எம்.எஸ்.ஸைக் கொண்டாட வழிகோலிய டி.எம்.கிருஷ்ணா
–பெருமாள்முருகன்
சென்னை மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் இசைக்கலைஞர் ஒருவருக்கு வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை இவ்வாண்டு கருநாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு 2024 மார்ச் மாதம் அறிவித்தது. அதுமுதல் ஏழெட்டு மாதங்களாக அவருக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு செயல்களும் கருத்துரிமைக்கு எதிரானவையாக இருக்கின்றன.
இசைக்கலைஞராகத் தம் தொழிலை மட்டும் பார்த்துக் கொண்டிராமல் அரசியல், இசை, சாதி, மொழி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளில் தம் கருத்தைப் பேச்சாகவும் எழுத்தாகவும் வெளிப்படுத்துபவராகக் கிருஷ்ணா உள்ளார். அவர் கருத்துக்கள் ஆதிக்கத்தின் எல்லாத் தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றை விவாதிக்கும் மனநிலையும் சகிப்புத்தன்மையும் அற்றவர்கள் அவரது கருத்துரிமையைப் பறித்து வெவ்வேறு வகைகளில் நெருக்கடி தந்து கொண்டேயிருக்கின்றனர். ஆதிக்கத்திற்கு எதிரான கருத்தை முன்வைப்பவரைப் பொதுவெளியில் இருந்து அகற்றிவிடச் சகல தந்திரங்களையும் கையாள்கின்றனர்.
சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கு ஆண்டுதோறும் ‘தி இந்து’ நிறுவனம் சார்பாகச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும்’ வழங்கப்படுகிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏற்கனவே விரிவான கட்டுரை ஒன்றை டி.எம்.கிருஷ்ணா எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் எம்.எஸ்.ஸை இழிவுபடுத்தியிருக்கிறார், அவதூறு செய்திருக்கிறார், அவருக்கு எப்படி இந்த விருதை வழங்கலாம் எனப் பரவலாகப் பேசினர். அவரது பேரன் சீனிவாசன் என்பவர் ‘என் பாட்டியை இழிவுபடுத்தியவருக்கு அவர் பெயரிலான விருது வழங்கக் கூடாது’ என்று நீதிமன்றம் சென்றார். அவ்வழக்கில் இப்போது இடைக்காலத் தீர்ப்பு வந்திருக்கிறது.
கிருஷ்ணா எழுதிய அக்கட்டுரை ஓர் இசைக்கலைஞரைப் பற்றிய அரிய ஆய்வு. இலக்கியத் திறனாய்வில் படைப்புக்கும் எழுத்தாளரின் வாழ்வுக்கும் உள்ள தொடர்பைக் குறித்து ஆய்வு செய்வது ஓர் அணுகுமுறை. அதை இசைக்கலைக்கு அற்புதமாகப் பொருத்தியிருக்கிறார். எம்.எஸ்.ஸின் ஆளுமை பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. அதை முழுமையாகத் தம் இசையில் அவரால் வெளிப்படுத்த முடிந்ததா என்பதைத்தான் கட்டுரை ஆராய்கிறது. அவர் பாடிய இசையே முதன்மை ஆதாரம். அவர் இசையைத் தொடர்ந்து கேட்டு அவற்றில் வெளிப்படும் கலை மேன்மையை அல்லது வெளிப்படத் தவித்து அடங்கிச் செல்லும் நிர்ப்பந்தத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து அதற்கான காரணத்தை எம்.எஸ்.ஸின் வாழ்வில் தேடுகிறது கட்டுரை.
அவர் வாழ்வை மூன்று கட்டங்களாகப் பகுத்து ஒவ்வொன்றிலும் எப்படிப் பாடினார், தேர்வு செய்த பாடல்கள் எத்தகையவை, அதற்கான பின்னணிக் காரணங்கள் எவை என தர்க்கமும் அழகும் கலந்த மொழியில் கட்டுரை விவரிக்கிறது. கருநாடக சங்கீத உள் உலகில் பேசப்படும் பல்வேறு அபிப்ராயங்களையும் கட்டுரை எடுத்து விவாதிக்கிறது. அவை வாய்மொழிச் சான்றுகள். கிருஷ்ணாவும் பாடகராக இருப்பதால் அவற்றை எல்லாம் திரட்ட முடிந்திருக்கிறது. அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தி, அவை வெளிப்படுவதற்கான பின்னணிக் காரணத்தை நோக்கிச் சென்று தம் கருத்துக்களையும் எடுத்துச் சொல்கிறார்.
கட்டுரையில் சாதி பற்றியவையும் அவர் கணவர் பற்றிய பகுதிகளும் குடும்பத்தாருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அவற்றிலும் எந்த எல்லை மீறலும் இல்லை. பண்பட்ட மொழியில் தம் எண்ணங்களை முன்வைத்திருக்கிறார். நம் சமூகத்தில் மதம் மாறிக்கொள்ளலாம். என்ன செய்தாலும் சாதி மாற முடியாது. எம்.எஸ். பிறந்து வளர்ந்த தேவதாசிப் பின்னணியை எப்படி மறைக்க முடியும்? கணவரின் கட்டுப்பாட்டில் அவர் இருந்தார் என்பதும் கணவரே கச்சேரி அமைப்பைத் தீர்மானித்தார் என்பதும் பொதுவெளியில் சாதாரணமாகப் பேசப்படும் விஷயம்தான்.
பொதுவெளியில் போற்றப்படும் எம்.எஸ். என்னும் மாபெரும் ஆளுமையைப் பற்றிய காத்திரமான கட்டுரை இது. இந்தக் கட்டுரை தரும் புரிதலோடு எம்.எஸ்.ஸின் இசையைக் கேட்டால் இன்னும் ஆழ்ந்து அனுபவிக்கலாம். பொதுவிருப்பத்திலிருந்து விலகி அவர் பாடிய வித்தியாசமான பாடல்களைத் தேடிக் கேட்கலாம். ‘இந்தக் கட்டுரை அவருடைய நினைவை நான் அவமதிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். உண்மையில் ஆகச் சிறந்த முறையில் அவரை நான் கொண்டாடியிருக்கிறேன்’ என்று தமிழ் மொழிபெயர்ப்பு முன்னுரையில் டி.எம்.கிருஷ்ணா சொல்வதை ஆழ்ந்து வாசிப்போர் உணர்வர்.
நீதிமன்றம் தீர்ப்பு சொல்வதற்கு எம்.எஸ்.ஸை டி.எம்.கிருஷ்ணா இழிவுபடுத்தினாரா இல்லையா என்பதற்குள் செல்லவில்லை. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதை டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்குவதைப் பற்றி எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. யார் சங்கீத கலாநிதி விருது பெறுகிறார்களோ அவருக்கு ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ். சுப்புலட்சுமி விருது’ என்னும் ஒருலட்சம் ரூபாய் பணப் பரிசு பற்றிப் பேசுகிறது.
எம்.எஸ்.ஸின் உயிலில் தம் பெயரில் எதையும் செய்வதை விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் அவர் விருப்பத்தை மதிக்கும் பொருட்டு அவர் பெயரைப் பயன்படுத்தாமல் பணப்பரிசை வழங்கலாம் என்று தீர்ப்பு சொல்கிறது. இந்து நிறுவனம் வழங்கும் விருதின் பெயர் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்னும் பெயரிலானது. மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருதையும் அதைப் பெறுபவருக்கே இந்து நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்பதையும் குழப்பிக் கொண்ட தமிழ் ஊடகங்கள் அனைத்துமே தீர்ப்பைத் தவறான தொனியில் செய்தியாக்கியுள்ளன.
சங்கீத கலாநிதி விருதே எம்.எஸ். பெயரிலானது எனப் புரிந்துகொண்டு ‘சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கத் தடை’ என்றே தமிழ்ச் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் சமூக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. டி.எம்.கிருஷ்ணாவுக்குச் சங்கீத கலாநிதி விருது வழங்கவே நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது எனப் பொருள்படும்படி செய்திகள் இருக்கின்றன.
நீதிமன்றம் வழக்கை எடுத்துக்கொண்ட போதும் இதே குழப்பத்துடன் செய்தியை வெளியிட்டன. ஆங்கில ஊடகங்களிலும் சில இப்படித்தான் புரிந்துகொண்டிருந்தன. விருதுப் பின்னணி பற்றிய அடிப்படை அறிதல் இல்லாததால் தீர்ப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் பற்றிய நம்பகத்தன்மையை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்விருது பற்றிய பின்னணியை இன்னும் சற்றே தெளிவுபடுத்தலாம்.
‘சங்கீத கலாநிதி’ என்பது மியூசிக் அகாடமி 1929 ஆம் ஆண்டு முதல் கருநாடக சங்கீத இசைக்கலைஞர்களுக்கு வழங்கி வரும் விருது. இதை 1968 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெற்றார். தாம் பெற்ற மதிப்பிற்குரிய விருதுப் பெயரைத் தம் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்வது பொதுவழக்கம். தமிழ்நாடு அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதைப் பலர் தம் பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வது அறிவோம். அதுபோல ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசுடன் கூடிய விருதுக்குச் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ என்று பெயர் சூட்டியுள்ளனர். 2005 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. ஆகவே மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீத கலாநிதி’ விருது வேறு; ‘தி இந்து’ நிறுவனம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வேறு. ஆனால் ‘தி இந்து’ நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்கெனத் தனியாக ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. மியூசிக் அகாடமி ஆண்டுதோறும் யாருக்குச் ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்குகிறதோ அவருக்கே தி இந்து நிறுவனம் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை’ வழங்கிவிடுகிறது. இரண்டும் ஒருவருக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பின்னணி அறியாத ஊடகங்கள் தவறான புரிதலோடு செய்தியை வெளியிட்டுள்ளன.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரை இந்து நிறுவனம் தாம் வழங்கும் விருதுக்குப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் தீர்ப்பு. இப்போது நமக்குச் சில கேள்விகள் எழுகின்றன. இதற்கு முந்தைய ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெற்றவர்களுக்கு இந்து நிறுவனம் எம்.எஸ். பெயரிலான விருதையும் வழங்கியிருக்கிறது. அவை என்னவாகும்? அதைப் பற்றித் தீர்ப்பு ஏதும் சொல்லவில்லை. முடிந்து போன விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவு செய்திருக்கலாம். இனி அடுத்தடுத்த ஆண்டுகளில் சங்கீத கலாநிதி விருது பெறுபவருக்கும் இந்து நிறுவனம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு வழங்கும்போது எம்.எஸ். பெயரைப் பயன்படுத்த முடியாது. தாம் வழங்கும் விருதின் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது வேறு பெயரில் வழங்கலாம் என்று அதற்கு அர்த்தம். இன்னொரு கேள்வியும் எழுகிறது. எம்.எஸ். பெயரில் இந்து நிறுவனம் மட்டுமல்ல, வேறு நிறுவனங்களும் விருதுகள் வழங்குகின்றன. சான்றாக தமிழ்நாடு அரசின் ‘இயல் இசை நாடக மன்றம்’ ஆண்டு தோறும் ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது’ வழங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான விருதைத் திரைப்பாடகர் எஸ்.ஜானகி பெற்றிருக்கிறார். 2020 ஆம் ஆண்டு வாணிஜெயராம் பெற்றிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய விருதுகளையும் கட்டுப்படுத்துமா? அவர் பெயரில் வெவ்வேறு நிறுவனங்கள் வழங்கும் பல விருதுகளையும் பட்டியலிட்டுள்ள இத்தீர்ப்பு அவற்றைப் பற்றி எதையும் சொல்லவில்லை. ஆனால் இந்தத் தீர்ப்பைக் குறிப்பிட்டு ‘வழங்கக் கூடாது’ என்று யாரேனும் நீதிமன்றம் சென்றால் அவற்றையும் வழங்க முடியாத நிலை ஏற்படும். அவற்றில் உள்ள எம்.எஸ். பெயரை நீக்கிவிட நேரும்.
இந்தத் தீர்ப்புப்படி டி.எம்.கிருஷ்ணாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவருக்குச் சங்கீத கலாநிதியும் வழங்கலாம். இந்து நிறுவனம் வழங்கும் பணப்பரிசையும் வழங்கலாம். ஆனால் எம்.எஸ். பெயரை இனி எந்த விருதுக்கும் பயன்படுத்த இயலாத நிலை உருவாக்கியிருக்கிறது. எம்.எஸ்.சுப்புலட்சுமி தம் உயிலில் ‘என் இறப்புக்குப் பிறகு என் பெயரில் அறக்கட்டளை, நினைவகம் அமைப்பது கூடாது. என் பெயரில் நிதி திரட்டுவதோ வழங்குவதோ கூடாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எம்.எஸ்.ஸின் விருப்பம் நிறைவேற வேண்டுமானால் இத்தீர்ப்பின் அடிப்படையில் அனைத்திலிருந்தும் அவர் பெயரை நீக்க வேண்டும். இவ்வாண்டு டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கும் சூழலில் எம்.எஸ்.ஸின் விருப்பமும் நிறைவேறுகிறது என்றே சொல்லலாம். தம் கட்டுரை மூலமாக எம்.எஸ்.ஸைக் கொண்டாடிய டி.எம்.கிருஷ்ணா இப்போது அவர் உயிலில் தெரிவித்துள்ள விருப்பத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்.
இதுவரைக்கும் எம்.எஸ். தம் உயிலில் இப்படி எழுதியிருக்கிறார் என்று பொதுவெளியில் தெரியாது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எம்.எஸ். எழுதிய உயிலில் உள்ள செய்திகள் வெளிப்பட்டுத் தம்மை முன்னிறுத்திக் கொள்ளாத அவர் ஆளுமையின் இன்னொரு பரிமாணத்தை வெளியுலகிற்கு எடுத்துக்காட்ட டி.எம்.கிருஷ்ணா வழிகோலியிருக்கிறார். இருவருமே கொண்டாடப்பட வேண்டியவர்கள்.