கொலைகார நாடுகளுக்கு உதவும் மோடி!

-ச.அருணாச்சலம்

லக அரங்கில் இந்தியாவின் மதிப்பை எல்லாம் சீர்குலைக்கும் வண்ணம் வெளியுறவு கொள்கைகளில் வில்லங்கத்தை செய்கிறது பா.ஜ.க அரசு. பலஸ்தீன பேரழிவுகளை நிகழ்த்தும் இஸ்ரேலுக்கு 10,000 இந்திய இளைஞர்கள் அனுப்படுகிறார்கள். இஸ்ரேலில் அதானியின் தொழில் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தும் மரண வியாபாரியான மோடி;

சமீபத்தில் ஐ.நா.சபையில் உரையாற்றிய நரேந்திர மோடி தனது தலைமையில் இந்தியா பல்வேறு தளங்களில் முன்னேறியுள்ளது, இந்திய மக்கள் சுபிட்சமாகவும், சுகாதாரத்துடனும் வளருகிறார்கள் என மார் தட்டினார்.

அந்த செய்தி வந்த மறுநாளே வேலையற்ற இந்திய இளைஞர்கள் இஸ்ரேலில் சென்று வேலை பார்க்க நீண்ட வரிசையில் நிற்கின்றனர் என்ற தகவல் வருகிறது.

மோடி ஆட்சியில் இந்தியாவில், பாலும் தேனும் கரைபுரண்டு ஓடுகிறதென்றால், மரணத்தை எதிர் கொள்ளும் யுத்த களமான உக்ரைனில் ரஷ்ய படைகளோடு போராட, இந்திய இளைஞர்கள் சென்றதேன்?

இன்று மேற்காசியாவில் இரத்தக்களரியாக மாறியிருக்கும் இஸ்ரேலில் பணிபுரிய – எழுபது ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் பதறியடித்து கொண்டு வெளியேறும் சூழலில், அங்கு கட்டுமான பணிகளுக்காக இந்திய இளைஞர்கள் செல்வதேன்?

அந்த இளைஞர்கள் அபாயத்தை புரிந்து தான் அங்கு செல்கிறார்களா?

அல்லது மோடி அரசு அப்பாவி இந்திய இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி இஸ்ரேலுக்கு பலி கொடுக்கிறதா?

இனவாதத்தை அடிப்படையாக கொண்டு அநியாயத்தை கொள்கையாக வடித்தெடுத்து பலஸ்தீன நாட்டை ஆக்கிரமித்து அங்குள்ள பலஸ்தீன மக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, அவர்கள் மீது அறநெறிகளுக்கு புறம்பாக சர்வதேச போர்விதிகளுக்கு மாறாக கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

கடந்த ஒக்ரோபர் 7 இல் ஆரம்பித்த “காஸா” தாக்குதல் பதினோரு மாதங்களாக தொடர்கிறது.

20 இலட்சம் மக்கள் வீடு வாசல் இழந்து அகதிகளைவிட மோசமான நிலையில் குண்டுவீச்சுகளுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை சாவு எண்ணிக்கை 47,000 த்தை தாண்டி உள்ளது, இவர்களில் 90% பெண்களும், குழந்தைகளும் என்பது உலக மக்களின் மனசாட்சியையே உலுக்கி வருகிறது!

இன்று வரை போர் நிறுத்தத்திற்கோ, பேச்சுவார்த்தைக்கோ ஒத்துவராத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தலைமை இப்பொழுது சர்வதேச போர் விதிகளை மீறி, லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினரின் “பேஜர்” களையும் வாக்கி டாக்கிகளையும் ரிமோட் மூலம் வெடிக்க வைத்துள்ளது !

இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவம் விமானங்கள் மூலம் லெபனானில் குண்டுமழை பொழிந்தது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 500 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இதில் பெண்களும், குழந்தைகளும் அதிகம் பலியாகி உள்ளனர்.

காஸா பகுதியில் ஆரம்பித்த மோதல் இன்று வடக்கில் உள்ள லெபனான் வரை வளர்ந்து விரிந்ததற்கு இஸ்ரேல் அரசின் அடாவடி கொள்கைகளே காரணம் !

காஸாவில் வாழும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் கண்மூடி தாக்குதலை நடத்துவதை எதிர்க்கும் வகையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் வடக்கு எல்லை பிரதேசத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவினர். ஆனால், இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதல் கட்டுக்குள்ளாகவே இருந்தது, இஸ்ரேல், உலக நாடுகள் அனைத்தும் விரும்பியபடி ஹமாசுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டிருந்தால் ஹிஸ்புலாலாவின் ராக்கட் தாக்குதல் அப்பொழுதே நின்றிருக்கும்.

ஆனால், போர்நிறுத்தத்தை ஏற்காத இஸ்ரேல் அரசு -11 மாதங்களில் சுமார் 50,000 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் அரசு – மேற்காசிய பகுதியையே சுடுகாடாக மாற்றும் எண்ணத்துடன் தனது அடாவடி தாக்குதல்களை விரிவுபடுத்தியுள்ளது.

லெபனான் மீதும், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் அதிரடியாக தாக்கி அழித்தால் ஹிஸ்புல்லா அமைப்பினரை நிலைகுலையச் செய்து விடலாம் என இஸ்ரேல் தப்புக் கணக்கு போடுகிறது. 1978 இல் லெபனானின் மீது படையெடுத்த இஸ்ரேல் நான்காண்டுகள் போராடி இறுதியில் பலஸ்தீனப் போராளிகளை லித்தானிந்திக்கு வடக்கே விரட்ட முடியாமல் திரும்பி சென்றது.

பின்னர் 1982 முதல் 2000 வரை பதினெட்டு ஆண்டுகள் சண்டையிட்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை லெபனானிலிருந்து வெளியேற்றினர். ஆனால் ஹிஸ்புல்லா என்ற புதிய, வீரியமான அமைப்பு உருவானது கண்டு பின்வாங்கியது இஸ்ரேல் இராணுவம்.

2006 ஆம் ஆண்டு மீண்டும் லெபனான் மீது படையெடுத்த இஸ்ரேல் 30 நாட்கள் கடுமையாகச் சண்டையிட்ட பின் தெளிவான வெற்றி கிட்டாத்தால் பின் வாங்கியது.

இப்பொழுது வடக்கு இஸ்ரேலில் இருந்து வெளியேறிய இஸ்ரேலியர்களை மீண்டும் அந்தப்பகுதியில் பாதுகாப்பாக குடியேற்றுவது இஸ்ரேல் இராணுவத்தின் மூன்றாவது நோக்கமாக அறிவிக்கப்பட்டு, ஏவுகணைகள் வீசும் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் முடுக்கி விட்டுள்ளது. முதலிரண்டு நோக்கங்களான ஹமாஸை முற்றிலும் அழித்தொழிப்பது, அடுத்து இஸ்ரேலின் பணயக் கைதிகளை விடுவிப்பது ஆகியவை இன்னும் நிறைவேறிய பாடில்லை!

இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் நினைப்பது போல ஹிஸ்புல்லா அமைப்பினர் நிலைகுலையப் போவதில்லை, காயம்பட்ட புலிகளாக அவர்கள் வீறு கொண்டு எதிர்தாக்குதல் தொடுப்பர். மேற்காசியா இரத்தக்களரியாக மாறப் போகிறது என உலக நாடுகள் பதறியவாறு இஸ்ரேலை சபிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் இஸ்ரேல் ஆட்சியாளர்கள் தங்களது கட்டுமான பணிகளுக்கு வேறெங்குமிருந்தும் ஆட்கள் கிடைக்காததால் இந்தியாவிலுள்ள மோடி அரசின் “உதவி”யை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இஸ்ரேல் நாட்டிற்கு அதானி நிறுவனங்கள் மூலம் ட்ரோன்களை சப்ளை செய்தது, அதற்கு முன்னின்று உதவியது ஆகிய “சின்னத்தனங்களை” செய்த மோடி அரசு, உலக மக்களின் கண்டனத்தாலோ அல்லது தேர்தல் வந்ததாலோ சிறிது காலம் அடக்கி வாசித்தது .

தற்போது செப்டம்பர் 16 முதல் 25 வரை 10,000 கட்டுமான துறை திறனாளிகளை பணிக்கு அமர்த்த இஸ்ரேல் அரசு முயலுகிறது. இந்த நடவடிக்கை இந்திய மற்றும் இஸ்ரேல் அரசுகளுக்கிடையே நவம்பர் 2023 இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி (G2G Agreement) இஸ்ரேல் ஆள் எடுப்பதாக தெரிகிறது.

இஸ்ரேல் நாடு அந்நாட்டின் பூர்வீக குடிமக்களான பலஸ்தீனியர்களை அவர்களது தாய்நாட்டிலேயே அகதிகளாக விரட்டியடித்து, அவர் தம் இடங்களில் யூத இன மக்களை – அவர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் வந்தேறியவர்களாக இருந்தாலும் – குடியமர்த்துவது 1948 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையே குடியேறிகளின் ஆதிக்கம் (Settlers Colonialism) என்று ஐ நா கூறுகிறது . இதை எதிர்த்து போராடுவதற்கு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு “சகல உரிமைகளும்” உண்டு என்பதையும் ஐ நா அங்கீகரித்துள்ளது.

இப்படி பழிவாங்கப்பட்ட பலஸ்தீனியர்கள்தான் காஸா பகுதியிலும் மேற்கு கரையிலும் இஸ்ரேல் அரசின் இனவெறிச் செயல்களுக்கு இடையில் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். உரிமைகள் கேட்டு எழுந்தவர்களை அவர்கள் எந்த அமைப்பினரானாலும் ( பி.எல்.ஓ , பி.எஃப்.எல்.பி மற்றும் ஹமாஸ் ) அவர்களை “பயங்கரவாதிகளாக” இஸ்ரேல் முத்திரை குத்தி கொல்கிறது. இந்த ஈனச் செயலை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஆதரித்து – இஸ்ரேலின் அனைத்து அடாவடியான அத்துமீறல்களை இஸ்ரேலின் தற்காப்பு உரிமை என ஆதரித்து – அனைத்து உதவிகளையும் செய்கிறது. இதற்கு பின்னால் மேற்காசியாவின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க தங்களது ஏஜெண்டாக இஸ்ரேலை அப்பகுதியில் நிலைநாட்டும் முயற்சியும் ஒரு பிரதான காரணமாகும்.

ஆனால், பிரிட்டனின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியாவோ இஸ்ரேலை 1950 இல் அங்கீகரித்தாலும், முழுமையான தூதரக உறவுகள் 1992 இல்தான் ஏற்படுத்தப்பட்டன. பலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு இரண்டு தேச அரசுகள் பலஸ்தீனத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை இந்தியா முன்னிறுத்தியது.

பலஸ்தீன நாட்டின் அதிபராக பலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசிர் அராஃபத்தை இந்தியா அங்கீகரித்தது. அவர்களின் முயற்சிக்கு – இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை விலக்கி 1948 இல் இருந்த எல்லைகளுக்குள் இஸ்ரேல் நாடும் பிற பகுதிகளை உள்ளடக்கிய பலஸ்தீன அரசும் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்தது.

இந்த அங்கீகரிக்கப்பட்ட நிலையை இஸ்ரேல் அரசு தொடர்ந்து மீறி பலஸ்தீனர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து தாக்குதல்களை நீடித்தது, ஆக்கிரமிப்பை விரிவாக்கியது, பலஸ்தீன அரசையும் செல்லாக்காசாக்கியது. இரண்டு நாடுகள் என்ற பேச்சிற்கே இடமில்லை என்ற நிலையில் இப்பொழுது இருக்கிறது.

இதற்கு பலஸ்தீனர்களும் மேற்காசிய நாடுகளும் (எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், இரான் மற்றும் ஈராக்) கொடுத்த விலை மிக மிக அதிகம் .

இந்திய அரசின் நிலையில் சிற்சில ஊசலாட்டங்கள் வாஜ்பாய் காலத்தில் இருந்தாலும், உள்நாட்டு எதிர்ப்பால் அவை சரி செய்யப்பட்டன. ஆனால், 2014 இல் மோடி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பின்பு, பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தாங்கள் பேசிவரும் இந்து ராஷ்டிரம் போலவே, யூதர்களுக்கான நாடு இஸ்ரேல் என்ற அடிப்படையில் இஸ்ரேலின் அடாவடிகளின் அபிமானிகளாக வலம் வந்தனர். தாங்கள் தூக்கிபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கெதிரான போக்கை இஸ்ரேல் நடைமுறைபடுத்துவதில் சங்கிகளுக்கு பேரானந்தம். 2017 இல் மோடி இஸ்ரேல் பயணத்திற்கு பின்னர், இந்திய அரசின் கொள்கை “தடம் புரள” தொடங்கிற்று. இதற்கு பின்னரே, இஸ்ரேல் நாட்டுடன் இந்தியாவின் உறவு கேந்திர நிலைக்கு மேம்படுத்தப்பட்டது.

மோடியின் இஸ்ரேல் பயணமும் அவர் தீவிர வலது சாரியான பெஞ்சமின் நெத்தன்யாகு விடம் காட்டிய “நெருக்கமும்” யார் பக்கம் இந்தியா சாய்கிறது என்பதை உணர்த்தியது.

பாதுகாப்பு உறவுகள் என்ற பெயரில் , ‘பெகாசஸ் ‘ போன்ற உளவு சாதனங்களை இஸ்ரேலிடம் பெரும் பணம் கொடுத்து வாங்கிய மோடி அரசு அதன் மூலம் எதிர்கட்சி தலைவர்களை, பத்திரிகையாளர்களை, நீதிபதிகளை, அரசுக்கு இணங்காத வர்களை வேவு பார்க்க பயன்படுத்தியது.

மோடியும், ஊழல் பெருச்சாளியான நெத்தன்யாகுவும் இணைபிரியா நண்பர்களானார்கள். இஸ்ரேல் – இந்தியாவிற்கு இடையேயான இராணுவ கூட்டுறவு, மோடியின் நண்பரான அதானியின் கடல் கடந்த வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது எனலாம்.

மோடியின் அனுசரணையால் முந்த்ரா, ஹாஜிரா மற்றும் தாஹெஜ் துறைமுகங்களை அதானி வசப்படுத்தியதுடன், இஸ்ரேல் நாட்டின் முக்கிய துறைமுகமான் ஹைஃபா (Haifa) துறைமுகமும் அதானி வசம் ஜனவரி 2023 இல் வந்தது! ஹைஃபா துறைமுகம் அதானிக்காகவோ என்னவோ தனியார் மயமாக்கப்பட்டது, இதில் அதானியின் பங்குகள் 70% ஆகவும் மீதமுள்ள 30% பங்குகள் இஸ்ரேலைச் சார்ந்த ‘கடாட் குழுமம் ‘ (Gadot group) சேர்ந்து மொத்தம் 1.6 பில்லியன் டொலருக்கு அந்த துறைமுகத்தை விலை பேசி எடுத்துக்கொண்டனர். எல்லாம் மோடியின் மகிமை தான்!

மோடி – அதானியின் கைவண்ணம் இத்துடன் முடியவில்லை!

‘எல்பிட்’ (Elbit) என்ற மிகப்பெரிய இஸ்ரேல் நாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து அதானி ஆயுத தயாரிப்பிலும் இறங்கினார். ‘எல்பிட்’ நிறுவனத்துடன் இணைந்து ‘அதானி எல்பிட் அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிட்டெட்’ (Adani Elbit advanced systems India limited) என்ற நிறுவனத்தை ஹைதராபாத், இந்தியாவில் 2018 இல் தொடங்கினார்.

இதன் மூலம் ஹெர்மஸ்900 என்ற அதானி ‘எல்பிட் யுஏவி’ (Adani Elbit Unmanned Aerial Vehicles) என்ற ட்ரோன் விமானத்தை தயாரித்து இஸ்ரேலுக்கு அளிக்க ஓர்டர்கள் (இஸ்ரேல்) இராணுவத்திடம் பெற்றனர். ஏவுகணகளை ஏற்றிச்சென்று அவற்றை வீசும் ஆளில்லா இந்த விமானங்கள் (drones) மூலம் இறந்த பலஸ்தீனர்கள் 50000 இற்கும் அதிகம். அதில் 90% பெண்களும் குழந்தைகளும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் மற்றொரு ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனமான இஸ்ரேல் வெப்பன் இண்டஸ்ட்ரீஸ் (Israel Weapon Industries ) உடன் இணைந்தது அதானி குழுமம்.

தவார் துப்பாக்கி (Tavar Assault Rifle) X95 துப்பாக்கி, கலில் குறி பார்த்து சுடும் துப்பாக்கி நெகவ் லைட் மெஷீன் கன் , UZI சப் மெஷீன் கன் போன்றவைகளை இந்தியாவில் , மத்திய பிரதேசம் குவாலியரில் நிறுவப்பட்டுள்ள பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் (Precise Lethal and Reliable Systems) என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து இஸ்ரேல் இராணுவத்திற்கு சப்ளை செய்கின்றது. இந்நிறுவனத்தின் 52% பங்குகள் அதானி குழுமத்திற்கும் மீதி உள்ள 49% பங்குகள் இஸ்ரேல் வெப்பன் குழுமத்திற்கும் உரியது.

இந்த நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் , ஆளில்லா விமானங்களையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்துள்ளது பற்றி மோடி அரசு இதுவரை வாய்திறக்கவில்லை.

ஆனால், பெப்ரவரி 2024 இல் 20 இற்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் இஸ்ரேலை வந்தடைந்தன என்று ‘ஷெப்பர்டு மீடியா‘ என்ற செய்தி நிறுவனம் அடித்து கூறுகிறது.

அதானி குழும உயர்நிலை ஊழியர் ஒருவரும் இது உண்மை தான் என ‘தி வயர்’ என்ற ஆங்கில இணையதள இதழுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

மனித குலத்திற்கெதிரான குற்றமாக ‘இனப்படுகொலை’ (Genocide) கருதப்படுகிறது. இஸ்ரேல் நாடு இத்தகைய மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளது என்று சர்வதேச கிரிமினல் கோர்ட் (ICC) கூறியுள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்குப்பிறகு இஸ்ரேலிய எல்பிட் சிஸ்டத்துடன் இணைந்து ஆயுதங்கள் தயாரித்து வந்த ‘இட்டோசு’ (Itochu) என்ற ஜப்பானிய நிறுவனமும் , ‘குச்சேனு நகல்’ (Kuehne+Nagel) என்ற சுவிஸ் நிறுவனமும் இஸ்ரேலிய நிறுவனத்தடனான தங்களது அனைத்து உறவுகளையும் துண்டித்து கொண்டது!

ஆனால், அதானி குழுமம் மட்டும் தமது வணிக கூட்டை மேலும் ஆழப்படுத்தி கொலைகார ஆயுதங்களை இஸ்ரேலுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது!

இனப் படுகொலையில் ஆதாயம் தேடும் அதானி!

ஐ.நா சபையில் கடந்த டிசம்பரில் (December 2023) கொண்டுவரப்பட்ட ஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த தீர்மானத்தை ஆதரித்த இந்தியா ஏப்ரல் 2024 இல் கொண்டுவரப்பட்ட உடனடி போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய தடை கோரிய தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முன்வரவில்லை!

ஏன்? இஸ்ரேலுக்கு ஆயுதம் மற்றும் ஆளில்லா விமானம் ஏற்றுமதி செய்யும் அதானியின் லாபம் குறைந்துவிடும் என்பதாலா?

பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் அட்டூழியத்தை தடுக்க முன்வராத்தற்கான காரணம் இந்திய ஆட்சியாளர்களின், மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஸை சார்ந்த அனைத்து சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு உணர்வு மட்டுமல்ல, மோடியின் எஜமான் அதானியின் இலாபம் குறைந்துவிடக் கூடாது என்பதும் காரணம் தான்.

இதே போன்ற நிலைதான் அண்டை நாடான பங்களாதேச விவகாரத்திலும் (அதானி மின் பகிர்வு ஒப்பந்தம்) நடந்தேறியது. இன்று வங்க தேச மக்களே இந்தியாவை எதிரி நாடாக பாவிக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்று இலங்கையிலும் இந்திய ஆட்சியர் தூக்கி பிடிக்கும் அதானி மின் பகிர்வு ஒப்பந்தம் புதிய அதிபர் ஏ.கே.திஸ்ஸநாயகே மூலம் மறு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது

பொதுவாக ஒரு நாட்டின் அயலுறவுக் கொள்கை என்பது அந்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரநிலைகளின் நீட்சியே என்று கூறுவர்.

மோடி ஆட்சியில் கடந்த பத்து ஆண்டுகளில் அதானிக்கு அரசு அதீத சலுகைகள் வழங்குவதும், இயற்கை வளங்களை இஷ்டம் போல் அதானி கொள்ளையடிக்க விதிகளை திருத்துவதும், துறைமுகங்கள், விமான தளங்கள், சுரங்கங்கள் ஆகியவற்றை விதிகளை மீறி அதானிக்கு தாரை வார்ப்பதும் பிற நிறுவனங்களை விழுங்கி அதானி ஏகபோக நிறுவனமாக வளர துணைபோவதும் அதானி மீதான குற்றச்சாட்டுகளை எந்த விசாரணையும் செய்யாமல் காலந்தாழ்த்துவதும் விசாரணை அமைப்புகளில், கண்காணிப்பு ஆணையங்களில் நீதி துறையிலும் அதானியின் அன்பர்களை இட்டு நிரப்புவதும் நடந்து வருகிறது.

இதை இந்திய ஊடகங்கள் தவிர, உலக ஊடகங்கள் அனைத்தும் படம் பிடித்து விலாவாரியாக விமர்சிக்கின்றனர்.

இத்தகைய உள்நாட்டு பொருளாதாரக் கொள்கையின் நீட்சியே இந்திய நாட்டின் அயலுறவுக் கொள்கையிலும் முன்னிறுத்தப்படுகிறது என்பதில் யாருக்காவது ஐயமிருக்கிறதா?

அதிலும், உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை ஒரு கட்டுக்கடங்காத ரவுடி அரசாக பாவிக்கும் வேளையில், தறி கெட்ட இஸ்ரேலிய அரசின் செயல்கள் கேளவி கேட்கப்படாமல் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதற்கு அமெரிக்கா முழு முதற் காரணமாக இருக்கின்ற வேளையில், இதில் ஆதாயம் தேடும் விதமாக I2U2 (இந்தியா,இஸ்ரேல் , அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட கூட்டமைப்பு) மூலமாக அதானிக்கு உதவுவதே இந்திய அரசின் கொள்கையாக மாறியது. கடந்த செப்டம்பரில் ஜி20 மாநாட்டின்போது அமெரிக்கா சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகளுடன் இணைந்து இந்தியா போட்ட ரயில் மற்றும் சாலைவழி இணைப்பு திட்டம் (India -Middle East- Europe Economic Corridor or IMEC) இஸ்ரேல் வழியாக செல்ல திட்டமிட்டதிலும் அதானிக்கு முன்னுரிமை வழங்கியது மோடி அரசு!

மரணத்திலும் மனித குல அழிவிலும் லாபம் ஈட்டுவது அதானியின் தொழில்.

எங்கும் எதிலும் அதானி என்பது இன்னும் தெரியாதவர்கள் குருடர்களே!

அதானிக்காக அதானியால் நடத்தப்படும் மோடி ஆட்சியே இந்திய ஆட்சி என்பது மிகைப்பட்ட பேச்சல்ல …!

Tags: