காணாமல் போன சார்லி சாப்ளின்

சி.ஹரிகிருஷ்ணன்

வ்வொரு மனிதனும் கருவறையில் இருந்து வெளியே வரும்போது தொடங்கும் போராட்டம், கல்லறைக்குப் போகும் போதுதான் முடியும் என்பார்கள். ஆனால், சிலருக்குக் கல்லறையிலும் நிம்மதி இருப்பதில்லை.

‘அன்றாட வாழ்க்கையை அன்றாடமும் வாழ முடியாது’ என்று பிரபலங்களைப் பற்றிச் சொல்வார்கள். பிரபலமாக இருப்பதில் பல சங்கடங்கள் உண்டு. உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இரண்டு முகமூடிகள் வேண்டும். கோபம், மகிழ்ச்சி, எரிச்சல், வெறுப்பு, கசப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சாமானியனுக்கு இருக்கும் சுதந்திரம், பிரபலங்களுக்கு இருப்பதில்லை. உள்ளுக்குள் கோபமும் வெறுப்பும் பொங்கிக் கொண்டிருந்தாலும் வெளியே புன்னகையை போர்த்திக்கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் மாறுவேடம் கோரும். வெளியே இருந்து பார்க்கும்போது ராஜ வாழ்க்கையாகத் தோன்றும். அனுபவித்துப் பார்த்தால் நரக வாழ்க்கை.

எதற்கு இந்த ‘பில்டப்’ (build up) என்று கேட்கிறீர்களா? விஷயம் இருக்கிறது. ‘பிரபலம்’ என்கிற போர்வையால் சுதந்திரமான வாழ்க்கையைத் தொலைத்து, சாதாரண மக்களிடம் இருந்து விலகியே வாழ்ந்த சில பிரபலங்களை, அவர்கள் இறந்த பின்பும் கல்லறையில் நிம்மதியாகத் துாங்க விடவில்லை. சில பிரபலங்களின் உடல்கள், பல்வேறு காரணங்களுக்காகக் கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, வேறு இடங்களில் புதைக்கப்பட்டன. சில பிரபங்களின் உடல்கள் நாடு விட்டு நாடு எடுத்துச் செல்லப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி, கல்லறைத் துாக்கத்தில் இருந்து தட்டி எழுப்பப்பட்டிருக்கும் பிரபலங்கள் சிலரைப் பற்றி இந்தத் தொடரில் பார்ப்போம்.

நகைச்சுவை மன்னன் சாப்ளின்:

சுவிட்சர்லாந்தின் கார்சியர் – சர் – வேவி (Corsier-sur-Vevey) கிராமத்தில் உள்ள தேவாலயத்தையொட்டிய கல்லறைத் தோட்டம். ஏழை – பணக்காரர், நல்லவர் – கெட்டவர், அறிவாளி – முட்டாள், படித்தவன் – படிக்காதவன் என உயிரோடு இருக்கும்போது பல ஏற்றத்தாழ்வுகளுடன் வாழ்ந்த மனிதர்கள் எல்லாரும் அந்தக் கல்லறைத் தோட்டத்தின் ஆறடி நிலத்தினுள் ஐக்கியமாகி இருந்தனர். அவர்களுடன் உலகையே சிரிக்க வைத்த மகாக் கலைஞன் சார்ள்ஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Charles Spencer Chaplin) என்ற சார்லி சாப்ளினும் உறங்கிக் கொண்டிருந்தார்.

1978 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி அதிகாலை. கடப்பாரை, மண்வெட்டியுடன் கல்லறைத் தோட்டத்தில் புகுந்த இருவர், சார்லி சாப்ளின் புதைக்கப்பட்ட கல்லறையைத் தோண்டினர். ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த சாப்ளினின் உடல் இருந்த சவப்பெட்டியைத் தூக்கித் தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். தன் உயிர் இருக்கும் வரை இந்த உலக மக்களைச் சிரிக்க வைப்பது ஒன்றையே தன் நோக்கமாகக் கொண்ட அந்த மகாக் கலைஞனின் உடலை ஏன் திருட வேண்டும்?

தன் நகைச்சுவையின் மூலம் எல்லாரையும் நிம்மதியாக உறங்கவைத்த அவரைக் கல்லறையில் நிம்மதியாக உறங்கவிடாமல் செய்தது ஏன்? இதனால் அவர்களுக்கு என்ன இலாபம்? அதைத் தெரிந்து கொள்ளும் முன் சார்லி சாப்ளினின் வாழ்க்கையைக் கொஞ்சம் பார்ப்போம்.

விசித்திரங்களும் விநோதங்களும்தான் வாழ்க்கை. அந்த விசித்திரங்களுக்கும் விநோதங்களுக்கும் யாராலும் காரணம் கற்பிக்க முடிவதில்லை. சார்லி சாப்ளினின் வாழ்க்கையும் அப்படித்தான். உலகத்தைச் சிரிக்க வைத்தவரின் குழந்தைப் பருவம், துயரங்கள் நிறைந்தது. நெருக்கடிகள் நிறைந்திருந்த வாழ்க்கையில் மூழ்கிப் போகாமல் நிமிர்ந்து எழுந்து நின்றான் அந்த மகாக் கலைஞன்.

துன்பம் நிறைந்த குழந்தைப் பருவம்:

சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16 ஆம் திகதி பிறந்தார். அவருடைய பெற்றோர் மேடைப் பாடகர்கள். குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். சாப்ளினின் தந்தை குடிபோதைக்கு அடிமையாக, தாயோ மனநோய் காரணமாக வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாயின் மனநோயும் தந்தையின் குடியும் சாப்ளினைத் தரித்திரனாக்கியிருந்தன. ஹான்வெல் என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் வளர்ந்தார். அங்கு அவர் அனுபவிக்காத கொடுமையே இல்லை.

திரை வாழ்க்கை:

சார்லிக்கு 21 வயதானபோது நாடகக்குழு ஒன்றில் சேர்ந்தார். அந்த நாடகக்குழு அமெரிக்கா சென்றது. அவரும் அமெரிக்கா போனார். 1913 இல் முதன் முதலாக, ‘மேக்கிங் எ லிவிங்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார் சார்லி சாப்ளின். அப்படம் வெற்றி பெறவில்லை. இரண்டாவதாக, ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்கிற படத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார். தொளதொள கால்சட்டை, சிறிய கோட், ஹிட்லர் மீசை, சின்ன தொப்பி, கையில் சிறு தடி… இத்தகைய வேடத்துடன் தோன்றி இரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்கவைத்தார். இந்த வேடமே அவருக்கு ‘டிரேட் மார்க்’ ஆனது. அதற்குப் பிறகு அவரது திரை வாழ்க்கையில் ஏறுமுகம்தான். திரும்பிப் பார்க்ககூட நேரமில்லை. வரிசையாக சார்லியின் வெற்றிப் படங்கள் வெளிவந்தன. ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். எல்லாமே வெற்றிப் படங்கள்தான். பல படங்களை இயக்கினார். உலகப் புகழ் பெற்றார்.

பட நிறுவனம் தொடக்கம்:

1919 ஆம் ஆண்டில், ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ என்கிற பட நிறுவனத்தை, வேறு சிலருடன் சேர்ந்து கூட்டாகத் தொடங்கினார். படங்களைத் தயாரித்ததுடன் விநியோகம் செய்வதிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டது.

பேசும் படங்கள்:

மௌனப் பட யுகம் முடிவடைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலக்கட்டத்தில் 1936ஆம் ஆண்டு, ‘மாடர்ன் டைம்ஸ்’ (Modern Times) என்கிற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சார்லி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அப்படமும் மகத்தான வெற்றி பெற்றது. 1940 ஆம் ஆண்டு சாப்ளின் தயாரித்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (The Great Dictator) சர்வாதிகாரி ஹிட்லரைக் கேலி செய்து எடுக்கப்பட்ட படம். ஹிட்லர் வேடத்தில் சாப்ளின் பிரமாதமாக நடித்தார். அவர் பேசி நடித்த முதல் படம் இது. உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டுப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

குடும்ப வாழ்க்கையில் சோகம்:

சார்லி சாப்ளினின் திருமண வாழ்க்கை சோகம் நிறைந்தது. முதல் மனைவி மாக்மர்ரே, இரு குழந்தைகளைப் பெற்ற பிறகு சார்லியை விவாகரத்து செய்தார். அடுத்து நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடிந்தன. பிறகு ‘ஓனா’ என்கிற 18 வயதுப் பெண்ணை மணந்தார். இவர் எட்டுக் குழந்தைகளைப் பெற்றார். இந்த மனைவிதான் சார்லியின் இறுதிக்காலம் வரை அவருடன் வாழ்ந்தார்.

சுவிட்சர்லாந்தில் குடியேற்றம்:

1952 இல் பிரிட்டனுக்குச் சென்றிருந்த சாப்ளினை மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்க அரசு மறுத்ததால், தனது நான்காம் மனைவி ஓனா மற்றும் குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தனது இறுதி நாள்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாப்ளின், 1977 டிசம்பர் 25 இல், கிறிஸ்துமஸ் நாளில் தூக்கத்திலேயே 88 ஆவது வயதில் இறந்தார். அவரது உடல், சுவிட்சர்லாந்தின் கார்சியர்-சர்-வேவி கிராமத்தில் ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

அதன்பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து, 1978 மார்ச் 2 ஆம் திகதி அவரது உடல் திருடப்பட்டது. இந்தச் செய்தி உடனடியாக சாப்ளின் குடும்பத்தாரிடம் தெரிவிக்கப்பட்டது.

சாப்ளினின் உடலைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்டு, ‘கடத்தல்காரர்கள்’ பேரம் பேசினர். சாப்ளினின் குடும்பத்துக்கு வந்த 200 தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரிக்கத் தொடங்கிய போலீஸார், மூன்று மாதங்கள் கழித்து மே 17 ஆம் திகதி திருடர்களைக் கண்டுபிடித்தனர்.

போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த ரோமன் வார்டஸ் (Roman Wardas), பல்கேரியாவின் கான்ட்ஷோவ் கெனவ் (Gantcho Ganev) ஆகிய இருவரும்தான் அந்தத் திருடர்கள். வறுமையில் வாடிய இருவரும் இப்படியொரு திட்டத்தில் இறங்கியது விசாரணையில் தெரியவந்தது.

சார்லியின் உடல் மீட்பு:

அந்த இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், சாப்ளினின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்த ஜெனீவா ஆற்றின் அருகில் கோதுமை வயலில் அவரது உடலைப் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பல நாள்கள் ஆகிவிட்டதால் புதைத்த இடம் தெரியாமல் திருடர்கள் குழம்பினார்களாம். பின்னர், ஒருவழியாகக் கண்டுபிடிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் அவரது உடல் திருடப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வலுவான கொன்கிரீட் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தனராம் சாப்ளினின் குடும்பத்தினர். சாப்ளின் நினைவாக வேவியில் அவரது சிலை ஒன்றும் அமைக்கப்பட்டது.

மன்னிப்பு:

இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுத் திருடர்களில் ஒருவரின் மனைவி, சாப்ளினின் மனைவி ஓனாவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய ஓனா, “எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. எல்லாமே மன்னிக்கப்பட்டுவிட்டன” என்று குறிப்பிட்டிருந்தார். சாப்ளினின் உடல் திருடப்பட்டது குறித்த ஒரு வதந்தி நீண்ட நாள்கள் இருந்தது. அதாவது, யூதர்கள் அல்லாதவர்கள் புதைக்கப்படும் மயானத்தில் யூதரான சாப்ளினைப் புதைத்ததால், அவரது உடல் திருடப்பட்டிருக்கலாம் என்று சிலர் கிளம்பிவிட்டார்கள். சாப்ளினின் உடல் திருடப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ‘தி பிரைஸ் ஆஃப் ஃபேம்’ என்கிற படம் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் முக்கியப் பாத்திரங்களில் சாப்ளினின் மகன் யூஜினும் பேத்தி டோலரஸும் நடித்தார்கள்.

Tags: