இதுதான் அமெரிக்க ஜனநாயகம்!

க. சுவாமிநாதன்

மெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் முதற் சுற்று நேரடி விவாதம் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே ஜூன் 28 நடந்துள்ளது. அதில் இருவரும் பரிமாறிக் கொண்ட வார்த்தைகளும் குற்றச்சாட்டுகளும் அரசியல் தரத்தை தரைமட்டத்திற்கு இறக்கியுள்ளன. பைடன் வயது 81. டிரம்ப்  வயது 78. இருவருமே ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அப்பொறுப்புக்கு வரும் அதிக வயதானவர்கள் என்ற “சாதனையை”ப் படைத்தார்கள். ஆனால் அவர்கள் விவாதத்தில் எந்த வகையிலுமான முதிர்ச்சியும் வெளிப்படவில்லை. 

ஜனநாயக முகமூடி

உலகத்தில் உச்சபட்ச ஜனநாயகம் உள்ள நாடு  என்று பறைசாற்றிக் கொள்ளும் நாடு அமெரிக்கா. உலக மக்களின் பொதுப் புத்தியிலும் அப்படியொரு பிம்பம் பதிந்துள்ளது. அமெரிக்காவின் ஏகாதிபத்திய குணமும், மூன்றாம் உலக நாடுகளை இராணுவ, பொருளாதார ரீதியாக அச்சுறுத்தும் அதன் ஆணவமும், ஐ.நா சபையில் உலக நாடுகளின் அறுதிப் பெரும்பான்மை  கருத்தைக் கூட மறுதலித்து வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் போக்கும், அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் இலாப வேட்டைக்காக பிற நாடுகளின் ஆட்சிகளை கவிழ்ப்பதும் – ஜனாதிபதிகளின் உயிர்களை பறிப்பதுமான செயல்பாடுகளை கடந்தும் கூட தனது ஜனநாயக பிம்பத்தை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், ஈரான், பலஸ்தீனம் போன்ற உலக நடப்புகளை உன்னிப்பாக பார்ப்பவர்கள் மட்டுமே அதன் ஜனநாயக முகமூடியை உரித்து உண்மை முகத்தை காண முடியும். 

வசைகள் நிரம்பிய விவாதம்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது அங்கே  நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் அதன் ஜனநாயக விழுமியங்கள் எந்த அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளன என்பதற்கு சாட்சியமாக அமைந்துள்ளது.  அதிபர் வேட்பாளர்கள் இருவரின் நேரடி முதற் சுற்று விவாதத்தில் “சிறுபிள்ளைத்தனமானது” என்பது தான் இருப்பதிலேயே பயன்படுத்தப்பட்ட நாகரிகமான வார்த்தை.

இதோ இவை எல்லாம் ஜோ பைடன் வீசிய வசை வார்த்தைகள்: 

* “டிரம்ப் வெற்றி பெற்றால் அவர்தான் முதன் முதலாக ஜனாதிபதி ஆகப் பதவியேற்கிற ‘தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக’ (Convicted Felon) இருப்பார்.”  

* “உங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள குடிமைத் தண்டத் தொகைகள் எவ்வளவு என்பதை எல்லாம் யோசியுங்கள்! ஒரு பெண்ணை பொது வெளியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக எவ்வளவு பில்லியன் டொலர்கள்… உங்கள் மனைவி  கருவுற்று இருக்கும் போது ஒரு ஆபாச நட்சத்திரத்துடன் பாலியல் லீலைகளுடன் ஈடுபட்டு இருந்ததற்காகவும்…”

* “ஒடுக்கமான ஒளிந்தோடும் பூனை போன்ற குணம்  உடையவர்”

திருப்பியடித்த டிரம்ப்

இதற்கு பதில் அளித்த டிரம்ப் கூறியவை இவை:

* “ஜோ பைடன் ஜனாதிபதியாக உள்ள நான்கு ஆண்டுகள் அமெரிக்காவுக்கு அவமானத்தை கொண்டு வந்து சேர்த்திருப்பவை.”

* “எனக்கு நிறைய நண்பர்கள் உலகம் முழுக்க உள்ளனர். அமெரிக்கா தனது மரியாதையை இழந்துவிட்டது. என்ன நேர்ந்தது அமெரிக்காவுக்கு என்று அவர்கள் கேட்கிறார்கள்…”

* “ஜோ பைடன் என்ன பேசி முடித்தார் என்று எனக்கு புரியவில்லை… அவருக்கே புரிந்திருக்குமா என்று தெரியவில்லை.”

இந்த ரேஞ்சில் அந்த விவாதம் நடந்தேறி உள்ளது. மக்களின் வாழ்நிலை பிரச்சனைகள் மீது  எந்த ஆரோக்கியமான பரிமாற்றங்கள் எதுவுமில்லை.  அவர்களுக்கு இடையிலான பண வீக்கம் பற்றிய விவாதங்களும் கூட சுய தம்பட்டம், தனிப்பட்ட தாக்குதல்களாகவே அமைந்தது.

சுய தம்பட்டம்,  தனிப்பட்ட தாக்குதல்

டிரம்ப் : பணவீக்கம் ஏறு முகமாகவே இருக்கிறது.  

ஜோ பைடேன்: உங்கள் காலத்தில் தலை குப்புற கவிழ்ந்த பொருளாதாரத்தையே நீங்கள் எங்கள் கைகளில் தந்தீர்கள்.

டிரம்ப்: என் காலத்திய பொருளாதாரம் இந்த தேசத்தின் பொருளாதார வாழ்வில் மிகச் சிறந்தது.  

ஜோ பைடன்: (திருப்பி அடிக்கிறார்)  ஓ… மிகச் சிறந்த  பொருளாதாரமா! இவர் ஒருவர் மட்டுமே இப்படி நினைத்து தனக்குத் தானே புகழ்ந்து கொள்பவர். இப்படியாக அந்த விவாதம் நடந்தேறி உள்ளது. தரம்… நாகரீகம் … பண்பு எதுவுமே இல்லாமல் பேசிக் கொண்ட இவர்களில் ஒருவர்தான்  உலகத்தின் “முதற்பெரும் ஜனநாயகத்திற்கு” தலைமை தாங்கப்  போகிறார்.  

கோர்ப்பரேட்கள் பிடியில் ஒரு தேசத்தின் அரசியல் வாழ்வு இறுக இறுக, தரமும், விழுமியங்களும் தாழும்,  வீழும் என்பது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நிரூபணம் ஆகி வருகிறது.

– ஆதாரம்: The Hindu 29.07.2024

Tags: