காந்தியத்தின் முக்கியத்துவம் இன்று அதிகரித்துள்ளது!

-சம்பத்

காந்தி வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த உலகத்திற்கும், இன்றைய உலகத்திற்குமான நிதர்சனங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய தேவைக்கேற்ப காந்தி வியூகங்களை வகுத்தார். இன்றைய காலகட்டத்தை காந்தியப் பார்வையோடு நாம் பொருத்திப் பார்த்தால் பல தெளிவுகளை அது நமக்குத் தருகிறது;

வக்கீல் தொழில் நடத்தி தனது வாழ்க்கையை தொடங்க நினைத்து தென்னாபிரிக்கா சென்ற காந்தி ஏன் முற்றும் சம்பந்தமில்லாத பொது வாழ்வில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்டார்…? தன் வாழ்வு தன் வருமானம் குடும்பம் முன்னேற்றம் என்றுதானே ஒவ்வொரு சராசரி மனிதனும் நினைத்திருப்பான். இவர் சமகாலத்தில் வாழ்ந்த அனைவரும் அதைத்தானே செய்திருப்பார்கள். காந்தி மட்டும் தடம் மாறி போனது ஏன்? வெள்ளையர் ஆட்சியிலும் பணமும் பொருளும் சம்பாதித்து லௌகீக வாழ்க்கையை சிறப்பாக நடத்தி விட்டுச் சென்ற எத்தனையோ கோடி பேர் இருந்திருப்பார்கள். காந்தி மட்டும் ஏன் விதிவிலக்காய் சிந்தித்தார்? இந்த கேள்விக்கு அவரின் தென்னாபிரிக்க வாழ்க்கையை நோக்கினால் கிடைக்கும் சில சம்பவங்களே காரணங்கள் என தெரிய வரும்.

தென் ஆபிரிக்காவில் வக்கீலாக இருந்த காந்தி தன் நண்பர் போலக் குடும்பத்தினருடன்

# முதல் சம்பவம் அவர் ரயில் பயணத்தின் போது முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும் அவரை நிற வேற்றுமையின் காரணமாக கீழே தள்ளி இறக்கி விடப்பட்டது. அவரின் சுய கௌரவத்திற்கு  விடப்பட்ட சவால்.

# இரண்டாவதாக கறுப்புச் சட்டம் (Black Act) என்று சொல்லப்படுகிற Asiatic Registration Act. இது ஆசியர்களை சிறுமைப்படுத்தும் என்பதை உணர்ந்தார். Natal congress அமைக்க தூண்டப்பட்டார். இந்திய சுதந்திர போராட்ட மன நிலைக்கு இவை அவரை தயார் செய்தன என்பது வரலாற்றுச் சான்றுகள். அவரின் தொலைநோக்கு சிந்தனையை இன்றைய நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்த்தால் இன்னும் நன்கு விளங்கும்.

காந்தி வாழ்ந்த காலம் தான் தொழிற் புரட்சி கோலோச்சத் தொடங்கிய காலம். மேற்கத்திய நாடுகளில் உற்பத்தி வேகமெடுக்கத் தொடங்கிய காலம். பாய் மர கப்பல்கள் நீராவிக் கப்பல்களாகவும், நீராவி இயந்திரங்களாகவும் உருவெடுத்தன. பொருட்களின் போக்குவரத்து நாடு விட்டு கண்டம் விட்டு நகர்த்தும் விஞ்ஞானம் தலையெடுக்கத் தொடங்கிய காலம். தொழிற்புரட்சிக்கு முந்தைய காலம் வரை விவசாய சமூகமாய் இருந்த மக்கள் கூட்டம், அண்டை நாடுகளிடையே மட்டும் நடந்த போர்கள் இவை அனைத்தும் மாறத் தொடங்கின. போரின்றி வியாபாரம் மூலமும் உற்பத்தியை பெருக்குவதன் மூலமும் பிற நாடுகளின் மீதான ஆதிக்கத்தை கைப்பற்ற இயலும் என்ற யுக்தி குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு புரிய ஆரம்பித்த காலம்.

இயற்கை வளங்களை கைக்கொள்ள இயலும் என்ற புத்தி எண்ணங்களில் உதித்த காலம். மனித மனங்களின் பரிணாம வளர்ச்சியின் புதுப் பரிமாணத்திற்கான காலம். தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, இந்தியா உட்பட்ட ஆசியா கண்டங்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார கைப்பிடிக்குள் வந்தன. பின் அரசியல் அதிகாரங்களும் வெள்ளையர்களின் கைக்கு சென்றன. இது ஒரு புதுமையான ஏகாதிபத்தியத்திற்கான வழிமுறை. தேவைப்பட்டாலொழிய போரைக் கைக்கொள்ளவதில்லை.

உற்று கவனித்தால் முதல் இரண்டு உலகப் போர்களுமே இரண்டு ஐரோப்பிய வியாபார அணிகளுக்கிடையே நடந்தவை. பின் தங்கிய நாடுகள் ஏழை நாடுகள் வளரும் நாடுகள் அனைத்தும் இவ்விரு உலக யுத்தங்களிலும் பகடைக்காய்கள் மட்டுமே.

யுத்தங்களுக்கான ஏகாதிபத்தியத்திற்கான அடிநாதமான வியாபாரம் மற்றும் வளம் சூறையாடப்படல் இவை அனைத்தும் பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்தவை மட்டும்தானா அல்லது முழுமையாக வழக்கொழிந்து விட்டனவா? தொழிற்புரட்சிக்குப் பின் தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியை இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கூடுதலாக செயற்கை நுண்ணறிவின் தாக்கம் முழு வீச்சுடன் வருவதை நம்மால் உணர முடிகிறது. மின் பணபரிவர்த்தனை, தொலை தொடர்பு வளர்ச்சி, கணணி வளர்ச்சி இன்று உலகை சிறு கிராமங்களாக மாற்றி விட்டன. இன்று பௌதிக யுத்தங்கள் தேவையற்றதாக ஆகிக்கொண்டிருக்கின்றன. நாடுகளின் எல்லைகள் மறைந்து மெல்ல மெல்ல வெகு சில உலக செல்வந்தர்களின் பிடியில் உலகம் அனைத்தும் செல்வது போன்ற தோற்றம் தெரிகிறதல்லவா?

தகவல் சாதனங்கள் அனைத்தும் அவ்வெகு சிலர் கையில். முன்பு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் செய்த வேலை இன்று வீட்டிலிருந்தபடியே இரண்டு, மூன்று மணி நேரத்தில் முடிந்து விடுகின்றன. நம் இளைய தலைமுறையின் முன்பு இருக்கும் மாபெரும் சவால் அவர்கள் underemployed ஆக இருப்பது. இன்னொரு புறம் குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் பெரும் இளைஞர் கூட்டம் வேலையின்றி இருப்பது.

நாம் சுயராஜ்ஜியம் அடைந்த காலத்தில் இந்தியா உட்பட உலகில் இத்தனை மாற்றங்கள் சமூக பொருளாதார அரசியல் தளங்களில் ஏற்படும் என யாரும் எதிர்பார்த்திருப்பார்களா? காந்தி அக் கோணத்தில் சிந்தித்திருப்பார் என நினைக்கிறேன். அரசியல் தலங்களில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் கை ஓங்கி வருவதைப் பார்க்க முடிகிறது. இது காந்தியின் சர்வ சமய கோட்பாடுகளுக்கு முற்றிலும் முரணானது.

உலகமயமாக்கலின் பிள்ளைகளான நுகர்வுக் கலாச்சாரம், அதன் விளைவாக காலநிலை மாற்றம், அறமற்ற வணிகம் இவை காந்திய கொள்கைகளுக்கு, எளிமையான வாழ்க்கைக்கு எதிரானது. அண்மையில் நடந்து வரும் ரஷ்ய – உக்ரைன் போர், இஸ்ரேல் – பலஸ்தீன எழுபது ஆண்டுகளாக தொடரும் போர் காந்தியின் அஹிம்சை, சத்தியாகிரகம் போன்ற சாத்வீக கொள்கைக்கு ஒவ்வாதனவாகும். இரண்டு உலக யுத்தங்களுக்கு பின்பான உலகம் அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை கண்டிருந்தாலும் மனிதர்களின் தனி வாழ்வில், சமூக அளவில் கடுமையான மோதல் போக்கை பார்க்கிறோம்.

காந்திய சித்தாந்தத்தின் முக்கியத்துவம் இன்றைய தேவையாய் இருப்பது தெளிவு. எதிர் வரும் தலைமுறைகளுக்கு காந்தியத்தின் காந்திய தத்துவத்தின் தேவைகளை எடுத்துச்செல்வது இன்றைய காலத்தின் கட்டாயம். மானுடத்திற்கு வேறு உய்வில்லை.

(மகாத்மா காந்தி ஒக்ரோபர் 2, 1869 ஆம் ஆண்டு பிறந்தார்)

Tags: