இது மக்களின் வெற்றி!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றும், எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில ஒன்றுமான வெனிசுவேலா (Venezuela)வின் அடுத்த ஜனாதிபதியாக, தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ (Nicolás Maduro) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவிக்காலம் ஜனவரி 10, 2025 முதல் தொடங்கி, ஜனவரி 9, 2030 வரையில் இருக்கும். கடந்த ஆண்டு ஒக்ரோபரில் அரசுக்கும், அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கும் பார்படாஸ் (Barbados) தீவில் கையெழுத்தான உடன்பாட்டின் அடிப்படையிலேயே இந்தத் தேர்தல் நடந்துள்ளது.

அமெரிக்காவின் சட்டவிரோதப் பொருளாதாரத் தடைகளை மீறி, வளர்ச்சிப் பாதையில் வெனிசுவேலா சென்று கொண்டிருக்கிறது. சர்வதேசப் பிரச்சனைகளில் அமெரிக்காவின் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளாத ஆட்சியாளர்கள் என்பதால், பொருளாதார முற்றுகையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் பலஸ்தீன ஆதரவு, மேலும் பல தென் அமெரிக்க நாடுகளை அந்த நிலைபாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

தேர்தல் நடைமுறை தொடங்கியதில் இருந்தே, முடிவுகளை மதுரோ ஏற்கமாட்டார் என்று மேற்கத்திய ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. அவரது தோல்வி நிச்சயம் என்றும், “சர்வாதிகாரத்திற்கு” மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும் கருத்துகளைத் திணிக்கும் வேலையில் ஈடுபட்டன. ஆனால், தேர்தல் நடைமுறை மிகவும் பாதுகாப்பானது என்பதை மட்டும் இந்த ஊடகங்கள் வெளியிடவில்லை.

பயோ மெட்ரிக் முறையில் (biometric voting system) வாக்களிப்பதால், சரியான நபர்தான் வாக்களிக்க முடியும். ஒரு முறைக்கு மேல் வாக்களிக்கவும் இயலாது. மொத்தமுள்ள வாக்கு எந்திரங்களில் 54 விழுக்காடு எந்திரங்களில் பதிவான வாக்குகளும், சீட்டுகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்று சரிபார்க்கப்படும். மிகவும் பாதுகாப்பான தேர்தல் நடைமுறைகளில் ஒன்று வெனிசுவேலாவில் உள்ளது என்று சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

51.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்று நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க ஆதரவு எதிர்க்கட்சிகள் வன்முறைப் போராட்டத்தில் இறங்கியுள்ளன. தேர்தல் முடிவுகளை மதுரோ ஏற்க மாட்டார் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் ஏற்க மறுத்து வெறியாட்டம் ஆடி வருகின்றன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளின் ஜனாதிபதிகள் மதுரோவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.

இடதுசாரிப் பாதையில் தங்கள் பயணம் தொடரும் என்று மதுரோ உறுதியளித்திருக்கிறார். வெனிசுவேலாவின் நாயகன் சாவேஸ் காட்டிய பாதையில் இருந்து அவர் சற்றே விலகி நடக்கிறார் என்று குற்றச்சாட்டு இருந்தாலும், எதிரில் மிக மோசமான தீவிர, அமெரிக்க ஆதரவு வலதுசாரிகள் என்பதை அறிந்தே மக்கள் மதுரோவுக்கு மீண்டும் வாக்களித்திருக்கிறார்கள். இது மக்களின் வெற்றியாகும். மக்களின் தீர்ப்புக்கேற்ப வெனிசுவேலா நடக்க வேண்டும். அதை மதுரோ உத்தரவாதப்படுத்த வேண்டும்.

-தீக்கதிர், 2024.08.02

Tags: