பேதங்கள் ஏதுமற்ற பாவலன் பாரதி

-ரவி சுப்பிரமணியன்

பாரதி கடையத்தில் வாழ்ந்தபோது ஒரு நாள், அங்கிருந்த ராமசாமி கோயில் வாசலில் மாலை ஐந்து மணிக்குத் தாம் பிரசங்கம் செய்ய இருப்பதாகவும், அந்த நேரத்தில் கிராமத்தார் வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால், கோயில் கிணற்றில் தண்ணீர் எடுக்கவந்த பெண்களைத் தவிர, ஒருவரும் வரவில்லை.

அப்​போது, பாரதி​யாரிடம் பேச வரும் முகமதிய நண்பர்கள் கடையத்​துக்கு அருகேயிருந்த பொட்டல்​புதூருக்கு வந்து பேசுமாறு அழைத்​தனர். அதேவேளை, “எங்களவர்​களுக்கு உங்கள் பெருமைகள் தெரியாது. தவிர, நீங்கள் ஹிந்துவாக வேறு இருப்​பதால் உங்கள் போதனைகளை அவ்வளவு சகஜமாக ஏற்றுப் பொறுமை​யாகக் கேட்க மாட்டார்கள். அதனால், இஸ்லாம் குறித்துக் கொஞ்சம் சொல்லி​விட்டுப் பேசத் தொடங்​குங்கள்” என விண்ணப்​பித்​துக்​ கொண்​டுள்​ளனர்.

பாரதியும் அவ்வேண்​டுகோளை ஏற்று, பொட்டல் ​புதூரின் முகமதியச் சங்கம் ஒன்றில், அன்று தாம் எழுதிய அல்லா குறித்த பாடலைப் பாடிவிட்டு, ‘இஸ்லாம் மார்க்​கத்தின் மகிமை’ என்கிற தலைப்பில் பேசியுள்​ளார். பேசிய​வற்றை உடனே எழுதி ‘சுதேசமித்திரன்’ பத்திரி​கைக்கும் பிரசுரத்​துக்காக அனுப்​பி​யுள்​ளார்.

இந்து – முஸ்லிம் ஒற்றுமை குறித்து, ‘ஹிந்து முஹம்மதிய ஸமரஸம்’ என்கிற இன்னொரு கட்டுரை​யில், “தேசியக் கல்வியில் முஹம்​ம​தியர் எத்தனைக்​கெத்தனை சேர்ந்து உழைக்கிறார்களோ, அத்தனைக்​கத்தனை அம்முயற்சி அதிகப் பயனடை​யும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடையத்தில் பாரதி, சாதிப் பிரதிஷ்டம் செய்யப்பட்ட பிறகு, அவ்வூரில் இருந்த அவரது நெருங்கிய நண்பரான நாராயணனுடன் சாதி பேதங்கள் தொடர்​பாகப் பேசிக்​ கொண்ருந்​திருக்​கிறார். பாரதியைத் தர்க்​கத்தில் நாராயணனால் வெல்ல முடியவில்லை. வாய்க்கு வந்தபடி கடுமை​யாகப் பேசிவிடு​கிறார். கடையத்தில் இருந்த ஒரே நண்பரிடமும் நாம் விரோதித்​துக்​கொண்டு​விட்டோம் என பாரதி சென்னைக்குச் சென்றார்.

ஆர்யாவுடனான நெருக்கம்:

பாரதி சென்னைக்குத் திரும்​பியதும் அப்போது சைதாப்​பேட்​டையில் இருந்த தன் தம்பி விஸ்வ​நாதன் வீட்டில் சில நாள்கள் தங்கி​னார். பின்னர், ஜார்ஜ் டவுன் எர்ரபாலு செட்டித் தெருவில் இருந்த ‘சுதேசமித்​திரன்’ அலுவல​கத்​துக்குச் செல்ல ஏதுவாக, அதன் அருகில் இருந்த தம்புச்​செட்டித் தெருவில் கொஞ்ச காலம் வசித்தார். காற்றோட்டம் இல்லாத சிறிய அறை, சாக்கடை நாற்றம் போன்ற​வற்றைப் பொறுக்க முடியாமல் அதைக் காலி செய்​து​விட்டு, மயிலாப்பூர் ஹரிஹர சர்மா வீட்டுக்கு வந்து சில நாள்கள் தங்க, பின் அதுவும் சரிவராமல் போனது.

வேறு நல்ல வீடு கிடைக்​கும்வரை தன் வீட்டில் இருக்​குமாறு சுரேந்​திரநாத் ஆர்யா விடுத்த அழைப்பின் பேரில், கடைசியில் அவர் வீட்டுக்குச் சென்று தங்கி​னார். சென்னை தனக்கோடி நாயுடு எத்திராஜ் என்கிற சுரேந்​திரநாத் ஆர்யா ஒரு சுதந்​திரப் போராட்ட வீரர். தெலுங்குப் பேச்சாளர்.

பாரதிக்கு நெருங்கிய நண்பரான இவர், பாரதியின் மறைவுக்குப் பிறகு, பாரதியின் குடும்பத்​துக்குப் பலவிதங்​களில் உதவிசெய்​தவர். பின்னாளில் சுயமரியாதை இயக்கத்தின் ஈ.வெ.​ராவோடும் நெருங்கிப் பழகியவர். அவர் அமெரிக்கா​வுக்குப் போய்ப் படித்து​விட்டு, அங்கு தான் காதலித்த சுவிட்​சர்​லாந்தைச் சேர்ந்த மார்த்​தாவைத் திருமணம் செய்து​கொண்டு டேனிஷ் மிஷன் பாதிரி​யாராக சென்னைக்குத் திரும்பி, வேப்பேரி ரண்டல்ஸ் ரோடில் ஒரு பெரிய பங்களாவில் வசித்து வந்திருக்​கிறார்.

ஆர்யா வீட்டில் சமையல் செய்த பட்லர் ஆதிதி​ராவிட கிறிஸ்​துவர். அவ்வளவு ஆச்சாரங்கள் நிறைந்த அந்தக் காலத்​தில், பாரதியும் அவருடைய மகள் சகுந்​தலாவும் மட்டும் அங்கு சாப்பிட்​டுள்​ளனர். சகுந்​தலாவைத் தங்கள் மகள்போல் பாவித்துப் பாசம் கொண்டிருந்​திருக்​கின்றனர் ஆர்யா தம்பதி​யினர்.

பாரதியார் வேப்பேரியில் வசித்துவந்த சமயம், புரசை​வாக்​கத்தில் அவரின் நண்பரும் வீட்டுப் பிள்ளை போலப் பழகிய​வரும் கால்நடை மருத்துவச் சாலையில் அப்போது படித்து வந்தவருமான பூவராகன், ஓய்வு நேரத்தில் பாரதி வீட்டுக்கு வந்து தேவையான சாமான்களை வாங்கித் தந்து உதவுபவராக இருந்​துள்ளார். ஒரு நாள் அவர் சகுந்தலாவை உலாவ அழைத்​துப்​போய்த் திரும்​பு​கை​யில், சட்டென அவரை அவரது நண்பர் ஒருவர் மறித்து பேசத் தொடங்க, சகுந்தலா சற்றுத் தள்ளி ஓரமாய் வந்து நிற்க, அங்கே பலகாரம் சுடும் முதிய பெண் ஒருவர் அவரிடம்,

“குழந்தை, நீங்கள் பிராமணாளா?”

“ஆமாம்.”

“ஐயோ பாவமே! கையில் காசில்​லாத​படியால் வேதத்தில் சேர்ந்​து​விட்​டீர்​களாக்​கும். இப்படித்தானே குடிகெட்டுப்​போச்சு” என்று சொல்லிக் கண்ணீர்​விட்​டா​ராம். “கிறிஸ்துவப் பாதிரியார் வீட்டில் வறுமையின் காரணமாகப் பிராமணர்கள் வந்து குடியிருக்​கிறார்கள் எனவும் வறுமையின் கொடுமையால் பல குடும்பத்தார் மதம் மாறியதைக் கண்டு, நாங்களும் அப்படி மதம் மாறிய​வர்கள் எனவும் நினைத்து, அவ்வாறு சொல்லி​விட்டார் போலும் அம் மூ​தாட்டி” என்கிறார் சகுந்தலா பாரதி.

கனகலிங்​கத்தின் நண்பரான அந்துவேன் அர்லோக், பாரதி​யாருக்கு பிரெஞ்சு மொழி கற்பித்​ததோடு பிரெஞ்சு லத்தீன் முறை இசையையும் கற்பித்​தவர். அந்துவேன் அர்லோக் சொல்லித் தந்த பிரெஞ்சு விடுதலைப் பாட்டான ‘லா மார்சி​யேஸ்’ போன்றே அமைப்பு​கொண்ட ‘ஜயமுண்டு மனமே’ என்கிற பாடலை பாரதி எழுதி​யுள்​ளார்.

பாரதியின் மற்றொரு நண்பர் ஜேம்ஸ் சாமுவேல் பாரதி​யாருக்கு வயலின் இசைத்​தவர். கனகலிங்கம், அந்துவேன் அர்லோக், ஜேம்ஸ் சாமுவேல் ஆகிய மூவரும் தொடக்​கத்தில் பாரதியை அழைத்துக் கூட்டம் நடத்தி, அரசால் தண்டனை பெற்றவர்கள்.

இந்த நிகழ்ச்சியை நினைவு​கூரும் கனகலிங்கம், “பாரதி​யாரின் சாதி வித்யாசப் பிரசங்கத்​தை​யும், அபராதம் கொடுத்த பின்விளைவையும் இன்று நினைத்துப் பார்க்கும்போது ஏதோ ஒரு துளியாவது பாரதி​யாரின் துயரத்தில் கலந்து​கொள்ளும் பாக்கியம் கிடைத்ததே என்றுதான் தோன்றுகிறது” என்கிறார்.

அந்துவேன் அர்லோக், ஜேம்ஸ் சாமுவேல் முதலான தாழ்த்​தப்​பட்​ட​வர்கள் ஐவர் 1914 ஆம் ஆண்டு உலகப் போரில் பங்கேற்கச் சென்ற​போது, அவர்கள் ஐவருக்கும் பாரதியார் தன் வீட்டில் உணவளித்​தார்; சாமுவேல் தண்ணீரைத் தூக்கிப் பருகும் முயற்​சியில் மேலெல்லாம் சிந்திக்​கொண்​ட​போது, பாரதியார் அவரிடம் வழக்​கம்​போல் பருகச் சொல்லி​யிருக்​கிறார். உணவு பரிமாறிய செல்லம்​மாளை, உண்ட பின் எல்லாருடைய இலைகளையும் எடுக்கப் பணித்​தார்.

தாழ்த்​தப்​பட்​ட​வர்கள் தம் பெயருக்குப் பின்னால் விருப்​பம்போல் ஐயர், ஐயங்கார், செட்டி​யார், நாயுடு போன்ற சாதிப் பெயர்களை வைத்துக்​கொண்​டால், சாதிக் கெளரவம் பறந்து​ போய்​விடும் என்று கூறுகிறார். தாழ்த்​தப்​பட்​ட​வர்​களைக் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் காலத்தில் ‘கோவில் திருத்தம்’ என்கிற பெயரில் துண்டு அறிக்கை ஒன்றை பாரதியார் வெளியிட்​டிருக்​கிறார்.

பாரதி பல தருணங்​களில் பல மொழிகளைக் கற்றதாகச் சொல்லும் சகுந்தலா, “என் தந்தையின் முகமதிய நண்பர் ஒருவர் குரானைத் தமிழில் மொழிபெயர்த்துத் தருமாறு கேட்டுக்​கொண்​டதற்கு இணங்க குரானை நன்றாகப் படித்து மொழிபெயர்க்​கவும் ஆரம்பித்​தார்” என்கிறார்.

அந்த வேளையில், அரபியில் உள்ள எழுத்து​களின் உச்சரிப்பை அதன் முறை தவறாது சொல்வதற்காக பாரதியார் திரும்பத்​திரும்பச் சொல்லிப் பழகுவார் என்றும், அருகிருந்து கேட்பவர்​களுக்கு அது மிக வேடிக்கையாக இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார். கூடுதலாக, ஹிந்​துஸ்​தானி​யில், ‘மக்கேக்கோ ஜாயங்கே. மன்னு காயங்கே – ஹாரே நூர்ஜிஹான்’ என்று ஒரு பாட்டின் முதலடியைப் பாடுவார். அது அவர் இயற்றியதா, இல்லை வேறுயாரும் இயற்றிய​தாவென எனக்குத் தெரியவில்லை” என்கிறார் சகுந்தலா பாரதி. ‘ஜாதி மதங்களைப் பாரோம்’ என்று தாம் இயற்றிய வரிகளுக்குத் தம் ​வாழ்வால் அர்த்தம் எழுதிய ​பாரதி, எழுதுபவர்​களுக்கு எல்லாம் சொல்லாமல் சொன்ன செய்​திகள்​தான் இவையும்​.

Tags: