சிதைந்து அழியுமோ சிரியா?
சிரியாவில் திடீரென்று கடந்த சில வாரங்களில் மீண்டும் கலகத்தைத் துவக்கிய பயங்கரவாத அமைப்புகள் மின்னல் வேகத்தில் முன்னேறி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.
இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட கால திட்டமிடலின் வெற்றியாகும். மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா என பல நாடுகளை சீரழித்த அமெரிக்கா, சிரியாவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீண்ட காலமாக முயன்று வந்தது.
சிரியாவில் 2000 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பஷார் அல் அசாத், சீர்திருத்தவாதியாக காட்டிக் கொண்ட போதிலும், பின்னர் அதிகாரபோக்கைப் பின்பற்றினார். அலாவைட் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அசாத், சிரியாவின் பன்முக சமூகத்தை ஒருங்கிணைத்து வைத்திருந்தார். இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாடு, ஈரான், ரஷ்யா உடனான நட்புறவு ஆகியவை அமெரிக்காவுக்கு எதிரான அவரது நிலையை வலுப்படுத்தின.
இந்நிலையில், அமெரிக்கா தனது நோக்கங்களை நிறைவேற்ற ஐ.எஸ் (IS) போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி, ஆயுதங்கள் வழங்கி ஊக்குவித்தது. ஐஎஸ்-ன் கொடூரங்கள் சிரியாவை உடைக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டன. இந்த அமைப்பு ஈராக்கில் இருந்து சிரியாவுக்குள் ஊடுருவி, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்க ளை கொன்று குவித்தது.
லிபியா, ஈராக் போன்ற நாடுகளில் மேற்கத்திய சக்திகளின் உத்தி வெற்றி பெற்றது. ஆனால் சிரியா வில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளின் ஆதரவுடன் அசாத் ஆட்சி நீண்டகாலம் நிலைத்து நின்றது. ரஷ்யாவின் விமானத் தாக்குதல்கள் ஐ.எஸ்-ஐ பெருமளவு அழித்தன. ஈரானிய ஆலோசகர்களும், ஹிஸ்புல்லா போராளிகளும் தரைப் படையாக செயல்பட்டனர். இதனால் அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்தது.
ஆனால் இன்று சிரியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம் பல புதிய காரணிகளால் சாத்தியமானது. ரஷ்யா உக்ரைன் போரில் சிக்கியுள்ளது; ஈரான் இஸ்ரேல் மோதலில் ஈடுபட்டுள்ளது; ஹிஸ்புல்லா லெபனானில் முடக்கப்பட்டுள்ளது; துருக்கியின் சூழ்ச்சிகரமான ஆதரவு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்துள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது நீண்டகால திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
13 ஆண்டு கால போரின் விளைவுகள் மிகக் கொடூரமானவை. 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 70 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர். நாட்டின் உள்கட்டமைப்பு முற்றிலும் அழிந்துள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தின் விளைவுகள் கவலை அளிப்பவை. மத்திய கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கம் மேலும் வலுப்பெறும்.
சிரியாவின் இறையாண்மை கேள்விக்குறியாகும்; குர்திஷ் மக்களின் சுயநிர்ணய உரிமை மீண்டும் மறுக்கப்படும்; சிரியாவின் எதிர்காலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைகளில் சிக்குவதை தடுக்க, உலக தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது.
-தீக்கதிர் தலையங்கம்
2024.12.08