மோடி – ஆர்.எஸ்.எஸ் உருமறைப்பு செய்து பாதுகாத்த முதலாளித்துவ வர்க்க நலன்

-பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

ளும் வர்க்கங்களுக்கு பாசிச அமைப்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்புக் கொள்கையை பா.ஜ.க மத ரீதியாக மடைமாற்றி அதை இருட்டடிப்பு செய்ததில் இருந்தே அறிந்து கொள்ளலாம். நவ தாராளமய காலத்தில் இந்தியாவில் ஒருபக்க சார்பாக சொத்துக்கள் குவிவது, மறுபக்கம் வறுமை என ஏற்றத்தாழ்வுகள் இருப்பது நாடறிந்த உண்மை. நாட்டில் நிலவும் ஏழை – பணக்காரர்களுக்கான இடை வெளியை குறைப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டுமென உலக பொருளாதார மாமன்றம் உள்ளிட்டு பலரும் அறிவுறுத்தி வந்துள்ளனர். பெரும்பணக்காரர்களின் கட்டுக்கடங்காத செல்வ சேமிப்பும், வருமான ஏற்றத்தாழ்வுகளும் முதலாளித்துவத்துக்கு ஆபத்து என முதலாளித்துவ ஆதரவு அறிவுஜீவிகளே கூறியிருக்கின்றனர். அமெரிக்க கோடீஸ்வரர்கள் கூட இந்த பிரச்சனையை சரிசெய்வதற்காக தங்கள்  மீதும், நாட்டின் இதர பணக்காரர்கள் மீதும் கூடுதல் வரியினை விதிக்குமாறு கூறிய வரலாறுஇருக்கின்றது. 

மதவாத – கோர்ப்பரேட் கூட்டுக்கொள்ளை 

ஆனால் இந்திய முதலாளித்துவ தரப்புக்கு இன்றைய நவீன காலத்தில் கூட இப்படியான பார்வை  இருக்கவில்லை. மதவாத பாசிச அமைப்புக்கு அவர்கள் தெரிவிக்கும் ஆதரவும், அதன் துணை கொண்டு எத்தகைய மேலாதிக்கத்தையும் அடக்கு முறைகள் மூலமாக எதிர்கொள்ள முடியும் என்ற  கணிப்புமே அதற்கு காரணம். ஜி.டி.பிர்லா போன்ற முதலாளிகள் ஒட்டுமொத்தமாக நாட்டின் சொத்துக்களை கபளீகரம் செய்வதில் மக்கள் இயக்கங்களின் பலம் காரணமாக சற்று தயக்கம் காட்டினர். ஆனால் இன்றைக்கு இந்தியாவின் பெரும்  முதலாளிகள் அத்தகைய அச்சத்தை கொண்டிருக்கவில்லை. தீவிர வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் துணையுடன் வரையறையின்றி தங்களது செல்வங்களை அதிகரித்து கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் செல்வந்தர்கள் மீதான வரிவிதிப்பு மற்றும் பரம்பரை சொத்துக்கள் மீதான வரிவிதிப்பு (Inheritance Tax) எனும் கொள்கை விஷயத்தில் பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் செய்த பிரச்சாரமே அதற்கு சாட்சி.

பெரும்பணக்காரர்கள் மீது செல்வ வரி 

அசமத்துவமின்மையைப் போக்குவதற்கு பணக்காரர்கள் மற்றும் பரம்பரைச் சொத்துக்கள் மீது வரிவிதிப்பதன் மூலம் பெறப்படும் வருவாயி னைக் கொண்டு ஏழைகளுக்கு பயனளிக்க கூடிய முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த முடியும். அதுவே உலகளாவிய பொருளாதார உரிமையும் கூட  என்பதே வெளிப்படையாகும். இந்த பொருளாதார உரிமையினை இந்தியாவில் வழங்குவதற்கு 1 சதவீத பெரும்பணக்காரர்கள் மீது 2% செல்வ வரியும், பரம்பரைச் சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கு  வரிவிதிக்கப்பட வேண்டுமென பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு வைத்திருப்பவர்கள் மீது பரம்பரை சொத்துவரியும், பெரும் பணக்காரர்கள் மீது செல்வ வரியும் விதிப்பது என்பது அசமத்துவ மின்மையை குறைப்பதற்கு உதவும். இந்த இரண்டு  முறையிலான வரிவிதிப்புகளுமே செல்வந்தர்கள் வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதை கட்டுப்படுத்தும் என்றும் பொருளாதார அறிஞர் தோமஸ் பிக்கெட்டி(Thomas Piketty)யும், அவரது ஆதரவாளர்களும் வலியுறுத்துகின்றனர்.

பரம்பரைச் சொத்து என்பது என்ன?

‘பரம்பரைச் சொத்து’ என்பது சுயமாக சம்பாதித்தது என்று உரிமை கோர முடியாது. செல்வம் ஈட்டுவதன் பலனாக கிடைத்தது என சிலர் அதை நியாயப் படுத்துகின்றனர். தந்தையின் சொத்துக்கள் அவர் சம்பாதித்ததாக கருதிக்கொண்டால் கூட, அவரது மகன் அந்த சொத்துக்களை வைத்திருப்பதை எப்படி, ‘ஈட்டியதன் பலனாக’ என்று உரிமை கொண்டாட  முடியும்?  வேறுவகையில் கூற வேண்டுமெனில், பரம் பரைச் சொத்து என்பது பிறப்பின் அடிப்படையில் எதிர்பாராமல் கிடைக்கக்கூடிய சொத்துக்களின் மதிப்பு ஆகும். இதனை முதலாளித்துவக் கொள்கையால் கூட இல்லையென நிரூபிக்க முடியாது. அத னால்தான் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒருவரின் சொத்துக்களை, அவரது மரணத்துக்கு பிறகு (death duties) ‘பரம்பரை சொத்துக்களாக’ கருதி  வரிவிதிக்கப்படுகின்றது. வளர்ச்சியடைந்த ஜப்பான்  நாட்டில் 55% பரம்பரை சொத்து வரி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ‘பரம்பரைச் சொத்து வரி’ என்ற ஒரு நடைமுறையே இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.  

சொத்து வரி விதிப்பு குறித்த பொய்ப் பிரச்சாரம்

இத்தகைய வரி விதிப்பு இடதுசாரிகள் அல்லாத, நவ தாராளமய கொள்கைகளை எதிர்க்காதவர்கள் கூட ஏற்றுகொள்கிறார்கள். காங்கிரஸைச் சேர்ந்த தொழில் முனைவரான சாம் பிட்ரோடா, தேர்தல்  நேரத்தில் பரம்பரை சொத்துக்கள் மீது வரிவிதிப்பது குறித்த யோசனையை முன்வைத்தார். இந்தியப் பெரும் பணக்காரர்கள் இத்தகைய வரிவிதிப்பினை எப்போதும் எதிர்த்தே வந்திருக்கிறார்கள். தங்களின் மீட்பரான ஆர். எஸ். எஸ். – பா.ஜ.க இதை ஒரு போதும் ஏற்காததோடு, தங்களை பாதுகாக்க முன்வரும் என நினைத்த நேரத்தில், சாம் பிட்ரோடோ மீது ஒரு லாரி செங்கற்களை வீசியது போல பா.ஜ.க பாய்ந்தது. இத்தகைய யோசனையை நிராகரிக்க வழக்கமான காரணங்களாக, “பணக்காரர்கள் மீது வரிவிதிப்பது கடினம்; கோர்பரேட் மூலதனங்களை ஊக்குவிக்க உதவாது;  உலகளாவிய நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள்” என்று எதையும் பா.ஜ.க கூறவில்லை. மாறாக பரம்பரை சொத்து மீதான வரி என்பது இந்துக்களின் சேமிப்பினைப் பறித்து பிடுங்கி முஸ்லீம்களிடம் கொடுப்பதற்கும், இந்து பெண்களின் தாலியினை பறித்து ஊடுருவல்காரர்களிடம் கொடுப்பதற்கும் காங்கிரஸ் திட்டமிடுவது ஆகும் என பொய் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது முன்னெடுத்தது.

முதலாளிகளின் வர்க்க நலனை முன்னிறுத்திய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க

சங்பரிவார கும்பல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தவறான போலி பிரச்சாரத்தை இந்த விஷயத்தில் பரப்பியது. பரம்பரை சொத்து மீதான  வரிக்கான அளவுகோல் என்றைக்கும் மத ரீதியில்  இருந்தது இல்லை. உ.பி. முதல்வர் யோகி ஆதித்ய நாத், காங்கிரஸ் ஔரங்கசீப் காலத்தில் விதிக்கப்பட்ட ‘ஜிஸ்யா’ (முஸ்லீம் அல்லாதோருக்கான வரி) வரியினை கொண்டுவரப் போகிறது என தேர்தல் பிரச்சாரத்தில் பேசினர். மோடியும், யோகி ஆதித்ய நாயத்தும் பரம்பரை சொத்துவரி குறித்து அறியாதவர்களா? திட்டமிட்டு இந்துக்களின் சொத்துக்கள் எல்லாம் முஸ்லீம்களுக்கு செல்லும் என புரளியைப் பரப்பினார்கள். இது இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் நலனை முன்னிறுத்துவதற்காக மத ரீதியில் ஆர். எஸ். எஸ். – பா.ஜ.க முன்னெடுக்கும் போலிப் பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இவர்களின் அடிவருடி  கும்பல்களும் இதனை வைத்து மத சிறுபான்மையினருக்கு எதிராக விஷம் கக்கினார்; சிறுபான்மையினரை எதிர்க்கட்சிகள் தாஜா செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.  

அறிவுஜீவிகளின் பங்கு

பா.ஜ.கவை பொறுத்தவரை பரம்பரை சொத்துவரி மீதான காழ்ப்புணர்ச்சியை ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடித்து  சாதித்தது போல, சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வை அதிகரித்தது; எதிர்க்கட்சிகளை பின்வாங்கச் செய்தது; பரம்பரை சொத்து மீதான வரி என்ற எண்ணத்தையே குழி தோண்டி புதைக்குமளவுக்கு கருத்துருவாக்கம் செய்தது என்ற விதத்தில் பெரும் செல்வந்தர்களின் நலனை பா.ஜ.க பாதுகாத்தது. இவை அத்தனையையும் தனது வழக்கமான மோசமான பொய்ப் பிரச்சாரத்தின் வழியாக சதித்தார்கள். சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை மக்கள் அறியவும், சரியான விதத்தில் அதனை புரிந்து கொள்ளவும் உதவுவதே ஜனநாயக விழுமியமாகும். ஆனால் சுரண்டல் நிறைந்த இந்த சமூகத்தில் மக்கள் வேண்டுமென்றே அறியாமையில் வைக்கப்படுகின்ற நிலைமையில், பொதுவெளியில் பிரச்சினைகளை விவாதித்து விளக்க வேண்டியது அறிவுஜீவிகளின் கடமையாகும். உழைக்கும் மக்களிடம் இதனை எடுத்து செல்லவேண்டியதில் அறிவுஜீவிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறது மார்க்சியத் தத்துவம்.

John Maynard Keynes

கெய்ன்ஸின் அறிவுரை 

நன்கு கற்றறிந்த முதலாளித்துவ அறிவுசார் தரப்பினர்கூட பிரச்சினைகளை மக்களிடையே எடுத்து கூறி ஜனநாயகத்தை செயல்பட வைப்பதற்கு அறிவுஜீவிகளின் முக்கியத்துவத்தை (அவர்களுக்கு வர்க்கங்கள் குறித்த பார்வை இல்லையெனினும்) உணர்ந்துள்ளனர். முதலாளித்துவ பொருளாதார அறிஞர் (ஜோன் மேனார்ட் கெய்ன்ஸ் John Maynard Keynes) “படித்த முதலாளித்துவ வர்க்கம்” குறித்து பேசுகிறார். அவரது கருத்துப்படி, அவர்களின் வேலை பரம்பரை சொத்துவரி மதத்தின் அடிப்படையில் வரையறுக்கப்படவில்லை என மக்களிடையே விளக்குவதுதான். ஆனால் இந்த விஷயத்தில்  பாசிச சக்திகளின் பொய் பிரச்சாரங்கள் மேலெழும்புவது என்பது படித்த முதலாளித்துவ வர்க்கம் தங்களது பொறுப்பில் இருந்து விலகியிருந்ததையே காண்பிக்கிறது. மக்களிடையே விளக்கியும் அவர்கள் புரிந்து கொள்ளாததும், அறிவுஜீவிகள் பலவீனமடைவதும் தவிர்க்க இயலாதது. ஆனால் பரம்பரை சொத்து மீதான வரியினை மத ரீதியிலான வரிவிதிப்பு என்று மடை மாற்றி மோடியும் – பா.ஜ.கவும் மற்றும் பெரும் முதலாளிகளும் தப்பித்துக் கொள்வது என்பது விஷயங்களை வெளிக் கொணரும் ஊடகங்கள் இல்லாததையே சுட்டிக்காட்டுகிறது. 

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளித்துவம்

இது ஏன் நடக்கிறது? “படித்த முதலாளித்துவ வர்க்கம்” என்பது முதலாளித்துவத்தின் ஒரு பிரிவாகும். ஜனநாயக அரசியல் கோட்பாடுகளை கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது பற்றி அதன் சொந்த கோட்பாட்டில் தெளிவாக இருக்கும் போது தான், தான் நினைத்த பாத்திரத்தை அது வகிக்க  முடியும் என்கிறார் கெய்ன்ஸ். ஆனால் ஒரு ஜனநாயகத் தூணான ‘படித்த முதலாளி வர்க்கம்’ வலுவிழந்து பாசிச திட்டத்தில் தன்னை ஒப்புவித்துக்கொள்வது என்பது, நவதாராளமய முதலாளித்துவம் அடைந்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தை, கெய்ன்ஸ் கற்பனை செய்து பார்த்திராத தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் முதலாளித்துவம் இத்தகைய சூழலை தவிர்க்க வேண்டுமென்றே கெய்ன்ஸ் விரும்பியிருந்தார்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி
தமிழில்: தே.சைலஸ் அருள்ராஜ் 

Tags: