காந்தி, அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும்  எதிரானவரா?

-பாலசுப்ரமணியம் முத்துசாமி 

ரோப்பாவில் தொழிற்புரட்சி தொடங்கி, நவீன தொழிற்சாலைகள் எழுந்து துணி நெய்தல் இயந்திரமயமான பின்னரும், இராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருந்தவர் காந்தி. தன் மனைவிக்கு  உடல் நலம் குன்றிய காலத்திலும், அவருக்கு பெனிசிலின் ஊசி போடுவதைத் தடுத்தவர் காந்தி.  அவர் எப்படி அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஆதரவானவராக இருக்க முடியும்?.

அறிவியல் தொழில்நுட்பத் தளங்களில் காந்தி தொடர்பான விவாதங்கள் எழுகையில், பல நண்பர்கள் முன்வைக்கும் வாதங்கள் இவை.

காந்தி  உண்மையிலேயே அறிவியலுக்கும், தொழில்நுட்பத்துக்கும்  எதிரானவரா?

முதல் பத்தியில் சொல்லப்பட்டுள்ள வாதங்களை மட்டுமே வைத்துப் பார்க்கையில், காந்தி அறிவியலுக்கும் தொழில் நுட்பத்துக்கும்  எதிரானவர் என்றே நம்மில்  பலருக்கும் தோன்றும். ஆனால், கொஞ்சம் விரிவாக காந்தியையும், காந்திய முன்னெடுப்புகளையும் ஆராய்ந்தால், நமக்கு கிடைக்கும் சித்திரம் வேறாக இருக்கிறது.   

1915 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியதும், காங்கிரஸ் கட்சியில் இணைந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார் காந்தி. மிகக் குறுகிய காலத்திலேயே காங்கிரசின் வழிகாட்டி என்னும் தளத்தை அடைந்து,  1922 ஆம் ஆண்டு நாடு தழுவிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். பெரும்பாலான அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர் பின்னே திரண்டனர். 

ஆனால், ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறுவது மட்டுமே அவரது ஒரே நோக்கமாக இருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகாலமாக உருவாகி இறுகியிருந்த சமூகப் பொருளாதார  ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, இந்திய சமூகத்தை புதிதாக நிர்மாணிக்கும்  செயல் திட்டங்களை  அவர் முன்னெடுத்தார். தீண்டாமை ஒழிப்பு, ஊரகத் தொழில் மீட்டுருவாக்கம், கல்வி, சுகாதாரம், மதுவிலக்கு எனப் பல தளங்களில் அவர் செயல் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தினார். விடுதலைப் போராட்டத்தில் அவர் பின் நின்ற பெரும்பாலான தலைவர்களும், தொண்டர்களும், காந்தியின் இந்தப் பரந்து விரிந்த மானுடக் கனவை,  திட்டங்களை  முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. 

1900 களின் முற்பகுதியில், உலகில் நவீன அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும்  பெரும் பாய்ச்சல்கள் நிகழ்ந்தன.  வேளாண்மையிலிருந்து, உலகம் தொழிற் புரட்சியை நோக்கி நகர்ந்தது. அரசாட்சி, பிரபுத்துவம் என்னும் கட்டமைப்பிலிருந்து, உலகம் ஜனநாயகம், முதலாளித்துவம் மற்றும் சோஷலிச இலக்குகளை  நோக்கி நகரத் தொடங்கியிருந்தது.  

பெரும் தொழிற்சாலைகள், பெரும் நீர்ப்பாசனத் திட்டங்கள், பெரும் வேளாண் பண்ணைகள்,  நவீன மருத்துவம் போன்றவை ஒரு மதம் போல உலகெங்கும் எழுந்து வந்தன. முதலாளித்துவ, கம்யூனிச, சோஷலிச சிந்தனையாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் இந்தப் புதிய மதங்களே உலகிற்கு விமோசனம் அளிக்க வல்லவை என நம்பினர்.

ஆனால், காந்தி மட்டுமே அன்று எழுந்து வந்து கொண்டிருந்த புதிய மதங்கள் உருவாக்கிக் கொண்டிருந்த உலகில், பொருளாதாரத்தின் கடைக்கோடியில் இருக்கும் சாமானியனுக்கு இடம் இல்லாததை அவதானித்தார். 

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் ஒரு சமூக செயல்பாட்டாளராக இருந்த காந்தி, தன் வாழ்வியல் பரிசோதனைகள் வழியாக,  ஒரு புதிய சமூகத்திற்கான ஒரு வடிவமைப்பை வந்தடைந்திருந்தார்.

தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். ‘நான் உங்களுக்கு ஒரு தாயத்தை அளிக்கிறேன். ஒரு செயலில் ஈடுபடுகையில், உங்கள் மனதில் சந்தேகம் எழுந்தால், இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் ஏழ்மையான, பலவீனமான மனிதனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யப் போகும் காரியம் அவருக்கு எந்த வகையிலேனும் உதவுமா? அதனால் அவருக்கு நன்மை விளையுமா என யோசியுங்கள். உங்கள் சந்தேகம் கரைந்து போவதைக் காண்பீர்கள்’. 

தென் ஆபிரிக்காவில் இருந்த காலத்தில், ஒரு இரயில் பயணத்தில் படித்த கடையனுக்கும் கதி மோட்சம் என்னும் நூலில் இருந்து அவர் பெற்றுக் கொண்ட குறிக்கோள் அது.

தன் கனவான சமத்துவ சமூகத்தை நிர்மாணிக்க அவர் தீர்மானித்த போது, அதை முன்னெடுக்க ஒரு அறிவியற் பூர்வமான வழியைக் கையாண்டார். இந்திய சமூகத்தின் ஒரு சிறு அலகான, ஒரு தாலூக்காவின் பொருளாதாரத்தை முறையாக ஆய்வு செய்ய முடிவெடுத்தார்.

தான் நிறுவிய குஜராத்தி வித்யா பீடத்தின் துணைவேந்தர் கலேல்கருக்கு ஒரு குறிப்பை அனுப்பினார். மட்டார் தாலூகா பொருளியல் ஆய்வறிக்கையின் முன்னுரையில், கலேல்கர் இவ்வாறு குறிப்பிடுகிறார்

In an informal note which Gandhiji handed to me, he had expressed a desire that Indian Economics should be built from the bottom by a posteriori method of securing rock bottom facts and drawing therefrom, by the most rigid process of reasoning, scientific conclusions which no amount of jugglery could controvert. He gave in that note a number of practical hints for the conduct of such a survey”. 

காந்தியின் முடிவு

நல்வாய்ப்பாக, அப்படிப்பட்ட ஒரு ஆய்வைச் செய்ய, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும், பொதுநிதிக் கொள்கையும் பயின்ற ஜே.சி.குமரப்பா அவரிடம் வந்து சேர்ந்தார். குமரப்பா பட்டையக் கணக்காளர். தவிர மேலாண்மையும் பயின்றவர். தொழில் நிர்வாகம், கணக்கு வழக்கு, பொருளாதாரம் என மூன்று தளங்களில் முறையான கல்வி பயின்றவர். கேடா மாவட்டத்தில் ஒரு தாலூகாவைத் தேர்வு செய்து, ஒரு முறையான பொருளாதார ஆய்வைச்   செய்ய அவரைப்  பணித்தார் காந்தி. 

ஜே.சி.குமரப்பா

வல்லப் பாய் படேல் தலைமையில், கேடா மாவட்டத்தில் உள்ள ‘மட்டார்’, என்னும் தாலுகாவை தேர்ந்தெடுத்து  ஆய்வு செய்தார் குமரப்பா. அந்த ஆய்வின் முடிவில், இந்திய ஊரக சமூகத்தின் வறுமையின் அளவும், வேளாண்மையின் இலாபமின்மையின் அளவும் தரவுகளாகக் கிடைத்தன. 

அந்த ஆய்வுகள் முடிவடையும் தருணத்தில், உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. அப்போராட்டத்தில், காந்தி, குமரப்பா முதலியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து வந்த காலத்தில் பீஹார் பூகம்பம் வந்துவிட நிவாரணப் பணிகளில், மேலும் காலம் சென்றது.  

அந்தப் பணிகள் முடிந்ததும், 1934 ஆம் ஆண்டு, காந்தி காங்கிரசில் இருந்து விலகி, சமூக, பொருளாதார நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடிவெடுத்தார். வாரணாசி காங்கிரசில், ‘அகில இந்திய ஊரக தொழில் கூட்டமைப்பு’, என்னும் ஒரு புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. அதன் தலைவராக காந்தியும், செயலராக குமரப்பாவும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிறுவனத்தின் வடிவமைப்பில் வெளிப்படும்  காந்தியின் முழுமையான அணுகுமுறை நம்மை பிரமிக்க வைக்கும் ஒன்று.

முதலில் அந்த நிறுவனத்தை தோற்றுவித்து வழிநடத்த ஒரு மேலாண் குழுவை திரட்டுகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் தலையீடுகள் இல்லாத குழுவாக இருக்க வேண்டும் என்பது காந்தியின் முடிவு. இந்தக் குழுவில், ஊரகத்  தொழில் மறுமலர்ச்சி மற்றும் ஊரக ஏழை மக்களின் மேம்பாட்டில் நம்பிக்கையும் உறுதியும் கொண்டவர்கள் இருப்பது அவசியம் என முடிவெடுத்தார்.

அக்குழுவில், கிருஷ்ணதாஸ் ஜாஜூஜி, குமரப்பா, கோசி பென், கான் சாகேப், ஷூர்ஜி வல்லபிதாஸ், பிரபுல்ல கோஷ், சங்கர்லால் பேங்கர் என்னும் காந்தியின் அணுக்கத் தோழர்கள் இணைகிறார்கள்.

நிறுவனத்தில் பணிபுரிய முழு நேர ஊழியர்கள்,  கௌரவ ஊழியர்கள், உறுப்பினர்கள் எனப்  பல்வேறு குழுக்கள் வழியே மக்கள் திரட்டப்பட்டார்கள்.

ஊரக தொழில்களை நவீனப்படுத்தவும், தொழில் முனைப்புகளை உருவாக்கவும், அகில இந்திய ஊரகக் கூட்டமைப்பில் ஒரு ஆராய்ச்சிப்  பிரிவினை உருவாக்குவது அவசியம் எனக் கருதிய காந்தி, அந்த ஆராய்ச்சிப் பிரிவுக்கு ஆலோசனை சொல்ல  நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கிறார். அந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

சேர்.சி.வி இராமன்

சேர்.சி.வி இராமன் – நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. ஜெகதீஸ் சந்திர போஸ் – உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர், பி.சி.ரே – இந்தியாவின் தலைசிறந்த வேதியியல் அறிஞர், பேராசிரியர்.சாம் ஹிக்கின்பாட்டம் – ப்ரின்ஸிடன் பல்கலையில் படித்த வேளாண் பொருளியலாளர், டாக்டர் எம்.ஏ அன்சாரி, இங்கிலாந்தில் பயின்ற அறுவைசிகிச்சை நிபுணர், மருத்துவ ஆராய்ச்சியாளர், இங்கிலாந்தில் FRCS படம் பெற்ற  மருத்துவர் ஜீவராஜ் மேத்தா, மருத்துவர் மேஜர் ஜெனரல் சேர்.இராபர்ட் மெக்காரிசன், மருத்துவர் பி.சி ராய் என்னும் இந்த பட்டியல் அன்றைய இந்தியாவில் அறிவியல், சுகாதாரம், பொருளாதாரம் போன்ற தளங்களில் மிகச் சிறந்த அறிஞர்களைக் கொண்டிருந்தது.  அவர்களில் இராமன், ஜெ.சி போஸ், பி.சி.ரே  போன்றவர்கள் உலகத்தில் மிகச் சிறந்த அறிவியலர்களாக அறியப்பட்டவர்கள்.

1930 களில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஊரகப்பகுதிகளில் வசித்து வந்தார்கள். அவர்களின் 90% க்கும் மேற்பட்ட மக்கள் வறுமைக்கு கோட்டுக்கு கீழ் வசித்து வந்தார்கள். அந்தக் கட்டமைப்பை மாற்றி புதிய பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கி, பொருளாதார அடுக்கின் கடைசியில் இருக்கும் மனிதனின் வாழ்க்கையில் தற்சார்பைக் கொண்டு வர முடிவெடுத்த காந்தி, முதலில், அந்தப் பொருளாதாரக் கட்டமைப்பின்  அன்றைய நிலையை ஆராய ஒரு முறையான குழுவை உருவாக்குகிறார். அதன் இயக்குனர் ஜே.சி.குமரப்பா, அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் பயின்ற பொருளாதார அறிஞர். 

அதன் அடிப்படையில் அகில இந்திய ஊரகத் தொழில் கூட்டமைப்பு என்னும் நிறுவனத்தில் புதிய சிந்தனைகளை, தொழில்நுட்பங்களைக் கொண்டு வர சேர்.சி.வி.இராமன், ஜெ.சி.போஸ்,  போன்ற உலகின் தலைசிறந்த அறிவியல் வல்லுநர்களின் உதவியை நாடுகிறார். 

இந்தப் பின்னணியில் இருந்துதான் காதி கிராமத் தொழில்கள் மற்றும் அமுல், ஆவின் போன்ற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்கள் உருவாகி எழுந்து வந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு, காதி கிராமத் தொழில் நிறுவனம் 1.55 இலட்சம் கோடி வணிகம் செய்துள்ளது.  அமுல், ஆவின், நந்தினி, மில்மா, வேர்கா, மாதர் டெய்ரி  போன்ற பால் உற்பத்திக்  கூட்டுறவு நிறுவனங்கள் 1.2 இலட்சம் கோடிக்கும் அதிகமாக வணிகம் செய்துள்ளன.  இவை 5 கோடிக்கும் அதிகமான  ஊரக மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன.     

ஆனால்,, நாம், காந்தி  அறிவியலுக்கும், தொழில் நுட்பத்துக்கும் எதிரானவர் என்று, காரணமே இல்லாமல் அவர் மீது லேபிள் ஒட்டிக்  கொண்டிருக்கிறோம்.

Tags: