மோடியின் கள்ள மௌனம் இனப்படுகொலைக்கு ஆதரவு தானே!

-பி.தட்சிணாமூர்த்தி

பெரும்பாலான நாடுகளால் வெறுக்கப்படும் நாடாக இஸ்ரேல் இன்று மாறி உள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரக்கமற்ற போர்க் குற்றவாளியாக மாறியுள்ளார். ஒக்ரோபர் 2023 இலிருந்து இதுவரை சுமார் 43 ஆயிரம் பலஸ்தீன மக்களையும் பச்சிளம் குழந்தைகளையும் நெதன்யாகு கொன்று குவித்துள்ளார். இலட்சக்கணக்கான மக்கள் நிரந்தர ஊனமுற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். இலட்சோப இலட்சம் பலஸ்தீன மக்கள் தங்கள் சொந்த பூமியிலிருந்து  துரத்தப்பட்டு விட்டனர். இப்போது லெபனானின் நகரங்களில்  ஆயிரக்கணக்கான  மக்கள்  இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர்.  

அமெரிக்காவின் உதவி

வியட்நாமில் 1974 முடிய  அமெரிக்கா  ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது.  இந்த போரில் சராசரியாக  5  இலட்சம் அப்பாவி குடிமக்களின் உயிரை அமெரிக்கா பறித்தது. இராக்கில் அமெரிக்கா தனது நேட்டோ  கூட்டாளிகளுடன் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தி ஒன்றரை இலட்சம் இராக்கிய மக்களைக் கொன்றது. இலட்சக் கணக்கான இராக் மக்களை நிரந்தர ஊனமாக்கியது. இந்த அமெரிக்காதான் இப்போது இஸ்ரேலுக்கு ஏராளமான ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இஸ்ரேலின் ஆயுத இறக்குமதியில் 69 சத வீதத்தை அமெரிக்கா அளித்துள்ளது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அமெரிக்காவிலிருந்து ஆயுத இறக்குமதியைத்தான் நம்பியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படையில் தற்போது செயலில் உள்ள அனைத்து போர் விமானங்களும் இஸ்ரேலிய பயன்பாட்டிற்கான சிறப்பு  மாற்றங்களுடன் அமெரிக்காவால்  வழங்கப்பட்டுள்ளவை.

பில்லியன் மடங்குகள் டொலர் நிதி மதிப்புள்ள இராணுவ உதவிகளுக்கு அப்பால், அமெரிக்கா அரசியல் ஆதரவையும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலில் மார்ச் 2024 வரை அமெரிக்கா 85 முறை தனது  வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்ளது. இதில் பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக  மட்டும் 47 முறை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. இதில் இருந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் 21ஆம் நூற்றாண்டின் உலக நீதிக்கும்  மனித நெறிகளுக்கும் எதிரானவை என்பதை புரிந்து கொள்ள முடியும். 

மத இன வெறியர்களின் கூடாரம்

யூத இனவெறி அரசியல் கட்சியான நோம்,  நேதன்யாகுவின் கட்சியான லிகுட் போன்ற எட்டு தீவிர வலதுசாரி பழமைவாத இயக்கங்களைச் சேர்ந்த  நபர்கள்தான் பெஞ்சமின் நெதன்யாகு அமைச்சரவையில் இப்போது உள்ளனர்.  இவர்கள் அனைவரும் பலஸ்தீனத்தில் யூத இன மற்றும் யூத மதத்தின் ஆட்சியுடன் கூடிய அகண்ட இஸ்ரேலை நிறுவுவதை கொள்கையாக கொண்டவர்கள். 2022 நவம்பரில் நடந்து முடிந்த இஸ்ரேல் தேர்தலின் மூலம் வரலாறு காணாத வலுவான சக்தியாக இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

மொசாத் – சி.ஐ.ஏ நாச வேலைகள்

இந்த மனிதகுல விரோதக் கும்பல், ஆட்சிக்கு வந்த 22 மாதங்களில் இஸ்ரேலின் ‘மொசாத்’ உளவு ஏஜென்சி  தனது  பயங்கரவாத உளவு வேலைகளை பன்மடங்காக்கி இருக்கிறது. இஸ்ரேலின் மொசாத் மற்றும் அமெரிக்காவின் கொடிய உளவு அமைப்பான சி.ஐ.ஏ, இவ்விரு அமைப்புகளும் கூர்மையான பயங்கரவாத சதி வேலைகளில் இரக்கமற்ற தன்மையை கொண்டவை. மொசாத் மற்றும் சி.ஐ.ஏ ஏஜென்சிகளின் உளவாளிகள் வளைகுடா நாடுகள் முழுவதிலும்  பரவியுள்ளனர்.  சில நாடுகளின் எல்லையோரப் பகுதிகளில்  இரட்டை (இரண்டு நாடுகள்  அல்லது இரண்டு அமைப்புகளின்) ஏஜெண்டுகளையும் இவர்கள் நியமித்துள்ளனர். குறிப்பாக காஸா, கான்யூனிஸ்ட், ஜபலியா, ஹிப்ரோன் போன்ற பெரிய பலஸ்தீன நகரங்களிலும் பெய்ரூட் மற்றும் இதர லெபனான் நகரங்களிலும், டெஹ்ரான் உள்பட ஈரான் நகரங்களிலும் இவர்கள் அந்தந்த  மக்களுடன் கலந்துள்ளனர். லெபனான், பலஸ்தீன, ஈரான், ஹிஸ்புல்லா தலைவர்களின் இருப்பு மற்றும் நடமாட்டத்தைக் கண்டறிந்து மொசாத்  மற்றும் சி.ஐ.ஏ தலைமைக்கு மிகத் துல்லியமான தகவல்களை அளிக்கின்றனர். அதன் அடிப்படையில் இஸ்ரேலிய இராணுவம் ஈவிரக்கமற்ற தாக்குதல்களை நடத்துகிறது.

பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து மக்கள் வாழத் தகுதியற்றதாக காஸா- நகரத்தை மண் குவியல்களாக இஸ்ரேல் மாற்றிவிட்டது. இந்நிலையில் பலஸ்தீனத்தின் ரஃபா- லெபனான்  தலைநகர் பெய்ரூட்- நகரங்கள்தான் இஸ்ரேலின் அடுத்த இலக்குகள். தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா. அமைதி காக்கும் படையினர் நீண்டகாலமாக பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பணியை செய்து வருகின்றனர். மத்திய பெய்ரூட்டில் உள்ள இதன் தலைமையகத்தை இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்கியது.

உலகின் எதிர்ப்பு

இத்தகைய பின்னணியில், இலண்டன், பாரீஸ் உள்பட ஐரோப்பிய  நகரங்களிலும் அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா, தென்அமெரிக்கா நாடுகள் மற்றும் இந்திய நகரங்களிலும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நெதன்யாகு பேச முற்படும்போது இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏராளமான உறுப்பினர்கள்  வெளியேறியதும் கணிக்கத்தக்கது. இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் உணர்வுகள் ஐரோப்பாவிலும் உருவாகத் துவங்கி உள்ளது. “ஒரு அரசியல் தீர்வுக்கு திரும்புவதே முன்னுரிமை என்று நாங்கள் நினைக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் 6.10.2024 அன்று பகிரங்கமாக அறிவித்தார். லெபனானில் இஸ்ரேலின் தரைப்படை நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நெதன்யாகுவின் முடிவையும் அவர் விமர்சித்தார். 

உலக நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்கா ஒரு ஸ்டண்ட் வேலையை அரங்கேற்றியுள்ளது. காஸாவின் நிலைமை மோசமடைந்ததற்கு காரணம் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தான் என்று அமெரிக்கா  கூறியுள்ளது. 13.10.2024 அன்று இஸ்ரேலுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் பலஸ்தீனியர்களுக்கான உணவு, மருந்து தேவைகளுக்காக இஸ்ரேலுக்கு 30 நாள் காலக்கெடுவை அமெரிக்கா விதித்தது.  இந்த நாடகத்தின் பின்புலத்தில் 5.11.2024 அன்று நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் அதிருப்தியில்  உள்ள அமெரிக்கர்களின் வாக்குகளை பெறுவதற்குமான தந்திரமும் இருந்தது. 

மோடியின் ஆதரவு

நேட்டோ நாடான பிரான்ஸ் பகிரங்மாக நெதன்யாகுவை விமர்சிக்கும்போது, அமெரிக்காவே கூட பெயரளவுக்கேனும் விமர்சிக்கும் மோடி மாபெரும் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு நம் உலகில் இடமில்லை என்று கூறினார். மோடியின் இந்தப் பேச்சு, விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஹமாஸ் துவங்கி, ஹிஸ்புல்லா வரை பயங்கரவாதம் என்று சொல்லித்தான் பெரும் இனப்படுகொலையை நேதன்யாகு அரங்கேற்றி வருகிறார். அந்தப் படுகொலையை கள்ள மௌனத்துடன் ஆதரிக்கிறார் மோடி என்பது தானே இதன் பொருள்! 

Tags: