அயோத்தி: யார் இந்த அவதேஷ் பிரசாத்?

விவேகானந்தன்

ந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்தது அயோத்தியில் அவதேஷ் பிரசாத்தின் வெற்றி தான். கருத்துக்கணிப்புகள், அவதானிப்புகள், அனுமானங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கி தூள் தூளாக்கியது அவதேஷ் பிரசாத் (Avadhesh Prasad) பெற்ற வரலாற்று வெற்றி. இது பா.ஜ.கவிற்கும் மோடிக்கும் மிகப் பெரிய ஷாக் என்றே சொல்லலாம்.

ராமர் கோவிலை மையப்படுத்தி பிரச்சாரம் செய்து நாடு முழுக்க வெற்றி பெறலாம் என்று எண்ணியது பா.ஜ.க. ஆனால், பா.ஜ.கவிற்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அயோத்தி ராமர் கோயில் அமைந்துள்ள ஃபைசாபாத் தொகுதியிலேயே பா.ஜ.கவை தோற்கடித்தார் சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாத். 54,567 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங்கை வீழ்த்தினார்.

அவதேஷ் பிரசாத் சமாஜ்வாதி கட்சியில் இயங்கி வரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தலைவர் ஆவார். ஆனால், ஃபைசாபாத் தொகுதி தனித் தொகுதியல்ல, பொதுத் தொகுதி ஆகும். ராமர் கோயில் அமைந்துள்ள பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை நிறுத்தி பா.ஜ.கவை வீழ்த்தியதுதான் இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்று சொல்லலாம்.

சமாஜ்வாதி கட்சி உத்தரப்பிரதேசத்தில் அவரை ஒரு தலித் தலைவர் என்ற அடையாளத்துடன் முன்னிறுத்தவில்லை என்றாலும், யாதவ் கட்சி என்று பார்க்கப்படும் சமாஜ்வாதி கட்சியின் தலித் முகமாக அவர் இருக்கிறார்.

மோடியை கலங்கடிக்கச் செய்த இந்த அவதேஷ் பிரசாத் யார் என்பதையும், அவருடைய அரசியல் பின்னணி என்ன என்பதையும் விரிவாகப் பார்ப்போம்.

சட்டம் படித்தவரான அவதேஷ் பிரசாத் தனது 21வது வயதில் ஒரு சோசலிஸ்டாக அரசியலில் இறங்கினார். முன்னாள் பிரதமர் சரண் சிங் நடத்திய பாரதிய கிரந்தி தளம் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சரண் சிங்கைத் தான் தனது Political Father என்று அவதேஷ் பிரசாத் குறிப்பிடுகிறார். 1974 ஆம் ஆண்டு அயோத்தி மாவட்டத்தில் முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் அவதேஷ்.

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தியால் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்து கடுமையாக செயல்பட்டார். ஃபைசாபாத் மாவட்டத்தின் எமெர்ஜென்சி எதிர்ப்பு போராட்டக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

அதற்காகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவதேஷ் சிறையில் இருந்தபோது அவரது தாய் இறந்துவிட்டார். அப்போது அவரது தாய்க்கு இறுதிச் சடங்கினை செய்வதற்குக் கூட அவதேஷூக்கு பரோல் வழங்கப்படவில்லை. எமெர்ஜென்சிக்கு எதிராகப் போராடியதால் கடைசியாக ஒரு முறை தனது தாயின் முகத்தைப் பார்க்கும் வாய்ப்பினையும் இழந்தவர் அவதேஷ்.

ஆனாலும் சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் அரசியலில் தனது தீவிரத்தை அவர் குறைத்துக் கொள்ளவில்லை. சரண்சிங் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து லோக் தளம் கட்சியை உருவாக்கினார். 1981 ஆம் ஆண்டு இக்கட்சியின் பொதுச்செயலாளராக ஆனார் அவதேஷ் பிரசாத்.

அப்போது உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜீவ் காந்தி போட்டியிட்டார். இதனால் அத்தேர்தல் கடும் பரபரப்பான ஒன்றாக இருந்தது. ராஜீவ் காந்தியை எதிர்த்து லோக் தளம் கட்சியின் சார்பில் சரத் யாதவ் களமிறக்கப்பட்டார்.

இடைத்தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது வாக்கு எண்ணும் மையத்திலிருந்து அவதேஷ் பிரசாத் வெளியேறக் கூடாது என்று உத்தரவிட்டார் சரண் சிங். அப்போது வாக்குச் சீட்டுகள் ஒரு வார காலத்திற்கு எண்ணப்பட்டன. அந்த சூழலில் தான் அவதேஷ் பிரசாத்தின் தந்தை இறந்துவிட்டார். வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேற முடியாது என்பதால் தனது தந்தையின் இறுதிச் சடங்கிலும் அவரால் பங்கேற்க இயலவில்லை.

பின்னர் லோக் தளம் கட்சியில் பல பிளவுகள் ஏற்பட்டன. ஜனதா தளத்தில் இயங்கி வந்தார் அவதேஷ் பிரசாத். 1992 ஆம் ஆண்டு முலாயம் சிங் யாதவ் ஜனதா தளத்திலிருந்து பிரிந்து சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கியபோது அவருடன் இணைந்து கொண்டார். சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளராகவும் ஆனார்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் அவதேஷ் பிரசாத் வெற்றி பெறும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் ஆகும். ஆனால் 9 முறை உத்திரப் பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றிருக்கிறார் அவதேஷ் பிரசாத். 6 முறை உத்தரப் பிரதேச மாநில அமைச்சராகவும் இருந்திருக்கிறார். அவதேஷுக்கு இப்போது வயது 79.

சமாஜ்வாதி கட்சியின் அடையாளமாக பார்க்கப்பட்ட யாதவ்-முஸ்லிம் கட்சி என்ற இமேஜை மாற்றி, OBC-தலித்கள்-சிறுபான்மையினர் கட்சி என்ற அடையாளத்தை முன்னிலைப்படுத்த முயலும் அகிலேஷ் யாதவின் திட்டத்திற்கு முக்கிய உறுதுணையாக இருந்து வருகிறார் அவதேஷ் பிரசாத்.

அயோத்தி வெற்றியைப் பற்றி பேசும் போது, “நான் எந்த அதிசயமும் செய்யவில்லை. என்னை வெற்றி பெற வைத்தது ஸ்ரீ ராமரும், அனுமனும், ஃபைசாபாத்தின் தெய்வீகமான மக்களும் தான்” என்று கூலாக சொல்லி வருகிறார் அவதேஷ்.

”இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இன்னும் ஃபைசாபாத் மாதிரியான ஒரு பொதுத் தொகுதியில் என்னைப் போன்ற பட்டியலின வேட்பாளரை நிறுத்துவதற்கு எந்த கட்சியும் முன்வருவதில்லை. இது அகிலேஷிடம் இருக்கும் சித்தாந்த உறுதியினாலேயே சாத்தியப்பட்டது.

பா.ஜ.கவிலிருந்து யார் நின்றாலும் பரவாயில்லை, நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள், நீங்கள் நில்லுங்கள் என்றார் அகிலேஷ். தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தபோது என்னை முன்னாள் எம்.எல்.ஏ என்று குறிப்பிட்டுப் பேசினார். அப்போது நான் அவரிடம் நான் சிட்டிங் எம்.எல்.ஏ என்று தெரிவித்தேன். அப்போது அகிலேஷ், நீங்கள் உறுதியாக எம்.பி ஆகிறீர்கள் என்பதால் தான் உங்களை முன்னாள் எம்.எல்.ஏ என்று சொன்னேன் என சொன்னார்” இவ்வாறு அகிலேஷ் யாதவின் மன உறுதியைப் பற்றி வியந்து பேசுகிறார் அவதேஷ்.

ராமருடைய பாதை என்று சொல்லி அயோத்தியில் 13 கிலோமீட்டர் தூரத்தில் 20 மீட்டர் அகலத்திற்கு உள்ள வீடுகள் எல்லாம் அகற்றப்பட்டன. பழைய கோயில்கள் சிலவும் அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய முறையான இழப்பீடும் கொடுக்கப்படவில்லை. அயோத்தி நகரை அழகுபடுத்துதல் என்ற பெயரில் எப்போது வேண்டுமானாலும் தாங்கள் வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே இருக்கிறது. இப்படி பல விடயங்கள் பா.ஜ.க மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக அயோத்தியின் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவதேஷ் பிரசாத்தின் வெற்றியைப் பற்றி பேசும்போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் இப்படி சொல்கிறார். ”யாரெல்லாம் ராமரை சுரண்ட முயன்றார்களோ அவர்கள் தோற்று விட்டனர், கடைசியில் அயோத்தி வென்று விட்டது”

Tags: