பாரதிய ஜனதாக்கட்சியின் பின்னடைவு இந்திய மாநிலங்களுக்கு பாதுகாப்பு

மூத்த பத்திரிகையாளர் என்.ராம் நேர்காணல்

18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மிகவும் பலவீனமான நிலையில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் மீண்டும் பா.ஜ.க ஆட்சிப்பொறுப்பு ஏற்கும் நிலையில்,  இந்த அரசு தற்காலிகமானது தான் என்றும்; சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் தொடர்ந்து பா.ஜ.கவோடு பயணிக்க முடியாதவர்கள் என்றும் இந்திய அரசியலை மிக நீண்டகாலமாக கூர்ந்து ஆராய்ந்து வரும்  அரசியல் சமூக ஆய்வாளரும் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளருமான  என்.ராம் கணிக்கிறார். அதை, பிபிசி தமிழ் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் விவரிக்கிறார். 

இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக் கின்றன. இந்த முடிவுகளைப் பொறுத்த வரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதல் இடங்களைக் கொடுத்திருந்தா லும் கூட, பா.ஜ.க தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. ஆகவே அடுத்த கட்டமாக என்னவெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்?

மூன்றாவது ஆட்சிக்காலத்தை மோடி ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். அது உண்மை தான். ‘ஹாட்ரிக்’ என்றெல்லாம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால், இதில் ஒரு பெரிய மாற்றம் அடங்கியுள்ளது. பா.ஜ.க வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், இந்த அரசாங்கத்தின் தன்மையே மாறிவிட்டது. மற்றவர்களை நம்பியே இருக்க வேண்டும். ‘தி கார்டியன்’, ‘எகனாமிக் டைம்ஸ்’,  ‘பிபிசி’ எல்லாம் அதைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளன. மோடி மீது இருந்த கண்ணுக்குத் தெரியாத ஒளிவட்டம் போய்விட்டது. தோற்கடிக்கவே முடியாது என்ற அந்த பிம்பம் உடைந்துவிட்டது. இது உண்மை.

தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. இன்றைக்குப் பல பத்திரிகைகளில் அவர் ‘கிங் மேக்கர்’ என்று வந்துள்ளது. அது சரிதான். அதேபோல நிதிஷ் குமார். அவர் பல  தடவை முகாம்கள் மாறியிருப்பவர். அவருடையது ஐக்கிய ஜனதாதளம். இவர்களுக்கு எல்லாம் கூட்டணிக்குள் இடமளிக்க வேண்டிய  தேவை இருக்கும். ஏனென்றால், சந்திரபாபு நாயுடு,  நிதிஷ் குமாரின் வேலைத் திட்டம் வேறு.  இந்துத்துவா திட்டம் வேறு. ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது உட்பட சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் என்னென்ன கோரிக்கைகளை வைப்பார்கள் என்று தெரியவில்லை. 

சந்திரபாபு நாயுடு அனுபவம் வாய்ந்த தலைவர். அவரும் அமித்ஷாவும் கடந்த காலத்தில் ஒருவரை ஒருவர் மாறி மாறி  கடுமையான வார்த்தைகளால் திட்டிக் கொண்டவர்கள். சந்திரபாபு நாயுடுவை அமித்ஷா என்னென்னவோ வார்த்தைகளைப் பயன்படுத்தி கடுமையாக திட்டியிருக்கிறார். பதிலுக்கு சந்திரபாபு நாயுடுவும் பா.ஜ.கவை கடுமையாக திட்டியிருக்கிறார். அவையெல்லாம் பழைய கதையாக இருந்தாலும், அதையெல்லாம் மறந்து விட்டு- பாதைகள் வேறு வேறாக இருந்தாலும், தற்போது ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள்,  தற்காலிகமாக!

தேசிய ஜனநாயக கூட்டணி, குறிப்பாக பா.ஜ.க இப்படியொரு பின்னடைவைச் சந்தித்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்…  10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த ஒரு கட்சி மீதான அதிருப்தி மட்டும் தான் காரணமா, வேறு காரணம் எதுவும் இருப்பதாக நினைக்கிறீர்களா?

நான் நினைக்கும் ஒரு காரணம், புள்ளிவிவரங்களை எல்லாம் காட்டி நாடு வளர்ந்துள்ளதாக காட்டினாலும், அடிப்படைப் பிரச்சனைகளை பா.ஜ.க அரசாங்கம் அணுகவில்லை. அவற்றைத் தீர்க்கவில்லை. குறிப்பாக வேலையில்லாத் திண்டாட்டம். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலான வேலையின்மை. அதேபோல தகுதிக்கேற்ற வேலை  கிடைக்காதது. அவர்கள் டிகிரி வாங்கியிருக்கிறார்கள், இன்ஜினியர் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், அதற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சரியாக இல்லை. பல பேர் இதனைச் சுட்டிக்காட்டி எழுதியிருக்கிறார்கள். ரகுராம் ராஜன், ரோகித் லம்பா ஆகியோர் இதைப் பற்றி புத்தகமே எழுதியிருக்கிறார்கள். வேலையின்மைதான் இந்தியா எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சனை என்று கூறியிருக்கிறார்கள். இதற்கு தீர்வு கண்டால், வளர்ச்சிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். வேலையின்மை, குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலான வேலைவாய்ப்பின்மை மிக அதிகம். உழைப்புச் சக்தியில் பெண்களின் பங்களிப்பை எடுத்துக் கொண்டால், ஜி20 நாடுகளிலேயே கடைசி இடத்தில் இந்தியா இருக்கிறது. இதையெல்லாம் தங்கள் கட்சி மீதான குற்றச்சாட்டாக பார்க்காவிட்டாலும் கூட, இந்தப் பிரச்சனைகளை எல்லாம் தீவிரமாக எடுத்துக் கொண்டு தீர்க்கவில்லை. மாறாக, புள்ளிவிவரங்களைக் காட்டி, வேலைவாய்ப்பை பெருக்கி விட்டதாக ஜம்பம் அடித்தார்கள். இது ஒரு அடிப்படையான காரணம்.

இரண்டாவது, சர்வாதிகாரப் போக்கு! இந்தியாவிலுள்ள பிற அரசியல் கட்சிகள் எதையும் மோடியோ, பா.ஜ.கவோ மதிப்பதில்லை. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை  போன்ற அமைப்புக்களை எல்லாம் எதிர்க்கட்சிகள் மீது கட்டவிழ்த்து விடுகிறார்கள். இப்போது உண்மை என்னவெனில், கிராமப்புறங்களில் தான் பா.ஜ.க அதிகமாக தோல்வி அடைந்திருக் கிறது. அதுவும் இந்தி பேசும் மாநிலங்களில். குறிப்பாக பா.ஜ.க வலுவாக இருக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானிலேயே இது நடந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் இந்துத்துவா செயல்திட்டங்களை அதிகப்படுத்தினார்கள். அரசமைப்புச் சட்ட பிரிவு 370-ஐ நீக்கினார்கள்.  ராமர் கோயிலை கட்டி முடித்தார்கள்.  இருந்த போதும் அவையெல்லாம் அவர்களின் முக்கியமான மாநிலங்களில் கைகொடுக்கவில்லை, ஏன்?

ராமர்கோவில் பழைய கதையாகிப் போனது. பாபர் மசூதியை இடித்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலம் விசாரிக்கப்பட்டு, பின்னர் ராமர் கோவில் கட்டுவதற்கு பெரும்பான்மையான நீதிபதிகள் தீர்ப்பளித்தார்கள்… எனவே, ராமர் கோவில் கட்டியது பெரிய விஷயமாக இல்லை. ஆனால், அதற்குள் மோடி சென்று, நான் தான் செய்தேன் என்றதுடன், இந்த நாட்டின் தலைமை அர்ச்சகர் போல நடந்து கொண்டார். ராமர் சிலையையே பிராண பிரதிஷ்டை எல்லாம் செய்தார். அப்போது, சாதாரணமாக ஒரு அர்ச்சகர் செய்ய வேண்டியதை நாட்டின் பிரதமர் செய்வதைப் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தன. எனினும், மோடியின் திட்டங்கள் தேர்தலில் பெரிய அளவிற்கு எடுபடவில்லை. பா.ஜ.கவினர் தான் ராமர் கோவில் விஷயத்தை பெரிய அளவிற்கு ஊதிப் பெரிதாக்கினார்களே தவிர,  மக்கள் அதை முடிந்துபோன விஷயம் என்று கடந்து சென்றுவிட்டார்கள். எனவே, ராமர் கோவில் பா.ஜ.கவுக்கு பயன்படவில்லை.

இம்மாதிரி தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனது, பா.ஜ.க கட்சிக்குள் இருக்கும் நிலவரத்தை அதாவது, உட்கட்சிக்குள் ஒருவருக்கு ஒருவர் இடையேயான சமன்பாடுகளை எப்படி மாற்றும்?

கட்டாயமாக பா.ஜ.கவுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே பா.ஜ.கவுக்குள் முரண்பாடுகள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நிதின் கட்காரியை பா.ஜ.கவுக்குள் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர் ஒரு  முக்கியமான ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க  தலைவர். ஆர்.எஸ்.எஸ் ஆதரவைப் பெற்று  வந்தவர். அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டை ஏற்படுத்துவதில் திறமையான அமைச்சர் என்றும் மோடி அமைச்சரவையில் பெயரெடுத்தவர். அவருக்கு இவர்கள் சீட் தரவில்லை. முடிவெடுக்கும் இடத்திலும் அவரை இல்லாமல் செய்தார்கள். நிதின் கட்காரிக்கும், அமித்ஷா – நரேந்திர மோடி ஆகியோருக்கும் இடையே நல்ல உறவு இல்லை. அதேபோல யோகி ஆதித்ய நாத் – அமித்ஷா இடையிலும் பல கசப்பான உறவுகளே இருப்பதாக பலர் எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இரகசியமல்ல.

பா.ஜ.க கட்சிக்குள் நரேந்திர மோடியின்  செல்வாக்கு எந்தளவிற்கு இருக்கும்? அவர் முன்பு போல செயல்பட முடியுமா? அல்லது தனிப்பெரும்பான்மை பெற  முடியாத காரணத்தினால் செல்வாக்கை இழப்பாரா? இதனை அவர் எப்படி எதிர்கொள்வார்?

நிச்சயமாக அவரது செல்வாக்கு இனி  சந்தேகம் தான். ஏற்கெனவே அந்த நிலை ஏற்பட்டுவிட்டது. வெற்றிக் கொண்டாட்டத்திலேயே பார்க்க முடிந்தது. இது கொண்டாட்டமா, அல்லது குழப்பமா என்று கூட ஊடகம் ஒன்றில் கிண்டலடித்தேன். யாராவது இறந்து விட்டால், மக்கள் எல்லோரும் அப்படியே உறைந்து இருப்பார்கள் அல்லவா, அப்படி உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் மூன்றாவது முறை வந்துவிட்டோம் என்று அவர்கள் கூறினாலும், அது எடுபடவில்லை. இது ஒரு பெரிய பின்னடைவு என்ற உண்மை தலைவர்களுக்கு தெரியும் தானே! 

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று தெரியும். அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால், வாங்கியிருக்கும் வாக்குகள் எவ்வளவு? அவர்களுக்கான இடங்கள் பற்றி தேர்தலுக்குப் பிந்தையக் கருத்துக் கணிப்பில் என்னென்னவோ கூறினார்கள். அபத்தமான, அவமானகரமான முறையில் நடந்து கொண்டார்கள். எல்லோரும் ஒரே மாதிரி 400 இடங்களுக்கு மேல் கொடுத்தார்கள். ஒரு ஊடக நிறுவனம்… அதன் பெயரைக் குறிப்பிட விரும்ப வில்லை… 401 இடங்கள் வரை கொடுத்தார்கள். அது ஒரு பிரச்சாரம். இப்போது 36.5 சதவிகிதம் தான் பா.ஜ.கவுக்கு வந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகாலத்தில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இருந்தபோது, மாநிலங்களின் உரிமைகள் ஒடுக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இப் போது அப்படி இல்லை. எனவே, மாநி லங்கள் சற்று மூச்சுவிட முடியும் என்று சொல்லலாமா?

சரிதான். பொதுவாக ஒன்றிய ஆட்சியதிகாரம் பலவீனமாக இருந்தால் அல்லது கூட்டணி (coalition) ஆட்சியாக இருந்தால் தானாகவே ஓரளவு அரசியல் கூட்டாட்சி (Political federalism) வந்து விடும். இந்திய அரசியலமைப்பு முன்வைக்கும் கூட்டாட்சித் தத்துவத்தைப் பொறுத்தவரை, அது முழுமையான கூட்டாட்சி என சொல்ல முடியாது. ஏனென்றால், ஒன்றிய அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. மேலும் மேலும் அது குவிக்கப்பட்டுக் கொண்டே போகிறது. இப்போது ஜி.எஸ்.டி-யை எடுத்துக் கொண்டால், அவர்களின் அதிகாரம் அல்லது நடைமுறையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். காங்கிரஸ் கட்சி இருக்கும் போதும் அப்படித்தான் இருந்தது. இப்போது அது இன்னும் மோசமாகி அடுத்த கட்டத்திற்கு போயிருக்கிறது. ஆனால், தற்போதைய தேர்தல் முடிவுகள் மூலம் ஓரளவு அதிகாரத்தை மாநிலங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக கூறினால், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ இனி சாத்தியமா? பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவளிக்கும் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் இப்போது தான் நல்ல பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் முதல்வர் ஆவாரா, அல்லது வேறு பதவி வருமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும். ஆனால், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதற்காக இவர்கள், சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தை இரண்டு ஆண்டுகளில் கலைத்து நேர்படுத்த முடியுமா? அதேபோல பீகாரில் 2025 ஒக்ரோபர் – நவம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. 5 ஆண்டுகள் முடிந்து விடும். நிதிஷ்குமாரை வைத்துக் கொண்டு, பீகார் ஆட்சியைக் கலைத்து விடுவார்களா? எனவே, எனக்குத் தெரிந்த வரை, ‘ஒரே நாடு ஒரே தேர்தலை’ இப்போது கொண்டுவர முடியாது.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆளுங்கட்சி யாக 3 ஆண்டு ஆட்சி முடிந்த பிறகும், ஆட்சிக்கு எதிராக இயல்பாக ஏற்படும் எதிர்ப்புணர்வைத் தாண்டி திமுக கூட் டணி எப்படி வெல்ல முடிந்தது? இது எப்படி நடந்தது?

நான் இந்தக் காலத்தில் தமிழ்நாடு முதல்வரோடு பேசியிருக்கிறேன். அவரைக் கவனித்திருக்கிறேன். அமைச்சர்களோடும் கூட பேசியிருக்கிறேன். அவர்கள் முழுமை யான வெற்றி கிடைக்கும் என்று முதலிலேயே மிகுந்த நம்பிக்கையோடு இருந்தார்கள். எத்தனை இடங்கள் என்று குறிப்பிடாவிட்டா லும் மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்திருந் தார்கள். ஆளும் கட்சி கூட்டணிக்கும் எதிர்க் கட்சிக் கூட்டணிக்கும் செல்வாக்கில் இருந்த மிகப்பெரிய இடைவெளிதான் அதற்குக் காரணம். எனவே முழுமையான வெற்றி என்று  கணித்திருந்தார்கள். அதற்கேற்ப தேர்தல் பணிகளை மிகச்சிறந்த முறையில் திட்டமிட்டிருந்தார்கள். எடுத்துக்காட்டாக கூறினால், 69 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கடந்த முறை எவ்வளவு கூடுதலான வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு கிடைத்திருந்தன என்பதை மதிப்பீடு செய்துவிட்டார்கள். தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அந்த விவரங்களைக் கொடுத்து, பயிற்சி கொடுத்து, எந்த தவறும் நடந்துவிடக் கூடாது; எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியிருந்தார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் வேறெந்த கட்சியும் இதனை செய்யவில்லை. அதுவொரு நல்ல முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு. அந்த ஏற்பாடுகள் மிகவும் உறுதியான முறையில் இருந்தது. தற்பெருமைக்கானதாக இல்லை. வேண்டிய நேரத்தில் அகில இந்திய அரசியலையும் தொண்டர்களிடம் முதல்வர் பேசியிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது.

கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க அரசுக்கு  ஆளுநர் கடுமையான நெருக்கடிகளை கொடுத்திருக்கிறார். தற்போது மீண்டும் பா.ஜ.கவே ஒன்றிய ஆட்சியதிகாரத் திற்கு வந்திருக்கிறது. இதனால் வரும் ஆண்டுகளிலும் தி.மு.கவினர் சவால்களை எதிர்கொள்வார்களா, அல்லது மத்தியில் கூட்டணி ஆட்சி என்பதால் அந்த அளவிற்கு நெருக்கடி இருக்காது என நினைக்கிறீர்களா?

கூட்டணி ஆட்சி வந்ததால், ஒப்பீட்டு அளவில் இயல்பாகவே ஒன்றிய அரசைக் காட்டிலும் மாநில தி.மு.க அரசு வலிமையாகவே உள்ளது. மாநில அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை சந்திர பாபு நாயுடு ஆதரிப்பாரா? நிதிஷ் குமார் ஆதரிப்பாரா, ‘இந்தியா’ கூட்டணியின் துவக்கமே அவர் தானே; ஆளுநர் மூலமான நெருக்கடியை அவர் ஆதரிப்பாரா? எனவே, ஆளுநர் மூலமான நெருக்கடிகளில் தானாகவே மாறுதல் வருமா, அல்லது மீண்டும் போராடத் தான் வேண்டுமா என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் ஓரளவு உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசைத் தானே இதுவரை கேள்வி கேட்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் இன்னும் நன்றாகவே தலையிடலாம். இந்த ஆளுநரைத் திரும்பப் பெறக்கூடிய வாய்ப்பும் கூட உள்ளது. அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. அவர் போகட்டும்.

தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட  தொகுதிகளில் பா.ஜ.க இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது அவர்களின் நிஜமான வளர்ச்சியைக் குறிக் கிறதா, அல்லது அதிமுகவின் பலவீனத்தைக் குறிக்கிறதா, எப்படிசொல்லலாம்?

தற்காலிகமாக அ.தி.மு.க சரிந்துவிட்டதைப் போல தோன்றும். அது உண்மையல்ல. கடந்த காலங்களைப் பார்த்தோமானால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க ஆட்சி எவ்வளவு காலத்திற்கு இருக்கும் என்று கேள்வி எழுந்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அதனைத் திறமையாக நடத்தி விட்டார். சமாளித்து விட்டார். ஆனால், தி.மு.கவின் பலத்தை, தி.மு.க அமைத்த கூட்டணியை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பா.ஜ.க இல்லாமல் தனித்துப் போட்டி என்று ஒரு உறுதியான முடிவையும் எடப்பாடி பழனிசாமி எடுத்து விட்டார். பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருக்காது என்ற கணிப்பு அடிப்படையில் தனித்தே போகலாம் என்று முடிவு செய்தார். அதேபோல பா.ஜ.கவைப் பொறுத்தவரை தனியாக போட்டியிட்டிருந்தால் இப்போது பெற்றுள்ள வாக்குகளைப் பெற்றிருக்க முடியாது. பா.ம.க என்ற செல்வாக்குள்ள கட்சியை பா.ஜ.க சேர்த்துக் கொண்டது. 

காணொலி வழி தொகுப்பு: அ.மாரிமுத்து

Tags:

Leave a Reply