ஊதாரித்தனத்தின் உளவியல்!
-ஏ.பைசுர் ரஹ்மான், பேராசிரியர் சந்தோஷ் மெஹ்ரோத்ரா
(A. Faizur Rahman, Prof.Santosh Mehrotra)
அண்மையில் (12-30 ஜுலை) நடைபெற்ற ஒரு குடும்பத் திருமணத்தின்போது மெகா கோடீஸ்வரர் ஒருவர் (அம்பானி) கண்ணியமற்ற முறையில் ஊதாரித்தனத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவில் அதிகரித்து வரும் சமத்துவம் இன்மை, மிக மோசமான வறுமை ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இவருடைய களியாட்டம் அமைந்திருந்தது.
பொருளாதார வல்லுனர்கள் நித்தின் குமார் பாரதி, லூகாஸ், சான்சல், தோமஸ் பிக்கெட்டி மற்றும் சோமன் ஜி ஆகியோர் எழுதியுள்ள “இந்தியாவில் வருமானம் மற்றும் செல்வ சமத்துவம் இன்மை- கோடீஸ்வரர்களின் ஆட்சியில் எழுச்சி 1922-2023” என்ற நூலில், இந்தியாவில் 1 சதவிகிதமாக உள்ள பெரும் பணக்காரர்களிடம் 22.6% வருமானமும் 40.1% சொத்துக்களும் குவிந்திருந்தன என ஆய்வுகள் மூலம் விளக்கி உள்ளனர்.
ஒட்டுமொத்தமான ஏற்றத்தாழ்வுகள்- சில உண்மைகள்
இந்தியாவில் உயர் அடுக்கில் உள்ள 1 சதவீதத்தினரிடம் சராசரியாக 5.4 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் குவிந்துள்ளன. சராசரி இந்தியர் ஒருவரிடம் இருப்பதைவிட இது 40 மடங்கு அதிகம். அதே நேரத்தில் கீழே உள்ள 50 சதவீதம் மற்றும் மத்தியில் உள்ள 40 சதவீதத்தினரிடம் முறையே தேசிய சராசரியில் 0.1 மடங்கு மற்றும் 0.7 மடங்கு தான் உள்ளது. பெரும் பணக்காரர்கள் 10,000 பேரிடம் சராசரியாக 22.6 பில்லியன் ரூபாய் அளவிற்கு சொத்துக்கள் குவிந்துள்ளன. ஒவ்வொரு சராசரி இந்தியரிடம் இருப்பதைக் காட்டிலும் இது 16,763 மடங்கு கூடுதல் ஆகும்.
பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை!
2022 – 23 ஆம் ஆண்டில் பில்லியனர்களின் சொத்துக்களில் 90 சதவீதம் உயர் சாதியினரிடம் இருந்தது என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. 10 சத வீதத்திற்கும் குறைவாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடமும் 2.6 சதவீதத்திற்கும் குறைவாக பட்டியலிடப்பட்ட பிரிவினரிடமும் இருந்தது. பணக்கார இந்தியர்களில் ஒருவர் கூட பழங்குடியினர் பிரிவில் இல்லை.
மோடி அரசின் ஏமாற்று வாதம்
2016 இல் இருந்து 2021 வரை 13.5 கோடி இந்தியர்கள் “பல பரிமாண” வறுமையில் இருந்து வெளியேறினர் என நிதி ஆயோக் கூறுகிறது. (ஊட்டச்சத்து என்பது இதில் மிக முக்கியமானது) ஆனால் 56.5% இந்தியர்கள் 2022 ல் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெற முடியாத நிலையில் வறுமையில் இருந்தனர் என்ற உண்மையை 2024 ஜூலை 24 அன்று வெளியான “உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை”அறிக்கை பளிச் என்று முன் வைத்தது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 79 கோடி மக்கள் ஆரோக்கியம் தரும் உணவுக்காக தினசரி 350 ரூபாய் செலவிடும் நிலையில் இல்லை. இந்தச் சூழலில் தான் ஒரு கோர்ப்பரேட் குழுமம் (அம்பானி) திருமணத்திற்காக 5000 கோடி ரூபாய் வாரி இறைத்துள்ளது. 2022- 23 ஆம் ஆண்டின் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளுக்காக (Corporate Social Responsibility) மிகவும் தாராளமாக (?) அந்தக் குழுமம் ஒதுக்கிய தொகையான வெறும் 1271 கோடி ரூபாயுடன் இதனை நீங்கள் ஒப்பிட்டுக் கொள்ளுங்களேன்!
செல்வச் செருக்குக்கு காரணம் என்ன?
சமூக நலனுக்காக செலவிடுவதைக் காட்டிலும் ஆடம்பரத்தின் களியாட்டங்களுக்கு பல மடங்கு அதிகமாக செலவழிக்கும் படி அவர்களைத் தூண்டுவது எது?
பணக்கார அமெரிக்க சமூகங்களின் அடாவடித்தனம் பற்றிய தனது கடுமையான குற்றச்சாட்டுகளை அமெரிக்க பொருளாதார வல்லுநர் தோர்ஸ்டின் வெப்லன், ‘The theory of Leisure Class (ஆடம்பர வர்க்கத்தின் கோட்பாடு) என்னும் நூலில் முன் வைத்து இதற்கு பதில் அளிக்கிறார்:
“விலை உயர்ந்த பொருட்களை நுகரும் இவர்கள் தமது பணக்கார அந்தஸ்தை நண்பர்கள் மற்றும் போட்டியாளர்களிடம் கடைவிரிக்க விரும்புகின்றனர். விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும், மதி மயங்கும் ருசி நிறைந்த விருந்தையும் கூட அவர்களுக்கு படைக்கின்றனர். இந்த களியாட்டத்தின் அளவு உள்நோக்கத்துடன் மிகப் பிரம்மாண்டமானதாக திட்டமிடப்படுகிறது. இது பணக்காரத்தனமானது என்று கூறுவதற்கு சாத்தியமற்ற வகையில் மற்றவர்களை மதி மயக்குகிறது. இது தான் செல்வந்தர்களை மற்றவர்களை விட அதிகமாக செலவு செய்ய தூண்டுகிறது” என்று கூறுகிறார்.
உரிமை மற்றும் உளவியல்
வெப்லனின் பகுப்பாய்வு பில்லியனர்களின் ஆடம்பரத்தை விளக்குகிறது என்றால் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் சான்டலின் அரசியல் தத்துவம் அத்தகைய வெட்டி, விரயச் செலவுகளுக்கு அவர்களை உரிமை கோர வைக்கிறது என்பதையும் நிரூபிக்கிறது.
அவர் தமது “The Tyranny Of Merit “என்னும் நூலில் ஊதாரிகள் இப்படி கருதிட ஜோன் ராவ்ஸின் எதிர்மறை வாதத்தை (Negative Argument) மேற்கோள் காட்டுகிறார்:
“எந்த ஒரு தனிநபரும் வெற்றிக்கு உரிமை கோர முடியாது. வெற்றி என்பது ஆரம்பகால வாழ்க்கையின் அதிர்ஷ்டமான சூழ்நிலைகளைச் சார்ந்தது.”
அவுஸ்திரிய பொருளாதார நிபுணர் பிரடரிக் ஹயாக், “வெற்றியாளர்கள் சமூகத்தின் பொது நன்மைக்கு பங்களிக்க கடமைப்பட்டுள்ளனர். ஏனெனில் சமூகம் தான் அவர்களின் வெற்றியை சாத்தியமாக்குகிறது “என்று விளக்குகிறார்.
ஆனால் செல்வந்தர்கள் இந்த இரண்டையும் ஏற்பதில்லை.தங்கள் திறமையும் சந்தை நிலைமையும் தான் செல்வத்திற்கு காரணம்; ஏழைகளாக இருப்பது ஏழைகளின் தலையெழுத்து என்று பில்லியனர்கள் இறுமாப்புடன் வாதிடுவதாக சாண்டல் கூறுகிறார்.
ஏழையை இழிவுபடுத்துபவர்கள்
செல்வச் செருக்கும் கர்வமும் அதற்கான உரிமை கோரும் மனப்பான்மையும் செலவழிக்கும் உரிமையை நியாயப்படுத்துகிறது; அவர்களின் சமூக நிலையை மேம்படுத்திக்கொள்ள, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களை ‘தோல்வி அடைந்தவர்கள்’ என இழிவுபடுத்துகிறது; அவர்களைத் தேவையற்றவர்கள் (unwanted) என கருத வைக்கிறது.
சர்வதேச அளவில் பெரும் பணக்கார சமூகத்தின் பெரும் பகுதியினர், தங்களைச் சுற்றிலும் வாழும் சக மனிதர்கள் நலிவுறுவதைப் பற்றி எவ்வித நெருடலும் இன்றி திருமண கோலாகலங்களை ஆடம்பரமாக நடத்திக் கொண்டாடுகிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு தாங்கள் விரும்பும் வகையில் வேறு ஒரு நாளில் “கருணையோடு” விருந்தளிக்கிறார்கள்.
மும்பை மாநகரில் ஒவ்வொரு பருவ மழையின் பொழுதும் தெருக்கள் குப்பைகள் மிதக்கும் கால்வாய்களாக மாறி வியாபாரத்தை கெடுக்கும் வெள்ள நீருக்கு தீர்வுக்காக ஏங்கும் ஒரு மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் தொழிலாளி, மேல்நாட்டு பத்திரிகை நிருபருக்கு அளித்த பதில் இது தான்:
“அவர் (அம்பானி) தனது பணத்தை சம்பாதித்தார்; தன் குழந்தைக்கு செலவிடுவது அவரது உரிமை.”
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மேல் தட்டு வர்க்கத்தின் சொத்துக் குவிப்பு மற்றும் ஊதாரித்தனங்களில் ஒன்றும் தவறில்லை என நினைக்கும் அளவிற்கு கீழ்த்தட்டு மக்கள் தங்களை தாங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்கின்றனர் என்பதுதான்.
தகுதி என்னும் கொடுங்கோன்மை
அமெரிக்காவில் பணியாற்றும் வெள்ளை இனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு பணக்காரர்களிடம் பெரிதாக வெறுப்பு இல்லை. செல்வந்தர்களின் இந்த ஊதாரித்தனம் நியாயமானது; ‘முறையாக’ பணியாற்றினால் எல்லோரும் அந்த நிலையை அடையலாம் என பல அமெரிக்கர்கள் நம்புவதாக காட்டும் ஆய்வுகளுடன் இது ஒத்துப் போகிறது. இன்று நடுத்தர வர்க்கத்தின் தன்மையைப் பற்றி ஆய்வு செய்யும் சமூகவியலாளர் மைக்கேல் லெமன், தன்னுடைய ‘The dignity of working men’ ‘தொழிலாளியின் கௌரவம்’ என்னும் நூலில் விளக்குகிறார்.
பணக்காரர்கள் குறித்த மதிப்பும் மரியாதையும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் உருவாக்கும் உளவியல் ரீதியான தாக்கம், தகுதி என்னும் கொடுங்கோன்மையின் மீது வடிவமைக்கப்படுகிறது.
‘தாழ்த்தப்பட்டவர்கள்’ உரிமை
சுமார் 1500 வருடங்களுக்கு முன் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ உரிமை குறித்து திருக்குர்ஆனில் ஒரு கூர்மையான அறிக்கை வெளியிடப்பட்டது:
“செல்வம் கடவுளால் கொடுக்கப்பட்டது; ஏழைகள் சார்பாக பணக்காரர்கள் அதை அறங்காவலர்களாக பாதுகாக்கிறார்கள் பணத்தை யாசிப்பவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அதில் சம உரிமை பெற்றவர்கள்.”
அறங்காவலர் கோட்பாட்டின் மூலம் தொண்டு என்பதற்கு பதிலாக உரிமை என்பதை அது அறிமுகப் படுத்துகிறது. ஏழைகளின் உரிமையையும் இதன் மூலம் அது உறுதி செய்தது. மக்களிடம் பிரபலமான மதங்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கண்களைத் திறக்க முயன்றதும் இப்படித்தான்.
“தகுதியுள்ள” பணக்காரர்களுக்கு நீதியை போதிக்க மைக்கேல் சாண்டல் இந்த கருத்துக்களுடன் தன்னுடைய நூலை நிறைவு செய்கிறார். செல்வந்தர்கள் தங்களுடைய ஊதாரித்தனத்தை இனியாவது கைவிடுவார்களா? சமூகத்திற்கு நீதியை அளிப்பார்களா?
மூலம்: The psychology of extravagance
தமிழில்: கடலூர் சுகுமாரன்