மாற்றமும் ஏற்றமும் தருமா இலங்கை ஜனாதிபதி தேர்தல்?

பேராசிரியர் எஸ்.இஸட்.ஜெயசிங்

லங்கையில் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (செப்ரெம்பர் 21) நடைபெற இருக்கிறது. 

நிதி நெருக்கடியில் சிக்கி நிமிர்ந்து நிற்கப் போராடி வரும் இலங்கைக்கு இது ஒரு சவாலான தேர்தல். அந்நியச் செலாவணி ஒட்டு மொத்தமாகக் காலியாகி விட்ட பின்னர் நடைபெறும் முதல் பெரிய தேர்தல் இதுவாகும். இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னரான 76 வருட கால  வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. 

நான்கு முனைப் போட்டி

22 தேர்தல் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ள இலங்கையில் 1 கோடி 71 இலட்சம் வாக்காளர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள னர். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்த லில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது  நடைபெற இருக்கும் தேர்தலில் 39 வேட்பாளர்களில் ஒருவர் காலமான நிலையில், 38 பேர் போட்டியாளர்களாக களத்தில் உள்ளனர். 42 ஆண்டு கால  ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில், அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தல் இதுவாகும். அத்துடன் பெண் வேட்பாளர்கள் இல்லாத  தேர்தலும் இதுவாகும். வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஜனநாயகத்தில் உள்ள நெருக்கடியை வெளிக்காட்டுகிறது என கூறப்படுகிறது.  இதுவரை இலங்கை ஜனாதிபதி தேர்தல் இருமுனைப் போட்டியாக இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது அது நான்கு முனைப் போட்டியாக மாற்றம் பெற்றிருப்பது அனைவரது  கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தற்போதைய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக இருந்து கொண்டு,  சுயேச்சையாகப் போட்டியிட, இக் கட்சியின் தலைவராக இருந்து விலகிய சஜித் பிரேமதாச,  ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். மேலும் இத்தேர்தலில் போட்டியிடுவதில்லை எனக் கூறி வந்த ராஜபக்சேவின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, இறுதிக் கட்டத்தில் இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ராஜபக்சேவின் மூத்த மகனான, நாமல் ராஜபக்சேவை, வேட்பாளராக அறிவித்துள்ளது. இம்மூவருக்கும் பெரும் சவாலாக ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை அமைத்து ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அனைவரது கவனமும் இவரை நோக்கி திரும்பி உள்ள நிலையில், வெற்றிக் கோட்டை எட்ட முடியாது எனத் தெரிந்தும் இன்னும் சில குறிப்பிடத்தக்க பிரமுகர்களும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் தமிழ் பேசும் சமூகத்தைப் பொறுத்த  வரையில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், இஸ்லாமியர் என மூன்று சமூகம் சார்ந்தும் வேட்பாளர்கள் போட்டியிட முன்வந்துள்ளனர். வட கிழக்கு தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சில அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் இணைந்து, தமிழரசுக் கட்சி ஆதரவாளராக இருக்கும்  மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் என்பவரை பொது வேட்பாளராக முன்னிறுத்தி உள்ளன. இதேபோன்று மலையகத்தில் இருந்து முன்னாள் நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர வேட்புமனு தாக்கல் செய்த இஸ்லாமியரான, முகமது இல்லியாஸ் காலமாகிவிட,  எஞ்சியவரான அபுபக்கர் முகமது இன்பாஸ், இஸ்லாமிய சமூகம் சார்ந்து சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். 

ரணில் விக்ரமசிங்க

38 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும்  ஒரு சிலர் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றனர். அவர்களில் தற்போது இடைக்கால ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்க,  தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய தேசியக் கட்சியை, ஒதுக்கி விட்டதுடன் மட்டுமல்லாமல், 40 வருடகாலம் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய யானை சின்னத்தையும் கைவிட்டு, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது கவனம் பெற்றுள்ளது. 1999 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த நிலையில், 19 வருடங்கள் கடந்து தற்போது போட்டியிட முன்வந்துள்ளார். அவரது ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பது இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அண்மைக் காலத்தில் மிக மோசமான வீழ்ச்சியை சந்தித்த பிரதான கட்சி என்றால், அது ஐக்கிய தேசியக் கட்சி ஆகும். ரணில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட போதும்  அவர் சுயேச்சை வேட்பாளர் அல்ல என்றும்,  அவர் பின்னால் பல கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் அவை அனைத்தும் மக்களால் நிராகரிக்கப்பட்ட பலவீனமான கட்சிகள் என்றும் கலாநிதி தயான் ஜயதிலக்க என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.  

2022 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, தான் அதிலிருந்து மக்களை மீட்டதாகக் கூறி ரணில், மக்கள் ஆதரவைக் கோருகிறார். இது ஒன்று மட்டும் அவரது வெற்றிக்கு வழி வகுத்து விடாது என்று கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இவரது ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்து, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்க தாகும். மேலும் இவர் தனக்கு எதிரான வாக்குகளைப் பிரிப்பதற்காக பல சிறிய கட்சிகளை பிளவுபடுத்தியிருப்பதாகவும், அவர்களில் சிலரை தனக்கு சாதகமான வேட்பாளர்களாக களம் இறக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரணில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் ஐக்கியதேசியக் கட்சி, ராஜபக்சே தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஒரு பகுதி,  மைத்திரிபால சிறிசேனவின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதி,  ஜீவன் தொண்டமான் தலைமையில் இயங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, வடக்கு கிழக்கில் சில தமிழ், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் என பலவிதமான ஆதரவை ரணில் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரணில் ஆட்சி அனுபவம் வாய்ந்தவராக உள்ள போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ரணில் விக்ரமசிங்க, 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியை ஓரளவு சமாளித்தவர் என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில் இருந்த போதும், அவரை மக்கள் முழுமையாக நம்பத் தயாராக இல்லை என அறியப்படுகிறது. இவர் பின்னாளில், ராஜபக்சேவுடன் இணைந்து கூட்டணி அமைக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று மக்கள் கூறுவதுடன், இவரின் பின்னால் ராஜபக்சே ஆட்சியில் ஊழல் புரிந்தவர்கள் சேர்ந்து இருப்பதையும் மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் வட இலங்கையில், சில தமிழ் கட்சிகளும், மலையகத்தில் பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஆதரவு தெரிவித்த போதும், இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழ் சிறுபான்மை நலன் சார்ந்து, இவர் அறிவிக்கும் அரசியல் வாக்கு றுதிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவும் உள்ளது. குறிப்பாக 13ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் கூறப்பட்ட அதிகாரம் தொடர்பாக ரணில் கூறி வரும் வாக்குறுதிகள், எந்தளவுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் என்று கூற முடியாது.

சஜித் பிரேமதாச

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ஒருவராக சஜித் பிரேமதாச உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் முதற் தடவையாக கோத்தபய ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு, 41.99% வாக்குகளுடன், இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1988 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச அவர்களின்  மகனான சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய பின், ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் போட்டி இடுகிறார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் பகுதியினர் பக்கபலமாக இருப்பதுடன், வட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன், சில தமிழ் அமைப்புக்களும் ஆதரிக்க முன்வந்துள்ளன. மேலும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியூதீன்  தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற இஸ்லாமிய சமூகம் சார்ந்த கட்சிகள் அவரை ஆதரிக்க முன் வந்துள்ளன. மலையகத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மலையகத் தமிழ் முற்போக்கு கூட்டணியும்,  ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்க முன் வந்துள்ளது.

இந்திய அழுத்தம்?

கடந்த கால ஆட்சியின் தவறுகளை குறிப்பிட்டு பிரச்சாரம் செய்து வரும் சஜித் பிரேமதாச, தனது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் பலரையும் இணைத்து வருகிறார். குறிப்பாக ராஜபக்சேவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் இருந்த பலரையும் இணைத்துக் கொண்டு,  “திருடர்களைகளை எடுப்பேன்” என சஜித் கூறுவது நகைப்புக்குரியது என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாளை தொடரும்

Tags:
One Comment