வயநாடு நிலச்சரிவு பேரழிவு

-ச. அருணாசலம்

மூன்று நாள் பெரு மழையில் முடிவுக்கு வந்தது பலரது வாழ்க்கை. மிகப் பெரிய மானுடப் பேரழிவை கேரளாவின் வயநாடு கண்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற நிலச்சரிவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.  இவற்றை எப்படி தவிர்க்கலாம்..? என்ன செய்ய வேண்டும்..?

கேரள மாநிலத்தின் வயநாட்டில் கடந்த மூன்று நாட்களாக பெய்த அதீத மழையும் அதையொட்டிய நிலச்சரிவும், முண்டக்காடு, சூர்ல் மலை, மற்றும் அத்தி மலை கிராமங்களை முற்றிலுமாக அழித்து இருந்த இடம் தெரியாமல் புதைத்து விட்டது.

இதுவரை 270 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர், இறந்தவர் எண்ணிக்கை ஆயிரத்தை தொடும் அவலமும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை காயமுற்றோர் எண்ணிக்கை 200-ஐ தொட்டுள்ளது. காணாமற்போனோரின் எண்ணிக்கை விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

இன்னும் நீடித்து கொண்டிருக்கும் கன மழையினூடே மீட்பு பணிகளை மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் முடுக்கி விட்டுள்ளன, பேரிடர் மீட்பு குழுக்களும் , இராணுவ மற்றும் கடல், ஆகாயப் படைகளும் இந்தப் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் – மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2020 இல் இதே மே. தொடர்ச்சி மலைப் பகுதியில் இடுக்கி மாவட்டத்தில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 65 மனித உயிர்களை பலி கொண்டது நினைவிருக்கலாம். தமிழ் நாட்டிலும் ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி, கொடைக்கானல்,வால்பாறை போன்ற பகுதிகலில் அடிக்கடி நிலச்சரிவுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 

இப்படி நிலச் சரிவுகள் தொடர்கதையாக நிகழ்வது எதைக் குறிக்கிறது?

நிலச்சரிவுகளை, பெருவெள்ளம் போல் கண்காணிக்கவோ, துல்லியமாக கணிக்கவோ முடியாது என்பது உண்மையானாலும் ஆபத்தை எதிர் நோக்கி அரசு எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளை, பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசும் மக்களும் எடுத்தனவா என்பது பெரிய கேள்வியாகும்.

இந்தப்பேரழிவு இயற்கையின் சீற்றமா அல்லது மனித செயல்களால் விளைந்த விபரீதமா என்ற கேள்வி தொடர்ந்து நம்மை துரத்துகிறது எனலாம்.

மீட்பு பணிகள், நிவாரணங்கள், உதவிகள், குறைபாடுகள் விமர்சனங்கள் என்ற வட்டத்தை விட்டு வெளிவந்து இத்தகைய பேரிடர்களை முற்றிலும் களைய முடியாவிடினும் வெகுவாக குறைக்க நாம் செய்யத் தவறியன யாவை என சிந்திக்க வேண்டிய தருணம் இது!

இங்கு நாம் என்று குறிப்பிடுவது, அரசுகள் (மாநில மற்றும் ஒன்றிய அரசுகள்) அரசியல் கட்சிகள், அதிகாரிகள் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை உள்ளடக்கிய மக்களையும் சேர்த்தே தான் குறிப்பிடுகிறோம்.

வயநாடு பகுதிகளில் இப்படி ஒரு விபத்து நடக்கும் என்பதை ஆய்வாளர்கள் அவ்வப்போது  எச்சரித்து வந்ததை அரசும் சரி, மக்களும் சரி பொருட்படுத்தவே இல்லை. பசுமை போர்த்திய இயற்கை மலைச்சரிவுகள் மற்றும் மலைமுகடுகளில் நிலத்தை ஆழத் தோண்டி, கட்டிடங்களை எழுப்புவதும், இதற்கு தடையாக உள்ளதாகக் கருதி மரங்களை தாறுமாறாக வெட்டி வீழ்த்தியதன் விளைவாகவும் அப்பகுதியின் நில அமைப்பியலே மாறியுள்ளது. மண்ணின் நிலச் சரிவைத் தாங்கும் திறனும் பாதிப்படைந்துள்ளது.

இந்திய துணை கண்டத்தில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து நிகழ்ந்த பேரிடர்களை களையும் பொருட்டு 2011ம் ஆண்டு ஒன்றிய அரசு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சூழலியல் வல்லுனர் குழுவை (Western Ghats Ecology Expert Panel) மாதவ் ராவ் காட்கில் தலைமையில் அமைத்தது .

இக்குழு அறிவித்த பரிந்துரைகளை “ காட்கில் அறிக்கை” என்று அறியப்பட்டது.

இவ்வறிக்கை மே. தொடர்ச்சி மலைப் பகுதியை அதன் சூழலை, அங்கு வசிக்கும் மக்களை கருத்தில் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்தது. (ESZ1, ESZ2,ESZ3) ஒவ்வொரு பகுதியிலும் சூழலை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டது.

இயற்கைச் சூழலின் தன்மையைப் பாதுகாக்க அங்கு கட்டுமான பணிகள், கல்குவாரிகள் கூடாது என்றது., மலையையும், மண்ணையும் பாதுகாக்க பல்வேறு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றது.

பொருளாதார உணர்வயப்பட்ட மண்டலங்களில் (ESZ) நகர்ப்புற கட்டுமானங்கள், வணிக கட்டமைப்புகள் மற்றும் பாறைகளை உடைத்தல் நொறுக்குதல் போன்ற சுரங்க நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதித்த காட்கில் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பை கிளறியது.

அனைத்து மாநிலங்களும் – கேரளம், கர்நாடகம் , தமிழ்நாடு, மற்றும் மகாராஷ்டிரா , கோவா – இந்த அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர்.

அரசியல் கட்சிகள், அவர்கள் மார்க்சிஸ்டு கட்சி தலைமையிலான இடது முன்னணியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியானாலும் சரி, இரு அமைப்புகளும் விவசாயிகளின் பேரில், தொழிலாளர்களின் பேரில் காட்கில் அறிக்கையை எதிர்த்து போராட்டங்களில் குதித்தனர். மற்ற மாநில அரசியல் தலைவர்களும் இதையே செய்தனர். இதற்கு ஒரே விதி விலக்காக திகழ்ந்தவர் முன்னாள் கேரள முதல்வர்,

முதுபெரும் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர் தோழர் வி.எஸ் . அச்சுதானந்தன் ஒருவர் தான்! முழுமையாக காட்கில் அறிக்கை பரிந்துரைகளை அமல் படுத்த குரல் கொடுத்தார்.

ஏழை சொல் அம்பலமேறாது என்ற கணக்கில், கிளம்பிய போராட்டங்களை சமாளிக்க , அரசியல் கட்சிகளை அவர்களுக்கு பின்னால் இருந்த பணம் படைத்த ‘வளர்ச்சி தாதாக்களை’ சமாளிக்க மன் மோகன் சிங் அரசு, காட்கில் அறிக்கையை மறு ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.

இவ்வறிக்கை “கஸ்தூரி ரங்கன் அறிக்கை” என்றழைக்கப்பட்டது .

இவ்வறிக்கையில் பொருளாதார உணர்வயப்பட்ட மண்டலங்கள் (ESZ) என்ற பகுப்பை விட்டுவிட்டு 37% பகுதியை மட்டும் சுற்றுச்சூழல் உணர்வயப்பட்ட பகுதி (Ecologically Sensitive Area) என்றும், இதை தவிர்த்த எஞ்சியுள்ள பகுதிகளில் கட்டுமான நடவடிக்கைகளை, வளர்ச்சி நடவடிக்கைகளை கல் குவாரி மற்றும் அணைக் கட்டுமான நிகழ்வுகளை , சுற்றுலா தள கட்டுமானங்கள் ஆகியவை இயற்கைக்கு ஊறு விளைக்காத வகையில் நடத்தலாம் என்று பரிந்துரைத்தது.

இத்தகைய விதி தளர்வுகள் மூலம் “வளர்ச்சி நடவடிக்கைகள்” என்ரா பெயரில் ஆபத்தான கட்டுமானங்கள் இடர் வயப்பட்ட பகுதிகளில் நடந்தேற வழி வகுக்கப்பட்டது. இதற்குப் பின்னால் இருந்த வலிமை மிக்க கட்டுமான கும்பல் construction mafia ( பண முதலைகள் மற்றும் அரசியல் வாதிகள்) வெற்றிக் களிப்பில் மிதந்தனர்.

காரணம், கஸ்தூரிரங்கன் அறிக்கை இத்தகைய இடர்நிறைந்த பகுதிகளில், மாநில அரசுகள் உயரதிகாரிகள் குழுவை (high level authority) அமைத்து, அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் வளர்ச்சி நடவடிக்கைகளை அனுமதித்து கண்காணிக்க வழி வகுத்தது தான்.

இது ஊழலுக்கு, அரசியல்வாதிகள்-அதிகாரிகள்-பணக்காரர்கள் ஒட்டுறவை தண்ணீர் விட்டு வளர்க்கும் செயலன்றி வேறல்ல! இந்த குழுக்களால் விவசாயிகளின், ஆதிவாசிகளின், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்த உபயோகமும் இல்லை. மாறாக, இவர்களது பெயரைக் கூறி அரசியல்வாதிகளும், பணமுதலைகளும், அதிகாரிகளின் கூட்டு மூலம் வளர்ச்சி அடைவர்.

இரண்டு அறிக்கைகளும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் சூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை பேசினாலும், அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், கட்டுப்பாடுகளில், தடுப்பு நடவடிக்கைகளில் முற்றிலும் மாறுபடுகின்றன.

# காட்கில் (Madhav Gadgil) அறிக்கை, இப்பகுதியை தரம் பிரித்து உள்ளூர் மக்களின் பங்களிப்புடன் “வளர்ச்சி” நடவடிக்கைகள் சிலவற்றிற்கு தடையும், மற்ற நடவடிக்கைகளுக்கு கண்டிப்பான கட்டுப்பாடும் விதித்து இயற்கையை பேண பரிந்துரைகள் செய்தது.

# கஸ்தூரிரங்கன் அறிக்கையோ, இயற்கையைப்பேணும் பொழுதே வளர்ச்சி பாதிக்கப்படாதவாறு முன்னேறுவதை மையமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இடர்பகுதியின் அளவை குறைத்து, மற்ற பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க விதிகளை தளர்த்துவதன் மூலம் இயற்கைக்கும் வளர்ச்சிக்கும் ஒரு சம நிலை பேணப்படும் என ஜால்சாப்பு செய்தது.

இதனுடைய வெளிப்பாடுதான் வயநாட்டு நிலச்சரிவு என்பதை உணரும்பொழுது வேதனையாக உள்ளது.

கஸ்தூரிரங்கன் அறிக்கையை தூக்கிப் பிடித்தவர்கள் – அவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, காங்கிரசாராக இருந்தாலும் சரி, இந்தப் பேரழிவிற்கு பதில் கூற வேண்டிய அவசியத்தில் உள்ளனர்.

கஸ்தூரி ரங்கன் அறிக்கையை கடைப் பிடித்ததால் இயற்கை பேணப்பட்டதா ? சமநிலை எட்டப்பட்டதா? என்ற கேள்விக்கு அவர்களிடம் பதிலில்லை.

ஏனெனில், இக் கட்சிகளின் நிலைப்பாடு ஆட்சியிலிருப்பதை பொறுத்து மாறுபடுகிறது எனலாம்.

கேரள முன்னாள் முதல்வர் ஊம்மன் சாண்டியும் இன்றைய முதல்வர் பினாரயி விஜயனும் இவ்விரு அறிக்கைகளையும் ஆதரித்தும் சில வேளைகளில் எதிர்த்தும் பேசி வந்தனர் என்பது வரலாறு. இதனால் கொள்கை முடிவுகள் எதிர்பார்த்த விளைவுகளை கொடுப்பதற்கு முன் சமரசங்களால் தோல்வியடைந்தன.

விளைவு விபரீதமானது, பலியானது எளிய மக்களே அன்றி வேறு யார்?

இந்தப் பேரழிவில், இயற்கை சீற்றத்தில் பருவநிலை மாற்றத்திற்கு பங்கில்லையா? அதை மனித முயற்சி தடுத்திருக்குமா? என்ற கேள்வி நியாயமானது தான். ஆனால், பருவநிலை மாற்றத்திற்கான காரணமான புவி வெப்பமடைவது நாம் எதிர் கொள்ளும் சவால் ஆகும்.

எல் நினோ (El Nina) கடல்நீர் வெப்பமடைவதால் ஏற்படும் சுழற்சி மாற்றத்தால் மழைக் குறைவையும், வறட்சியையும் குறிக்கிறது. இதனால் 1997-1998 மற்றும் 2015-2016 காலங்களில் வயநாடு பாதிப்படைந்தது.

லா நினா (La Nina) கடல்நீர் குளிர்வதால் ஏற்படும் சுழற்சி மாற்றத்தால் அதீத மழையை கொட்டுகிறது. இதனால் நிலச்சரிவும், வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதை குறிக்கின்றது. இந்த நிலையினாலும் வயநாடு 2010-2011, 2020-2021 காலங்களில் பாதிப்படைந்ததுள்ளது. இப்பொழுது மீண்டும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது .

ஆக இவ்விரு நிலைகளுமே இந்தியாவை குறிப்பாக மேற்கு தொடர்மலைப் பகுதியை, வயநாட்டை, பாதிக்கும் பொழுது இதை எதிர்கொள்ள இந்திய மக்களும், அரசுகளும் இயற்கையோடு இயைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டுமே ஒழிய, இயற்கைக்கு புறம்பான வளர்ச்சியில் மோகம் கொண்டு அலைவதில் பயனில்லை .

இந்த பாடத்தை மீண்டும், மீண்டும் பல உயிர்களை பலி கொடுத்த பின்னரும் உணரவில்லை என்றால், விடிவு காலம் நமக்கு உண்டா?

சுற்றுச் சூழலை பாதுகாத்து பேணுவதும், நீர்நிலைகளை கட்டிக் காப்பதும் , சுவாசிக்கும் காற்றை மாசுபடாமல் பாதுகாப்பதும் நமக்கு மட்டுமல்ல, நமது வருங்கால சந்ததியினர்க்கும் உதவக் கூடிய செயல்களாகும் என்பதை நினைவில் கொண்டு விதிகள் சமைப்போம், அதை இறுகப் பற்றி ஒழுகுவோம்!

வயநாடு நிலச்சரிவுக்கு ‘காலநிலை மாற்றம்’ மட்டும் காரணம் அல்ல… ஏன்?

-பாரதி ஆனந்த்

யநாட்டில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட வரலாறு காணாத நிலச்சரிவுக்கு வைக்கப்படும் முதன்மையான காரணம் என்பது காலநிலை மாற்றமாக இருந்தாலும், அந்த மாற்றம் நிகழக் காரணமான வேர்களை அறிந்து, அதற்கேற்ப அரசு கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டிய தருணம் உணர்த்தப்பட்டுள்ளது எனக் கூறுகின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்று சொன்னால் அது மிகையல்ல. இதனை உறுதிப்படுத்த நிறைய தரவுகளும் இருக்கின்றன.

எச்சரித்த இஸ்ரோ ஆய்வறிக்கை: இஸ்ரோ கடந்த ஆண்டு வெளியிட்ட நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடங்கிய வரைபடத்தில், “இந்தியாவில் உள்ள 30 நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளில் 10 கேரளாவில் உள்ளன. 30 இடங்களில் கேரளாவின் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கொங்கன் மலைப் பகுதியில் 0.09 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, அதாவது தமிழகம், கேரள, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளடக்கிய பகுதிகள் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை. குறிப்பாகக் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் மக்கள் தொகை அடர்த்தியால் நிலச்சரிவுக்கு அதிக அபாயம் உள்ள பகுதியாக அதை மாற்றுகிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஸ்ப்ரிங்கர்’ (Springer) என்ற மற்றொரு சூழலியல் சார்ந்த ஆய்விதழில், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள் மிக அதிகமாக நிலச்சரிவு அபாயம் கொண்ட பகுதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2022 இல் வெளியான மற்றுமொரு ஆய்வறிக்கையில், வயநாட்டில் 1950 முதல் 2018 வரை வனப்பகுதி அழிப்பு 62 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கே தோட்டப் பயிர்கள் நடவு 1800 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கின்றது.

இவ்வாறாக நாம் இங்கே சாட்சிக்கு எடுத்துக் கொண்ட சில புள்ளிவிவரங்கள் அனைத்துமே காலநிலை மாற்றம், வலுவிழந்த நிலப்பரப்பு, அருகி வரும் வனப்பரப்பு ஆகியன வயநாடு வரலாறு காணாத நிலச்சரிவுக்கு சரியான காரணமாக அமைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்ற நிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் கர்நாடகாவின் வனப்பரப்பு 37.4%. இதுவே அதிகபட்சம். இதனையடுத்து மகாராஷ்டிரா 25.9%, கேரளா 17%, தமிழகம் 13.6%, குஜராத் 3.9%, கோவா 2 சதவீதம் வனப்பரப்பை மேற்குத் தொடர்ச்சி மலையில் கொண்டுள்ளது. இந்நிலையில், 1920-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மிக அதிகபட்சமாக 62.7 சதவீதம் வனப்பரப்பு இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாறிப்போன பருவமழைப் பொழிவு: நாட்டிலேயே தென்மேற்கு பருவமழை காலத்தில் வடகிழக்கு மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கேரளாவில் தான் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. அங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஆண்டு சராசரியாக 3,107 மில்லி மீட்டர் மழை பதிவாகிறது. அதாவது கேரளாவுக்கான 75% மழைப் பொழிவு ஜூன் முதல் செப்டம்பரில் பெய்துவிடுகிறது. ஆனால், அண்மைக்காலமாக மாறிவரும் பருவமழை போக்கு எப்படி இத்தகைய இயற்கைப் பேரிடர்களுக்கு வழிவகுக்கிறது என்று நிபுணர்கள் விளக்குகின்றனர்.

இது குறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி அமைப்பான ஸ்கைமெட் வெதர் (Skymet Weather) நிறுவனத்தின் துணை தலைவர் மகேஷ் பலாவட் கூறுகையில், “பருவமழையின் போக்கு தற்போது வெகுவாக மாற்றம் கண்டுள்ளது. முன்பெல்லாம் பருவமழையின்போது ஒரு சீரான மழைப்பொழிவு இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பருவமழைக்கு முந்தைய மழையின் தன்மையோடு இடி மின்னலோடு கூடிய கனமழை பருவமழையின்போது பெய்கிறது.

கேரளாவில் பல காலமாகவே பருவமழைக்கான உரித்தான தன்மையோடு மழை பெய்வதில்லை. அதேபோல் பலத்த மழை இருந்தபோதிலும், இதுவரை அதன் சராசரி மழைப்பொழிவை இன்னும் மிஞ்சவில்லை. மேலும், காற்று மற்றும் கடல் வெப்பநிலை அதிகரிப்பால், ஈரப்பதம் கடுமையாக அதிகரித்துள்ளது. அரபிக் கடல் வேகமாக வெப்பமடைந்து, வளிமண்டலத்தில் ஈரப்பதத்தை செலுத்தி, நிலையற்றதாக ஆக்குகிறது. இந்த காரணிகள் அனைத்தும் புவி வெப்பமடைதலுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கிறது. உலகளவில் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பம் 90%-க்கும் மேற்பட்டது கடலால் உறிஞ்சப்படுகிறது. இது கடல் வெப்பநிலை அதிகரிக்கக் காரணமாகியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் வேகமான வெப்பநிலை அதிகரிப்பு கடல் வெப்ப நிலைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இது பருவமழை காலத்தில் மத்திய இந்தியத் துணைக் கண்டத்தில் மழை குறைவதையும், தெற்கு துணைக் கண்டத்தில் மழையை அதிகரிக்கவும் செய்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளாவில் ஜூன் 1 முதல் ஜூலை 30 வரையிலான காலகட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 1,283.5 மில்லிமீட்டர். ஆனால் இப்போது பெய்துள்ளது 1,222.5 மில்லி மீட்டர். இது -5% குறைவு. நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருந்து +/-19% இயல்பான மழைப்பொழிவு என்றே கருதப்படுகிறது.

காலநிலை மாற்றம் மோசமடைய வன அழிப்பு, அசுர வளர்ச்சி காணும் நகரமயமாக்கல், திட்டமிடாத வளர்ச்சி ஆகியன இந்தியாவின் பங்களிப்பாக இருக்கிறது. மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் சமநிலையை மேம்படுத்தும் வகையில் வளர்ச்சி திட்டங்கள் செயல்ப்டுத்தப்படுவதில்லை. அங்கே சாலை அமைப்பது தொடங்கி அனைத்து கட்டுமானங்களிலும் அறிவியல் அனுகுமுறை இல்லை.

இமயமலைப் பகுதியைப் பொருத்த நீர்மின் திட்டங்களின் வீச்சு கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பகுதியில் புவியியல் தன்மைக்கு ஏற்ப அப்பகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களை கொள்கை வகுப்பாளர்கள் கையாள வேண்டும்.

வயநாடு முதல் எத்தியோப்பியா வரை: ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி கனமழை பொழிந்தது. இதையடுத்து, அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக எத்தியோப்பியா உள்ளது. மொத்தம் 120 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர். வெள்ளம் மற்றும் வறட்சி என காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் நிலச்சரிவுகள் அங்கு சர்வ சாதாரணமாக நிகழ்ந்துவிடுகின்றன.

ஆப்பிரிக்காவின் கொம்பு (Greater Horn of Africa) என்றழைக்கப்படும் பிராந்தியத்தில் அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட வனங்கள் அழிப்பு தான் மிக முக்கியக் காரணம் என்று பல சர்வதேச அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உண்மையில், வயநாடு மட்டுமல்ல, எத்தியோப்பியாவில் நிலச்சரிவு ஏற்படுகிறது என்றால் சுரண்டல்கள் அதன் பின்னால் இருக்கத்தான் செய்கின்றன என்ற உலகளாவிய உண்மை இருக்கிறது.

தோட்டப்பயிர் விளைவு: காலநிலை விஞ்ஞானியும் புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலருமான ராஜீவன் கூறும்போது, “கேரளாவில் தொடர் கனமழை காரணமாக மணல் மிருதுவாகி அரிப்பு ஏற்படுவது எளிதாகிவிட்டது. மண்ணில் ஈரப்பதம் உச்சபட்சத்தை எட்டும்போது தெவிட்டு மண்ணாகிக் கரைந்து உருண்டோடிவிடும். இப்படியிருக்க, பாரம்பரிய காட்டு மரங்கள் அடியாழம் வரை வேர் பரப்பி மணலை இறுகப் பற்றிக்கொள்ளக்கூடியவை. அதுவே ரப்பர் மாதிரியான தோட்ட மரங்களின் வேர்களால் அவ்வளவாக மணலை இறுக பற்றிக்கொள்ள முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வணிக நோக்கத்துக்காகத் தோட்டப்பயிர்கள் பெருமளவில் விளைவிக்கப்படுவதால் தற்போதைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என்று கூறினார்.

இந்திய வெப்பமண்டல வானியல் ஆய்வு நிறுவன விஞ்ஞானி ராக்ஸி மேத்யூ கால் கூறும்போது, “கேரள மாநிலத்தில் உள்ள சரிபாதி குன்றுகள் மற்றும் மலைகளினால் ஆனது. இத்தகைய பகுதிகளில் உள்ள மலைச்சரிவு 20 டிகிரி வரை செங்குத்தாக இருப்பதால் கனமழை பெய்தால் நிலச்சரிவு தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இத்தகைய சூழலில், ‘சூழலியல் உணர்திறன் மிகுந்த மண்டலங்கள்’ அடையாளம் காணப்பட்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு அப்பகுதி வாழ் மக்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் முன்னறிவிப்பை வழங்கினால் பல உயிர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் நிச்சயம் பாதுகாக்க முடியும். இதுதவிர பருவநிலை மாற்றமும், மனிதர்களின் இயற்கைக்கு புறம்பான செயல்பாடுகளும் இத்தகைய அதிபயங்கரமான நிலச்சரிவு ஏற்பட முக்கிய காரணிகள் என்பதை மறுப்பதற்கில்லை” என்று கூறினார்.

தற்கால இயற்கைப் பேரிடர்களை தவிர்க்க, சமாளிக்க விரிவான, ஒருங்கிணைந்த, அறிவியல்பூர்வமான திட்டங்களும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் அவசியமாகிறது என்பதே சூழலியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இவ்வாறாக காலநிலை மாற்றத்தைத் தூண்டுவதில் மனிதப் பங்களிப்பு முழுக்க முழுக்க இருக்கையில் பழி மொத்தத்தையும் காலநிலை மாற்றம் என்று சொல்லிக் கடந்து சென்றுவிட முடியுமா?

Tags: