கிறிஸ்ரென்சன்: அறியப்படாத சமூக ஊடக முன்னோடி!
-சைபர் சிம்மன்
தொழில்நுட்ப எழுத்தாளர்:
வோர்ட் கிறிஸ்ரென்சன் (Ward Christensen) அமைதியாக இறந்திருக்கிறார். அவரது மறைவு குறித்துக் குறும்பதிவுகளோ, குறும் காணொளிகளோ அதிகம் இல்லாமல், சமூக ஊடகத்தின் பேசுபொருளாகாமல் போனதை நம் காலத்து முரண் என்றுதான் சொல்ல வேண்டும். புகழ் வெளிச்சத்தை நாடாதவராகவே வாழ்ந்து மறைந்த, தனது கண்டுபிடிப்புக்காக ஒருபோதும் மார்தட்டிக்கொள்ளும் இயல்பைக் கொண்டிராத கிறிஸ்ரென்சன் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்பது மட்டும் அல்ல, தனது மரணம் தொடர்பான பரபரப்பின்மையை விரும்பவே செய்திருப்பார்.
அதுவே அவரது இயல்பு. தன்னைவிட, தனது கண்டுபிடிப்பு தொடர்பாகவே மற்றவர்கள் பேசுவதை கிறிஸ்ரென்சன் விரும்பியிருக்கலாம். எனினும், ‘பிபிஎஸ் (BBS) கண்டுபிடிப்பாளரும் நம் ஒன்லைன் (Online) யுகத்தை வடிவமைத்தவருமான கிறிஸ்ரென்சன் மரணம்’ என்னும் ‘அர்ஸ் டெக்னிகா’ தொழில்நுட்பச் செய்தித் தளத்தின் இரங்கல் செய்தியின் தலைப்பே அவரைப் பற்றிக் கச்சிதமாக உணர்த்திவிடுகிறது.
முன்னோடிச் சேவை:
பிபிஎஸ் என்பது ‘புல்லட்டின் போர்டு சிஸ்டம்’ (Bulletin board system) எனப்படும் தகவல் பலகை அமைப்பைக் குறிக்கும். 1978 ஆம் ஆண்டு கிறிஸ்ரென்சன், தனது நண்பரான ரண்டி சூயசுடன் (Randy Suess) இணைந்து உருவாக்கிய தகவல் பலகை சேவைதான், இன்றைய சமூக ஊடகச் சேவைகளுக்கான முன்னோடிச் சேவைகளில் ஒன்று என்பது பலரும் அறியாதது. சமூக ஊடக முன்வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக அமையும், தகவல் பலகைச் சேவையை ஒரு விதத்தில், முதல் சமூக ஊடகச் சேவை என்று கூடச் சொல்லலாம். அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னரே, கம்ப்யூட்டர் மெமரி எனும் சமூக ஊடக முன்னோடி முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான முதல் டயல் அப் (Dial up) தகவல் பலகை அமைப்பாக, கிறிஸ்ரென்சன் – சூயஸ் உருவாக்கிய சிபிபிஎஸ் (CBBS) அமைந்தது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதி கணனி ஆர்வலர்களுக்கான தகவல் பரிமாற்ற அமைப்பாக, இந்தச் சேவையை அவர்கள் உருவாக்கினர். அப்போது அந்நகரில் பெரும்பாலானோரை வீட்டுக்குள் முடக்கிப்போட்டிருந்த பெரும் பனி வீச்சுக்கு நடுவே இதை உருவாக்கினர். தொலைபேசி மூலம் கணனியை அணுகி, அதன் வாயிலாக மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வகையில் தகவல் பலகைச் சேவை அமைந்திருந்தது.
இது எல்லாமே அந்தக் காலக்கட்டத்தில் புதுமை என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதாவது, பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்த கணனியிலிருந்து தொலைபேசி வாயிலாக, தகவல் பலகை அமைப்பைத் தொடர்புகொண்டு, அதில் தகவல்களை இடம்பெற வைக்கலாம். ஏற்கெனவே சக பயனாளிகள் பகிர்ந்த தகவல்களைப் படித்துப்பார்க்கலாம்.
சமூக ஊடகத்தின் தொடக்கப் புள்ளி:
ஏற்கெனவே பழக்கத்தில் இருந்த, பொதுவெளியில் தகவல் பகிர்வுக்கான பாரம்பரிய வடிவான கரும்பலகை சார்ந்த அறிவிப்புப் பலகை சேவையின் ஒன்லைன் நீட்டிப்பாக இந்தச் சேவை உருவானது. தகவல் பலகைச் சேவையில் இருந்தே ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் எனப் பரந்து விரியும் சமூக ஊடகச் சேவைகள் உருவானதாகக் கருதலாம்.
ஓம்! தகவல் பலகை அமைப்பு, சமூக ஊடகத்தின் தொடக்கப் புள்ளிகளில் ஒன்று! தகவல் பலகை இணையத்துக்கு முந்தைய சேவை அல்ல என்றாலும், இணையம் சாராமல் உருவான சேவை என்பது கவனிக்கத்தக்கது. ஓம், இணையம் என்பது நாம் அறிந்த வகையில் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல், இராணுவம், ஆய்வு – கல்வி சார்ந்த பயன்பாட்டுக்கு மட்டுமே அறியப்பட்டிருந்த காலத்தில், மக்களுக்கான தகவல் பரிமாற்ற வசதியாகத் தகவல் பலகை அறிமுகமானது.
பேர்சனல் கம்ப்யூட்டர் (Personal Computer) எனச் சொல்லப்படும் தனிநபர் கணனிகள் அப்போதுதான் அறிமுகம் ஆகி, பரவலாகத் தொடங்கியிருந்தன. தொழில்நுட்பப் பித்தர்களைக் கடந்து, மக்களில் பலரும் ஆர்வத்துடன் கணனியைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். கணனியை இயக்கவே, ஓரளவாவது கோடிங் திறன் தேவை எனக் கருதப்பட்ட நிலை. கணனியில் நிரல் எழுதலாம், வீடியோ கேம் விளையாடலாம் என்றிருந்த நிலையில், தொலைபேசி ‘மோடம்’ (Modem) எனும் சாதனத்துடன் இணைத்துத் தகவல் பகிர்விலும் ஈடுபடலாம் என்னும் புதிய சாத்தியத்தைத் தகவல் பலகைச் சேவை உண்டாக்கியது.
நினைத்துப் பார்க்க முடியாத அற்புதம்:
இதற்குத் தேவையான நிரலை எழுதியதோடு, மோடம் வாயிலாகக் கணனிகள் கோப்புப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான படிமுறையையும் கிறிஸ்ரென்சன் உருவாக்கினார். தகவல் பலகை அமைப்பின் மையமாக, இந்தச் சேவையின் நிரல் கொண்ட கணனி விளங்கியது. தொலைபேசியுடன் இணைக்கப்பட்ட இந்தக் கணனியை, பயனாளிகள் தங்கள் கணனி வாயிலாகத் தொலைபேசியில் அழைத்து அணுக முடிந்தது. கணனி நிரல் உருவாக்கிய டிஜிட்டல் தகவல் மேடையில் அவர்கள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிந்தது.
உள்ளூர்ப் பரப்பில் இருந்த கணனி ஆர்வலர்கள், ஒன்லைன் பரப்பில் சந்தித்துத் தங்களுக்குள் உரையாட முடிந்தது யாரும் நினைத்துப்பார்க்க முடியாத அற்புதமாக அமைந்தது. அப்போதைய தொலைபேசி தொடர்புக் கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் கணனி ஆர்வலர்கள் பலரும் சிபிபிஎஸ் தகவல் பலகையில் இணைந்து இந்தச் சேவையைப் பிரபலமாக்கினர்.
இதன் விளைவாக, பர்சனல் கம்ப்யூட்டர் ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்டு வந்த தொழில்நுட்ப இதழான ‘பைட்’ (Byte), பிபிஎஸ் சேவை பற்றிய கட்டுரையை வெளியிட்டது. சூயசுடன் இணைந்து கிறிஸ்ரென்சன் எழுதிய இந்தக் கட்டுரையில், தகவல் பலகை சேவை விரிவாக அறிமுகம் செய்யப்பட்டிருந்ததோடு, அதை உருவாக்கிக் கொள்வதற்கான வழிமுறையும் விளக்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையை வாசித்து, தகவல் பலகைச் சேவையால் ஈர்க்கப்பட்ட பலரும், தங்கள் பகுதியில் இதே போன்ற தகவல் பலகையை உருவாக்கிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டனர். விளைவு, அடுத்த சில மாதங்களில் அமெரிக்க நகரங்களில் தகவல் பலகை அமைப்புகள் நூற்றுக்கணக்கில் உருவாயின. ஒவ்வொரு பலகையும் அந்தந்தப் பகுதிக்கான உள்ளூர் ஆன்லைன் மேடையாக விளங்கியது.
இதன் அடுத்த கட்டமாக, உலகின் மற்ற நாடுகளிலும் தகவல் பலகை வசதி விரிவடைந்தது. 1980களின் மத்தியில், ரொம் ஜென்னிங்ஸ் (Tom Jennings) என்னும் மென்பொறியாளர் தனித் தகவல் பலகைகளை ஒன்றிணைத்து பரஸ்பரம் தொடர்புகொள்ளக்கூடிய படிமுறையை உருவாக்கினார். இதன் பயனாக உலகம் முழுவதும் இருந்த தகவல் பலகைகள் இணைந்து ஃபிடோநெட் (FidoNet) எனப்படும் பயனர் வலைப்பின்னல் உருவானது.
தொலைபேசிகளையும் மோடம்களையும் கொண்டு இணைக்கப்பட்ட ஃபிடோநெட் வலைப்பின்னல், உலகம் முழுவதும் இருந்த கணனிப் பயனாளிகள் தகவல் பரிமாற்றத்துக்கு வழிசெய்தது. ஃபிடோநெட் சார்ந்து, பல்வேறு தலைப்புகள், நோக்கங்கள் சார்ந்த பிரத்யேக வலைப்பின்னல்களும் உருவாகின.
உதாரணம், ‘பீஸ் நெட்’ (PeaceNet) என்னும் அமைதி வலை, ‘இகோ நெட்’ (EcoNet) என்னும் சூழல் வலை. தகவல் பரிமாற்றம் தவிர, கோப்புப் பகிர்வு, மென்பொருள் தரவிறக்கம், விவாதம் உள்ளிட்டவற்றுக்கும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக்கொண்டனர். ஒரு காலக்கட்டத்தில் ஃபிடோநெட் சேவையும், அதில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கான தகவல் பலகை சேவைகளும் பயனாளிகள் மத்தியில் பிரபலமாக இருந்தன.
தகவல் பலகை அமைப்பை நடத்துபவர்கள் ‘சிஸ்ஆப்’ எனக் குறிப்பிடப்பட்டனர். தகவல் பலகை உலகுக்கு என, ‘போர்ட்வாட்ச்’ போன்ற பிரத்யேகப் பத்திரிகைகளும் வெளிவந்தன. இவை எல்லாம், வெப் (web) எனச் சொல்லப்படும் வைய விரிவு வலை, 1993 இல் பொதுப் பயன்பாட்டுக்கு வந்து இணையத்தைப் பிரபலமாக்குவதற்கு முன் நிகழ்ந்தவை. இணையத்துக்கு வெளியே இருந்த இன்னொரு வலை என சொல்லக்கூடிய ஃபிடோநெட், பின்னர் இணையம் மூலம் அணுக வழிசெய்யப்பட்டது.
வலை பரவலாகத் தொடங்கிய பிறகு, தகவல் பலகைச் சேவைகளின் முக்கியத்துவம் குறைந்து, ஒரு கட்டத்தில் அவை செல்வாக்கை இழந்தாலும், பயனாளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், உருவாக்கம் உள்ளிட்டவற்றைச் சாத்தியமாக்கும் சமூக ஊடகச் சேவைகளுக்கு முந்தைய முன்வடிவமாகத் தகவல் பலகை விளங்குவதை மறந்துவிடக் கூடாது.
தன்னலமற்ற சேவை:
கிறிஸ்ரென்சன் தனது உருவாக்கத்தால் பணமோ, புகழோ சம்பாதிக்க முயலவில்லை. அதை விரும்பவும் இல்லை. தகவல் பலகை அமைப்பு உலகம் முழுவதும், பரந்து விரிவடைந்த நிலையில், தனது ஆக்கம் பற்றிப் பெருமிதமோ உரிமையோ கோராமல், மென்பொருள் வல்லுநராக, அமைதியாகத் தன் பணியைச் செய்துகொண்டிருந்தார். அவரது சகாவான சூயஸ் சில ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், ஒக்ரோபர் 11 இல் கிறிஸ்டின்சென் 78 வயது வயதில் இயற்கை எய்தினார்.
கிறிஸ்ரென்சன் பற்றியும், அவரது ஆக்கம் பற்றியும் அறிய, தகவல் பலகைச் சேவை தொடர்பான ஆவணப்படத் திட்டத்துக்காக அமைக்கப்பட்ட இணையதளத்தை (http://www.bbsdocumentary.com/) அணுகலாம்.