‘ரெலிகிராம்’ நிறுவனர் பாவெல் டுரோவ் கைதின் பின்னணி

– சேது சிவன்

ரெலிகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிறுவனருமான பாவெல் டுரோவ் (Pavel Durov) ஒரு சர்வதேச குற்றவாளி போல பிரான்ஸ்  அரசாங்கத்தால் தடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு எலான் மஸ்க் (Elon Musk) உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் பிரான்சை விட்டு வெளியே செல்லக்கூடாது என உத்தரவிடப் பட்டுள்ளது. 

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆணைக்கு இணங்க இவரை பிரான்ஸ் அரசு கைது செய்ததன் பின்னணியில் என்ன உள்ளது? முதலாளிகளுக்காக மட்டுமே ஆட்சி செய்யும் இந்த நாடுகள், ஏன் உலகின் மிகப்பெரிய  முதலாளிகளில் ஒருவரைக் கைது செய்ய வேண்டும்?

காரணம் வேறொன்றுமல்ல; காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலைகள் பற்றிய தகவல்களை, வீடியோக்களை பதிவு செய்து  உலகின் கண் முன் கொண்டு சேர்த்து வருகிற முதன்மை செயலியாக ‘ரெலிகிராம்’ (Telegram) உள்ளது என்பது தான்.

உலகிற்கு ரெலிகிராம் காட்டும் உண்மைகள் 

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனக்  குழந்தைகள், பெண்களைக்  கொடூரமாக படுகொலை செய்யும் காட்சிகளையும், ஐ.நா. நிவாரண முகாம்கள் மீது நடத்தும் தாக்குதல்களையும் காஸாவில் உள்ள பத்திரிகையாளர்கள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து உட னுக்குடன் உலகம் முழுவதும் கொண்டு செல்ல ரெலிகிராம் செயலியையே பயன்படுத்துகிறார்கள்.

தங்களது இனப்படுகொலையை வெளிக் கொண்டுவரும் 100 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இதுவரை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. 

காஸா மட்டுமின்றி, உக்ரைனிலும் என்ன  நடக்கிறது என்ற உண்மை  நிலையை தெரிவிக்கும் நம்பிக்கையான ஊடகமும் ரெலிகிராம் தான்.

‘நியூயார்க் டைம்ஸ்’,  (New York Times) ‘வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (Wall Street Journal) போன்ற பிரபலமான பல பத்திரிகைகள் அமெரிக்கா, உக்ரைன், இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டும் செய்திகளை திரித்து வெளியிடும் நிலையில், உலகிற்கு உண்மையை காட்டும் ஊடகங்களில்  ஒன்றாக ரெலிகிராம் உள்ளது. குறிப்பாக. இந்த ரெலிகிராம் அமெரிக்கா மற்றும் கூட்டாளிகளின் படையான  நேட்டோவின் சைபர் டீம் (Cyber team) கட்டுப்பாட்டில் இல்லை. 

உண்மையைக்  கண்டறிய உதவுகிறது 

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  பரப்பும் செய்திகளுக்குப்  பின்னே உள்ள போலி பிரச்சாரத்தை ரெலிகிராம் செயலி மூலம் நாம் கண்டறிந்து விடலாம்.

உதாரணமாக ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ வீரர்கள் போரில் ஈடுபடுத்தப்படவில்லை என அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் சொன்னாலும், சில இடங்களில் நேட்டோ வீரர்கள் போரில் ஈடுபட்டது ரெலிகிராம் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஆதிக்கத்தை உடைக்க உதவியது 

மாலி, புர்கினோ பசோ, நைஜர் உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில்  பிரான்ஸ் இராணுவத்தை வெளியேற்றும் போராட்டத்தில் டெலிகிராம் முக்கியப்  பங்கு வகித்துள்ளது என்றால் மிகையல்ல. ஆபிரிக்கர்கள் பிரான்ஸ் படைகளின் ஆதிக்கத்துக்கு எதிரான தங்களின் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் ரெலிகிராம் வாயிலாகவே ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டங்கள் ஆபிரிக்காவில் பிரான்ஸ் ஆதிக்கத்துக்கு பெரிய அடியாக எழுந்தன.

அமெரிக்காவின் கட்டளைக்கு சிறிதும் தயங்காமல் பிரான்ஸ் உடனடியாக ரெலிகிராம் நிறுவனர் பாவெல்லை  சர்வதேச குற்றவாளி போல  தடுத்து கைது செய்ததற்கு இது ஒரு முக்கியமான காரணமாகும்.

மாபியா கும்பல்கள் இடமாகவும் 

அதே வேளையில் ரெலிகிராம் செயலியில் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி, குழந்தைகள் கடத்தல்  தொடர்பான மிகப்பெரிய மாபியா கும்பல்களின் சேனல்களும் இயங்கி வருகின்றன என்பது  ‘ஆபத்தானது’. இதன் மூலம் ‘ஒழுங்கமைக்கப்பட்ட  குற்றங்களை’ அந்த கும்பல்கள்  செய்து வருகின்றன. இதனை ரெலிகிராம் நிறுவனரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற காரணத்தை மேற்கு நாடுகள்  தற்போது பிரதானமாக குறிப்பிடுகின்றன. 

உளவு நிறுவனங்களுக்கு உதவ மறுப்பு 

இந்த உண்மை ஒருபுறமிருக்க, உண்மையில் ரெலிகிராம் நிறுவனமானது பலஸ்தீன, ரஷ்யா ஆதரவு சேனல்களை முடக்கவும் அதில் உள்ள ‘சாட்’ (Chat) தகவல்களை நேட்டோ, மொசாட், சி.ஐ.ஏ உள்ளிட்ட உளவு அமைப்புகளுக்கு கொடுக்கவும் மறுத்துவிட்டது. மறைகுறியாக்கப்பட்ட (encrypted ) செய்தியை கண்டறிய முடியாமல் அமெரிக்க, ஐரோப்பிய உளவு அமைப்புகள்  பல தோல்விகளை அடைந்துள்ளன. (இரகசிய ‘சாட்’ எனப்படும் மறைகுறியாக்கப்பட்ட அம்சம் மூலம் பேசும் போது  அந்த உரையாடல்களை யாராலும் இடையில் புகுந்து தெரிந்து கொள்ள முடியாது)

ரெலிகிராம் மீதான குற்றச்சாட்டுகள் பிற ஊடகங்களுக்கும் பொருந்தும் 

இதே வேளையில் எலான் மஸ்க், மார்க்  ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஆகியோரின் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கும், ரெலிகிராம் நிறுவனத்தின் மீது, அதன் நிறுவனரைக் கைது செய்வதற்காக வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பொருந்தும். 

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு அதில் அதி தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவாகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் கருத்துக்களும் அதிகரித்துள்ளன. உதாரணமாக வெனிசுலா தேர்தலுக்குப் பிறகு அந்நாட்டில் கலவரத்தை தூண்டிவிடும் வகையில் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்து கருத்து தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவிற்கு வாலாட்டும்  நிறுவனங்கள் 

இந்தியாவிலும் மதவெறி கருத்துக்களை பதிவிடும் பா.ஜ.க தலைவர்களின் கணக்குகளை முடக்காமல் சமூக செயற்பாட்டாளர்கள், மதவாதத்திற்கு எதிராக இயங்கும் செய்தி நிறுவனங்களின் கணக்குகளை எலான் மஸ்க்கும், ஸுக்கர்பெர்க்கும் முடக்கியுள்ளனர். 

மேலும் அவர்களின் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பயனர்களின் தனி விவரங்களை எந்த ஒரு நாட்டின் அரசாங்கமும், மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புகளும்  கேட்கும் போதெல்லாம் அள்ளிக்கொடுத்து வருகின்றன.

இந்தியாவிலும் பா.ஜ.கவின் ஆணைக்கு இணங்க பலரது கணக்குகளை இந்நிறுவனங்கள் முடக்கியுள்ளன. மேலும் இந்த இரு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளும் அமெரிக்காவின் அரசியலுக்கு வாலாட்டக் கூடியவர்கள் என்பதாலும் அவர்களது நிறுவனத்தின் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் பாயவில்லை.

ரஷ்யாவின் உத்தரவுகளையும் உதாசீனப்படுத்திய பாவெல் 

38 வயதான பாவெல் டுரோவ் ரஷ்யாவில் பிறந்தவர். 2011 ஆம் ஆண்டில் பாவெல் தனது சமூக ஊடகக்கணக்கில் அரசாங்கத்திற்கு எதிரான நபர்களின் கணக்குகளை நீக்குமாறு ரஷ்ய அரசாங்கம் தன்னிடம் கூறியதாகவும், ஆனால் தான் அதனை செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி தனது நடுவிரலை உயர்த்தி ஒரு  புகைப்படத்தையும் வெளியிட்டார். ரஷ்ய ஜனாதிபதியின் கட்டளைக்கு அடிபணியாத பாவெல்லை அன்று மேற்கு நாடுகள் கொண்டாடின என்பது கவனிக்கத்தக்கது.

உக்ரைன் ஆட்சிக் கவிழ்ப்பில் ரெலிகிராம் 

2014 ஆம் ஆண்டு நேட்டோ, சி.ஐ.ஏ அமைப்புகளால் உக்ரைனில் ஆட்சிக்கவிழ்ப்பு நடத்தப்பட்டது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபட்ட நபர்கள்  ரெலிகிராம் செயலியையும் தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். அப்போதும் மேற்கு நாடுகள் அவரை பாராட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அப்போது அந்த பயனர்கள் பற்றிய தகவல்களை ரஷ்ய அரசாங்கத்திற்கு வழங்க பாவெல் தயாராக இருந்தார் எனவும், பிறகு அந்த ஆண்டே அவர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார் என்றும் கூறப்படுகிறது. பிறகு அவர் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) குடியுரிமையைப் பெற்றுக் கொண்டார். ரஷ்யாவுக்குத் திரும்ப தான் விரும்பவில்லை என்றும் அறிவித்தார்.

ரெலிகிராமின் கடந்தகால செயல்களை பார்க்கும் போது, தற்போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுத்ததாலேயே பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகிறது. 

Maria Zakharova

இன்றளவும் ரஷ்யா, பாவெலை தன் நாட்டு பிரஜையாகவே அடையாளப்படுத்துகிறது. “இது போன்ற சூழலை எதிர்கொள்ளும் ரஷ்ய குடிமகனுக்கு தேவையான அனைத்து உதவி நடவடிக்கைகளும், இந்த விவகாரத்தில் பிரான்சுக்கான ரஷ்ய தூதரகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. பாவெலின் பிரதிநிதிகளிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் பெறப்படவில்லை. இருப்பினும், இந்த உதவிகள் வழங்கப்பட்டன” என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த தடுப்புக் காவலுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளவும், பாவெலின் உரிமைகளை பாதுகாக்கவும், வழக்கறிஞரை அணுகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகள் ரஷ்யாவுடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா ஸகரோவா (Maria Zakharova), 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் ரெலிகிராம் செயல்பாட்டை முடக்க ரஷ்யா முயற்சிப்பதாக விமர்சித்த மேற்கத்திய நாடுகளின் மனித உரிமை அமைப்புகள், தற்போது பாவெல் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து அமைதியாக இருப்பது ஏன் என்று தனது ரெலிகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: