இலங்கையில் இன்று தேர்தல்!வெற்றிபெறப்போவது யார்?
-பேராசிரியர் எஸ்.இஸட்.ஜெயசிங்
நேற்றைய தொடர்ச்சி
இது பொருளாதார யதார்த்தங்களைப் புரிந்து கொள்ளாத நிலை எனவும் பார்க்கப்படுகிறது. இலங்கைத் தமிழ் மக்களில் இருந்து அறிவிக்கப்பட்ட பொது வேட்பாளரை முழுமையாக ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக் கட்சி, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கூறி இருப்பது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. இதன் பின்னணியில் இந்திய அழுத்தம் இருக்குமோ என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தமிழ் மக்களின் பெருவாரியான வாக்குகளை சஜித் பெற்றிருந்ததன் அடிப்படையில், இம்முறையும் அதனைப் பெறுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கும் சஜித், மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் என்றும், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும், வாக்குறுதி வழங்கி வருவதையும் காணலாம். பொதுவாக இவரது பிரச்சார முழக்கங்கள், பெரிய அளவில் சிங்கள மக்களைக் கவரவில்லை எனக் கூறப்படுகிறது. தாங்கள் வீழ்த்த விரும்பும் முதல் எதிரி யார் என்று இவர்களால் மக்களுக்கு தெளிவாக அடையாளம் காட்ட முடியவில்லை என்பது அவர்களது கட்சியின் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டு வரும் வாக்குறுதிகளும் கூட, நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்புடன் இணைந்து செல்வதாக இல்லை என்று கூறப்படுகிறது.
அனுர குமார திஸாநாயக்க
கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் 3.16 சத வீத வாக்குகளை மட்டுமே பெற்றிந்த, விளிம்பு நிலைக் கட்சியான ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி), அனுர குமார திஸாநாயக்க தலைமையில், ஒரு முதன்மைப் போட்டியாளராக இத்தேர்தலில் எழுச்சி அடைந்துள்ளது. “தேசிய மக்கள் சக்தி” என்ற பெயரில் களம் இறங்கியுள்ள அனுர குமார திஸாநாயக்கவின் பின்னால் மக்கள் அணி திரள்வதை உற்று நோக்கும் அரசியல் ஆய்வாளர்கள், இலங்கை ஜனாதிபதி தேர்தலானது இருமுனைப் போட்டியை நோக்கிச் செல்வதாக கூறுகின்றனர். சஜித் தலைமையிலான “ஐக்கிய மக்கள் சக்தி” க்கும் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான “தேசிய மக்கள் சக்தி” க்கும் இடையே தான் கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் கடந்த 76 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரு வலதுசாரிக் கட்சிகளுக்கு மாற்று தாங்களே என்ற முழக்கத்துடன், ஜே.வி.பி இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருப்பெற்று வருகிறது.
சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிச் சென்ற ரோகண விஜயவீர அவர்களால், 1965 இல் தொடங்கப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன எனும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மார்க்சிய, லெனினிய, பொதுவுடைமைக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கையாக பின்பற்றி வருவதாகக் கூறுகிறது. இவ்வமைப்பு தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில், ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைப் பெற முயன்று, அதில் கடும் உயிர் இழப்பையும், தோல்வியையும் சந்தித்த நிலையில், 1977 இல் மக்கள் பங்களிப்புடன் கூடிய ஜனநாயக தேர்தல் முறைக்கு மாறத் தொடங்கியது. இடதுசாரிக் கொள்கைகளை பின்பற்றுவதாகக் கூறும் ஜே.வி.பி கட்சியானது, 27 சிறு அமைப்புக்களை ஒருங்கிணைத்து, என்.பி.பி (National People’s Power -NPP) என்ற தேசிய மக்கள் இயக்கத்தை உருவாக்கிய நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக, அனுர குமார திஸாநாயக்க அவர்களை முன்னிறுத்தி மக்களை சந்தித்து வருகிறது.
கடந்த 76 வருட கால ஆட்சியானது, மக்கள் மத்தியில் ஒரு விதமான சலிப்புணர்வை ஏற்படுத்தி வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு, கோத்தபய ஆட்சியானது மக்களை கடுமையான அதிருப்திக்கு உள்ளாக்கியது. இதனால் கோத்தபயவிற்கு ஆதரவு வழங்கி வந்த படித்த, சிங்கள நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இலட்சக்கணக்கில் ஜே.வி.பி பக்கம் நகரத் தொடங்கினர். இது 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது வேகமெடுக்கத் தொடங்கியது. அதையொட்டி காலிமுகத் திடலில் நடைபெற்ற போராட்டத்திற்குப் (அரகலய) பின், அனுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவான அலை தடையின்றி வீசத் தொடங்கியது. எழுச்சி பெற்ற நகர்ப்புற, கிராமப்புற மத்திய தர வர்க்கம், உடனடியாக தற்போதைய நிலையில் மாற்றம் (system change) தேவை என்று கூற, அதனை இறுகப் பற்றிக் கொண்ட அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான என்.பி.பி (NPP) கூட்டணி “மாற்றம் ஒன்றே தீர்வு” என்ற முழக்கத்தை முன் நிறுத்தி வருகிறது. அத்துடன் ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில் பல புரட்சிகரமான திட்டங்களையும் முன் வைத்து வருவதைக் காண முடிகிறது.
இவ்வாறு மிக நிதானமாக மக்கள் ஆதரவை திரட்டி வரும் என்.பி.பி, உண்மையான மத்திய தர வர்க்கத்தின் முகத் தோற்றத்தை முன் வைப்பதில் வெற்றி கண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. மக்களின் எதிரி யார் என்பதை மக்களுக்கு தெளிவாக அடையாளம் காட்டியும் வருகிறது. இதனால் ஒரு முறை அனுர ஆளட்டும் என்ற மனநிலைக்கு பெருவாரியான மக்கள் வரத் தொடங்கிவிட்டனர் என்பதை கருத்துக் கணிப்புகள் உறுதிப்படுத்துவதாக அறியப்படுகிறது. இதனை அறிந்தே இந்திய அரசாங்கமும், அனுர குமார திஸாநாயக்க அவர்களை டெல்லிக்கு அழைத்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜே.வி.பி வெற்றி பெறும் பட்சத்தில் அது இலங்கை அரசியல் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக பதிவு செய்யப்படும்.
நாமல் ராஜபக்சே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் மகனான நாமல் ராஜபக்சே, மொட்டு கட்சி சார்பில், நான்காவது போட்டியாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் தோற்பது உறுதி என்ற போதும், ராஜபக்சே வகையறாக்களின் இருப்பை நிலை நிறுத்தவும், எதிர்கால அரசியலில் தொடர்ந்து பயணிக்கவும், ராஜபக்சேவின் விசுவாசிகளை தக்க வைத்துக் கொள்ளவும் என பல திட்டங்களுடன் இவர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.
சிறுபான்மைச் சமூக வேட்பாளர்கள்
வடகிழக்கு தமிழ் மக்கள் இத்தேர்தலில், பொது வேட்பாளர், தேசிய கட்சி ஆதரவு, தேர்தல் புறக்கணிப்பு என்ற மூன்று நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகளுடன், சில கட்சிகளின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவுடன் பொது வேட்பாளராக பா.அரியநேந்திரன் போட்டி இடுகிறார். இலங்கைத் தமிழர்களின் நீண்ட காலக் கோரிக்கைகள், கூட்டாட்சியின் அவசியம், அதிகார பரவலாக்கம், காணி அபகரிப்பு, வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிப்பு என பல்வேறு நிலைகளை சர்வதேச சமூகத்திற்கும், இலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகளுக்கும் உணர்த்துவதற்காகவே பொது வேட்பாளர் எனக் கூறி வருகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்ட திரு. சிவாஜிலிங்கம் வெறு மனே 0.09 % வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொது வேட்பாளர் விடயத்தில் இலங்கைத் தமிழர்கள் இடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழர் கூட்டமைப்பு கட்சிகள் இடையே இணக்கப்பாடும் ஏற்படவில்லை. பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி, அவசரத் தீர்மானத்துடன் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்க; குமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை காங்கிரஸ் மற்றும் முன்னாள் வட மாநில முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் தேர்தலை புறக்கணிக்கிறார்கள். ரணிலுக்கு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. இவ்வாறு இதுவரை இல்லாத அளவுக்கு தமிழர் கட்சிகள் தங்களின் பலவீனத்தை வெளிப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
மலையகத் தமிழர்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலான தொழிற் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், ரணில், சஜித் எனும் இருபெரும் வேட்பாளர்களை ஆதரிக்க முன் வந்துள்ளன. முன்னாள் நுவரெலியா நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் அவர்கள், சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். மறக்கடிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பல்வேறு அடிப்படைக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திற்கும், ஏனைய சமூகத்திற்கும் உணர்த்தும் வகையில் களம் காண்பதாகக் கூறி, அதனை முன்னெடுப்பதில் திலகராஜ் வேகம் காட்டி வருகிறார். இது போன்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதல் மலையகத் தமிழரான, சுப்ரமணியம் குணரத்தினம் வெறுமனே 0.06% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு பெரும் கட்சிகள், சஜித் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளன. எனினும் இம் மக்களிடையே இருக்கும் சிறிய கட்சிகள் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் ரணிலை ஆதரிக்கவும் முன்வந்துள்ளனர். அபுபக்கர் முகமது இன்பாஸ், சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவரது போட்டி தேசிய கட்சி வேட்பாளர்கள் இடையே எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.
தேர்தல் வாக்களிப்பு
இலங்கை ஜனாதிபதி தேர்தலானது, நேரடியாகத் தெரிவு செய்யும் பிற நாட்டு ஜனாதிபதி தேர்தலில் இல்லாத சில விசேட அம்சங்களைக் கொண்டு இருப்பதைக் காணலாம். ஒரு வாக்காளருக்கு மூன்று வாக்குகள் உண்டு. அது 1,2,3 என குறிப்பிடப்படுகிறது. ஒருவர் தனது வாக்கை முதல் விருப்பம், இரண்டாம் விருப்பம், மூன்றாம் விருப்பம் என மூன்று பேருக்கு வாக்களிக்கலாம். அதே வேளை ஒருவருக்கே மூன்று வாக்குகளையும் அளிக்க முடியாது. மூன்று வாக்குகளையும் கட்டாயம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயமும் கிடையாது. முதல் வாக்கை ஒருவருக்கு மட்டும் கூட அளிக்கலாம். இவ்வாறான முதற் கட்ட வாக்களிப்பில் 50% மேல் பெறுபவரே வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார். எவரும் 50% மேல் பெறாத பட்சத்தில், பதிவான 2 ஆம் 3 ஆம் நிலை விருப்ப வாக்குகள் கருத்தில் கொள்ளப்படும். முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். நீக்கப்பட்ட வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளில் பதிவான 2 ஆம், 3 ஆம் விருப்ப வாக்குகளில் இருந்து, இரண்டாம் கட்டப் போட்டியில் உள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு உரிய வாக்குகள் எண்ணப்பட்டு அவை முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இருவரும் சமமான வாக்குகள் பெறும் பட்சத்தில் திருவுளச்சீட்டு மூலம் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.
இதுவரை நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில், இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எண்ண வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் இம்முறை முதல் மூன்று வேட்பாளர்கள் இடையே கடுமையான போட்டி நிலவுவதால், இரண்டாம், மூன்றாம் வாக்குகளை எண்ணி வெற்றியாளரை அறி விக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. மறுபுறம் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில், ஒரு மௌன அலை இருப்பதாகவும், அதனடிப்படையில் குறிப்பிட்ட ஒருவர் 50 % மேல் வாக்குகளைப் பெறுவார் என்ற கருத்தும் நிலவுகிறது.
பொதுவான கருத்து
இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் முற்றிலும் வேறுபட்ட ஓர் இயல்பைக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 20 ஆண்டுகால வரலாற்றில், வெளிப்படையாக இனவாதம் பேசப்படாமல் நடத்தப்படும் தேர்தல் என்று இதனைக் கூறலாம். தமிழ் பிரிவினை வாதம், தமிழர் இனவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், தலைமறைவு இனவாதம் போன்றவை வெளிப்படையாகப் பேசப்படாமல் நடத்தப்படும் முதல் தேர்தல் இதுவென்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாமல் ராஜபக்சேவை தவிர மற்ற மூன்று பிரதான போட்டியாளர்கள் சிறு பான்மை நலன் பற்றியும் பேசி வருகின்றனர்.
இத் தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் வீழ்த்தப் படும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதன் மீது உருவாகும் ஆட்சி, முழுமையான இடதுசாரி ஆட்சியாக இருக்கும் என்றும் கூறுவதற்கில்லை.
தென் கிழக்கு ஆசியாவில் முக்கிய கேந்திர நிலையமாக இலங்கை இருப்பதால், பாதுகாப்பு என்ற போர்வையில் இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை கூர்ந்து கவனித்து வருகின்றன. தங்களுக்குச் சாதகமான அரசு அமைய வேண்டும் என்பதற்காக மறைமுகமாக இலங்கை அரசியல் கட்சிகளுக்கு, அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய பாதுகாப்பு தொடர்பான உயர் அதிகாரிகள், இலங்கையில் சில அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசி இருப்பதாகவும் அறியப்படுகிறது.
முன்னையது: மாற்றமும் ஏற்றமும் தருமா இலங்கை ஜனாதிபதி தேர்தல்?