ஓர் ஆசிரியர் எப்படி வாழ வேண்டும்?

நா.மணி

ழுதப் படிக்கத் தெரிந்தவர் அவர். ஆனால் நன்கு படிப்பார். நன்கு எழுதுவார் என்றெல்லாம் சொல்ல முடியாது. முறையான கல்வி எத்தனை வருடங்கள் படித்தார் என்று தெரியாது.‌ ஆனால், அந்த ஊரின் ஆசிரியர் அவர்தான். ஆசிரியர் மட்டுமல்ல. தலைமை ஆசிரியரும் அவர்தான். ஏன் பள்ளியின் நிறுவனர், தாளாளர் கூட அவர் தான். இவர் எப்படி ஆசிரியர் ஆனார்? பள்ளிப் படிப்பைக் கூட முழுமையாக முடித்தவர் இல்லை. அவர் நாடு வெங்கொடுமை நிறைந்த நாடு. மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனைப் பார்த்து, வளர்ந்து, வாலிபப் பருவம் எட்டும் போது, கொடுங்கோல் மன்னனுக்கு எதிராக ஒருவர் பெரும் புரட்சிப் படையை கட்டமைக்கிறார். அவரது எழுத்து பேச்சு இந்த இளைஞனை ஈர்க்கிறது.

அந்தப் புரட்சி படையின் படை வீரனாக தன்னை இணைத்துக் கொண்டார். புரட்சிப் படையில் சேர்ந்து, உயிரைக் கொடுக்கவும் ஒப்புதல் கொடுத்து, முன் கள வீரராக அவர் நின்றார். போராடினார். காரியம் கை கூடியது. புரட்சி முழு வெற்றி பெற்று விட்டது. புரட்சிப் படைத் தளபதியின் கையில் முழு அதிகாரமும் வந்து விட்டது.

தளபதியுடன் இணைந்து போராடிய இலட்சக்கணக்கான வீரர்கள் பணி இனித் தேவையில்லை. தளபதி அவர்களை அழைக்கிறார்.”பாட்டாளி மக்கள் ஆட்சியை நிறுவ, உயிரைப் பணயம் வைத்து போராடினோம். வெற்றி பெற்று உலகின் முதல் பாட்டாளி மக்களாட்சி அரசை உருவாக்கி விட்டோம். இனி பாட்டாளி மக்கள் கையில் நாம் கூறும் மக்களாட்சி சென்று சேர வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு ஆக முதல் கடமை, அனைத்து மக்களுக்கும் கல்வி கொடுக்க வேண்டும். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் உடனடியாக கல்வி கொடுக்க தேவையான கல்வி நிறுவனங்கள் இப்போது இல்லை. நம் புரட்சிப் படை வீரர்கள் அனைவரும் ஆசிரியர்களாக உருமாற்றம் அடைய வேண்டும்.‌ உங்களுக்கு பிடித்த கிராமத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு தெரிந்ததை மக்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அறிவொளி தீபங்களை மக்கள் மத்தியில் செல்லுங்கள்” என்று வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார் அவர்.

நமது கதையின் நாயகன் ஆசிரியரான கதை இதுதான். அவர் ஓர் கிராமத்தை தேர்வு செய்து அங்கு கல்விப் பணியாற்ற வருகிறார்.‌ அங்கு ஓர் குதிரை கொட்டகை காலியாக கிடக்கிறது. அதனை செப்பனிட்டு பள்ளிக் கூடமாக மாற்றி விடுகிறார். அடுத்து கிராமத்தில் உள்ள குழந்தைகளை சந்திக்கிறார். உரையாடுகிறார். பெற்றோரை சந்தித்து பேசுகிறார். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து கற்றல், கற்பித்தலை தொடங்கி நடத்தி வருகிறார். முறையான ஆசிரியர் பயிற்சி இல்லை.‌ முறையாக என்ன கற்றிருந்தார் என யாருக்கும் தெரியவில்லை என ஏற்கனவே குறிப்பிட்டோம். ஆனால் அவரது ஒரு நாள் கற்றல், கற்பித்தல் அணுகுமுறையை அறிந்து கொண்டால், அவர் எப்படிப்பட்ட ஆசிரியர் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஒரு நாள் காலையில், “குழந்தைகளே‌ இன்று மரம் நடுவோம். வாருங்கள் எல்லோரும்” என அருகில் அழைக்கிறார். “எல்லோரும் சேர்ந்து இந்த மரக் கன்றுகளை நடலாம். மரம் நடுவோம். மழை பெறுவோம் என்பது மட்டும் இந்த மரம் நடுதலின் நோக்கம் அல்ல. இந்தக் கன்றுகள் வளர்ந்து மரமாகி, ஒரு நிழல் தரும் மரங்களாக ஒரு நாள் மாறும். இந்த மரங்கள் இருக்கும் வரை நம் ஊருக்கு அவை நிழல் தரும். அப்படி, ‘நாங்களும் வளர்ந்து, பெரியவர்களாகி, நம் ஊருக்கு பயனுள்ள மனிதர்களாக வாழ்வோம்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு இந்த மரக் கன்றுகளை நடுங்கள்” என்று அந்த ஆசிரியர் கூறுகிறார். கல்வி, நாட்டுப் பற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, என மூன்றையும் ஒருங்கிணைத்து கற்பிக்கத் தெரிந்தவர்.

தன்னிடம் படித்த ஒரு பெண் குழந்தை மிகவும் சுட்டிப் பெண். நன்கு படிப்பாள். தாய் இல்லை. சிற்றன்ணை தான். சிற்றன்ணையின் கொடுமை பொறுக்காமல் அவரது தந்தை குழந்தைப் பருவத்திலே திருமணம் செய்து கொடுத்து விடுவார். இந்தக் குழந்தையை பிடித்தவன் மிகவும் கொடியவன். அவனது துன்புறுத்தல் கொடுமைகள் தாங்கவே முடியாத அளவுக்கு அதிகமாகியது. அந்தப் பிஞ்சை விற்கவும் துணிந்து விடுவான். நம்மை காப்பாற்றும் ஒரே சக்தி படைத்தவர் நம் ஆசிரியர் தான் என்று முடிவு செய்து, தப்பி ஓடி வந்து தன் ஆசிரியரிடம் அடைக்கலம் புகுந்துவிடும் அந்தக் குழந்தை.

இந்தக் குழந்தைக்கு அடைக்கலம் கொடுத்தால் பள்ளிக் கூடமே நடத்த முடியாமல் போகலாம் என அந்த ஆசிரியர் அஞ்சுகிறார். எனவே அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு நாட்டின் தலைநகருக்கே செல்கிறார். அங்கு ஓர் உண்டு உறைவிடப் பள்ளியில் அந்தக் குழந்தையை சேர்த்து விடுகிறார். அக்குழந்தை படித்து பெரியவளாகி அந்நாட்டின் கல்வித் துறையில் ஓர் முக்கிய பதவிக்கு வந்து விடுகிறது.

நம் கதாநாயகன் பள்ளியும் இப்போது மிகப் பெரிய பள்ளியாக மாறிவிட்டது‌. நிறைய பேர் படிக்கின்றனர். மேல்நிலைப் பள்ளியாகவும் உயர்ந்து விட்டது. நன்கு பயிற்சி பெற்ற ஏராளமான ஆசிரியர்கள் பணிக்கு வந்து விட்டனர். ஆனால் அந்தப் பள்ளியின் நிறுவனர் முதல் ஆசிரியர் அந்தப் பள்ளியில் இப்போது இல்லை. அந்த ஊரில் தான் வசிக்கிறார். தான் வளர்த்தெடுத்த பள்ளியின் வழியாக போகும் போதும் வரும் போதும் கண நேரம் நின்று அழகு பார்ப்பார். அகம் மகிழ்வார். ஆத்ம திருப்தியோடு தனது வாழ்வாதாரத்திற்கு தான் இப்போது செய்து வரும் அஞ்சல் ஊழியர் பணிக்கு சென்று விடுவார்.

பள்ளியில் புதிய கட்டிடங்கள் கட்டித் திறப்பு விழா. தலைநகரில் இருந்து கல்வித் துறை இயக்குநர் வருகிறார். அவர் வேறு யாருமில்லை, பள்ளியின் முதல் ஆசிரியரால் வளர்க்கப்பட்டு, முதல் முதலாக நாட்டின் தலைநகருக்கு சென்று படித்தாரே அவர் தான். தற்போதைய பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளியின் நாயகனை சந்தித்து பேசுகிறார். “நம் பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா. பள்ளிக் கல்வி இயக்குனர் வருகிறார். நீங்களும் வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார்.முதல் ஆசிரியரோ “விழா நடக்கும் நேரம், தபால் டெலிவரி செய்யும் நேரம். குறித்த நேரத்தில் எல்லாக் கடிதங்களையும் கொடுத்து முடிக்க வேண்டும். எனவே அந்த விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று கூறிவிடுகிறார்.

தன் நாடு கொடுங்கோல் மன்னன் கையில் சிக்கித் தவிக்கும் போது, நாட்டின் விடுதலைக்காக, மக்களின் விடுதலைக்காக அணி சேர்கிறார். புரட்சிப் படையில் சேர்ந்து தன் உயிரைப் பணயம் வைத்து போராடுகிறார். நாடு விடுதலை அடைந்தவுடன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது கல்லாமையை அகற்றுதல். அதில் தன்னால் என்ன முடியுமோ அதனை முழு மூச்சோடு ஈடுபடுத்திக் கொள்கிறார். ஒரு கிராமத்தில் ஒரு பள்ளியை நிர்மாணம் செய்து அதனை மிகப் பெரிய பள்ளியாகவும் மாற்ற பாடுபடுகிறார். இனி அந்தப் பள்ளியில் தனக்கு வேலை இல்லை என்று தெரிந்த பிறகு, தனது வாழ்வாதாரத்திற்கு தேவையான ஒரு வேலையை தேடிக் கொள்கிறார். அந்த வேலையை கண்ணும் கருத்துமாக செய்து வருகிறார்.

தான் உருவாக்கி வளர்த்த பள்ளியில் ஓர் முக்கியமான நிகழ்வு. கட்டிடத் திறப்பு விழா மட்டுமல்ல. தான் வளர்த்து ஆளாக்கி, குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாத்து ஆளாக்கிய ஒருவர் பள்ளிக் கல்வி இயக்குனராக உயர்ந்து விட்டார். அவரே பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக வருகிறார். அதனை காண வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருக்காதா? இருக்கும். ஆனாலும் அந்த நாளின் கடமை உணர்வே மேலோங்கி நிற்கிறது.

யார் இந்த மனிதர்? யார் அந்த குக்கிராமத்தின் முதல் ஆசிரியர்? இவரது பெயர் துய்சேன், ரஷ்ய நாட்டின் குடிமகன். 1920 களில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சிங்கிஸ் ஐத்மாத்தவ் (Chingiz Aitmatov) என்ற புகழ் பெற்ற நாவலாசிரியர் கை வண்ணத்தில் உருவான புனைவு இலக்கியம். இது படமாகவும் வந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. கதையின் பெயரே “முதல் ஆசிரியர்” தான்.

புகழ் பெற்ற நாவலாசிரியர் சிங்கிஸ் ஐத்மாத்தவ்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு துய்சேன் கதையை ஆசிரியர்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? துய்சேன் என்ற முதல் ஆசிரியர் சொல்லும் செய்தி என்ன? துய்சேனை போல் ஒவ்வொரு ஆசிரியரும் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், எந்தவிதமான அங்கீகாரத்தையும், எந்தவிதமான விருதுகளையும் எதிர்பாராமல் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று வாழ வேண்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மனம் ஓர் ஆசிரியருக்கு எப்போது வாய்க்கும்? வள்ளலார் கூறியதைப் போல “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற மனம் வாய்க்கும் போதே சாத்தியம். தான தருமங்கள் செய்வதே புண்ணியத்தை தேடிக் கொள்ள. ஆனால், வாழ்நாள் முழுவதும் சேர்த்த புண்ணியத்தையும் தானம் கேட்கிறார் கிருஷ்ணன். மிகுந்த மகிழ்ச்சியோடு தானத்தையும் தானம் செய்கிறான் கர்ணன். துய்சேனின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே.

ஆசிரியர்களின் வாழ்க்கை கர்ண பரம்பரை வாழ்க்கையாக மாற வேண்டும். ஆசிரியர் தினத்தன்று நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களைக் காட்டிலும் ஆயிரம் பேர் நல்லாசிரியர்கள் இருக்கலாம். நல்லாசிரியர்கள், தங்கள் சொந்த கல்வி நிறுவனங்களால், அரசுகளால், அடையாளம் காணப் படாமலும் போகலாம். இருட்டடிப்பும் செய்யப்பட்டு விருதுகள் கிடைக்காமலும் போகலாம். சில நேரங்களில் கெட்ட ஆசிரியர்கள் கூட திட்டமிட்டு ஆவணங்களை தயார் செய்து நல்லாசிரியர் பட்டங்களை சூட்டிக் கொள்ளலாம். துய்சேன் போன்ற ஆசிரியர்களுக்கு, இதுபோன்ற இருட்டடிப்போ, துரோகங்களோ அவர்கள் கடமையாற்றுவதில் எந்தக் காயங்களையும் உருவாக்காது.

Tags: