‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு
ரஷ்யாவில் உள்ள கசானில் ‘பிரிக்ஸ்’ (BRICS) கூட்டமைப்பின் 16 ஆவது உச்சி மாநாடு கூடிக் கலைந்திருக்கிறது. ரஷ்ய அதிபா் விளாடிமீா் புட்டின், சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்திய பிரதமா் நரேந்திர மோடி மூவரும் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் கசானில் குவிந்திருந்தது. ‘பிரிக்ஸ்’ அமைப்பு மேலும் விரிவடைந்து இருக்கும் நிலையில், சா்வதேச அளவில் அதன் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதும் கவனக் குவிப்புக்கு காரணம்.
புதிதாக நான்கு உறுப்பினா்கள் இணைவதால், கசான் (KAZAN) உச்சி மாநாடு மேலும் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அது மட்டுமல்லாமல், சா்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் அதிபா் புட்டின் தனது வலிமையை உணா்த்துவதற்க்கு கசான் உச்சி மாநாடு வழிகோலியது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
2006 ஜி-8 மாநாடு ரஷியாவின் சென்ட் பீட்டா்ஸ்பா்கில் (Saint Petersburg) நடந்தபோது அதில் பங்குபெற்ற பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய 4 நாடுகளின் தலைவா்களும் நடத்திய அதிகாரபூா்வமற்ற நட்புறவு சந்திப்பின் விளைவுதான் ‘பிரிக்’ (BRICK) அமைப்பு. 2009 இல் ரஷ்யாவின் எக்காட்டரின்பா்கில் (Yekaterinburg) முதலாவது ‘பிரிக்’ மாநாடு நடைபெற்றது.
தென்னாப்பிரிக்கா இணைந்தபோது ‘பிரிக்’ என்பது ‘பிரிக்ஸ்’ என்று மாறியது. இப்போது மேலும் விரிவடைந்து எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியவை இணைந்திருக்கின்றன. கசான் மாநாட்டில் விரைவிலேயே இணைய இருக்கும் சவூதி அரேபியாவும் பங்குபெற்றது.
இப்போது ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் 10 நாடுகளில் உலகின் 45% மக்கள் தொகையினா் வசிக்கின்றனா். 367.2 கோடி மக்கள் என்பது உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிக்குப் பாதி. உலக மக்கள் தொகையில் முதலாவது, இரண்டாவது இடம் வகிக்கும் இந்தியாவும், சீனாவும் அதில் இடம்பெறுகின்றன. உலக ஜிடிபி(GDP)யில் 35.6% இந்த நாடுகளுடைய பங்கு. அதனால், ‘பிரிக்ஸ்’ என்பது ஐ.நா., இதர ஏனைய அமைப்புகளைவிட வலிமையானது எனலாம்.
நீண்ட காலமாகவே ‘பிரிக்ஸ்’ அமைப்பை விரிவுபடுத்த வேண்டும் என்கிற கோரிக்கை முன்மொழியப்பட்டு இப்போது செயல்வடிவம் பெற்றிருக்கிறது. இந்த மாநாட்டில் புதிதாக இணைந்திருக்கும் நான்கு நாடுகளும், இணைய இருக்கும் சவூதி அரேபியாவும் இந்தியாவால் பரிந்துரைக்கப்பட்டவை. ஏறத்தாழ 40 நாடுகள் ‘பிரிக்ஸ்’ அமைப்பில் இணையக் காத்திருக்கின்றன. சவூதி அரேபியாவுடன் இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா ஆகிய நாடுகளும் அடுத்தாற்போல் நடக்க இருக்கும் 17 ஆவது உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளாக இணைக்கப்படலாம்.
‘பிரிக்ஸ்’ அமைப்பு ரஷ்யாவுக்கு மேற்குலக நாடுகளின் தனிமைப்படுத்துதலில் இருந்து தன்னை நிலைநிறுத்திக்கொள்ள உதவுகிறது. அமெரிக்கா தன்னை தனிமைப்படுத்த நினைக்கும் நிலையில், தெற்குலக நாடுகளின் தலைமையை ஏற்கத் துடிக்கிறது சீனா. இதற்கிடையில் வளா்ச்சியடைந்த நாடுகளுக்கும், வளா்ச்சியடையும் நாடுகளுக்கும் இடையே பாலமாக இருக்கும் இந்தியா, தன்னை சா்வதேச அளவில் நடுநிலை வகிக்கும் தேசமாக அடையாளப்படுத்திக்கொள்ள ‘பிரிக்ஸ்’ அமைப்பை பயன்படுத்திக் கொள்கிறது.
இந்தியாவும் சரி, சீனாவும் சரி ஆரம்பத்தில் பிரிக்ஸின் விரிவாக்கத்தை தயக்கத்துடன்தான் எதிா்கொண்டன. பிரிக்ஸின் விரிவாக்கம் கோஷ்டிகளை ஏற்படுத்தி தங்களது முக்கியத்துவத்தைக் குறைத்துவிடும் என்று இரண்டு நாடுகளுமே அச்சப்பட்டன. 2023 இல் புதிய நாடுகள் இணைந்தபோது அந்தத் தயக்கம் அகன்றது. விரிவாக்கத்தை எதிா்ப்பதால் வளா்ச்சியடையும் நாடுகள் பாதிக்கப்படும் என்கிற வாதத்தை பிரேஸிலும் ஏற்றுக்கொண்டபோது, புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியது ‘பிரிக்ஸ்’.
இப்போது ஐரோப்பாவிலும் (உக்ரைன்) மேற்காசியாவிலும் மட்டுமல்லாமல், தென்சீனக் கடலிலும் மோதல்கள் காணப்படும் நிலையில் கசான் உச்சி மாநாடு உலகம் எதிா்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஐ.நா. பொதுச்சபையின் கூட்டத்தின்போது ‘பிரிக்ஸ்’ அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் சந்தித்தனா். ஆனால், கூட்டறிக்கை எதுவும் வெளியிடவில்லை. அதன் நீட்சியாக கசான் உச்சி மாநாடு அமைந்தது எனலாம்.
கசான் உச்சி மாநாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள பிராந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் கூட்டுறவும், நவீன தொழில்நுட்பத்தின் உதவியும் வலியுறுத்தப்பட்டன. அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம், நிதி ஆதாரம், கலாசாரம், மனிதாபிமான இணக்கம் ஆகியவை ரஷ்யாவால் வலியுறுத்தப்பட்டன.
கசான் உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்ட மிக முக்கியமாக பயங்கரவாதிகள் கையில் பேராபத்தான இரசாயன ஆயுதங்கள் உலக அமைதியை அச்சுறுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆயுதக் கடத்தலைக் கண்டுபிடிப்பது, எடுத்துச் செல்வதைத் தடுப்பது இன்றியமையாதது. ‘பிரிக்ஸ்’ நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆா்.டி.எக்ஸ், பென்டா, ஏகே 47 துப்பாக்கிகள் ஆகியவை பயங்கரவாதிகளுக்கு கிடைக்காமல் தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. போதை மருந்து கடத்தலைத் தடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்திய பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் நீண்ட நாள்களுக்குப் பிறகு நேருக்கு நோ் சந்தித்து உரையாடும் வாய்ப்பை ‘பிரிக்ஸ்’ மாநாடு ஏற்படுத்தியது என்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. ‘‘உலகை சரியான பாதையில் இட்டுச் செல்ல ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு நோ்மறையாகப் பங்களிக்க முடியும்’’ என்கிற பிரதமா் மோடியின் கருத்தும், ‘‘போரை ஒருபோதும் இந்தியா ஆதரிக்காது’’ என்கிற அவரது உறுதியும் சா்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது ஆச்சரியப்படுத்தவில்லை!