சமூகப் போர்வாள் S.M. பாக்கர்
–T.S.S. மணி
நான் காட்சி ஊடகங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முதல் ஏற்பாடு செய்தவர் S.M. பாக்கர். நாங்கள் ஒருவருக்கொருவர் ‘மாப்பிள்ளை’ என்று தான் அழைத்துக் கொள்வோம்.
1989 ஆம் ஆண்டு. பாபர் மசூதியை இடிப்பதற்கான பரப்புரையை, அத்வானி ரத யாத்திரையாகத் தொடங்கிய நேரம். S.M.பாஷா என்ற பெரியவர் முயற்சியில், பாபர் மசூதி மீட்புக் குழு உருவானது. அதன் தொடர் கூட்டங்கள் திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் அருகே பச்சையப்பன் தெருவில், முஸ்லீம் பள்ளிக்கூடத்தில் நடக்கும்.
அப்போது பேரா. ஜவாஹிருல்லாவும், S.M. பாக்கரும் ஒரு கூட்டத்திற்கு வந்தார்கள். இருவரும் முழு நேரப் பணியாளர்களாக, இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் செயல்பட்ட காலம். S.M.பாக்கர் கீழக்கரையைச் சேர்ந்தவர். பேரா. ஜவாஹிருல்லா, இன்றைய தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊரைச் சேர்ந்தவர். அப்போது, பேராசிரியர், ’அருட்செல்வன்’என்ற பெயரில், பாபர் மசூதி வரலாற்றை ஒரு புத்தகமாக எழுதிக் கொண்டு வந்திருந்தார். அதன் மூலம் பாபர் மஸ்ஜித் மீட்புக் குழு கூட்டங்களில் கலந்து கொண்டு, இருவரும் பங்களிப்பு செலுத்தினார்கள்.
1995 இல் நடந்த காவல்துறையின் ‘கொடியங்குளம் தாக்குதலை’ கண்டித்து நடத்தப்பட்ட கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களில் பாக்கர் பங்கு கொள்ளாத நிகழ்ச்சியே இருக்காது. மக்கள் சிவில் உரிமைக் கழகம் என்ற P.U.C.L அமைப்பில் பாக்கர் எங்களுடன் இணைந்து கொள்கிறார்.
பாக்கர் ஒரு புனையப்பட்ட வழக்கில் ‘தடா’ வில் கைது செய்யப்பட்டார். 1995ல் ‘தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்’ தொடங்கப்பட்டது. இதன் தொடக்கப் பேரணியை பாரிமுனையில் பேரா. ஜவாஹிருல்லா நடத்துகிறார். நானும் அதில் கலந்து கொண்டேன். அந்தப் பேரணியே, ’தடாவிலிருந்து S.M. பாக்கரை விடுதலை செய்’ என்ற முழக்கத்துடன் நடத்தப்பட்டது. பிறகு பியுசிஎல் வழக்கறிஞர்கள் மூலம் பிணை விடுதலை பெற்றார்.
1997, 1998 இல் பொடா சட்டத்திற்கு முன்மாதிரி படைக்க, ( Model POTO) டெல்லியிலிருந்து உள்துறை அமைச்சர் அத்வானி வழிகாட்டலில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்த போராட்டத்தில், 100 பொதுக் கூட்டங்களை புதிய தமிழகமும், த.மு.மு.க.வும் சேர்ந்து நடத்தியது.
தென்மாவட்டங்களில், புதிய தமிழகம் எழுச்சியோடு, பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டிய காலம் அது. ஒரு நாளைக்கு 3 அல்லது 4 பொதுக் கூட்டங்களை நடத்தினோம். ஒவ்வொரு கூட்டத்திலும், S.M. பாக்கரின் முழக்கம், மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது என்பது சொல்லாமலேயே விளங்கும்.
பிறகு அந்த ’போடோ’ வை எதிர்த்து த.மு.மு.க ஆயிரம் பேரை கலந்து கொள்ள வைக்க, பெண்கள் இணைப்புக்குழு 1000 பெண்களை பங்கு கொள்ளச் செய்ய, பனகல் பூங்காவில் தொடங்கி, ஆளுநர் மாளிகை வரை, பி.யூ.சி.எல். நடத்திய பேரணியில், பாக்கரின் பங்கு சிறப்பானது.
ஆளுநர் பாத்திமா பீவி அந்த “ஆள்தூக்கி சட்டத்தை” எதிர்த்து, குடியரசுத் தலைவருக்கு எழுத, அவரிடமிருந்து மாநிலத்திற்கு அது திருப்பி அனுப்பப்பட்டு, மசோதா செயலிழந்து போனது.
இவ்வாறு களப்பணிகளிலேயே பாக்கர் ஒரு முன்னோடிப் போராளியாகத் திகழ்ந்தார். மானுடத்தின் ஒவ்வொரு பகுதி ஒவ்வொரு வகை மக்களின் உரிமைகளுக்கான போராட்டக் களங்களிலும், பாக்கரது பங்களிப்பு சற்று அதிகமாகவும், தீவிரமாகவும, போர்க் குணமிக்கதாகவும் இருக்கும்.
முகத்திற்கு நேரே எதையும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். கோவையில் கான்ஸ்டபிள் அந்தோணி செல்வராஜ் கொலையை, இந்துத்துவவாதிகள் இரத்தக் கலவரமாக்கி 17 முஸ்லீம் இளைஞர்களை, மருத்துவமனையிலேயே வெட்டி, சுட்டு, நெருப்பிட்டுக் கொன்ற கொடுஞ்செயலை, பேரா.ஜவாஹிருல்லாவுடன் சேர்ந்து, படங்களையும், காணொளிகளையும் எடுத்து, அவற்றை மனித நேயத்திற்குச் சவால்’ என்ற ஆவணப்படமாக எடுத்ததில் அவர்களுக்கு நாங்களும் உதவ முடிந்தது. அது ஒரு வரலாற்று நிகழ்வு.
இந்த ஆவணப்படத்தில், பின்குரலாக என்னைப்பேச வைத்ததும் பாக்கர்தான். த.மு.மு.க.,வில் தொடங்கிய அவரது பயணம் பிறகு த.நா. தவ்ஹித் ஜமாத் என ஜெய்னுலாப்தீனுடன் இணைந்து, அவர்களுக்கு ஊடகத் தேவையை செய்து காட்டி உணர வைத்தவர். வின் டி.வி. மூலம் அளப்பரிய பணிகளைச் செய்துள்ளார்.
பாக்கர் தேர்தல் அரசியலுக்குள் நுழையவே இல்லை. அதுவே அவரது சமரசமற்ற போக்கிற்கு உதவியது.
ஆடம்பரத் திருமணங்களை, மிகவும் நெருக்கமானவர்கள் நடத்தினாலும் போக மாட்டார். அப்படி ஒரு கொள்கைப் பிடிப்பு கொண்டவர்.
பிறகு தனது தலைமையிலேயே இந்திய தவஹித் ஜமாத்தைக் கட்டமைத்தார். மதவெறி எதிர்ப்பில், கொடும் சட்டங்களைச் சாடுவதில், மக்களை எழுச்சி கொள்ள வைப்பதில், பாக்கருக்கு நிகராக யாரைச் சொல்வது?
சிறுபான்மையினரது உரிமைக்காக சீறி வந்த சிங்கம் S.M. பாக்கர். மானுடர்கள் ஒவ்வொருவரிடமும் பாசத்தோடு பழகும் பாங்கு இவருக்கே உரியது. இந்து முன்னணி ராமகோபாலனுக்குக் கூட, குரான் தமிழ் நூலை வழங்கினார்.
அதனால் இந்தத் தோழரது இழப்பு சாதாரணமானதல்ல. மா- சே- துங் கூறியது போல, மலையை விடத் தாக்கம் நிறைந்தது. பாக்கரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். படிப்பினைகள் பலவற்றை நாம் பெற்றுக் கொள்ளலாம். அவரது கனவை நனவாக்க நாமும் பாடுபடுவதே பாக்கரின் நினைவுக்குத் தரும் மரியாதை.