“ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் கொலையை அனுமதிக்க முடியாது”

ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இன்று (31.07.2024) ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா (Ismail Haniyeh) கொல்லப்பட்டார்.

ஈரான் புதிய ஜனாதிபதி  பதவியேற்பு விழாவில் ஹனியே பங்கேற்ற பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் தலை நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  இத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் உளவுத்துறைதான் இஸ்ரேலுக்கு உதவி உள்ளது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்மாயில் ஹனியேவின்  மரணத்தை உறுதி செய்துள்ளது. அவ்வமைப்பின் மற்றொரு மூத்த தலைவரான சமி அபு ஸுஹ்ரி பேசியபோது, “எங்கள் பலஸ்தீன விடுதலை நோக்கத்தை முறியடிக்கும் எண்ணத்துடன் சகோதரர் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிநபர்களை கொலை செய்வதால் எங்கள் இலக்கில் இருந்து எங்களை விலக்கி விட முடியாது.  பலஸ்தீன விடுதலைக்கான எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். 

பலஸ்தீன – இஸ்ரேல் போரை நிறுத்தி மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதற்காக தொடர்ந்து பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் தரப்பில் இருந்து சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும், இஸ்ரேல் அரசாங்கம் போரை நிறுத்த மறுத்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இஸ்ரேல் – ஹமாசுக்கு இடையே  மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கட்டார் நாட்டின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், “ஒரு தரப்பு மறு தரப்பில் உள்ளவரை     படுகொலை செய்யும் போது இந்த பேச்சுவார்த்தை எப்படி வெற்றிபெறும்?” என   கேள்வி எழுப்பியுள்ளார்.  

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 3 விசேட குழுக்களை நியமிதுள்ளார்.

இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோரின் அங்கத்துவத்துடன் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதாரத்தின் மீதான தாக்கம் குறித்து ஆராய்வதற்கான குழுவின் உறுப்பினர்களாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்‌ஷன ஜயவர்தன ஆகியோர் செயற்படுவர்.

மேற்படி இரு குழுக்களையும் கண்காணிக்கும் உயர்மட்டக் குழுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் உள்ளடங்குவர்.

மேற்படி சம்பவத்தின் விளைவாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படும் நிலைமைகளினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டும் பட்சத்தில் செய்யப்பட வேண்டிய முன் ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து உயர்மட்ட குழுவிற்கு அறிக்கையிடும் பொறுப்பு ஏனைய இரு குழுக்களையும் சார்ந்துள்ளது.

எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் நாட்டு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரச்சினையைக் கையாளும் பொறுப்பையும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட இரண்டு குழுக்களிடமும் ஒப்படைத்துள்ளார்.

இரு குழுக்களும் சமர்ப்பிக்கும் அறிக்கையின் பிரகாரம் உயர்மட்டக் குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.

Tags: