மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (Sitaram Yechury) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (12.09.2024) காலமானார். அவருக்கு வயது 72. ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம்யெச்சூரி, 12.08.1952 இல் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தார்.
சீதாராம் யெச்சூரி ஓகஸ்ட் 19 ஆம் திகதி நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அண்மையில், அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்தது. அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று (12.09.2024) உயிரிழந்தார்.
யெச்சூரி உடல் தானம்: சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சி.பி.எம் (CPM) அரசியல் தலைமைக்குழு அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக் குழு தனது ஆழ்ந்த துயரத்தை தெரிவித்துக் கொள்கிறது. புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடுமையான நுரையீரல் நோய்த்தொற்றிற்கு எதிராக போராடிய அவர் காலமானார். அவருக்கு வயது 72.
சீதாராம் யெச்சூரி நமது கட்சியின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராகவும், இடதுசாரி இயக்கத்தின் சிறந்த தலைவராகவும், மக்கள் அறிந்த மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் இருந்தார்.
அவர் தனது இளங்கலை மற்றும் முதுகலை பொருளாதாரப் பட்டங்களில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர் ஆவார். 1974 இல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் இயக்கத்தில் சேர்ந்து, இந்திய மாணவர் சங்கத்தின் தலைவரானார். இரண்டு ஆண்டுகளுக்குள் மூன்று முறை ஜே.என்.யு (JNU) மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 முதல் 1986 வரை இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்து, மாணவர் சங்கத்தினை அகில இந்திய சக்தியாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
சீத்தாராம் யெச்சூரி 1975 ஆம் ஆண்டில் சி.பி.ஐ(எம்) கட்சியில் சேர்ந்தார். தனது அரசியல் செயல்பாடுகளுக்காக நெருக்கடி நிலையின் போது கைது செய்யப்பட்டார். 1985 இல் நடைபெற்ற 12 ஆவது கட்சி காங்கிரசில் கட்சியின் மத்திய குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, இறுதி வரை செயல்பட்டு வந்தார். 1989 இல் மத்திய செயற்குழுவிற்கும், 1992 இல் நடைபெற்ற கட்சியின் 14 ஆவது காங்கிரசில் அரசியல் தலைமைக் குழுவிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 இல் நடைபெற்ற 21 ஆவது கட்சி காங்கிரசில் சி.பி.ஐ(எம்) கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதி மூச்சு வரை அப்பதவியில் தொடர்ந்தார்.
கட்சி மையத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, கட்சியின் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக, கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை வகுப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தத்துவத் துறையில் சீத்தாராம் தனித்துவமான பங்கை வகித்தார். சோசலிசம் எதிர்கொண்ட பின்னடைவுகளைத் தொடர்ந்து, கட்சியின் கருத்தியல் நிலைப்பாடுகளை உருவாக்கிய 14 ஆவது காங்கிரசில் சில கருத்தியல் பிரச்சினைகள் குறித்த தீர்மானத்தை கட்சி ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை தோழர் சீத்தாராம் யெச்சூரி காங்கிரசில் சமர்ப்பித்தார். அதன் பிறகு, 2012 இல் நடைபெற்ற கட்சியின் 20 ஆவது கட்சி காங்கிரசில் ஏற்றுக்கொண்ட கருத்தியல் நிலைப்பாடுகளை புதுப்பித்த தீர்மானத்தை முன்மொழிந்த முக்கியமானவராக இருந்தார்.
மத்திய குழுவின் சர்வதேசத் துறையின் தலைவராக, கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு சக்திகளின் பல்வேறு சர்வதேச மன்றங்களில் பங்கேற்று, சோசலிச நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தினார் – ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களுடன் ஒருமைப்பாட்டை வளர்த்தார்.

இருபதாண்டுகளுக்கும் மேலாக கட்சியின் வார இதழான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ (Peoples Democracy) யின் ஆசிரியராக இருந்தார். அவர் ஒரு திறன் மிக்க எழுத்தாளர். தத்துவத் துறையில் அவரது மற்றொரு முக்கிய பங்களிப்பு இந்துத்துவா பற்றிய அவரது விமர்சனம் ஆகும், அவர் எழுதிய – ‘இந்து ராஷ்ட்ரா என்றால் என்ன?’ மற்றும் ‘வகுப்புவாதம் எதிர் மதச்சார்பின்மை’ ஆகிய புத்தகங்களில் அந்த விமர்சனங்கள் வெளிப்பட்டன.
2005 முதல் 2017 வரை இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். சி.பி.ஐ(எம்) குழுவின் தலைவராக பணியாற்றி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2017இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது பெற்றார். அண்மை காலத்தில், மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்த ஒற்றுமையை உருவாக்குவதற்கு சீத்தாராம் யெச்சூரி தனது நேரத்தையும் ஆற்றலையும் அர்ப்பணித்தார், இது இந்தியா பிளாக் வடிவத்தை எடுத்தது. ஐக்கிய முன்னணி அரசாங்கம் மற்றும் பின்னர் யு.பி.ஏ (UPA) அரசாங்கம் ஆகிய இரண்டு காலகட்டங்களிலும், இந்த கூட்டணிகளை ஆதரித்த வாதங்களை சி.பி.ஐ(எம்) சார்பில் முன்வைப்பவராக சீத்தாராம் இருந்தார்.
அவரது இனிமையான குணம் காரணமாக, அரசியலின் அனைத்து பிரிவுகளிலும் மற்றும் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவருக்கு பரந்த நண்பர்கள் வட்டம் இருந்தது. அவரது அரசியல் நேர்மை மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவராலும் மதிக்கப்பட்டார்.

நமது தேசிய அரசியலில் இந்த முக்கியமான தருணத்தில் சீத்தாராம் யெச்சூரியின் அகால மரணம் சிபிஐ(எம்) கட்சிக்கு ஒரு பேரிடியாகும். இடதுசாரி, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஒரு பெரும் இழப்பாகும்.
அரசியல் தலைமைக்குழு, நமது அன்புக்குரிய தோழருக்கு மரியாதை செலுத்துகிறது அவரது நினைவாக செங்கொடியை கொடியை அரை கம்பத்தில் ஏற்றுகிறது. சுரண்டலற்ற சமூகத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து, கடினமாக உழைக்கவும், ஒருங்கிணைந்து நிற்கவும் கட்சி அணிகளை அரசியல் தலைமைக்குழு அழைக்கிறது. இதுவே அவருக்கு செலுத்தக்கூடிய சிறந்த அஞ்சலியாகும்.
அரசியல் தலைமைக் குழுவின் சார்பில் அவரது இணையர் சீமா, மகள் அகிலா, மகன் டானிஷ், சகோதரர் சங்கர் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.’
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


