வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சி ஏன்?

டி.வி.பரத்வாஜ்

ங்கதேசத்தில் இடஒதுக்கீட்டில் திருத்தம் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மிகப் பெரியதாக உருவெடுத்திருக்கிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு பல்வேறு நகரங்களில் ஊரடங்கு, முன் எச்சரிக்கைக் கைது, செய்தி ஊடகங்களுக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை மேற்கொண்டுள்ளது. போராட்டங்களில் ஆளுங்கட்சி சார்பு மாணவர் சங்கத்தினரும் – எதிர்த் தரப்பாரும் கைகலப்பு, கல்வீச்சு, நேரடி தாக்குதல் என்று மோதலில் ஈடுபட்டதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கிளர்ச்சி தொடங்கிய மூன்றாவது நாளே பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் காலவரம்பின்றி மூடப்பட்டன.

வங்கதேசத்தில் எழுத்தறிவு அதிகம். படித்த மாணவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். வேலைவாய்ப்புக்காக போராடுவது ஒருபுறம் இருக்க, அதிக ஊதியம் தரும் அரசு வேலைகளில் கிட்டத்தட்ட 30%, வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்காக ஒதுக்கப்படுவதைத்தான் மாணவர்கள் இப்போது கடுமையாக எதிர்க்கின்றனர்.

‘நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் கொள்கை அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் அல்ல, கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்புகளைத் தர வேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய கோரிக்கை’ என்று கூறும் மாணவர்கள் பிற வகை இடஒதுக்கீடுகள் தொடர்வதையும் ஆதரிக்கின்றனர். தங்களுடைய இயக்கத்தை, ‘பாரபட்சத்துக்கு எதிரான போராட்டம்’ என்று அறிவித்துள்ளனர்.

டாக்கா, சிட்டகாங், கொமில்லா ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்களில் அமைதியின்மை ஏற்பட்டிருக்கிறது. விடுதிகளை மூடிய அரசு, மாணவர்களை உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டிருக்கிறது. மோதல்களிலும் காவல் துறை நடவடிக்கைகளிலும் நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். கைதானவர்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லை.

இறந்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் மேல் உயர்ந்துவிட்டது. வங்கதேசத்தில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுகின்றனர். இந்திய மாணவர்கள் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியிருக்கிறது. இந்திய மாணவர்களை அழைத்துவரும் ஏற்பாடுகளையும் எல்லைப்புற மாநிலங்கள் மேற்கொண்டுள்ளன.

உயர் நீதிமன்ற தீர்ப்பால் வினை

வங்கதேச உயர் நீதிமன்றம் ஜூலை 5 இல் அளித்த தீர்ப்பில், 2018 இல் இரத்துசெய்யப்பட்ட, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30% இடங்கள் என்ற ஒதுக்கீட்டை மீண்டும் வழங்குமாறு ஆணையிட்டது. இந்த ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் பெரிய போராட்டங்களை நடத்தியதால் பிரதமர் ஷேக் ஹசீனாதான் அந்த ஒதுக்கீட்டை 2018 இல் இரத்து செய்திருந்தார். அவருடைய தலைமையிலான அவாமி லீக் கட்சிதான் நாட்டை ஆள்கிறது.

பிரதான எதிர்க்கட்சிகள் அவருடைய ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஒடுக்கப்படுவதாகவும் ஜனநாயகம் முழுமையாக செயல்படவில்லை என்றும் கூறி நாடாளுமன்ற பொதுத் தேர்தலைப் புறக்கணித்தன. அவாமி லீக் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் தொடர்கிறது. இப்போது எதிர்க்கட்சிகள் இந்தக் கிளர்ச்சிக்குப் பின்னால் இருப்பதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது.

முஜிபுர் ரகுமான் (Mujibur Rahman) இடஒதுக்கீடு

வங்கதேச தந்தை என்று அழைக்கப்படும் முஜிபுர் ரகுமான், 1972 இல் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டு முறையைக் கொண்டுவந்தார்:

  • அரசின் முதலாவது, இரண்டாவது நிலை அதிகாரிகள் பதவியில் 44% – தகுதி அடிப்படையில் நிரப்பப்படும்.
  • எஞ்சிய 56% வெவ்வேறு பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்படும்.
  • வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்களின் குழந்தைகள், பேரப் பிள்ளைகளுக்கு 30%.
  • பெண்களுக்கு 10%.
  • பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10%.
  • இனரீதியான சிறுபான்மையினருக்கு 5%.
  • ஊனமுற்றவர்களுக்கு 1%.

ரஜாக்கர்கள் என்று வசை

இடஒதுக்கீட்டில் சீர்திருத்தம் கோரி போராடும் மாணவர்கள் அரசுக்கு எதிரானவர்கள், அரசைக் கவிழ்க்க வன்முறை மூலம் முயற்சி செய்கிறார்கள், இவர்கள் ‘ரஜாக்கர்கள்’ என்று பிரதமர் ஹசீனாவும் ஆளுங்கட்சியினரும் கண்டித்துள்ளனர். ‘ரஜாக்கர்கள்’ என்பவர்கள் கொடூரமானவர்கள்.

பாகிஸ்தான் விசுவாசிகள். பாகிஸ்தானின் பிடியிலிருந்து வங்கதேசம் விடுதலை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக வங்காளிகளை ஆயுதங்களைக் கொண்டு அடக்கி ஒடுக்கியவர்கள், அன்றைய கிழக்கு பாகிஸ்தான் மக்களை (வங்காளிகளை) கடுமையாக நடத்தியவர்கள், பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொன்றவர்கள்.

வங்கதேச மக்களின் விடுதலை உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்ட ரஜாக்கர்களுடன் தங்களை ஒப்பிட்டதை மாணவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். ‘நான் யார் தெரியுமா – ரஜாக்கர்’ என்று அறிவிக்கும் பதாகைகளையும் அட்டைகளையும் அணிந்து வீதிகளில் கோஷமிடுகின்றனர். இது கிளர்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது.

“வங்கதேச விடுதலைக்காகப் போராடியவர்களின் வாரிசுகளுக்கு வேலை தருவதை ஏன் கிளர்ச்சிக்காரர்கள் இவ்வளவு மூர்க்கமாக எதிர்க்கின்றனர்?” என்று பிரதமர் ஷேக் ஹசீனா கேட்டிருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் தெற்காசிய நாடுகள் அனைத்திலுமே இப்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசியும் வேலையில்லாத் திண்டாட்டமும் வாட்டுகின்றன. தனியார் துறைகளில் முதலீடும் வேலைவாய்ப்பும் உயரவில்லை.

அரசு வேலை நிரந்தரமானது என்பதுடன் அதிக ஊதியம் தருகிறது. எனவே, அதற்குப் போட்டி நிலவுகிறது. அரசுகளும் காலியிடங்களை உடனுக்குடன் பூர்த்திசெய்வதில்லை, எனவே அரிதான அந்த வேலையில் 30% ஒதுக்கீடு என்பதைக் குறைத்தால், பொதுப் பிரிவுக்கு அதிகம் வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆதங்கம் கிளர்ச்சியாளர்களிடம் இருக்கிறது.

மாணவர்களை அழைத்துப் பேசி, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்குப் பதிலாக ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பு மூலம் எதிர்த் தாக்குதல் நடத்தியதும் ரஜாக்கர்கள் என்று முத்திரை குத்தியதும் மாணவர்களை ஆவேசம் கொள்ளச் செய்திருக்கிறது. பொறுமையாக கையாளப்பட வேண்டிய விவகாரம் இப்போது கையை மீறிவிட்டது. எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை கிளர்ச்சியைக் கைவிட மாட்டோம் என்று மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.

வங்கதேச மாணவர் போராட்டத்துக்கு காரணமான 30% இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி

ங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை இரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேநேரம், விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான வேலை ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வங்கதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 30% இடஒதுக்கீடு குறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுப் போராட்டம் தீவிரமடைந்ததால் இன்றைக்கே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னதாக, தீர்ப்பு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற வாயிலுக்கு வெளியே ராணுவ டாங்கர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், தலைநகர் டாக்கா முழுவதும் ராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டன. இதற்கிடையே, வங்கதேச வன்முறைப் போராட்டத்தில் 151 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கதேச கலவரம்: அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது. கடந்த 1971 ஆம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1 ஆம் திகதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

இதனால், வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 130 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், காவல் துறையின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதன் முகப்பு பக்கங்களில் ‘இனி இது போராட்டம் இல்லை, இப்போது இது போர்’ என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், வங்கதேச அரசு வேலைவாய்ப்புகளில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30% இடஒதுக்கீட்டை இரத்து செய்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: