எம்.சி.ராஜா : தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமத்துவத்துக்காக ஒலித்த முதல் குரல்!

– ரவிக்குமார்

க்கள் தன்னை ஆதரிப்பார்களா இல்லையா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது என்று அச்சப்படாமல் ஆதாயம் கருதாமல் எடுத்துச் சொல்லும் ஒருவரைத்தான் தலைவர் என்று நான் கருதுகிறேன்” என அண்ணல் அம்பேத்கர் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, தலைமை என்பது புகழ்பெறுவதற்கான பாதை அல்ல, தனிப்பட்ட இலாபத்திற்கான தேடலும் அல்ல. அதுவொரு புனிதமான கடமை. விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு வழிகாட்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பு. அத்தகைய பண்புகள் அமைந்த ‘பெருந்தலைவர்’ எம்.சி.ராஜா ஆவார்.

மயிலை சின்னத்தம்பி ராஜா என்ற எம்.சி.ராஜாவின் தந்தை சின்னத்தம்பி அவர்களும், சென்னையில் பிரபலமான தலைவராக விளங்கியவர்தான். எம்.சி.ராஜா, வெஸ்லி மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பிறகு சென்னை கிறித்தவ கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கே கிரிக்கெட் அணியின் தலைவராகவும் எம்.சி.ராஜா விளங்கினார். கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்போது சென்னையில் இரவுப் பள்ளிகளை ஆரம்பித்து தொல்குடி மக்களுக்கு சேவை செய்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேல் படிப்பு படித்திட ஆதிதிராவிட மாணவர்களுக்கு அந்த நிர்வாகம் அனுமதி மறுத்து வந்தது. அதை எதிர்த்துப் போராடி அந்தத் தடையை உடைத்தெறிந்தார். மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் காரணமாக தீண்டாத வகுப்பினரிடையே இருந்து ஒருவரை சென்னை மாகாண மேலவைக்கு நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்தது. அதற்கு சாதி இந்துக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி 1919 ஆம் ஆண்டு எம்.சி.ராஜாவை அன்றைய கவர்னர் வில்லிங்டன் பிரபு சென்னை மாகாண மேலவை உறுப்பினராக நியமித்தார்.

இந்திய அளவில் சட்ட மன்றத்துக்கு நியமிக்கப்பட்ட முதல் உறுப்பினர் எம்.சி.ராஜாதான். உறுப்பினராக நியமிக்கப்பட்டதும் எம்.சி.ராஜா சட்டமன்றத்தில் பின்வரும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்…

“இந்த மாகாணத்துக்குட்பட்ட நகராட்சிகள் உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளுக்குள் இருக்கும் அனைத்து கிணறுகள், சத்திரங்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்துவதற்கு இருக்கும் தடைகள் யாவற்றையும் நீக்குவதையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குடியிருப்புகளுக்கு அருகில் கூடுதலான கிணறுகளை அமைப்பதையும் கட்டாயமாக்குமாறு உத்தரவு பிறப்பிக்குமாறு இந்த கவுன்சில் மாண்புமிகு கவர்னருக்குப் பரிந்துரைக்கிறது “என்ற தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அதற்கு ஆதரவாகப் பேசியவர்கள் வாக்கெடுப்புக்கு வந்தபோது ஆதரிக்க மறுத்தனர்.

அதனால் எம்.சி.ராஜா அதைத் திரும்பப் பெற நேர்ந்தது. ஆனால், பஞ்சமர் பறையர் என்ற இழிவுபடுத்தும் பெயர்களை ஒழித்து ஆதிதிராவிடர் என அழைக்க வேண்டும் என்ற தீர்மானம் எம்.சி.ராஜாவால் 1922 ஜனவரி 20 ஆம் திகதி கொண்டுவரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

கல்விப் பணி செய்வதில் எம்.சி.ராஜாவுக்கு மிகுந்த ஈடுபாடிருந்தது.1921 ஆம் ஆண்டில் எம்.பழனிசாமி என்பவரோடு இணைந்து சென்னையில் மாணவர் விடுதி ஒன்றை நிறுவினார். அதன் பெயர் பின்னர் பாடிசன் ஹாஸ்டல் என மாற்றப்பட்டது. தற்போது அது எம்.சி ராஜா விடுதி என்ற பெயரில் அரசாங்கத்தால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

1936 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் திராவிடப் பள்ளி என்கிற கல்வி நிலையம் அவரால் ஆரம்பிக்கப்பட்டது எனவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தனது தலைமையில் சாரணர் படை ஒன்றை அவர் உருவாக்கினார் எனவும் தெரிய வருகிறது.

ஆதிதிராவிட மகாசன சபையின் தலைவராகப் பொறுப்பேற்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளின் காரணமாக 1920களில் அவர் இந்தியா முழுவதும் பிரபலமான தொல்குடி சமூகத் தலைவராக விளங்கினார். 1928 ஆம் ஆண்டில் இந்தியாவில் பயணம் செய்த சைமன் குழு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கருத்து கேட்டது. அப்போது உத்தரப்பிரதேசத்தில் வலுவான இயக்கமாகத் திகழ்ந்த ‘ஆதி இந்து மகா சபா’வின் சார்பில் சைமன் குழுவிடம் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் ‘எம்.சி.ராஜாதான் எங்கள் தலைவர்’ என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எம்.சி.ராஜாவின் புகழ் இந்திய அளவில் பரவியிருந்ததற்கு இது ஒரு உதாரணமாகும்.

இந்தியாவில் அதிகாரமாற்றத்தை ஏற்படுத்தவும், சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களையும் சந்தித்து தொல்குடி மக்களின் பிரச்சனைகளை எம்.சி.ராஜா எடுத்துரைத்தார். 1921ஆம் ஆண்டு சென்னை ‘பி அண்டு சி’ ஆலையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் தமிழகத் தொழிலாளர்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். முதலில் சுமார் அறுநூறு தொழிலாளர்கள் அதில் பங்கேற்றனர்.

பிறகு அது மிகப்பெரும் வேலைநிறுத்தமாக மாறியது. அந்த வேலை நிறுத்தத்தில் ஆதி திராவிடர்கள் கலந்துகொள்ளாமல் வேலைக்குச் சென்றனர். அதனால் ஆத்திரமடைந்த மற்றவர்கள் அவர்கள்மீது வன்முறையை ஏவினார்கள். ஆதி திராவிட மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. அப்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அகதி முகாம்களில் சுமார் இரண்டாயிரம்பேர் இருந்தனர் என்பதிலிருந்தே அந்தத் தாக்குதலின் கொடுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

தொல்குடி மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியுடன் கூடிய இரட்டை வாக்குரிமை வேண்டுமென்ற கோரிக்கையை முதலில் ஏற்றுக்கொண்டவர் எம்.சி.ராஜா. ஆனால் பின்னர் அதே கோரிக்கை அம்பேத்கர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டபோது அதை எம்.சி.ராஜா எதிர்த்து கூட்டு வாக்காளர் தொகுதி முறையை ஆதரித்தார். 1929 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி இந்திய அரசின் மையக் கமிட்டிக்கு சமர்ப்பித்த மனுவில் அவர் தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை பற்றி வலியுறுத்தியிருந்தார்:

’தனி வாக்காளர் தொகுதிகளை உருவாக்குவதன் மூலமே நேரடித் தேர்தலையும் உத்தரவாதப்படுத்தலாம், போதுமான பாதுகாப்பையும் பெறலாம்.’ என அவர் கூறினார். ‘அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம். பிரிவினை உணர்வைத் தூண்டி தேசியத்தின் வளர்ச்சிக்குத் தடையாக அமைந்துவிடும் என அதற்கு சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். ஆனால் அதனால் வரும் நன்மைகள் எதிர்ப்பின் அளவைவிட அதிகமானவை. தனிவாக்காளர் தொகுதிமுறை என்பது இந்தியாவுக்குப் புதியதல்ல. ஏற்கனவே முஸ்லீம்கள், சீக்கியர்கள், இந்திய கிறித்தவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு அந்த உரிமை உள்ளது. அது அவர்களுக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வைத் தந்துள்ளது’ என எம்.சி.ராஜா அந்த மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது கிடையாது. படித்தவர்கள், சொத்து உள்ளவர்கள் ஆகியோருக்குத்தான் வாக்குரிமை இருந்தது. சென்னை மாகாணத்தில் தொல்குடி மக்களின் மக்கள்தொகை அப்போது சுமார் அறுபத்தைந்து இலட்சமாக இருந்தது. ஆனால் அதில் 56756 பேருக்கு மட்டும்தான் வாக்குரிமை இருந்தது என்பதை எடுத்துக்காட்டிய எம்.சி.ராஜா வாக்காளர்களுக்கான தகுதியைக் குறைக்கவேண்டும் எனவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தனிவாக்காளர் தொகுதி முறையை வலியுறுத்திவந்த எம்.சி.ராஜா அதை பிரிட்டிஷ் அரசு வழங்கவிருந்த நேரத்தில் காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்துத் தனது நிலையை மாற்றிக்கொண்டு கூட்டுத் தொகுதி முறைக்கு ஆதரவு தெரிவித்தார். ஆலயப் பிரவேசம் உள்ளிட்ட பல விஷயங்களில் காந்தியின் நிலையை ஆதரித்தபோதிலும் தொல்குடி மக்களின் உரிமைகளை அவர் மறந்துவிடவில்லை.

ஆதி திராவிட மகாஜன சபையின் கௌரவச் செயலாளராகவும், தென்னிந்திய இரண்டாவது ஆதி திராவிடர்கள் மாநாட்டின் தலைவராகவும், கூட்டுறவுச் சங்கங்களின் கௌரவத் துணைப் பதிவாளராகவும், மாகாண, மத்திய சட்டமன்றங்களின் உறுப்பினராகவும் – இப்படி பல்வேறு பதவிகளை வகித்த எம்.சி.ராஜா தொல்குடி மக்களின் பெருமைமிகு தலைவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

( ஜூன் 17: பெருந்தலைவர் எம்.சி.ராஜா பிறந்த நாள் )

Tags: