டிரம்ப் 2.O தொடரும் அமெரிக்க மேலாதிக்கம்

-​​​​​​​என்.குணசேகரன்

மெரிக்காவை மீண்டும் வல்லமை மிக்க நாடாக மாற்றுவோம்” (Make America Great Again) போன்ற பல செல்லாடல்கள் ஜனாதிபதியாக  தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு டிரம்ப் அடிக்கடி கூறியவை. புதிய அமெரிக்க நிர்வாகத்தின் உலகளாவிய அரசியல், பொருளாதார பாதுகாப்பு கொள்கைகளை இவை பிரதிபலிக்கின்றன. தெற்குலக நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளின் நலன்களைப் பொறுத்தவரை, டிரம்ப் நிர்வாகம் முந்தைய அமெரிக்க நிர்வாகங்களில் இருந்து பெரிதும் வேறுபடாது. பெரும் கோர்ப்பரேட் அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க பொருளாதார நலன்களுக்காக ஆசியப் பொருளாதாரங்களை அடிபணிய வைத்து மிகப் பெரும் மூலதனக் குவியல் வேட்டையைத் தொடர்ந்து நிகழ்த்தும்.

ஐ.எம்.ஃஎப் (IMF) போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரங்களை நிர்ப்பந்தப்படுத்தி சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும். அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிதி மூலதனத்திற்கு சேவை செய்வதற்கான தொடர் அழுத்தம் மூன்றாம் உலக நாடுகள் மீது நீடிக்கும். மேலும், பல ஆசிய பிராந்தியங்கள் மீதான அமெரிக்க இராணுவ கூட்டணிகளின் அச்சுறுத்தல் நடவடிக்கை அதிகரிக்கும். அது ஆசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்பை தொடர்ந்து அச்சுறுத்துவதாக அமையும்.

அனைத்து நாடுகளில் இருந்தும்  அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 20 சத விகிதம் வரையிலும், சீனாவில் இருந்து வரும் பொருட்களுக்கு 60 சதவிகிதம் வரையிலும் கூடுதல் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளான ஜப்பான், சீனா, வியட்நாம், மலேசியா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புத் துறைகள் ஆசியாவில் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

டிரம்ப்பின் மிரட்டல்

ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் ஆசிய வெளிநாட்டுக் கொள்கை, ஆசியாவில் அமெரிக்க நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும். அமேஸான், கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பல அமெரிக்க பெருநிறுவனங்கள் ஆசிய நாடுகளில் உள்ள மலிவான ஊதியம் பெறும்  தொழிலாளர் உழைப்பைச் சுரண்டி பெரும் வணிகத்தைச் செய்து வருகின்றன. மலேசியாவில் மைக்ரோசாஃப்ட் 2 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலும் மற்றும் சிங்கப்பூரில் அமேஸான் 9 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிலும் மூலதனத் திட்டங்களை தற்பொழுது நடத்தி வருகின்றன.

பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா) மாற்று நாணயம் ஒன்றை  உருவாக்க முயற்சித்து வரும் நிலையில், அது கூடாது என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அவ்வாறு செய்தால் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் நாடுகள் உலக வர்த்தகத்தில் மேலாண்மை செலுத்தும் அமெரிக்க டொலரைச் சார்ந்திருப்பதில் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு பொதுவான நாணயம் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையில் வர்த்தகத்தைப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் மாற்ற உதவும்.

உலக நெருக்கடிகள் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்க வெறி கொண்ட வெளிநாட்டுக் கொள்கைகள் பிரிக்ஸ் நாடுகள் உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்றன. தங்கள் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மற்றும் டொலர் மேலாதிக்கத்தில் ஏற்படும் ஆபத்துக்களை தவிர்க்கவும் அவர்கள் மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டியிருக்கிறது. எனவே, அவர்கள் மாற்று நாணயம் பற்றி விவாதிக்கின்றனர். இந்த முயற்சி இன்னும் விவாத நிலையிலேயே உள்ளது. பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதார இறையாண்மையை தொடர்ந்து அச்சறுத்தலுக்கு உள்ளாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இராணுவ மேலாதிக்கம்

ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணிகள் டிரம்ப் நிர்வாகத்தின் கீழும் தொடரும். டிரம்ப் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தோ-பசிபிக் நாடுகள் பற்றிய அணுகுமுறையில் ஒத்த கருத்து கொண்டுள்ளனர். புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது “அமெரிக்க நலனுக்கே முதன்மை முக்கியத்துவம் (“America First”) என்ற புவிசார் அரசியலை முன்னெடுப்பார்.

இந்தோ-பசிபிக் பாதுகாப்புக் கூட்டாளிகளான அவுஸ்திரேலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் டிரம்ப் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்க நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும்.

தனது முதல் பதவிக்காலம் போல, 2019 இல் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை சீனாவை எதிர்க்கும் வகையில் இராணுவக் கூட்டணிகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் முயற்சி செய்யும். கடந்த வாரம் தெற்காசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தெற்கு கொரியா மற்றும் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர்கள், தனியாக அமெரிக்க இராணுவக் கூட்டணி உறவுகளை மேம்படுத்த கலந்துரையாடினார்கள்.

பைடன் நிர்வாகம் 2021 இல் அவுஸ்திரேலியா-பிரித்தானியா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டணியை பலப்படுத்தி வந்துள்ளது. அதன் பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உற்பத்தி மற்றும் அதிவேக தொழில்நுட்ப ஆய்வுகளுக்கான வழிமுறைகளை உருவாக்கியது. அமெரிக்க நிர்வாகம் சீனாவை எதிர்ப்பதற்கு இந்த இராணுவ ஒப்பந்தங்களை மேலும் முன்னெடுக்கும்.

ஏழை நாடுகளுக்கான மாற்று

அமெரிக்காவின் தாய்வான் கொள்கைகளில் மாற்றங்கள் பற்றி பரவலாக கருத்துகள் இருந்தாலும், முதல் டிரம்ப் மற்றும் பைடன் நிர்வாகங்கள் மேற்கொண்ட கொள்கைகளை டிரம்ப் தொடர்ந்து பின்பற்ற இருக்கிறார். தாய்வானுக்கான அமெரிக்கப் பாதுகாப்பு உதவிகள், பெரும் நிதி உதவிகள் தொடரும். இது சீனா மற்றும் தாய்வான் இடையிலான பதற்றத்தை மேலும் தூண்டி, பிராந்தியத்தின் பாதுகாப்பை மேலும் ஆபத்துக்கு உள்ளாக்கும்.

நீண்ட காலமாக அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணிகள் ஆசிய பிராந்தியத்தில் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும். ஆயுத விற்பனை ஏழை நாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்டை பெருமளவு அதிகரிக்கச் செய்யும். இதன் விளைவாக மக்கள் நல்வாழ்வுக்கான செலவினங்கள் குறைந்து மக்களின் வாழ்வாதார வீழ்ச்சி அதிகரிக்கும்.

இரண்டாவது முறை ஜனாதிபதியாக டிரம்பின் ஆட்சிக் காலத்தில் இந்த நாடுகள் அனைத்து வகைகளிலும் சுரண்டல், இராணுவ மோதல் கொள்கை கொண்டதாகவே அமையும். இவை ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பை பெரிதும் பாதிக்கும். இதனால் ஏழை நாடுகள் மாற்று வழிகளைத் தேட வேண்டியிருக்கும். ஏகாதிபத்திய எதிர்ப்பை மையமாகக் கொண்டு நாடுகளிடையே ஒத்துழைப்பு, கூட்டமைப்பு, உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துதல் மற்றும் மனித மூலதனம் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற உள்நாட்டு வளங்களில் முதலீடு செய்வது போன்றவையே ஆசிய நாடுகள் பயணிக்க வேண்டிய மாற்று வழிகளாக அமைந்துள்ளன.

Tags: