உலக நாயகனும் நமது உந்து விசையும்!

-எஸ்.கார்த்திக்

ந்தியாவில், போர் என்ற வார்த்தை மக்களின் ஆன்மாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது; அவர்கள் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் பதற்றமான தருணங்களில் கூட அதை நாடவில்லை. அவர்கள் மக்களைத் திரட்டி நடத்திய பெரும் போராட்டங்களே, நூற்றி  ஐம்பது ஆண்டுகளில் அழித்த நிலத்தை என்றென்றும் விட்டுச்செல்ல ஆங்கிலேய காலனித்துவத்தை கட்டாயப்படுத்தியது.”   – இந்திய விடுதலை குறித்துச் சொன்ன ஒரு இளம் ஆட்டக்காரர் அவர். 39 வயதிற்குள் உலகின் வரலாற்றிற்கு உரமாகிப் போனார். கர்ஜிக்கும் முகமும், கனிவு கொண்ட சிரிப்பும் ஒருங்கே அமையப் பெற்ற உலகின் ஒப்பற்ற போராளி. உலகை நேசித்த மாபெரும் மானுடக் காதலன். அவர் பெயர் ‘சே’. 1959 இல் இந்தியாவிற்கு வந்து சென்ற பிறகு கியூபாவில் தோழர் பிடல் காஸ்ட்ரோவிடம் இந்திய விடுதலை குறித்து சே குவேரா சொன்ன வார்த்தைகள் தான் அவை. இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி யாரும் முன்வைக்காத தீர்மானகரமான வார்த்தைகள் சே விடம் இருந்தது.

மக்கள் போராட்டங்களின் அடர்த்தியான தாக்கம்

‘சே’வின் வார்த்தைகளை நடப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கும் பொருத்த முடிகிறது. எண்ணிக்கைக் கணக்குகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கலாமே தவிர  இது ஆட்சி செய்வதற்கான உரிமையல்ல. மக்கள்திரள் போராட்டங்கள் இந்தியாவில் ஏற்படுத்துகிற தாக்கம் சே வின் வார்த்தைகளைப் போல் அடர்த்தியானது. எனவே தான் கோர்ப்பரேட் ஊடகங்கள் ஒன்றினால் கூட கணிக்க முடியாத மனநிலையாக இந்திய மக்களின் மனநிலை இருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம் என வெகுமக்கள் திரளின் கிளர்ச்சியை மிகச் சாதாரணமானவையாக பா.ஜ.க புரிந்து கொண்டது தான் இந்த நாடாளுமன்றத் தேர்தலின் அடிப்படை.

சே என்றால் கற்பனைகளில் கூட சோர்வு பிறக்காத செயல்வீரன். மருத்துவ மாணவன்- மானுட விடுதலைக்கு மருந்தாகிப் போனார். கட்டுக்குள் அடங்காதகளச் செயல்பாட்டாளர். கண்ணிமைக்கும் நேரத்தில் கடிதங்கள் எழுதும் கரிசனத்திற்குரியவர். மாமேதை மார்க்ஸின் சொற்களுக்கு செயல்வடிவம் கொடுக்கத் துணிந்த மகத்தான கம்யூனிஸ்ட். சுதந்திரத்திற்கான போராட்டம் மக்களின் பசியில் இருந்து துவங்குகிறது என கூறிச் சென்ற சோசலிஸ்ட். சே தனது தாய்க்கு எழுதிய கடிதத்தில் வரும்  இந்த வரிகளின் தகிப்பு  “எனது நம்பிக்கை மேலும் உறுதியடைந்துள்ளது. என்னுடைய மார்க்சியப் புரிதல் ஆழமானதாக மாறிவிட்டது. சுதந்திரத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடு வதே மக்களுக்கு இருக்கும் ஒரே வழி” என்கிறான்.

அதே சே, பின்னாளில் இந்தியா வந்த போது ‘ஓல் இந்தியா ரேடியோ’விற்கு அளித்த பேட்டியில், காந்தியைப் பற்றிக் கூறும் போது “உங்களி டம் காந்தியும் பழைய தத்துவ பாரம்பரியமும் உள்ளது; எமது இலத்தீன் அமெரிக்காவில் இவை இல்லை.  அதனால்தான் எங்கள் மனநிலை வேறுவிதமாக வளர்ந்திருக்கிறது” என்கிறார். மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் மனநிலையே தலைமைத்துவத்தின் அடிப்படை என்பதில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர் சே.

21 ஆம் நூற்றாண்டில் மக்கள் உரிமைப் போராட்டங்கள் குறித்து ஏராளமான புரிதல்கள் உருவாகியுள்ளன. உலகின் மனிதத்தை தின்று தீர்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையும், பசிக்கு விலை பேசும் நுகர்வுக் கலாச்சாரமும் போராட்ட முனைப்பை வெட்டிச் சரித்திருக்கும் காலம் இது. மக்கள் போராட்டங்களின் அவசியங்கள் பகடி செய்யப்படும் இக்காலத்திலும் சே மட்டும் நமது நம்பிக்கை நாயகனாகவே தொடர்வது தான் சே வின் ஈர்ப்புக் குறையாத இயல்பு.

உந்து விசையான கம்யூனிஸ்ட்டுகள்

இன்றைய இந்தியாவிலும் இந்த நாடாளு மன்றத் தேர்தல் முடிவுகள் உருவாக்கியுள்ள மன  உணர்வுகள் ஒவ்வொரு அரசியல்  செயல்பாட்டாளருக்கும் அளவில் வெளிப்படுத்த இயலாதது.  10 ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் வெகு மக்கள் திரளைத் திரட்டிய அல்லது ஈர்த்த பெரும் போராட்டங்களைக் கண்ட நாடு இந்தியா. உலகின் மாபெரும் மக்கள் தொகை கொண்ட ஒரு தேசத்தில் கோடிக்கணக்கான மக்களின் மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் ஆற்றல் மிக்க அரசியல் வலிமையை, அந்தப் போராட்டங்கள் வெளிப்படுத்தின.  மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகப் போராடத் துணிந்த எல்லா விசயங்களிலும் திரண்ட வெகுமக்கள் திரளே ஆட்சிக்கு எதிரான சான்று.  

இந்த மகத்தான போராட்டங்களின் உந்து  விசையாகத் திகழ்ந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்; கம்யூனிஸ்டுகள் மட்டுமே! இந்திய அரசியலின் மிக முக்கிய நகர்வு இத்தேர்தலில் வெளிப்பட்டுள்ளது எனக் கருதலாம்.  பொதுவாக ஆளும் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் பிரதான எதிர்கட்சியின் நடவடிக்கைகளில் மட்டுமே மக்கள் திரள்வது வாடிக்கை.  ஆனால் இந்த முறை அப்படியல்ல; பிரதான எதிர்க்கட்சியும், பிராந்தியக் கட்சிகளும் கம்யூனிஸ்ட்டுகள் எதை முன்வைத்தார்களோ அதையே தங்கள் பிரதான முழக்கமாக்கின. அதனால் தான் பா.ஜ.கவை எதிர்த்த அனைத்து அரசியல் இயக்கங்களின் பின்னாலும் பொது மக்கள் வலுவாக திரண்டு வாக்களித்துள்ளனர். பீகார், உத்தரப்பிரதேசம்,  பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற களங்கள் உணர்த்துவது இதைத் தான்.  இந்தக் காலம் அரசியல் ரீதியாக இந்தியாவில் இடதுசாரிக் கருத்துக்களுக்கு அடுத்தகட்ட வளர்ச்சியை உருவாக்கப் போகும் வசந்த காலமாக இருக்கப் போகிறது என்பதற்கான முன்னோட்டமே இது எனலாம்.

உலக நாயகன்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் சே கொல்லப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, சே வின் மரணத்தை அறிவித்து கியூப மக்களுக்கு பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய உரை இன்றும் நினைவு கூரத்தக்கது. “அவர் நமக்கு மட்டுமல்ல…  இந்த உலகத்திற்கே முழுமையான மனிதர் எப்படி இருப்பார் என அடையாளமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வருங்காலத்தில் அவர் விடுதலை உணர்வின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுவார்” என்றார் பிடல். பிடலின் இந்த வார்த்தைகள் எத்தனை உயிர்ப்பு மிக்கவை என இப்போதும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட நினைக்கும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வாழ்பவராக சே இருக்கிறார்.  

சே வின் மரணத்திற்குப் பின்னாலும் அமெரிக்காவில் நடக்கும் எல்லாப் போராட்டங்களிலும் சே நிற்கிறார். இந்திய விவசாயிகள் போராட்டத்தில் சே நிற்கிறார். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக சே நிற்கிறார். அதிகாரத்திற்கு எதிராகப் போராடத் துணியும் எவருக்கும் அவர் ஒரு வழித்துணை.  இந்த உலகில் அநீதிக்கு எதிராகப் போராடும் எந்த ஒரு இளைஞனுக்கும் சே ஒரு வினை யூக்கி.

1968 பொலிவியாக் காடுகளின் போராளிகள் துவங்கி  2019 ஜுன் 12  நெல்லை மாவட்டம் (தமிழ்நாடு) கரையிருப்பு அசோக் வரை எல்லாருமே சே வின் பிரதிபலிப்புகள்.  தென்அமெரிக்கக் கண்டத்தின் நாயகன் இந்தியாவின் தென்கோடியில் உள்ள வன்னி வேலம்பட்டி கிராமத்தில் கூட இன்றும் பிறந்து கொண்டிருக்கிறார். சே கூறியது போல, இந்தியாவின் யுத்தம் என்பது, இந்திய வெகுமக்களின் எழுச்சியே! வெகுமக்களைத் திரட்டும் உந்துவிசை என்றென்றும் சே உயர்த்திப் பிடித்த மார்க்சியத் தத்துவமே!

(சே குவேரா 14 ஜூன், 1928 இல் பிறந்தார்)

Tags:

Leave a Reply