இனப் படுகொலையை நிறுத்து! இஸ்ரேல் இராணுவமே, வெளியேறு!

-எஸ்.நூர்முகம்மது

மேற்கு ஆசியாவில் உள்ள பாரம்பரியமான நாடு பலஸ்தீனம். அரேபிய பலஸ்தீன மக்களின் நாடு அது. அங்கு இன்று பகிரங்கமான படுகொலை தொடர்கிறது. 
சொந்த மண்ணில் இருந்து மக்களை விரட்டியடிக்கவும், அதற்காக தொன் கணக்கில் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை, குறிப்பாக பெண்கள்- குழந்தைகளைக் கொல்லவும் செய்கிறார் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஆட்சியாளர் பெஞ்சமின் நேதன்யாகு. அதற்கு கோடிக்கணக்கான டொலர்களுக்கான ஆயுதங்களை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் இஸ்ரேலுக்குக் கொடுத்து உதவுகின்றன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள வெகுமக்களும், மாணவர்களும் இந்த இனப் படுகொலைகளைக் கண்டித்து தெருக்களில் இறங்கி போராடுகின்றனர். அவர்களின் நிராயுதபாணியான அமைதிப் போராட்டங்கள் ஆளும் ‘போலி ஜனநாயக’ அரசுகளால் அராஜகமாக அடக்கப்படுகின்றன. 

இதற்கெல்லாம் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூறும் காரணம் ஹமாஸ் அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தியதும், சில நூறு இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதியாக பிடித்துச் சென்றதும் ஆகும். ஹமாஸ் தாக்குதல் நடத்திய அன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகினர் என்பது உண்மை. 

ஆனால், அதில் இஸ்ரேலியர்கள் கூட்டமாக இருந்த இடத்தில் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவமே தாக்குதல் நடத்தி படுகொலை செய்ததாக வந்த தகவல்களும் உள்ளன. இது ஆய்வுக்குரியது. எப்படி இருப்பினும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், அவர்கள் பலியானதும் யாராலும் ஏற்க இயலாத ஒன்றே. எனவே அதை அமைதி விரும்பும் அனைத்துப் பகுதி மக்களும் கண்டிக்க வேண்டும். ஆனால் அதைக் காரணம் காட்டி அப்பாவிகளான சுமார் 50,000 பலஸ்தீன மக்களை, அதிலும் குறிப்பாக நிராயுதபாணிகளான பெண்களை, குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேலின் இனப்படுகொலையை நியாயப்படுத்த இயலுமா?

பலஸ்தீன வரலாறு

உலக மக்கள் பெரும்பாலோர் பின்பற்றும் பிரதான மதங்களான யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை மேற்கு ஆசியப் பகுதியில் ஒரே பின்னணியில் வெவ்வேறு கால கட்டத்தில் உருவானவை. இந்த மூன்று மதங்களுமே ஒன்றோடொன்று தொடர்புடையவை. இந்த மூன்று மதங்களுடனும் தொடர்புடைய பலஸ்தீனத்திலுள்ள ஜெருசலேம் இம்மூன்று மதத்தினருக்கும் புனித நகரம். 

பாலைவனங்கள் நிரம்பிய அரேபிய பிரதேசத்தில் இப்பகுதி தண்ணீர் வசதியுடன் கூடிய விவசாயத்துக்கு ஏற்ற வளமான பூமியாகும். பலஸ்தீனம் ஒட்டோமான் பேரரசுக்கு உட்பட்ட பகுதியாக நீண்ட காலம் இருந்தது. ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டில் வந்தது. அப்போது தான் ஜெர்மனியில் யூத எதிர்ப்பு என்ற பேரால் ஹிட்லரின் கடுமையான தாக்குதல் யூதர்களுக்கு எதிராக நடந்து இனப் பேரழிவு அரங்கேற்றப்பட்ட போது, அதற்கு அஞ்சி யூதர்கள் பல நாடுகளுக்கும் சிதறி ஓடி தஞ்சம் அடைந்தனர். அப்படி தஞ்சம் அடைந்த யூதர்கள் ஹிட்லரின் தோல்விக்குப் பின்னர் தங்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்றும், அது பைபிளில் கூறியுள்ள புனிதப் பகுதியான ஜெருசலேமை உள்ளடக்கிய பலஸ்தீனத்தில் அமைய வேண்டுமென்றும் கோரியதாக பிரிட்டனால் முன் வைக்கப்பட்டு, 1948 இல் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, பலஸ்தீனத்தை உடைத்து, உலகத்தின் பல பகுதிகளில் உள்ள யூதர்கள் பலஸ்தீன பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். 

ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி

இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியும் அடங்கியிருந்தது. சோசலிச சோவியத் ஒன்றியத்தின் வளர்ச்சி தங்களது ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு பாதகம் என்று கருதிய அமெரிக்கா, தங்களுக்கு சாதகமான ஒரு சக்தி ஆசியாவின் மையப் பகுதியில் தேவை என்று கருதி அதற்கேற்ப இஸ்ரேலுக்கு ஏராளமான நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்கி தனது செல்லப் பிள்ளையாகவும், அடியாளாகவும் பயன்படுத்தி வருகிறது. 

பலஸ்தீன  விடுதலை இயக்கம்

பலஸ்தீனத்தில் குடியேறிய இஸ்ரேலியர்கள் முதலில் மேற்கு கரையிலும், பின்னர் காஸா பகுதியிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் துவங்கினர். 3 சதவிகித யூதர்கள், 97 சதவிகித பலஸ்தீனர்களின் நிலத்தைப் பறித்துக் கொண்டு குடியேறத் துவங்கினர். இத்தகைய ஆக்கிரமிப்புக்கு எதிராக பலஸ்தீனர்கள் தொடர்ந்து போராடி வந்தனர். பலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க யாசிர் அராபத் தலைமையில் பலஸ்தீன விடுதலை அமைப்பு (பி.எல்.ஓ) ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. தங்கள் மண்ணை மீட்பதற்காக நடந்த பலஸ்தீனர்களின் போராட்டங்களை அன்றைய சோசலிச சோவியத் அரசும், அணி சேரா நாடுகளும் ஆதரித்து வந்தன. அன்றைக்கு அணிசேரா நாடுகளின் அணியில் இருந்த இந்தியாவும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் நிலை எடுத்தது. 

ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றும் தீர்மானங்களை இஸ்ரேல் மதிப்பதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் அவற்றை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி இரத்து செய்தும் வந்தது. சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்த பின்னர் பலஸ்தீனம் தனித்து விடப்பட்ட நிலை. அமெரிக்கா தனது கூலிப்படையாக செயல்படும் இஸ்ரேலின் அடாவடித்தனங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. முதலில் இத்தகைய அடாவடியான ஆக்கிரமிப்புக்கு எதிரான நிலைபாடுகளை எடுத்து வந்த அரேபிய நாடுகளின் அரசுகள், சோசலிச சோவியத் பின்னடைவுக்கு பின்னர் அமெரிக்காவின் கைப்பாவைகளாக மாறி அக்கிரமங்களைக் கண்டு கொள்ளாத நிலையைத் தான் பெரும்பாலும் கைக்கொண்டன. சமீப ஆண்டுகளில் தான், சோசலிச சீனாவின் செல்வாக்கு உயர ஆரம்பித்துள்ள பின்னணியில், இதில் இலேசான மாற்றம் ஏற்படத் துவங்கியுள்ளது.

தற்போதைய நிலை

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களின் செல்வாக்கில் உள்ள கோர்ப்பரேட் ஊடகங்களும் உண்மையை மறைத்து பொய்யான செய்திகளைத் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஆக்கிரமிப்பாளன் யோக்கியனாகவும், தாக்குதலுக்கு உள்ளானவனாகவும்; ஆக்கிரமிப்பில் தங்களது பெரும்பான்மையான நிலப்பகுதியை இழந்ததோடு பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களையும் இழந்து சொந்த மண்ணிலேயே அகதிகளாக ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டுள்ள – சொந்த மண்ணுக்காக போராடும் பலஸ்தீனர்கள் கொடுமைக்காரர்களாகவும் சித்தரிக்கப்படும் நிலை தொடர்கிறது. 

மோடி அரசின் பாசாங்கு

இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, குற்றவாளி என்று தீர்ப்பு வந்துள்ளது. அமெரிக்கா தனது கூலிப்படை தலைவனைப் பாதுகாக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த இனப்படுகொலையை எதிர்க்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகளே கூட பலஸ்தீனத்தை அங்கீகரிக்கத் துவங்கியுள்ளன. ஆனால் 1988 இலேயே பலஸ்தீனத்தை  அங்கீகரித்த முதல் நாடு இந்தியா. அத்தகைய இந்தியாவின் இன்றைய எதேச்சதிகார மோடி ஆட்சியோ இஸ்ரேலின் நெருங்கிய நண்பனாக இனப் படுகொலையாளனுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. இந்திய மக்கள் முன்பு பாசாங்கு காட்டுகிறது. மதவெறி பிடித்த மோடியிடம் இருந்து இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க இயலும். 

பலஸ்தீனத்தில் இருந்து வெளியேறு!

ஆனால் மோடிக்கு எதிராக மக்கள் விழித்தெழத் துவங்கியுள்ளது ஆறுதல் தரும் விசயமே. இந்தியாவில் ஜனநாயக சக்திகள், தொழிலாளி வர்க்கத்தினர், மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் பலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலைகளைக் கண்டிக்க வேண்டும். ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் கொலை வெறியாட்டம் நடத்தும் இஸ்ரேலுக்கும், நேதன்யாகுவுக்கும், ஆதரவும், ஊக்கமும் அளித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கும் எதிராக கருத்துக்களை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்திய மக்கள் ஒன்றிணைந்து எழ வேண்டும். அதற்கு இடதுசாரி சக்திகளுடன் இணைந்து சிறுபான்மை மக்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

Tags:

Leave a Reply