தைக் கையாண்டது. குறிப்பாக அரசமைப்புச் சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை சீர்குலைப்பதற்கு மூன்று விதமான வழிமுறைகளை அது பின்பற்றியது.

ஒன்று: ஒன்றிய அரசில் எஸ்,சி, எஸ்,டி, ஓ,பி,சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்பாமல் காலிப் பணியிடங்களாகவே வைத்திருப்பது. ஒன்றிய அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் பணியிடங்கள் குறித்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங், சுமார் 10 இலட்சம் வேலைகள் காலியாக இருக்கின்றன என்று தெரிவித்தார். ‘ஒன்றிய அரசின் அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே துறை உட்பட 2023 மார்ச் 1 நிலவரப்படி 9,64,359 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன’ என்று நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான அளித்த பதிலில் அவர் தெரிவித்தார். அந்த இடங்களை நிரப்புவதற்கு அதன் பிறகும் கூட மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த இடங்கள் நிரப்பப்படாததால் ஓபிசி,எஸ்சி,எஸ்டி சமூகங்களைச் சேர்ந்த சுமார் 5 இலட்சம் பேர் தமது வேலை வாய்ப்பை இழந்தனர்.
இரண்டு: இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பது. அதன் மூலம் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான வேலைவாய்ப்பை இல்லாமல் ஒழிப்பது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு திரு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தவரை 188 பொதுத்துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 33 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார். இந்திய வரலாற்றில் ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட உருவாக்காத ஒரு பிரதமர் நரேந்திர மோடி மட்டும் தான். ஆனால் அவரது ஆட்சிக் காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பல இலட்சம் வேலை வாய்ப்புகளைக் கொண்ட இந்த நிறுவனங்களைத் தனியாருக்குக் கொடுத்ததன் மூலம் அவற்றில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் இட ஒதுக்கீட்டின் மூலம் வேலை பெற வாய்ப்பு இல்லாமல் மோடி அரசு செய்து விட்டது.
மூன்று: சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்காக உருவாக்கப்பட்ட இட ஒதுக்கீடு என்னும் ஏற்பாட்டைப் பொருளாதார அடிப்படையில் மாற்றி அமைப்பது. அதன் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே சிதைப்பது. அதைத்தான் பொருளாதாரத்தின் நலிவடைந்த உயர் சாதியினருக்கு மட்டும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின் மூலமாக பா.ஜ.க செய்தது.
இடஒதுக்கீடு என்பது வரலாற்று அநீதியை எதிர்ப்பதற்கும், அதிகார அமைப்பிலிருந்து ஒதுக்கப்பட்ட வகுப்பினருக்கு இழப்பீடு வழங்குவதற்கும், அவர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும், மற்ற முன்னேறிய வகுப்பினரின் தரத்திற்கு அவர்களை உயர்த்தவும் வகை செய்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தனிநபர் சார்ந்தது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல.
10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா ‘ பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோது அதனால் நிர்வாகத் திறன் குறைந்துவிடக்கூடாது என ஒரு நிபந்தனை வைக்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் 340 ஆவது பிரிவின் கீழ், ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் என்பது சமூக ரீதியில் பின் தங்கித்தான் இருக்கிறதா என விசாரிக்க ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால், 103வது திருத்தத்தின்படி வழங்கப்பட்ட உயர்சாதியினருக்கான இந்த 10% இட ஒதுக்கீட்டிற்கு அத்தகைய ‘நிர்வாகத் திறன் பற்றிய நிபந்தனையும்’ விதிக்கப்படவில்லை, கமிஷனும் அமைக்கப்படவில்லை’ என சுட்டிக்காட்டினார்.
’பொருளாதாரப் பின்னடைவுக்கான காரணம் சமூகக் கட்டமைப்பில் உள்ள சமத்துவமின்மை என்றும், அதனால், பிற்படுத்தப்பட்ட நிலை என்பது எந்தவொரு இடஒதுக்கீட்டிலும் அதன் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது’ என்றும் சுட்டிக் காட்டியதோடு, ”பிற்படுத்தப்பட்ட நிலமையைப் புறக்கணித்து சாதி அல்லது வருமானம் போன்ற ஒற்றை அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்கும் முயற்சிகளை உச்சநீதிமன்றம் ஏற்கனவே பலமுறை ரத்து செய்துள்ளது” என்பதையும் ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் பாலாஜி வழக்கின் தீர்ப்பில் (பாலாஜி எதிர் மைசூர் மாநிலம்) ரத்து செய்யப்பட்டது. அதுபோல வருமானத்தின் அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்குவதை இந்திரா சாஹ்னி தீர்ப்பு (இந்திரா சாஹ்னி v யூனியன் ஆஃப் இந்தியா) இரத்து செய்தது என அவர் ஆதாரங்களை எடுத்துக்காட்டினார். ஆனால், ஒன்றிய பாஜக அரசோ 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்து வாதிட்டது. அதைத்தான் உச்சநீதிமன்றத்தின் அமர்விலிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். அதனால் அந்த சட்டம் செல்லும் என ஆக்கப்பட்டுவிட்டது.

பா.ஜ.கவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள் என மக்களிடம் பரவியுள்ள அச்சம் அவர்களது சொந்த அரசியல் புரிதலால் உண்டானதே தவிர அதை எந்த எதிர்க்கட்சியும் அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. திரு ராகுல் காந்திகூடத் தனது பரப்புரையில் அதை மிகவும் தாமதமாகவே பேச ஆரம்பித்தார். அரசமைப்புச் சட்டத்தின் பிரதி ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு அவர் மேற்கொண்ட பரப்புரை பாஜகவினருக்குக் கிலியை உண்டாக்கியது. “ நான் உயிரோடு இருக்கும்வரை அரசமைப்புச் சட்டத்தை மாற்ற அனுமதிக்க மாட்டேன்” என திரு மோடி போலியாக சபதம் ஏற்கும் நிலையை அது உண்டாக்கியது. ஆனால் திரு ராகுல் காந்தியைத் தவிர தேசிய அளவில் வேறு யாரும் அதற்கு முக்கியத்துவம் தந்து பேசவில்லை. இனியாவது பா.ஜ.க அல்லாத எதிர்க்கட்சிகள் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அரசமைப்புச் சட்டத்தையும், இட ஒதுக்கீட்டையும் பாதுகாப்பதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.