வங்கதேச அரசியலின் புதிர்கள்
-பேராசிரியர் விஜய் பிரசாத்
ஓகஸ்ட் 5, திங்கட்கிழமையன்று ‘பிரதமர்’ ஷேக் ஹசீனா வங்கதேச விமானப்படை விமானம் சி-130 ஜே இராணுவப் போக்கு வரத்து விமானத்தில் ஏறி அவசரமாக வங்கதேசத்திலிருந்து வெளியேறி டெல்லிக்கு வெளியே ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இறங்கினார். அவரது விமானத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டது. அவர் ஒன்று பிரிட்டனுக்கோ (அங்கு அவரது மருமகன் துலிப் சித்திக் புதிய தொழிலாளர் கட்சி அரசின் அமைச்சராக உள்ளார்) அல்லது ஃபின்லாந்துக்கோ (அங்கு அவரது மருமகன் ரத்வான் முஜீப் சித்திக் ஒரு பின்லாந்து குடிமகளைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்) அல்லது அமெரிக்காவுக்கோ (அவரது மகன் சஜீப் வாஜெத் ஜோய் வங்கத்திலும், அமெரிக்காவிலும் இரட்டைக் குடியுரிமை பெற்றுள்ளார்) செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆறு வாரங்களுக்கு முன்பு தான் இராணுவத்தின் பொறுப்பை ஏற்றவரும், ஹசீனா வுக்கு ஒருவகையில் உறவினருமான இராணுவத் தளபதி வக்கர் உஸ் சமான், அவரிடம் இந்த நிலைமைக்குத் தான் பொறுப்பெடுத்துக் கொள்ளப் போவதாகவும், எதிர்காலத் தேர்தலை நடத்துவதற்காக ஒரு இடைக்கால அரசை ஏற்படுத்தப் போவதாகவும் கூறினார்.
வங்கதேச வரலாற்றில் ஷேக் ஹசீனாதான் நீண்ட காலம் பிரதமராகப் பொறுப்பு வகித்தவர். அவர் 1996 இலிருந்து 2001 வரையிலும், பின்னர் 2009 இலிருந்து 2024 வரையிலும் மொத்தமாக 20 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். இது அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானை ஒப்பிடுகையில் கூர்மையான முரண்பாடுடையது. அவர் நான்காண்டுகள் ஆட்சி செய்த பிறகு படுகொலை செய்யப்பட்டார். அதேபோல் ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் 1981 இல் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையில் மகிந்த ராஜபக்ஷேவின் ஆட்சி முடிவுக்கு வந்த காட்சிகளை டாக்கா காட்சிகள் நினைவூட்டின மகிழ்ச்சியான ஆயிரக்கணக்கானோர் கொண்ட கூட்டம் பிரதமரின் அதிகாரப் பூர்வ வீடான கானாபவனுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவர்கள் கைகளில் கிடைத்த ஒவ்வொன்றையும் அள்ளிச் சென்றனர்.
புகைப்படக்காரரும், வங்க ஃபவுண்டேஷனின் தலைமைக் காப்பாளருமான டான்சிம் வஹாம் என்னிடம், “அவர்கள் (கூட்டத்தினர்) மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்து செல்லப் பிராணிகளான அன்னங்கள், நீள்வட்ட இயந்திரங்கள், டாம்பீகமான சோபாக்கள் ஆகியவற்றைத் தூக்கிச் சென்ற போது, ஒரு பேராசை மிக்க ஆட்சிக்கு எதிராக அடித்தட்டு வர்க்கத்தினர் கொண்ட கடுங்கோபத்தை உணர முடிந்தது” என்றார். வங்கதேசம் முழுவதும் பரவலாக ஆர்ப்பரிப்பு காட்சிகள் அரங்கேறின. அத்துடன் அரசுடன் அடையாளப்படுத்தப்பட்ட கட்டிடங்கள், தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள், அரசு அமைச்சர்களின் ஆடம்பரமான வீடுகள் ஆகியவை கொள்ளைக்கு சாதகமான இலக்குகளாயின. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் பல உள்ளூர் மட்டத் தலைவர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர். (கட்சியின் உள்ளூர் தலைவர் மோசின் ரெசா குலானாவில் அடித்தே கொல்லப்பட்டார்)
ஹசீனாவின் சூழல்
வங்கதேசத்தில் அரசியல் வன்முறை வழக்கத்துக்கு மாறானதல்ல. 1971 இல் தேசம் உருவானது முதலே அது இருக்கிறது. ஷேக் ஹசீனா ஏன் எந்த விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் இவ்வளவு வலுவாக எதிர்வினையாற்றினார் என்பதற்கான காரணங்களில் ஒன்று, அவர் தனது இளமைக் காலத்தில் அனுபவித்ததை இத்தகைய நிலைமைகள் மீண்டும் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சம்தான்.
வங்கதேசத்தின் நிறுவனரான அவரது தந்தை ஷேக் முஜிபூர் ரஹ்மான் (1920-1975), 1975 இல் ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டார். ஷேக் ஹசீனாவும் அவரது தமக்கையும் அப்போது ஜெர்மனியில் இருந்ததால் உயிர் தப்பினர். இந்த வாரம் இரண்டு சகோதரிகளும் ஒரே விமானத்தில் வங்கதேசத்திலிருந்து தப்பினர். ஹசீனா பலமுறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பியுள்ளார். 2004 இல் ஒரு ஏவுகணை வீச்சில் தப்பியபோது அவரது செவித்திறன் பாதிப்புக்குள்ளானது. தனது உயிர் மீதான இத்தகைய தாக்குதல்கள் குறித்த அச்சம் ஷேக் ஹசீனாவை தனக்கு எதிரான எதன் மீதும் ஆழமான கவலை கொள்ள வைத்தது. அதனால்தான் அவர் வெளியேறுவதற்கு 45 நிமிடங்கள் முன்பு கூட, ஒன்று திரளும் கூட்டத்தினருக்கு எதிராக இராணுவம் கடுமையாக செயல்பட வேண்டுமென அவரை விரும்ப வைத்தது.
எனினும், இராணுவம் சூழ்நிலையைப் புரிந்து கொண்டது. இது அவர் வெளியேற வேண்டிய தருணம் எனத் தீர்மானித்தது.
யாருக்கு பலன்?
ஷேக் ஹசீனா அகற்றப்பட்டதால் பலனடையப் போவது யார் என்ற போட்டி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஒருபுறம் வங்கதேச மாணவர் எழுச்சி மத்தியக் குழுவின் (158 பேர், ஆறு தகவல் தொடர்பாளர்கள்) தலைமையில் மாணவர்கள். முன்னணி தகவல் தொடர்பாளர் நாஹித் இஸ்லாம் மாணவர்களின் பார்வையைத் தெளிவாக முன்வைத்தார்: “நாங்கள் பரிந்துரைக்காத எந்த அரசும் ஏற்கப்படாது. எங்கள் இலட்சியத்துக்காக இரத்தம் சிந்திய தியாகிகளை நாங்கள் வஞ்சிக்கமாட்டோம். நாங்கள் உயிர் பாதுகாப்பு, சமூக நீதி, ஒரு புதிய அரசியல் தளம் என்ற எங்கள் உறுதிமொழியின் மூலமாக ஒரு புதிய ஜனநாயக வங்கதேசத்தை நாங்கள் அமைப்போம்.”
மறுபுறம் இராணுவமும், எதிர்க்கட்சி அரசியல் சக்திகளும் உள்ளன. (முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி, இஸ்லாமியக் கட்சியான ஜமாத் இ இஸ்லாமி, சிறிய இடதுசாரிக் கட்சியான கனோ சம்ஹதி ஆந்தோலன் ஆகியவை இதில் அடங்கும்) இராணுவம் முதலில் எதிர்க்கட்சிகளை சந்தித்தால் கூட, மாணவர் இயக்கத்தை அழிப்பதை எதிர்த்த பொதுமக்களின் கிளர்ச்சி, மாணவர் மத்தியக் குழுவை சந்தித்து அவர்களது முதன்மைக் கோரிக்கைகளைக் கேட்குமாறு இராணுவத்தை நிர்ப்பந்தித்தது.
போல்டி கவா அதாவது “கால்பந்து விளையாட்டின் நடுவில் குழுவின் ஜெர்சியை மாற்றுவது” என்று ஒரு பழக்கம் உண்டு. வங்கதேசத்தில் அனைத்து நேரங்களிலும் இராணுவம் நடுவராக இருக்கும் வகையில் இத்தகைய நிலை, நிலைத்திருக்கிறது. ‘விளையாட்டின்’ அனைத்து விதிகளையும் மாற்றுமாறு மாணவர்கள் கோரிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், இராணுவம் வெறும் ஜெர்சியை மாற்றுவதைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக, கவனத்தை ஈர்க்க இந்தக் கோஷம் இப்போது மாணவர்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது. இதை அறிந்து, இராணுவம் பொருளாதார நிபுணர் முகமது யூனுசால் புதிய இடைக்கால அரசு தலைமை தாங்கப்பட வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. அவர் வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரே நபர். யூனுஸ் நுண்கடன் இயக்கத்தின் நிறுவனராகவும், “சமூக வர்த்தகத்தை” வளர்த்தெடுப்பவராகவும் முன்னிறுத்தப்பட்டு, நோபல் விருதைப் பெற்றார். புதிய தாராளமய அரசுசாரா நிறுவன உலகில் இது முதன்மை நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. எனினும் அவர் மீது கடந்த பத்து ஆண்டுகளாக ஹசீனா அரசின் இடை விடாத அரசியல் பழிவாங்கலும், மாணவர் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசும் அவரது முடிவும், எதிர்ப்பாளர்களின் சாத்தியமற்ற ‘பாதுகாவலராக’ அவரை மாற்றின. அவரது “தாராளமய சிக்கன அரசியல்” மாணவர்களின் முக்கியக் கோரிக்கையான வேலைவாய்ப்பு என்பதற்கு எதிராக இருப்பினும், அவர்கள் அவரைத் தான் முக்கியமான அடையாளபூர்வத் தலைவராகக் காண்கிறார்கள்.
மாணவர் போராட்டத்தின் வரலாறு
சுதந்திரத்துக்கு முன்பிருந்தே வங்கதேசம் கிராமப்புற குணாம்சம் கொண்ட நாடாக இருந்தாலும், வங்கதேச அரசியலின் குவிமையம் நகர்ப்புறமாக, குறிப்பாக டாக்காவாக இருந்தது. அரசியல் அரங்கில் மற்ற சக்திகள் நுழைந்தால் கூட, மாணவர்கள்தான் வங்கதேச அரசியல் செயல்பாட்டாளர்களாக இருக்கின்றனர். காலனியத்துக்குப் பிந்தைய பாகிஸ்தானில் தொடக்க எதிர்ப்புகளில் ஒன்றாக மொழி இயக்கம் இருந்தது. டாக்கா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கிய அந்தப் போராட்டத்தில் 1952 இல் அங்கு மாணவர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். (அவர்கள் டாக்காவில் ஷாஹீத் மினார் அல்லது தியாகிகள் ஸ்தூபியில் நினைவு கூரப்படுகின்றனர்.) 1971 இல் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடந்த சுதந்திரப் போராட்டத்தில் மாணவர்கள் முக்கியமான பங்கு வகித்தனர். அதனால்தான் பாகிஸ்தான் இராணுவம் ‘ஒபரேஷன் சர்ச்’லைட் என்ற பெயரில் பல்கலைக் கழகங்களைக் குறிவைத்தது. அது மாணவர் படுகொலைகளுக்கு இட்டுச் சென்றது. 1971 இற்குப் பிறகு வங்கதேசத்தில் உருவான அரசியல் கட்சிகள் பெருமளவு அவற்றின் மாணவர் பிரிவுகள் மூலமாக வளர்ந்தன. அவாமி லீக்கின் பங்களாதேஷ் சாத்ரா லீக், வங்கதேச தேசியக் கட்சியின் பங்களாதேஷ் ஜதியோதாபாதி சாத்ரடால், ஜமாத் இ இஸ்லாமியின் பங்களாதேஷ் இஸ்லாமி சாத்ர ஷிபிர் ஆகியவை பிரதான மாணவர் அமைப்புகளாக வளர்ந்தன.
கடந்த பத்தாண்டுகளில், வங்கதேச மாணவர்கள் உயிர்த்துடிப்புடன் தீவிர பொருளாதாரத்தைத் தாண்டி இருக்கும் வேலையின்மையால் ஆவேசமடைந்தனர். அதனை அவர்கள் அரசின் அக்கறையின்மை என்று கருதினர். அந்த அக்கறையின்மை ஷேக் ஹசீனா அர சின் ஒரு அமைச்சரான ஷாஜகான் கானின் அலட்சியமான கருத்துக்களால் வெளிப்பட்டது. அவர் டாக்காவில் 2019 ஜூலையில் விமான நிலைய சாலையில் இரண்டு மாணவர்கள் பேருந்து மோதிக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை மறுத்து சிரித்தார். அந்த நிகழ்வு, அனைத்து வயதையும் சேர்ந்த மாணவர்கள் ஒட்டு மொத்தமாக சாலைப் பாதுகாப்பு கோரி பெரும் எதிர்ப்பு இயக்கத்துக்கு இட்டுச் சென்றது. ஆனால் அரசு கைதுகள் மூலமாக பதிலளித்தது. (புகைப்படப் பத்திரிகையாளர் ஷாஹிதுல் ஆலம் 107 நாட்கள் சிறைப்படுத்தப்பட்டது உட்பட).
சாலைப் பாதுகாப்பு கோரிய இயக்கத்தின் பின்னால், அந்த விவகாரத்துக்கு அதிக கவனத்தை ஈர்த்த இன்னொரு முக்கிய கருத்தியல் உள்ளது. ஐந்து ஆண்டுகள் முன்பாக, 2013 இல், வங்கதேச சிவில் சர்வீசில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட மாணவர்கள் அரசு வேலைகளில் கட்டுப்படுத்தப்பட்ட கோட்டாக்களை எதிர்த்து போராட்டம் தொடங்கினர். பெப்ரவரி 2018இல், இந்த விவகாரம் பங்களாதேஷ் சாதரோண் சாத்ர ஒதிகர் சங்க்ரோகோன் பரிஷத் (வங்க தேச பொது மாணவர் உரிமைப் பாதுகாப்பு அமைப்பு) என்ற பெயரிலான ஒன்றுபட்ட போராட்டமாக சாலைப் பாதுகாப்புக் கோரும் இயக்கம் நடந்த போது, மாணவர்கள் கோட்டா விவகாரத்தை எழுப்பினர் (விலைவாசி உயர்வு பிரச்சனையையும் எழுப்பினர்). சட்டப்படி அரசாங்கம் குறைந்த வளர்ச்சி பெற்ற மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு அதன் வேலைவாய்ப்பில் 10%, பெண்கள் 10%, சிறுபான்மையினர் 5%, மாற்றுத் திறனாளிகள் 1%, சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் 30% என ஒதுக்கீடு செய்திருந்தது.
இந்தக் கடைசி ஒதுக்கீடுதான் 2013 இலிருந்து எதிர்க்கப்பட்டது. 2018 இல் மாணவர் போராளிகளின் உணர்ச்சிப்பூர்வமான விவகாரமாக அது வெடித்தது. குறிப்பாக பிரதமர் ஹசீனா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சுதந்திரப் போராளிகளின் வாரிசுகளுக்குக் கொடுக்கும் ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் ‘ரஜாக்கர் நட்னி” (போர் துரோகிகளின் பேரப்பிள்ளைகள்) என்று கூறிய பின் இது பெரிதும் வெடித்தது. முக்கியமான வங்கதேச செயல்பாட்டாளர் வழக்கறிஞர் சாரா ஹொசேனைத் (அவர் ஷேக் ஹசீனா அரசால் துன்புறுத்தப்பட்டு அதன் காரணமாக வெளியேறினார்) திருமணம் செய்து கொண்டிருக்கும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் டேவிட் பெர்க்மான், இந்தக் கருத்தை ‘அரசை வீழ்ச்சிக்குக் கொண்டு வந்த கடுமையான தவறு’ என்று விமர்சித்தார்.
இராணுவ இஸ்லாம்
2013 பெப்ரவரியில், ஜமாத் இ இஸ்லாமியின் அப்துல் காதர் மொல்லா வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போது மனித இனத்துக்கு எதிரான குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். (அவர் குறைந்தது 344 பொதுமக்களைக் கொன்றதற்காக அறியப்பட்டவர்). அவர் நீதிமன்றத்திலிருந்து கிளம்பியபோது வெற்றிச் சின்னத்தைக் காட்டியது வங்கதேச சமூகத்தின் மிகப்பெரும் பகுதியை ஆத்திரமூட்டியது. டாக்காவில் இருக்கும் பலர் ஷாபாகில் கூடி கனோஜாகரன் மான்சோவை (பொது மக்கள் விழிப்புணர்வு மேடை) அமைத்தனர். இந்த எதிர்ப்பு இயக்கம் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. மொல்லா டிசம்பர் 12 அன்று தூக்கி லிடப்பட்டார். ஷாபாக் இயக்கம் வங்கதேச அரசியலில் மதத்தின் பங்கு குறித்த நீண்ட நாள் அழுத்தத்தை மேலே கொண்டு வந்தது.
முஜிபூர் காலத்து நிலைமை மாறியது
ஷேக் முஜிபூர் ரஹ்மான் வங்கதேசம் ஒரு சோஷலிச மதச்சார்பற்ற நாடாக இருக்குமென முதலில் அறிவித்தார். இராணுவம் அவரைப் படுகொலை செய்த பிறகு ஜெனரல் ஜியாவுர் ரஹ்மான் நாட்டை எடுத்துக் கொண்டு 1975 முதல் 1981 வரை ஆட்சி செய்தார். அந்த சமயத்தில் ஜியாவுர், மதத்தை பொதுவாழ்க்கைக்கு மறுபடி கொண்டு வந்தார். ஜமாத் இ இஸ்லாமியை தடையிலிருந்து விலக்கித் திரும்பக் கொண்டு வந்தார். (அந்தத் தடை 1971 இனவொழிப்பில் கலந்து கொண்டதற்காக விதிக்கப்பட்டிருந்தது). 1978இல் அது வங்கதேச தேசியவாதக் கட்சியை தேசிய நோக்கில் உருவாக்கி இந்தியாவின்பால் கடுமையான விமர்சன நிலைபாட்டை எடுத்தது. ஜெனரல் ஹூசேன் முகமது எர்ஷாத் 1982 இல் கலகம் செய்து ஆட்சியைப் பிடித்து 1990 வரை ஆட்சி செய்தார். அவர் மேலும் அதீதமாகச் சென்று இஸ்லாத்தை தேசிய மதமாக அறிவித்தார். இது முஜிபூர் ரஹ்மான் மற்றும் தனது தந்தையின் கட்சியான அவாமி லீக்கின் பொறுப்பை 1981 இல் ஏற்றுக் கொண்ட அவரது மகள் ஷேக் ஹசீனாவின் அரசியல் பார்வைகளுக்கு முரணானது.
ஷேக் ஹசீனாவின் மைய-மதச்சார்பற்ற அவாமி லீக்குக்கும், 1981 இல் ஜெனரல் ஜியாவுர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அக்கட்சியின் பொறுப்பை எடுத்துக் கொண்ட அவரது மனைவி கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சிக்கும் இடையில் நீண்ட காலப் போட்டிக்கு களம் தயாராகிவிட்டது. முற்பகுதியில் மதச்சார்பற்ற சாய்மானம் பெற்றிருந்த இராணுவத்திற்குள் மெதுவாக இஸ்லாமிய உணர்வு வளரத் துவங்கியது. பொதுமக்களிடையேயும் மத உணர்வு வளரத் துவங்கியது. அதில் சில வளை குடா நாடுகளுக்கும், தென்கிழக்கு ஆசியாவுக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை இஸ்லாமியமயமாக்கியதால் நிகழ்ந்தது. பயங்கரவாதத்தின் மீதான போர் கிளப்பிய பல விளைவுகளின் காரணமாக இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றுவதில் தொடர்ச்சியாக அதிகரித்ததில் வங்கதேச மக்கள் சமூ கத்தின் உணர்வு பிரதிபலித்தது. இந்த ஆபத்தை யாரும் அதிகரித்தும் காட்டக் கூடாது, குறைத்தும் காட்டக் கூடாது.
‘அரசியல் இஸ்லாம்’
2013 முதல் பொதுத் தாக்கம் அதிகரித்த அரசியல் இஸ்லாமிஸ்டுகளுக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவு மேலும் தெளிவு தேவைப்படும் இன்னொரு அம்சம் ஆகும். விடுதலைப் போரின் போது பாகிஸ்தானில் இருந்த குழுவினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பது குறித்து போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றம் ஆவணப்படுத்தியதானது, இஸ்லாத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்த முனைந்த இந்தக் குழுவினரின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது. ஹசீனா அரசு 2018, 2024 தேர்தல்களில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் சத்தமில்லாத ஒப்புதலைப் பெற தமது நாட்டில் வளர்ந்து வரும் “அரசியல் இஸ்லாம்” மீதான அச்சத்தை ஒரு வழிமுறையாகப் பயன்படுத்திக் கொண்டது. தற்போது, இடைக்கால அரசு சரியான காலத்தில் ஒரு நியாயமான தேர்தலை நடத்தினால், அது வங்கதேச மக்கள் அரசியல் இஸ்லாத்துக்கு வாக்களிக்க விரும்புகிறார்களா என்பதை அறிய உதவும்.
புதிய பனிப்போர்
ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்துக்கு இட்டுச் சென்ற மாணவர்கள் முன்வைத்த ‘ஈர்க்கும் விவகாரங்களுக்கு’ மிகவும் தூரத்தில் மேற்கண்ட பல பிரச்சனைகள் அடிக்கடி விவாதிக்கப்படாத ஆபத்தான போக்குகள் உள்ளன.
வங்கதேசம் உலக மக்கள்தொகையில் எட்டாவது இடத்தில் இருக்கும் தேசம். அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி தெற்காசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரதேசத்திலும், உலகிலும் அது வகிக்கும் பங்கை விலக்கி வைக்க முடியாது.
கடந்த பத்தாண்டுகளில், அமெரிக்கா ஒரு புதிய பனிப்போரை சீனா மீது திணித்ததால் தெற்காசியா குறிப்பிடத்தக்க சவால்களை சந்தித்தது. தொடக்கத்தில் அமெரிக்காவின் இந்தோ – பசிபிக் உத்தியைச் சுற்றிய அமைப்புகளில் இந்தியா பங்கேற்றது. ஆனால் 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து இந்தியா இந்த அமெரிக்க முன்முயற்சியிலிருந்து தள்ளி நின்று தனது சொந்த தேச நிகழ்ச்சி நிரலை முன்னுக்கு வைக்க முயன்றது. அதன் பொருள் என்னவென்றால் ரஷ்யாவை இந்தியா கண்டிக்கவில்லை; மாறாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை தொடர்ந்து வாங்கியது. அதே சமயம் சீனா தனது பட்டுப் பாதைத் திட்டம் (பெல்ட் அண்ட் ரோடு) முன்முயற்சியின் மூலம் வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் உட்கட்டமைப்பை உருவாக்கியது.
இந்தப் பிரதேசத்திலுள்ள நான்கு அரசு களில் மூன்று வீழ்ச்சியடைந்து விட்டன என்பதிலும், அவற்றுக்கு மாற்றாக அமைந்த அரசுகள் அமெரிக்காவுடன் தமது நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆவலுடன் உள்ளன என்பதும் ஒரே நேரத்தில் நடந்த நிகழ்வுகளாக இல்லாமல் இருக்கலாம். இதில் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதும் (இப்போது சிறையில் உள்ளார்) ஏப்ரல் 2022 இல் பாகிஸ்தானில் ஆட்சிக்கு வந்த ஷேன்பாஸ் ஷெரீப், 2022 ஜூலையில் இலங்கையில் சிறிது காலத்துக்கு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரம சிங்கே (பாராளுமன்றத்தில் ஒரே ஒரு இடத்தைப் பெற்ற அவரது கட்சியை ஆட்சியில் வைப்பதற்கு மாற்றாக பொது எழுச்சி வேறு கருத்தைக் கொண்டிருந்தது), நேபாளத்தில் 2024 நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த ஒரு கலைப்புக்குப் பிறகு மாவோயிஸ்டுகளை அகற்றி விட்டு ஜூலையில் ஆட்சிக்கு வந்த கே.பி.ஷர்மா ஒலி ஆகியோர் அடங்குவர்.
இந்தப் பிரதேசத்தின் கணக்குகளில் ஷேக் ஹசீனாவை அகற்றியது என்ன விளைவை உண்டாக்கும் என்பது இடைக் கால அரசின் கீழ் தேர்தல்கள் நடத்தப்பட்டதற்குப் பிறகுதான் கணிக்க முடியும். ஆனால் வங்கதேசத்தின் முடிவுகள் பிரதேசத்திலும், உலக அளவிலும் விளைவுகளை உண்டாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மாணவர்கள் தமது சட்டப்பூர்வ தன்மைக்காக பொது ஆர்ப்பாட்டங்களின் சக்தியை நம்பியுள்ளனர். ஆனால் அவர்களி டம் இல்லாதது என்னவென்றால் வங்க தேசத்துக்கான ஒரு நிகழ்ச்சி நிரல். எனவே தான் இடைக்கால அரசைச் சுற்றி புதிய தாராளமய சுறாக்கள் ஏற்கனவே நீந்திக் கொண்டிருக்கின்றன. அவர்களது அணிகளில் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியக் கட்சியையும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளையும் ஆதரிப்போர் உள்ளனர். அவர்கள் என்ன பங்கை வகிக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மாணவர் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடன், குறிப்பாக ஜவுளித் தொழிலாளர் சங்கங்களுடன் ஒரு கூட்டை இப்போது உருவாக்கினால், அவர்கள் வங்கதேசத்தில் மக்களை மையமாகக் கொண்ட ஒரு புதிய ஜனநாயகத்தைக் கட்டுவதற்கான திறப்பாக இருக்கலாம். அவர்களால் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டை அமைக்க முடியாவிட்டால், அவர்கள் எகிப்து மாணவர்கள், தொழிலாளர்களைப் போல் அப்பால் தள்ளப்பட்டு இராணுவத்திடம் தமது முயற்சிகளை சரண் கொடுத்து தனது ஆடையை மட்டும் மாற்றிக் கொள்ளும் ஒரு மேல்தட்டிடம் சரணடையக் கூடும்.
மூலம்: The conundrums of Bangladeshi politics
தமிழில்: கி.ரமேஷ்