வங்காளதேசம்: நவதாராளமயத்தின் தோல்வி

பிரபாத் பட்நாயக்

ங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பற்றிய பெரும்பாலான ஆய்வுகள் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அதிகாரத்துவம் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை மையமாகக் கொண்டுள்ளன. அந்நாட்டின் “பொருளாதார” நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, அவை முற்றிலும் கவனிக்கத் தவறிவிட்டன; அல்லது பொதுவாக குறைத்து மதிப்பிட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை பொருளாதார “அதிசயம்” என்று புகழப்பட்ட ஒரு நாடு, இப்போது பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்தை திடீரென மோசமாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த மோசமான நிலைமைதான் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைவதற்கு அடிப்படையாக அமைந்தது. அரசாங்கம் இதற்குப் பொறுப்பாக்கப்பட்டது, மேலும் அதற்கு எதிரான அடக்கி வைக்கப்பட்ட கோபம் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களாக வெளிப்பட்டது.

2021 வரை வங்காளதேசம் நவதாராளவாத சூழலில் ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியின் வெற்றிக் கதையாகக் கருதப்பட்டது. அதன் ஏற்றுமதியில் சுமார் 80 சதவீதம் ஆடைகள் ஆகும். மேலும் அதன் ஆடை ஏற்றுமதியின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததால், மிக குறுகிய காலத்திற்குள் வங்காளதேசம் உலகின் ஆடைத் தேவையில் 10 சதவீதம் வரை பூர்த்தி செய்யும் என்றும் கூறப்பட்டது. வங்காளதேசம் “மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததற்காக” பிரெட்டன் வுட்ஸ் நிறுவனங்கள் பாராட்டி வந்தன. 2024 ஏப்ரல் 2 அன்று கூட, 2024-25 நிதியாண்டில் வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.6 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி அறிக்கை கணித்திருந்தது. இது எந்த அளவுகோலின்படியும் மதிப்பிடத்தக்க எண்ணிக்கையாகும்.

தொடர்ச்சியான தேக்கநிலை

கொரோனா நோய்த்தொற்று காலத்தில்தான் வங்காளதேசத்தின் பொருளாதாரத்தில், குறிப்பாக ஆடை ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது. இது தற்காலிகமானதாக இருக்கும் என்று கருதப்பட்டது (இதனால்தான் 2024-25 இற்கான உலக வங்கியின் நம்பிக்கையான முன்னறிவிப்பு), ஆனால், இது நீண்ட காலம் நீடிப்பதாக மாறியுள்ளது. உலகப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான தேக்க நிலையைக் கருத்தில் கொண்டால் இது ஆச்சரியப்படுவதற்கில்லை. அதே சமயம், அந்நாட்டின் மற்றொரு முக்கிய அந்நியச் செலாவணி ஆதாரமான வெளிநாடு வாழ் வங்காளதேசியர்களின் பணம் அனுப்புதலும் பாதிக்கப்பட்டது நிச்சயமாக இதே காரணத்திற்காகத்தான். மேலும் வங்காளதேசம் மின்சாரம் உற்பத்தி உட்பட இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருளை நம்பியிருப்பதால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் விலை உயர்வு, கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறைக்கு வழிவகுத்து, நீண்ட மின்வெட்டுக்கும் காரணமாகியுள்ளது. மேலும், மின்சாரத்தின் விலை உயர்வையும் ஏற்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் செலவு அதிகரிப்பு விளைவை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கம் ஓகஸ்டில் 9.52 சதவீதமாக உயர்ந்தது, இது ஒரு தசாப்தத்தில் மிக உயர்ந்த அளவாகும். ஆனால், இன்னும் பலரால் குறைவாக மதிப்பிடப்படுகிறது என்று கருதப்படுகிறது. இதற்கு மேலும் இரண்டு காரணிகள் பங்களித்துள்ளன. முதலாவது, டொலருக்கு எதிரான மாற்று விகிதத்தில் ஏற்பட்ட மதிப்பிறக்கம். இது அமெரிக்காவின் பணவீக்க எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, வட்டி விகித உயர்வு காரணமாக டொலர் வலுப்பெற்றதன் விளைவாகவும், வங்காளதேசம் தனது சொந்தக் கணக்கில் எதிர்கொள்ளும் அந்நியச் செலாவணிப் பிரச்சினைகளின் விளைவாகவும் உள்ளது. இரண்டாவது, பொருளாதாரம் மந்தமடைவதால், நவதாராளவாத சூழலில் அரசாங்கம் கட்டாயப்படுத்த வேண்டிய, வளர்ந்து வரும் சிக்கன நடவடிக்கை ஆகும்; இது பணவீக்கத்தின் விளைவுகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முயற்சிப்பதைத் தடுக்கிறது, ஏனெனில், அத்தகைய அனைத்து முயற்சிகளும் மானியப் பட்டியலில் அதிகரிப்பை வேண்டுகின்றன.

ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல் வளர்ச்சி மந்தமடைவதும், அதன் பெருக்க விளைவுகளும், தற்போது வங்காளதேசத்தை பாதிக்கும் வளர்ந்து வரும் வேலையின்மைக்குக் காரணமாக இருந்தால், எண்ணெயின் உலக விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பிறக்கம் ஆகியவற்றின் செலவு அதிகரிப்பு விளைவு, அது ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் பணவீக்க முடுக்கத்திற்குக் காரணமாக உள்ளது. பணவீக்கத்தை எதிர்கொள்ளும் தொழிலாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வழியாக குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதும் நவதாராளவாத சூழலில் கேள்விக்குரியதாகவே உள்ளது. ஏனெனில், அது தற்போதுள்ள ஏற்றுமதி சந்தைகளைத் தக்கவைத்துக் கொள்வதை மேலும் கடினமாக்கும். மேலும், குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஏற்றுமதியை பாதிக்காமல் இருப்பதற்காக, மேலும் அந்நியச் செலாவணி மதிப்பிறக்கம் ஏற்பட்டால், அது எரிபொருளின் இறக்குமதி விலையை மேலும் உயர்த்தி, மேலும் அனைத்து துறைகளிலும் பணவீக்க அழுத்தத்தை ஏற்படுத்தி, பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும்.

பொருளாதார நெருக்கடி

இந்நிலையில் வங்காளதேசம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச கடன் வழங்குநர்களை கடனுக்காக அணுகியது, ஆனால் அது பெற்ற கடன்கள் கடன் சேவை சுமையைச் சேர்த்து செலுத்துநிலை இன்னும் மோசமாக்கியது. மேலும் அரசாங்கத்திற்கு இருந்த சிறிதளவு சுதந்திரமும் சர்வதேச நாணய நிதியம் அதன் கொள்கைகளை கண்காணித்ததால் இழக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, சர்வதேச நாணய நிதியம் திணித்த “சிக்கன நடவடிக்கைகள்” வேலையின்மை நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ஷேக் ஹசீனாவின் ஆட்சியை தகர்ப்பதிலும், அரசியல் மாற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதிலும், பொருளாதார நெருக்கடியின் முக்கியத்துவத்தை உணர்பவர்கள் கூட, இந்த மோசமடைந்த பொருளாதார சூழலுக்கு அவரது ஆட்சி காட்டிய பரவலான “நெருங்கிய நட்புவாதம்” தான் பெரும்பாலும் காரணம் என்று கூறுகின்றனர். அதேபோல், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு “இடஒதுக்கீடு” கொள்கைக்கு எதிரான எதிர்ப்பு, பொதுவாக ஆட்சியின் “நெருங்கிய நட்புவாதத்திற்கு” எதிரான விரோதமாக விளக்கப்படுகிறது. ஆனால் இந்த முழு சிந்தனை போக்கும் உண்மையான பிரச்சினையைத் தவிர்க்கிறது. வங்காளதேசத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மை நெருக்கடியின் அளவு காரணமாகவே “இடஒதுக்கீட்டிற்கு” எதிரான எதிர்ப்பு இவ்வளவு தீவிரமாக வெளிப்பட்டது; மேலும், பொருளாதார நெருக்கடி நவதாராளவாத சூழலில் ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சி என்ற உத்தியிலேயே வேரூன்றியிருந்தது. சுருக்கமாக கூறினால், பொருளாதார நெருக்கடியின் வேரில் “நெருங்கிய நட்புவாதம்” அதுவாகவே அல்ல, மாறாக அந்த உத்தியே காரணமாக உள்ளது.

இந்த உத்தி சில காலத்திற்கு நாடகத்தன்மை வாய்ந்த வெற்றிகரமான முடிவுகளைத் தந்தபோதும், ஏற்றுமதிச் செயல்திறனைப் பாதிக்கும் உலகப் பொருளாதாரத்தின் எந்தவொரு மந்தநிலையும், அல்லது வெளிப்புற முன்னணியில் ஏற்படும் வேறு எந்தவொரு பாதகமான வளர்ச்சியும், பொருளாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுகிறது. இது அதன் வெற்றிகரமான காலகட்டத்தின் பெரும்பாலான சாதனைகளைத் தலைகீழாக்குகிறது. உண்மையில், வங்காளதேச வளர்ச்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான பாடங்கள்: முதலாவதாக, ஒரு மூன்றாம் உலக நாடு “வெற்றிகரமான” நிலையிலிருந்து “தோல்வியடைந்த” நிலைக்கு எவ்வளவு திடீரென்று மாறக்கூடும் என்பது; இரண்டாவதாக, சிக்கல்களின் திரட்சி, அல்லது நாடு ஆரம்பத்தில் ஏதேனும் ஒரு முனையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல்வேறு பிற முனைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற உண்மை.

முக்கியமான புள்ளியைத் தவறவிடுதல்

சிலர் கூறுவது என்னவென்றால், வங்காளதேசத்தின் பிரச்சினை அது தனது அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்ததில் உள்ளது; அதாவது பல்வேறு வகையான ஏற்றுமதிகளைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, கிட்டத்தட்ட முழுவதுமாக ஆடை ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருந்தது என்பதில் உள்ளது; மற்றவர்கள், வங்காளதேசம், தனது ஆடை ஏற்றுமதியில் அடைந்த வெற்றியைப் பயன்படுத்தி, உள்நாட்டுச் சந்தைக்கு ஏற்ற பல்வேறு தொழில்களை உருவாக்குவதன் மூலம் தனது பொருளாதாரத்தை பன்முகப்படுத்தியிருக்க வேண்டும் என்று பரிந்துரைப்பர். இருப்பினும், இந்த விமர்சனங்கள் முக்கியமான ஒரு புள்ளியைத் தவறவிடுகின்றன: நவதாராளவாதப் பொருளாதாரத்தில் அரசுக்கு தலையிடும்திறன் இல்லை; உள்நாட்டுச் சந்தைக்கு ஓரளவு பாதுகாப்பு இல்லாமல், உள்நாட்டுத் தொழில்மயமாக்கலை அது ஊக்குவிக்க முடியாது. ஆனால் அத்தகைய எந்தவொரு பாதுகாப்பும், ஏற்றுமதியை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்கும் சர்வதேச மூலதனத்தால் கண்டிக்கப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தையில், எந்த குறிப்பிட்ட ஏற்றுமதிகள் வெற்றி பெறும் என்பது நாட்டின் அரசால் அல்ல; சர்வதேச மூலதனத்தால் தீர்மானிக்கப்படும் விஷயமாகும். எனவே, நவதாராளவாதத்தின் கீழ் ஏற்றுமதி தலைமையிலான வளர்ச்சியின் இடர்பாடுகளுக்கு அரசைக் குற்றம் சாட்டுவது முற்றிலும் நியாயமற்றது.

நவதாராளவாதத்தால் மக்கள் மீது விதிக்கப்படும் துன்பங்கள்

முகமது யூனுஸ் மற்றும் மாணவர்களின் நோக்கங்கள் எப்படி இருந்தாலும், நடைபெறவுள்ள தேர்தல்களில் அவாமி லீக் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்றால், வலதுசாரி கட்சிகள் அரசியல் குழப்பத்தின் முக்கிய பயனாளிகளாக உருவெடுப்பார்கள்; ஏகாதிபத்தியம் மற்றும் உள்நாட்டு கோர்ப்பரேட் சிறுகுழுவிற்கு மகிழ்ச்சியைத் தர வங்காளதேசம் வலதுசாரி பாதையை நோக்கித் தள்ளப்படும். இது உண்மையில் உலகம் முழுவதும் உருவாகி வரும் புதிய சூழ்நிலையை விளக்குகிறது. உலக முதலாளித்துவ நெருக்கடியின் காரணமாக, நவதாராளவாத கொள்கைகளைப் பின்பற்றும் பல மூன்றாம் உலக நாடுகள், பொருளாதார தேக்கநிலை, கடுமையான வேலையின்மை மற்றும் வெளிநாட்டுக் கடன் அதிகரிப்பு ஆகியவற்றினை நோக்கித் தள்ளப்படுகின்றன. இவை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரளவு சுயாட்சியை பராமரிக்கும் நிலவும் மத்தியதர ஆட்சிகளை மக்களிடையே பிரபலமற்றதாக்கும். ஆனால், இது ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும் வலதுசாரி ஆட்சிகள் இந்த நடுநிலை ஆட்சிகளை கவிழ்த்து ஆட்சிக்கு வர வழிவகுக்கிறது. இந்தப் புதிய ஆட்சிகள் அவை மாற்றியமைக்கும் ஆட்சிகளை விட குறைந்த அதிகாரத்துவமானவை அல்ல; ஆனால், நவதாராளவாதத்தைப் பின்பற்றி, ஏகாதிபத்திய கொள்கைகளைப் பின்பற்றும் அதே வேளையில், மக்களின் கவனத்தை மதவாதம் மூலமோ அல்லது ஏதோ ஒரு நலிவடைந்த சிறுபான்மை குழுவை “மற்றவர்களாக” சித்தரித்தோ திசைதிருப்புவார்கள். இது ஏகாதிபத்தியத்தின் “சுற்றிவிட்ட நாணயத்தில் தலை விழுந்தால் எனக்கு வெற்றி, பூ விழுந்தால் உனக்கு தோல்வி” என்ற தந்திரோபாயத்தை குறிக்கிறது, இது நவதாராளவாத நெருக்கடியால் மக்கள் மீது விதிக்கப்படும் துன்பங்கள் நவதாராளவாதத்தை மீறி செல்வதற்கு பதிலாக, வலதுசாரி அல்லது நவ-பாசிச ஆட்சியின் கீழ் அதன் வலுப்படுத்துதலுக்கு வழிவகுக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இவ்வாறு, நவதாராளவாதத்தின் ஒடுக்குமுறை தெளிவாக தெரிந்தாலும் கூட, அதன் குட்டிப்பேயை தூக்கி எறிவது கடினமாக உள்ளது.

நவதாராளவாதத்தை கடந்து செல்வதற்கு, மாற்றுப் பொருளாதார உத்தியைச் சுற்றி மக்களை அணிதிரட்டுவது தேவை. இந்த உத்தி, அரசுக்கு அதிக பங்கை வழங்குவதுடன், உள்நாட்டு சந்தையை மையமாகக் கொண்டு, கனிம மற்றும் பிற இயற்கை வளங்கள் மீதான “தேசிய” கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துகிறது. வங்காளதேசம் ஒரு சிறிய நாடு அல்ல; அதை நவதாராளவாத ஆட்சியின் கீழ் ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி உத்தியைப் பின்பற்றுமாறு அழுத்தம் கொடுக்க முடியும்; 17 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டை எந்த வகையிலும் “சிறியது” என்று அழைக்க முடியாது. நிச்சயமாக, உள்நாட்டு சந்தை அடிப்படையிலான வளர்ச்சி உத்தியைப் பின்பற்றுவது எளிதானதல்ல; ஆனால், உலக முதலாளித்துவ நெருக்கடியின் விளைவுகளை இப்போது எதிர்கொண்டுள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு வேறு மாற்று இல்லை.

மூலம்: The Transient “Miracles”

Tags: