இத்தனை நாடுகளிலுமா? அதானியின் மோசடிகள்!
-ச. அருணாசலம்
அம்பலமாகும் அதானியின் சர்வதேச மோசடிகள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி..! நம்பர் ஒன் கிரிமிலான அதானி உலக நாடுகளில் முதலீடுகள் செய்ய அதிகார புரோக்கராக செயல்பட்டவர் பிரதமர் மோடி. இனி உலக நாடுகள் அதானி மீது எடுக்கும் கிரிமினல் நடவடிக்கைகளை மோடி எப்படி எதிர் கொள்வார்..? முழு விவரங்கள்:
நாடளுமன்றத்தில் அதானி மோசடிகள் குறித்து எதிர்கட்சிகள் பேச முடியாமல் தடுத்து அதானியை முழு அரசாங்க பலத்துடன் காப்பாற்றி வருகிறது பா.ஜ.க அரசு.
அனைத்து அதானி நிறுவன பங்குகளும் நேற்றைய பங்கு சந்தை வர்த்தகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்க அரசும், அமெரிக்க நாட்டு பத்திரங்கள் மற்றும் பரிமாற்றங்கள் ஆணையமும் தனித்தனியாக தொடுத்துள்ள சிவில் மற்றும் ‘கிரிமினல்’ வழக்குகளில் , அதானிக்கும் மற்றுமுள்ள அதானி குழும அதிகாரிகளுக்கும் 21 நாட்களுக்குள் பதில் தர ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து சர்வதேச நிதி தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களான ‘மூடி’ மற்றும் ‘ஃபிட்ச்’ ( Moody and Fitch ) நிறுவனங்கள் அதானி குழுமத்தின் மேல் எதிர்மறை சாயம் பூசியுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தின் நடவடிக்கை இன்ன பிற நாடுகளையும் விழித்துக் கொள்ள வழி வகுத்துள்ளது .
கென்ய அரசு அதானி குழுமத்துடன் போட இருந்த கென்யா மின்சக்தி தயாரிப்பு மற்றும் வினியோக ஒப்பந்தம், கென்யா விமான நிலைய ஒப்படைப்பு ஒப்பந்தம் ஆகியவற்றை இரத்து செய்துள்ளது.
இலங்கை அரசு , அதானி ‘கிறீன் எனர்ஜி’ (Green Energy) ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வோம் என அறிவித்துள்ளது. அதானியுடன் போட்ட கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்காவை சார்ந்த சர்வதேச அபிவிருத்திக்கான நிதி ஆணையமும் (US International Development Finance Corporation ) இதற்கான தனது ஒப்புதலை தள்ளி வைத்துள்ளது.
சுவீடன் அரசோ, அதானி சம்பந்தப்பட்ட முதலீடுகளை – சுமார் 2,000 கோடி – ஏற்கனவே என முடக்கி வைத்துள்ளது.
வங்க தேசம் அதானியின் மிரட்டலுக்கு பணிய மறுத்து ஒப்பந்தங்களை நிராகரித்து வருகிறது.
அவுஸ்திரேலியாவில் அதானியின் முதலீடுகளை மறு பரீசீலனை செய்ய கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ஆனால், இந்தியாவில் மட்டும் அதானியால் பங்கு சந்தையில் சரிவுகள் தொடர்ந்தாலும், மின் நுகர்வு கட்டணம் தாறுமாறாக கூடினாலும், அரசாங்கம் கவலைப்படுவதாக தெரியவில்லை! நாட்டின் அடிப்படை ஆதார சொத்துக்களான துறைமுகங்கள், சுரங்கங்கள், விமான தளங்கள் ஆகியவை அதானிக்கு விதிகளை வளைத்து வழங்கப்பட்டதை யாராலும் தடுக்க முடியவில்லை.
இந்தியாவில் அதானி குழும்ம் மிகப் பெரிய கோர்ப்பரேட் மோசடியை நடத்துகிறது என்ற ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை இந்திய உச்ச நீதி மன்றம் உதாசீனம் செய்தது!
உலகத் தரம் வாய்ந்த ‘ பைனான்சியல் டைம்ஸ்’ வெளியிட்ட கட்டுரையையும் , ஒருங்கிணைந்த கிரிமினல் மோசடி மற்றும் ஊழல் குறித்த (OCCRP) நிறுவனம் அதானி குழும்ம் நடத்திய பண பரிமாற்றம் மற்றும் பங்கு சந்தை மோசடியை விலாவாரியாக ஆதாரங்களுடன்தொகுத்த அறிக்கையையும் உச்ச நீதிமன்றம் கண்டு கொள்ளவில்லை.
இந்திய கண்காணிப்பு அமைப்பான செபி (Securities and Exchange Board of India – SEBI) யும் ஆய்ந்தறிந்து முன்னால் தடுக்கவில்லை.
அறிந்த பின்னர், தடுப்பு நடவடிக்கையோ, தவறிழைத்த அதானி நிறுவனங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ, முன்வரவில்லை.
இந்த நிலையில் அமெரிக்க முதலீட்டாளர்களை மோசடி செய்த குற்றத்திற்காக, பாரீன் கரப்ட் ப்ராக்டிசஸ் ஆக்ட் – அந்நிய ஊழல்நடவடிக்கைகளுக்கெதிர் சட்டத்தின்- அடிப்படையில் கிரிமினல் குற்றச்சாட்டும், அமெரிக்க பங்குச்சந்தை ஆணையமான எஸ் இ சி அமெரிக்க மக்களை ஏமாற்றும் நோக்கில் பொய் கூறி முதலீடு திரட்டிய சிவில் காரணங்களுக்காகவும் அதானி, சாகர் அதானி மற்றும் ஆறுபேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
2020-2022 காலங்களில் அதானி கும்பல் ஏறத்தாழ 250 மில்லியன் டொலர் (2200 கோடி ரூபா) இந்திய அரசியல் அதிகாரிகளுக்கு (அமைச்சர், முதல்வர் மற்றும் செயலர்) இலஞ்சம் கொடுத்து அதானி தனது நிறுவனத்திற்கு உகந்த ஒப்பந்தங்களை (power purchase agreements) பெற்றார் என்று அமெரிக்க அரசின் நீதி அமைச்சகம் குற்றம் சுமத்தி உள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளை சாதாரணமாக கூறி விடவில்லை, பல மாதங்களாக புலன் விசாரணை செய்து, ரெய்டுகள் நடத்தி , ஆதாரங்களை திரட்டி – வாடஸ் அப், இ மெயில், மற்றும் தொலை சாதன ஆதாரங்களை திரட்டிய பின்னரே, அதானி மீது இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே சாகர் அதானி மீது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி. ஐ (FBI) ரெய்டு நடத்தி, சாகர் அதானியின் கைபேசி, லாப் டாப், இ மெயில் மற்றும் பென் ட்ரைவ் போன்ற தொலை சாதன கருவிகளை கைப்பற்றி ஆராய்ந்து, ஆதாரங்களை திரட்டி உள்ளனர். இது கவுதம் அதானிக்கும் தெரியும் .
இந்த தகவலை சாகர் அதானி ஒத்துக் கொண்டு, முதலீட்டாளர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என செய்தி அனுப்புகிறார்.
ஆனால், அதானி குரூப் இத் தகவலை (எஃப்.பி.ஐ ரெய்டு பற்றிய தகவலை ) இந்திய பங்குச் சந்தை யில் (Indian Stock Exchange) சட்டப்படி முறையிட்டிருக்க வேண்டும், ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
சரி, இதைப் பற்றி ப்ளூம்பெர்க் (Blooberg) என்ற பத்திரிக்கை செய்திகளை வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து ‘எக்கனாமிக் டைம்ஸ்’ என்ற பத்திரிக்கையும் அதானி மீதான ரெய்டு பற்றியும், மோசடி குற்றச்சாட்டை பற்றியும் மிகப் பெரிய கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
ஆனால், இந்திய பங்கு சந்தை மற்றும் வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபி (SEBI) கண்டு கொள்ளவே இல்லை.
அனைத்து நாட்டு புலனாய்வு நிறுவனங்களும், பங்குச் சந்தைகளும் இந்த மாபெரும் மோசடி குரூப்பை பற்றி விசாரித்து வரும் வேளையில், இந்திய கண்காணிப்பு நிறுவனமான செபியும்,
அதன் குடுமியை தன் வசம் வைத்திருக்கும் நிதி அமைச்சகமும் அதற்கு மூலாதாரமாக விளங்கும் பிரதமர் அலுவலகமும் வாய் மூடி, கண் பொத்தி காலத்தை கடத்துவது எதனால்?
பல வருடங்களாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும், எதிர்கட்சி உறுப்பினர்கள் மகுவா மொய்த்ரா, சஞ்சய் சிங் போன்றோரும் அதானிக்காக பிரதமர் மோடி, ஓடி ஓடி அலைந்து ஓர்டர்கள் எடுப்பது பற்றியும், இந்திய சட்டங்களை (சுரங்க சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், ஒப்பந்தங்கள் மற்றும் அனுமதிகள் குறித்த விதிகள்) திருத்தி வளைத்து அதானிக்கு மோடி உதவி வருவது பற்றியும் பேசி வந்தனர். பதிலேதும் கூறாத பிரதமர் அவர்களை நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றினார். ஆனால் எந்தவித விசாரணையும் நடத்தவில்லை, பிரச்சினைகளை திசை திருப்பினார்.
இப்பொழுது அமெரிக்க நீதிமன்ற குட்டிற்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி வேடிக்கையான ஒரு கருத்தை கூறிவருகிறது. லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் மாநிலங்களான சட்டீஸ்கர், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் எதிர்கட்சிகளே ஆட்சியில் இருக்கின்றன என்கின்றனர். அப்படியானால், டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவாலையும், ஜார்கண்ட முதல்வர் ஹேமந்த சோரெனையும் கைது செய்த மோடி அரசு இவர்கள் மீது ஏன் குறைந்தபட்ச விசாரணை கூட நடத்தவில்லை? என்ற கேள்விக்கு பதில் இல்லை!
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு அமைச்சர்களோ , ”நாங்கள் அதானியுடன் நேரடியாக எந்த வர்த்தக உறவோ, உடன்பாடோ செய்யவில்லை, ஒன்றிய அரசு நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம், இதில் எங்கு முறைகேடு இருக்கிறது” எனப் பேசுகின்றனர்.
ஒன்றிய அரசின் நிறுவனமான சூரிய ஒளிசக்தி நிறுவனமான Solar Energy Corporation of India (SECI), அமைப்பு , எங்கள் மீது அமெரிக்க நீதிமன்றமும், புலனாய்வு அமைப்பும் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என்கின்றது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இப்படி ‘கண்ணா மூச்சி‘ ஆட்டம் ஆடுவதால் அமெரிக்காவில் தொடுக்கப்பட்ட வழக்கு நீர்த்துப் போய்விடுமா? அல்லது, அபராத தொகையை அதானியை கட்ட வைத்து வழக்கை இழுத்து மூட முயற்சிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.
SECI என்ற ஒன்றிய அரசின் நிறுவனம் , இந்தியாவில் ‘ஃபாசில் எனர்ஜி’ (Fossil energy) எனப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் எரி சக்தி, புவி வெப்படைவதை துரிதப்படுத்துவதாலும் சுற்றுப்புற சூழலுக்கும் மனித குலத்திற்கும் தீங்கு ஏற்படுத்துவதாலும்
அவற்றை தவிர்த்து மாசு ஏற்படுத்தாத சூரியொளி சக்தி யை உபயோகிப்பதை ஊக்கப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும். இத்தகைய ‘கிரின் எனர்ஜி’யின் உற்பத்தியை பெருக்குவதும், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதுமே SECI இன் நோக்கமும் செயல்பாடும் ஆகும்.
ஆனால் மோடி யின் ஆட்சியில் சூரியொளி சக்தியை அதானி குரூப் மட்டுமே உற்பத்தி செய்யும் என்ற நிலையை ஏற்படுத்த அவரது குரூப் நிறுவனங்களான அதானி ‘கிரின் எனர்ஜி’, ‘அஜூர் எனர்ஜி’ என்ற இரு நிறுவனங்களுக்கு மட்டுமே சுமார் 12 ஜிகாவாட் எரிசக்தி தயாரித்து அளிக்க செசி (SECI) ஒப்பந்தம் போட்டுள்ளது . இந்த ஒப்பந்தம் LOA (Letter of Allowance) எனப்படும்.
ஒன்றுமில்லாமல் வெறுங்கையை வீசிக் கொண்டு, அதானிக்கு மோடி அரசு இந்த அனுமதியை -LOA- கொடுத்துள்ளது. இந்தியாவில் வேறு நபர்களே சூரியொளி சக்தி தயாரிக்கவே இல்லையா?
அப்படி தயாரிக்கப்படும் எரிசக்தியின் விலையை அதானி தன் இஷ்டப்படி கூட்டி வைத்துள்ளார். இத்தகைய விலை தான் அதிக இலாபத்தை அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தரும் என முதலீட்டாளர்களிடம் கூறி, தனக்கு அளிக்கப்பட்ட அனுமதியான LOA வை காட்டி அமெரிக்க முதலீட்டாளர்களிடம் பணம் திரட்டி உள்ளார்.
அடுத்து சட்டத்திற்கு புறம்பாக மாநில அரசுகளை – மாநில அரசுகளின் மின் உற்பத்தி மற்றும் வினியோக நிறுவனங்களை- செசி அமைப்பிடம் தான் சூரியொளி சக்தியை வாங்க வேண்டும் என்ற அழுத்தத்தை கொடுக்கிறது. அதுவும், அதிக விலை கேட்கும் அதானி நிறுவனத்திடம் வாங்க வற்புறுத்துகிறது.
அதிக விலைக்கு மின்சக்தியை வாங்கும் இந்த திட்டத்தை எதிர்ப்பவர்களை சமாளிக்க அதானியே நேரில் செல்வார். வழங்க வேண்டியதை வழங்கி சம்மதமும் பெறுவார். ஆனால் வழங்குபவரும், வாங்குபவரும் கையெழுத்திட மாட்டார்கள். ஏனெனில், ஒப்பந்தம் அவர்கள் பெயரில் இல்லை.
அது ஒன்றிய அரசின் செசி (SECI) அமைப்பிற்கும் மாநில அரசுகளின் discom என்றழைக்கப்படும் மின் வினியோக நிறுவனங்களுக்கும் இடையிலான Power Purchase Agreement எனப்படும்.
மத்திய அரசின் செபி என்பது அதானியிடமிருந்து அதிக விலைக்கு எரிசக்தியை வாங்கி, மாநில அரசுகளின் மின்வினியோக அமைப்புகளுக்கு அதிக விலையில் விற்க உதவும் புரோக்கர் என்பது இதிலிருந்து விளங்கும்.
இந்த புரோக்கரை நம்பி மோசம் போனது மாநில அரசுகள் அல்ல , மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதல்வர்கள் மோடியின் கடைக் கண்ணில் விழுந்து பெற வேண்டியதை பெற்றுக் கொண்டனர்.
மோசம் போனது அப்பாவி பொது மக்களே!
ஜம்மு காஷ்மீரில் அப்பொழுது இருந்தது பா.ஜ.க (குடியரசு தலைவர் ஆட்சி) ஆட்சி தான்! எனவே, வாதங்கள் எதுவும் எடுபடாத நிலையில், இன்று அம்பலப்பட்டு நிற்கும் அதானியின் மோசடியில் மோடியின் கைங்கர்யம் அம்மணமாக தெரிகிறது !
மகாராஷ்டிர தேர்தல் வெற்றி போன்ற பாவனைகள் தம்மை காப்பாற்றும் என மோடி நினைப்பதில் வியப்பில்லை.
இந்தச் சிக்கலில் இருந்து மீள மோடியும், அதானியும் என்ன விலை அமெரிக்காவிற்கு கொடுப்பார்கள் என்பது பெரிய புதிராக உள்ளது. அதானியை கழட்டிவிட மோடியால் முடியாததால் அமெரிக்காவிடம் என்ன விலையையும் கொடுக்க இவர்கள் தயார்.
இந்திய மக்கள் இதற்கு தயாரா? என்ற கேள்வி எழுகிறது.
மின் உற்பத்தி தேவைக்கான வெளிநாட்டு நிலக்கரியை அதானி மூலமே வாங்க வேண்டும் என ஒன்றிய அரசு கூறியது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்கவில்லை,
அதானி நிலக்கரியை கப்பலில் கொண்டுவரும்பொழுதே அதன் மதிப்பை இரட்டிப்பாக்கி போலி இன்வாய்ஸ் மூலம் மாநிலங்களை கொள்ளையடித்தார். தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் எதிர்க்கவில்லை,
போட்ட ஒப்பந்தத்தை மீறி, போலியான விலை ஏற்றத்தை காரணங்காட்டி அளிக்கப்படும் மின்கட்டணத்தை அதானி கூட்டி கொள்ளையடித்தார் மாநில அரசுகள் எதிர்த்தன, ஆனால் உச்ச நீதிமன்றம் அதானிக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது, மக்கள் கேள்வியே கேட்கவில்லை,
மோசடிகளுக்கு எதிராக கேள்வி கேட்காத அரசும், மக்களும் எதை தான் பெற்றுக் கொள்வர்?