இந்தியாவில் சோசலிசம் கோட்பாடும் நடைமுறையும்
-எஸ்.பி.ராஜேந்திரன்
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா நவம்பர் 22 அன்று வழங்கிய முக்கியமான தீர்ப்பு, முதலாளித்துவ இந்தியாவின் ‘சோசலிசப் பாதையை’ மீண்டும் வரையறுத்துள்ளது. “இந்தியாவில் சோசலிசம் என்பது சர்வாதிகாரக் கோட்பாடு அல்ல; மாறாக அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் நல அரசின் கொள்கை” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விளக்கம், தற்போதைய இந்தியாவின் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்யவும், எதிர்கால திசையை வரையறுக்கவும் ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகிறது.
வேகமான வளர்ச்சியும் விரிவடைந்த பிளவுகளும்
1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை முந்தி, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளதாக ஆட்சியாளர்கள் முன்னிறுத்துகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் சமமாக பகிரப்படவில்லை என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. உலக ஏற்றத்தாழ்வு ஆய்வகத்தின் அண்மைய அறிக்கையின்படி, 2023 இல் நாட்டின் மேல்தட்டு 10% மக்கள் மொத்த செல்வத்தில் 65 சத வீதத்தையும், மொத்த வருமானத்தில் 58 சதவீதத்தையும் கைப்பற்றியுள்ளனர். மாறாக, கீழ்தட்டு 50% மக்கள் வெறும் 6.5% செல்வத்தையும், 15% வருமானத்தையும் மட்டுமே பெறுகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வை இன்னும் ஆழமாகப் பார்த்தால் அதிர்ச்சி தரும் உண்மைகள் வெளிப்படுகின்றன. மேல்தட்டு 1% மக்கள் மட்டுமே நாட்டின் மொத்த செல்வத்தில் 39.5% பங்கைக் கொண்டுள்ளனர். இன்னும் குறுக்கி, மேலும் உச்சநிலையில் உள்ள 0.1% நபர்கள் 29% செல்வத்தை கட்டுப்படுத்துகின்றனர். இதன் மறுபக்கம், இந்தியாவில் 228.9 மில்லியன் மக்கள் (சுமார் 23 கோடி) வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.
மெகா கோடீஸ்வரர்களின் சொத்துக்குவிப்பு
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2020 இல் 102 ஆக இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2022 இல் 166 ஆக உயர்ந்துள்ளது – இது 62.7% அதிகரிப்பாகும். இந்தியாவின் முதல் 100 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.54.12 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்திய அரசின் ஒரு ஆண்டு பட்ஜெட்டுக்கு சமமானது. முதல் 10 பணக்காரர்களின் சொத்து மட்டுமே ரூ.27.52 இலட்சம் கோடியாக உள்ளது – இது 2021 இலிருந்து 32.8% அதிகரிப்பாகும்.
வரி அமைப்பின் சமனின்மை
வரி அமைப்பிலும் இதே ஏற்றத்தாழ்வு பிரதி பலிக்கிறது. கீழ்தட்டு 50% மக்கள் தங்கள் வருமா னத்தில் மறைமுக வரியாக செலுத்தும் விகிதம், மேல்தட்டு 10% மக்களை விட ஆறு மடங்கு அதிகம். ஜி.எஸ்.டி (GST) வசூலில் கீழ்தட்டு 50% மக்களிடமிருந்து 66% வசூலாகிறது. நடுத்தர 40% மக்களிடமிருந்து 33% வசூலாகிறது. ஆனால் மேல்தட்டு 10% மக்களிடமிருந்து வெறும் 3-4% மட்டுமே வசூலாகிறது. 2019 இல் கோர்ப்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. புதிய நிறுவனங்க ளுக்கு இது 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1.84 இலட்சம் கோடி. இதன் விளைவாக வரி வருவாய் மதிப்பீட்டில் 10% குறைப்பு ஏற்பட்டது.
நீதித்துறையின் பார்வை
இந்த பின்னணியில் தான் நீதித்துறையின் கருத்து முக்கியமானதாகிறது. இந்திய அரசியல் சாசன முகப்பில் இடம் பெற்றுள்ள ‘சோசலிசம்’ என்பது தொடர்பான பல முக்கிய வழக்குகளில் நீதிமன்றங்கள் ‘சோசலிசத்தின்’ பொருளை விளக்கியுள்ளன: 1983 இல் டி.எஸ். நகரா வழக்கில், சோசலிசத்தின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு மரியாதையான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதே என்று தெளிவுபடுத்தப்பட்டது. 1982-ல் சஞ்சீவ் கோக் வழக்கில், பொது நலனுக்காக முக்கிய வளங்களின் மீதான அரசின் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது. 1978 இல் எக்செல் வியர் வழக்கில், தனியார் உரிமைகளும் முக்கியம் என்றும், சோசலிசம் என்பது முற்றிலும் தேசியமயமாக்கல் அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய பின்னணியில் தான், அரசியல் சட்ட முகப்புரையில் இருந்து ‘சோசலிசத்தையும் மதச்சார்பின்மையையும்’ நீக்க வேண்டும் என, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, இந்த நீண்ட வரலாற்றுக்கு ஒரு தெளிவை வழங்கியுள்ளார். ‘சோசலிசம் என்பது சர்வாதிகாரம் அல்ல, அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் நல அரசின் கொள்கை’ என்ற அவரது விளக்கம், முக்கியத்துவம் பெறுகிறது.
மார்க்சியப் பார்வையில் இந்திய சோசலிசம்
முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ இந்தியாவின் அர சியல் சாசனத்தின் ‘சோசலிசம்’ என்பதற்கு மேற்கண்டவாறு ஒரு தனித்துவமான விளக்கத்தை அளித்திருப்பது வரவேற்கத்தக்கதே. அதே வேளையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது கட்சித் திட்டத்தில் இந்திய சோசலிசத்தின் தனித்துவமான சவால்களை ஆழமாக பகுப்பாய்வு செய்துள்ளது. அதுவே, இந்திய ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டமான சோசலிசப் புரட்சிக்கான அடித்தளமாக அமைகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுப்பாய்வின் படி:
– மேற்கத்திய நாடுகளில் முதலாளித்துவம் பழைய சமூக அமைப்புகளை அழித்து எழுந்தது.
– ஆனால் இந்தியாவில் முதலாளித்துவம் பழைய சமூக அமைப்புகளின் மீது திணிக்கப்பட்டது.
– காலனி ஆட்சியாளர்களோ, சுதந்திர இந்தியாவின் முதலாளித்துவ வர்க்கமோ பழைய சமூக அமைப்புகளை அழிக்க முயலவில்லை.
– இதன் விளைவாக, இன்றைய இந்திய சமூகம் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்துடன் சாதி, மத, நிறுவனங்களின் கலவையாக உள்ளது.
சோசலிச மாற்றத்திற்கான பாதை
இந்தியாவில் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அமைப்பை தகர்த்து, சோசலிசப் பாதை சமைத்திட, மார்க்சிஸ்ட் கட்சி மக்கள் ஜனநாயகப் புரட்சித் திட்டத்தை முன் வைக்கிறது:
1. தொழிலாளி வர்க்கமும் அதன் கட்சியும் முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும்.
2. பழைய சமூக அமைப்புகளை மாற்றி ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்ய வேண்டும்.
3. சோசலிச மாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும். இந்த இலக்கை எட்ட, – தற்போதைய முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ அரசை மக்கள் ஜனநாயக அரசாக மாற்ற வேண்டும்; – தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அடிப்படையில் அனைத்து முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டும்; – நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளின் கூட்டணியை உருவாக்க வேண்டும்.
மக்கள் ஜனநாயகப் புரட்சியின் திட்டங்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது திட்டத்தில், எதிர்காலத்தில் அமையப் போகும் மக்கள் ஜனநாயக சோசலிச அரசின் செயல்பாடுகளையும் கூட மிகத் துல்லியமாக வரையறை செய்துள்ளது.
வர்க்க அடிப்படையிலான அரசு கட்டமைப்பு
1. உழைக்கும் மக்களின் இறையாண்மை
– முதலாளித்துவ பெரும்பான்மை ஆதிக்கத்தை முறியடிக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
– ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர் ஆகியோரின் உண்மையான பிரதிநிதித்துவம்
– பெண்களுக்கு உறுதியான இட ஒதுக்கீடு
– மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை
– வெறும் வாக்குரிமைக்கு அப்பால் உழைக்கும் மக்களின் நேரடி ஆட்சி
– தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் மக்கள் கூட்டணி
– நிலப்பிரபுத்துவ, பெரும் முதலாளித்துவ சக்திகளின் அரசியல் ஆதிக்கம் ஒழிப்பு
– உழைக்கும் மக்களின் வர்க்க நலன்களை பாதுகாக்கும் அரசு
– அனைத்து மட்ட நிர்வாகத்திலும் தொழிலாளர்கள் பங்கேற்பு
2. உண்மையான கூட்டாட்சி
– மத்திய-மாநில அதிகார பகிர்வில் சமத்துவம்
– பழங்குடி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை
– மேலிருந்து திணிக்கப்படும் ஆளுநர் முறை ஒழிப்பு
– சாதி, மத, இன ஒடுக்குமுறை முற்றாக ஒழிப்பு
3. மொழி சமத்துவம்
– ஒரு மொழி மேலாதிக்கம் எதிர்ப்பு
– அனைத்து மொழிகளுக்கும் சம அந்தஸ்து
– சிறுபான்மை மொழிகள் பாதுகாப்பு
– தாய்மொழி வழிக் கல்வி உரிமை
முதலாளித்துவ- நிலப்பிரபுத்துவ ஒழிப்பு
1. நிலப்பிரபுத்துவ ஒழிப்பு
– பெரும் நிலவுடைமை முறை முற்றாக ஒழிப்பு
– விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு இலவச நிலம்
– நிலப்பிரபுக்களின் கடன் பிடியில் இருந்து விடுதலை.
– கூட்டுப் பண்ணை முறை ஊக்குவிப்பு
2. ஏகபோக முதலாளித்துவ எதிர்ப்பு
– உள்நாட்டு-வெளிநாட்டு கோர்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகத்தை ஒழித்தல்
– பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டல் தடுப்பு
– பொதுத்துறை மூலம் தொழில்துறை கட்டுப்பாடு
– சிறு-நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பு
3. தொழிலாளி வர்க்க விடுதலை
– சுரண்டல் அற்ற ஊதிய முறை
– தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு
– வேலை நிறுத்த உரிமை உறுதி
– சமூக பாதுகாப்பு திட்டங்கள்
ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வெளியுறவு
1. ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டம்
2. சோசலிச நாடுகளுடன் நட்புறவு
3. மூன்றாம் உலக நாடுகளின் ஒற்றுமை
4. அணு ஆயுத எதிர்ப்பு
சமூக விடுதலை
1. சாதிய ஒடுக்குமுறை ஒழிப்பு
2. பெண் விடுதலை
3. மத அரசியல் எதிர்ப்பு
4. மக்கள் கல்வி & மருத்துவம்
5. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
6. ஜனநாயக கலாச்சாரம்
பொருளாதார சுயசார்பு
1. திட்டமிட்ட சோசலிச பொருளாதாரம்
2. வெளிநாட்டு மூலதன கட்டுப்பாடு
3. உள்நாட்டு உற்பத்தி பலப்படுத்தல்
4. விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி
இப்படி, இந்திய சோசலிசப்பாதைக்கான மிகத் தெளிவான திட்டத்துடன் இந்திய அரசியல் வானில் ஜொலிக்கும் ஒரே கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே ஆகும். இந்திய சோசலிசம் குறித்த பல்வேறு பார்வைகள்–உச்சநீதிமன்றத்தின் நல அரசு கோட்பாடு முதல் மார்க்சிஸ்ட் கட்சியின் புரட்சிகரப் பார்வை வரை – இந்திய சமூகத்தின் சிக்கலான யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. அனைவருக்கும் சமவாய்ப்புகளை உறுதி செய்யும் நல அரசின் கொள்கையாக மட்டுமல்லாமல், சமூக அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்கான பாதையே சோசலிசம் அதுவே இந்தியாவின் எதிர்காலம்!