ஏ.ஜி.நூரானி அதிகாரத்​துக்கு எதிரான துணிச்சல் குரல்

ஆர்.விஜயசங்கர்

ல்ல நூல்களைப் படிப்பது என்பது கடந்த நூற்றாண்​டு​களின் மிகவும் பண்படுத்​தப்பட்ட சிந்தனை​யாளர்​களுடன் உரையாடு​வதைப் போன்றது’ – பிரெஞ்சுத் தத்து​வ​விய​லாளர் ரெனே டெகார்ட் சொன்ன இந்த வார்த்​தைகள் நிதர்​சன​மானவை. சிறந்த சிந்தனை​யாளர்​களின் நூல்களைப் படிப்பதே ஓர் உரையாடல்​தான்.

அதிலும் அத்தகைய சிந்தனை​யாளர்​களுடன் நேரடியாக உரையாடுவது ஒரு மாபெரும் அறிவுச் சுரங்​கத்​துக்குள் பயணிப்​ப​தற்கு நிகரானது. ஓகஸ்ட் 29 இல் மறைந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர், அரசியல் விமர்​சகர், ஆங்கிலப் புலமை மிக்க எழுத்​தாளர் எனப் பல பரிமாணங்​களைக் கொண்ட அறிஞர் ஏ.ஜி.நூரானி (A. G. Noorani) அப்படியான ஓர் அறிஞர்; என்னைச் செதுக்கிய ஆசான்​களில் முதன்​மை​யானவர்!

உணவில் தொடங்கிய உறவு:

ஏ.ஜி.நூரானி​யுடன் எனக்குத் தொழில்​ரீ​தியாக மிக நீண்ட கால நட்பு இருந்தது. இந்த அசாதாரண உறவு, உணவைப் பற்றிய ஒரு சாதாரணமான உரையாடலில்தான் தொடங்​கியது. சுமார் 30 ஆண்டு​களுக்கு முன் சென்னையி​லிருக்கும் ‘தி இந்து’ (The Hindu) அலுவலக வளாகத்தில் ‘ஃபிரண்ட்​லைன்’ (Frontline) இதழின் அலுவல​கத்​துக்குள் செய்தி ஆசிரியரைக் காண நூரானி வந்தார். நான் அப்போது பத்திரி​கையின் துணை ஆசிரியர். செய்தி ஆசிரியர் அன்று விடுப்பில் இருந்தார் என்று கூறியவுடன், “நான் இன்று மும்பை (அவர் குடியிருந்த ஊர்) செல்கிறேன்.

சென்னையில் ஒரு நல்ல அசைவ உணவகம் எதுவென்று கூற முடியுமா?” என்று என்னிடம் கேட்க, நான் அப்போது செட்டிநாட்டு உணவுக்குப் பெயர் போன ஓர் உணவகத்தின் பெயரைச் சொன்னேன். நன்றி தெரிவித்து​விட்டுச் சென்ற அவர், சுமார் ஒரு மாதத்​துக்குப் பின் எங்கள் அலுவல​கத்தைத் தொலைபேசி மூலம் தொடர்​பு​கொண்​டார். நான்தான் அழைப்பை எடுத்​தேன். என் பெயரைக் கூறியதும், “நீங்​கள்தானே எனக்கு சென்னையி​லிருக்கும் அருமையான உணவகத்தை அடையாளம் காட்டியவர்? நன்றி! நான் ரூ.1,000 மதிப்புள்ள உணவு வகைகளை அங்கிருந்து பார்சல் கட்டி மும்பைக்கு எடுத்துச் சென்றேன்” என்றார்.

நான் 2003ஆம் ஆண்டில் மாதம் இருமுறை வெளிவரும் ‘ஃபிரண்ட்​லைன்’ இதழின் பொறுப்​பாசிரியராக​வும், பின்னர் 2011 இல் ஆசிரியராகவும் ஆன பின்னர், அப்படித் தொடங்கிய எங்கள் நட்பு மேலும் வலுப்​பெற்று வளர்ந்தது. ஏனெனில், அன்றி​லிருந்து வெளிவந்த ஒவ்வொரு இதழிலும் அவர் கட்டுரை எழுதினார். ஒவ்வொரு இதழின் பணி தொடங்​கு​வதற்கும் முன்பே என்னை அழைத்து அடுத்த மூன்று இதழ்களில் அவர் எழுதத் திட்ட​மிட்​டிருக்கும் தலைப்புகளை என்னிடம் கூறி, ஒவ்வொரு முறையும் என் அனுமதியைக் கேட்பார்.

“நீங்கள் அனுமதி கேட்கவே தேவையில்லை” என்று கூறினாலும், “இல்லை நண்பரே, நான் யாராக இருந்​தாலும் நீங்கள்தான் இதழின் ஆசிரியர். அது ஒரு பெரிய பொறுப்பு. கட்டுரையை ஒட்டி எந்தப் பிரச்சினை வந்தா​லும் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும் என்பதால், அனுமதி கேட்பது ஒரு முக்கியக் கடமை, பொறுப்பு” என்பார்.

அவரது தன்னடக்​கமும் பொறுப்பு​ணர்வும் திட்ட​மிட்டு வேலை செய்யும் முறையும் ஒவ்வொரு முறையும் என்னை வியக்​க வைக்​கும். நான் பொறுப்​பேற்றுப் பணி ஓய்வு​பெறு​வதற்கு முந்தைய ஆண்டு வரை அவருடைய கட்டுரை இடம்பெறாத இதழே இல்லை எனலாம். ஒரு தோராயமான கணக்கினை எடுத்தால் ஓர் ஆண்டுக்கு 25 இதழ்கள் என்கிற வீதத்தில் நான் தயாரித்த சுமார் 500 இதழ்களிலும் கட்டுரை எழுதி 20 ஆண்டு​களில் சாதனை படைத்தவர் அவர்.

அசைக்க முடியாத ஆதாரங்கள்:

‘ஃபிரண்ட்​லைன்’ இதழில் அவர் முதல் முதலாக எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘Taming the RAW’. அது உளவுத் துறையின் வெளிநாட்டு அங்கமாகிய ‘ரா’ அமைப்பினை ‘அடக்குவது’ குறித்ததாயிருந்தது. கடைசியாக எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘Judges and their bogus collegium’ (‘நீதிப​தி​களும் அவர்களின் போலியான கொலீஜியம் அமைப்பும்’). அவரது எழுத்துகள் எப்படி அதிகார மையங்களை அம்பலப்​படுத்தின, எதிர்த்துக் கேள்வி எழுப்பின என்பதற்கு இந்தத் தலைப்புகளே சான்று.

நூரானி எழுதிய கட்டுரைகளின் உக்கிரத்​திலிருந்து பிரதமர்கள், அமைச்​சர்கள், முதலமைச்​சர்கள், உயரதி​காரிகள், நீதிப​திகள், வெளிநாட்டு ஆட்சி​யாளர்கள் என யாருமே தப்பிய​தில்லை. ஆயினும், அவர்கள் யாருமே அவருக்கு எதிராக எந்த நடவடிக்கை​யையும் எடுக்கத் துணியாததற்குக் காரணம், அவரது கட்டுரைகளின் ஒவ்வொரு வரியும் அசைக்க முடியாத ஆதாரங்​களின் அடிப்​படையி​லானவை. அந்த ஆதாரங்கள் அவர் தன் இரண்டு அறைகளே கொண்டிருந்த எளிய வீட்டின் உள்ளே குவித்து வைத்திருந்த நூல்கள், வரலாற்று ஆவணங்கள், நீதிமன்றத் தீர்ப்பு​களுக்​குள்​ளிருந்து எடுக்​கப்​பட்டவை.

அவற்றையெல்​லாம்விட அவர் வைத்திருந்த ஒரு பொக்கிஷம், 1950களி​லிருந்தே அவர் பத்திரி​கை​களி​லிருந்து கத்தரித்து எடுத்துத் திகதிதிவாரியாக கோப்பு​களுக்குள் இட்டு வைத்திருந்த செய்தி​களின் தொகுப்பு. அவர் எழுதிய ஒரு கட்டுரையி​லிருந்த ஒரு விவரம் அதிகாரபூர்வ இரகசியங்கள் சட்டத்​தின்படி வெளியே வரக் கூடாத ஒன்று.

அது எப்படி அவருக்குக் கிடைத்தது எனக் கேட்டு மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்குச் சென்றனர். அவர் சற்றும் தாமதிக்​காமல் அந்த விவரத்தைத் தாங்கி வந்திருந்த பத்திரிகைச் செய்தியைத் தனது கோப்பிலிருந்து உருவி எடுத்து அவர்களிடம் காட்டி​னார். அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றனர்.

அபாரமான நினைவாற்றல்:

நூரானியின் அற்புதமான இந்தப் பொக்கிஷங்கள், அவற்றில் எங்கே எந்தத் தகவல் இருக்குமென அவருக்​கிருந்த நினைவாற்றல் எல்லாம் வியக்​கவைப்பவை. இவற்றைத் தவிர, நாம் கவனித்துக் கற்றுக்​கொள்ள வேண்டியது அவர் கணினி, கூகுள், திறன்பேசி என்கிற நவீனத் தொழில்​நுட்ப வசதிகள் இல்லாத காலத்​தில்தான் காலத்தால் அழிக்க முடியாத கட்டுரைகளை​யும், நூல்களையும் படைத்தார் என்பது​தான்.

இதில் சுவாரசியம் என்னவென்​றால், 1930 செப்டம்பர் 6 இல் பிறந்த இந்த நவீனச் சிந்தனை​யாளர், தன் 80ஆவது வயதுக்குப் பிறகுதான் கைபேசியைப் பயன்படுத்தத் தொடங்​கினார். அதுவரை தரைவழித் தொலைபேசி மூலம்தான் பிரதமர்கள், அதிகாரிகள், ராஜதந்​திரிகள், பத்திரி​கை​யாளர்கள் என ஒரு பெரிய வலைப்​பின்னலை உருவாக்கி வைத்திருந்​தார். கடைசிவரை அவர் கைப்படத்தான் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதினார்.

அவரது எழுத்து​களில் 90 சதவீதம் தட்டச்சு செய்யப்​பட்​ட​வை​தான். தட்டச்சு செய்யப்​பட்டு, தொலைநகல் மூலம் ‘ஃபிரண்ட்​லைன்’ அலுவல​கத்​துக்கு வந்த கட்டுரைகளைக் கணினிக்கு மாற்றி வெளியிடுவது பெரும் சுமையாக இருந்தது. ஆனால், அவரது அறிவொளி பாய்ச்​சும், ஆங்கிலப் புலமை புரண்​டோடும் கட்டுரைகளை மெய்ப்புத் திருத்தம் செய்யும்போது சுமைகளெல்லாம் சுகமாகி​விடும். அவருக்கு நீண்ட காலம் உதவியாக இருந்த தட்டச்சர் கணினிக்கு மாறியது 2010களில்​தான்.

தகவல்​களில் துல்லியம்:

காஷ்மீர், ஆர்.எஸ்​.எஸ். பாபர் மசூதி இடிப்பு, அரசமைப்புச் சட்டம், மனித உரிமைகள், இந்தியா​வுக்கும் சீனா, பாகிஸ்​தான், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து 25க்கும் மேற்பட்ட நூல்களையும் தன் பழைய பாணியிலேயே நூரானி படைத்​தார். அவை யாவும் கொள்கை-சட்​டங்களை வகுக்கும் இடத்தில் இருப்​பவர்​களுக்கு என்றென்றும் வழிகாட்​டிகளாக இருக்​கக்​கூடியவை.

நூல்களில் ஆணித்​தரமான வாதங்களை முன்வைத்த அவர், ஏராளமான ஆவணங்களை ஆதாரமாக இணைத்​திருக்​கிறார். சான்றாக, காஷ்மீர் பிரச்சினை குறித்து அவர் எழுதிய நூலின் முதல் பாகத்தில் 150 பக்கங்கள் கருத்து​களுக்​கும், அதே அளவிலான பக்கங்கள் வரலாற்று – சமகால ஆவணங்​களுக்கும் கொடுக்​கப்​பட்​டிருக்​கின்றன. கலாச்சார தேசிய​வாதம் என்கிற பெயரில் வரும் ஆர்.எஸ்​.எஸ். அமைப்பைக் குறித்த அவரது நூலில் சுமார் 100 பக்கங்​களில் 16 பின் இணைப்புகள் இருக்​கின்றன.

எங்களுடைய உரையாடல்​களில் உணவிடங்​களைப் பற்றிய பேச்சு அதிகம் இருக்​கும். சாப்பாட்டுப் பிரியரான அவர் தனக்கு மிகவும் பிடித்த மும்பை ஜிம்கானா கிளப்பில் எனக்கு விருந்​தளிப்பதாக ஒவ்வொரு முறையும் உறுதி​கூறு​வார். நான்கு ஆண்டு​களுக்கு முன் தன் வாக்கினைக் காப்பாற்றினார்.

செட்டிநாட்டு விருந்தில் தொடங்கிய எங்கள் நீண்ட உறவு மும்பை ஜிம்கானா கிளப்பில் அவர் எனக்காக ஸ்பெஷலாக வாங்கிக் கொடுத்த ஐஸ்கிரீமில் ஊறிய ஜிலேபி​யுடன் ஒரு முழு வட்டத்தை நிறைவுசெய்தது. அது எங்களது கடைசிச் சந்திப்பாக இருக்​குமென எனக்கு அப்போது தெரியாது!

Tags: