மக்களுக்காக ஆட்சியல்ல! ஆட்சிக்காக மக்கள்!

– சாவித்திரி கண்ணன்

ரே நாடு, ஒரே தேர்தலை சாத்தியமாக்கிவிடும் பட்சத்தில் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கடவுள், ஒரே கலாச்சாரம், ஒரே இசை, ஒரே பாஷை, ஒரே கல்வி, ஒரே பாட திட்டம், ஒரே மனு நீதி சட்டம் எனப் படிப்படியாக நம்மை விழுங்க திட்டமிடுகிறது, இந்த பா.ஜ.க அரசு. முழு விபரம்;

சர்சைக்குரிய ஒரே நாடு ஒரே தேர்தல்  மசோதாவை நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பா.ஜ.க அரசு இன்று (17.12.2024) தாக்கல் செய்தது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வால் இந்த மசோதவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்தார். இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சி எம்பிக்களும் வலுவாக எதிர்த்தனர்.

முன்னதாக கடந்த 2023 செப்டம்பரில், பிரதமர் மோடியின் பா.ஜ.க அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்திற்கான சாத்தியக் கூறுகளை ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்தது.

இந்தக் குழு மார்ச் 2024 இல் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து தனது விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது.

இன்றைய தினம் (17.12.2024) பாராளுமன்றத்தில் இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் நாட்டின் நலன் கருதி இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தினர். அதே நேரத்தில் பா.ஜ.க அல்லாத தெலுங்குதேசம், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், ஜேடியூ, ஜேடிஎஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தன. நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற 3 இல் 2 பங்கு பெரும்பான்மை தேவை. இந்தப் பெரும்பான்மை இல்லை என்பது பா.ஜ.க கூட்டணி அரசுக்கு நன்கு தெரிந்த போதிலும், துணிந்து முயன்றனர்.  தற்போதைய வாக்கெடுப்பு என்பது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி விரிவான விவாதம் நடத்த விரும்பும் பிரதமர் மோடியின் ஆணைக்கேற்ப நடக்கிறது என்றார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

இதனையடுத்து இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த வாக்கெடுப்பின் போது, எம்பிக்கள் 92 எம்.பிக்களின் முன் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் முறை, பதிவு வாக்குச் சீட்டு முறை என இரு வழிமுறை கடைபிடிக்கப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றால் சபையில் 3 இல் 2 பங்கு ஆதரவு என்பது வேண்டும். அந்த வகையில் இன்று லோக்சபாவில் மொத்தம் 461 பேர் இருந்தனர். மசோதாவை நிறைவேற்ற 307 எம்பிக்களின் ஆதரவு என்பது வேண்டும். ஆனால், இன்றைய வாக்கெடுப்பில் 269 எம்பிக்கள் மட்டுமே ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக, 198 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கட்சிகள் பலவீனமாக இருந்தாலும் பலமாக எதிர்த்தனர்.

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா மிக தீவிரமாகவும், அறிவார்ந்த வகையிலும் தன் எதிர்ப்பை பதிவு செய்தார். கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசன் வலுவாக எதிர்த்து பேசினார்.

”மத்திய அரசுக்கு அருதி பெரும்பான்மை கிடைக்காமல் நாடாளுமன்றம் கவிழும் நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்துவீர்களா…? ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் உங்களால் நாடாளுமன்ற தேர்தலை கூட ஒரே கட்டமாக நடத்த முடியவில்லை. அல கட்டங்களாக  நடத்துகிறீர்கள். ஒரே தேர்தல் மசோதா அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது” என்று சமாஜ்வாதி கட்சியினர் கூறினார்கள்.  முன்னதாக அகிலேஷ் யாதவ், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்திற்கு விழும் மரண அடி’ என்றார்.

காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், ”அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வது என்பது அல்ல, உங்கள் நோக்கம். மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்சின் விருப்பம் என்பது அரசியல் சட்டத்டையே ஒழித்துவிட்டு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதாகும்” என்றார்.

தமிழ்நாட்டு கட்சிகளில் திமுக எதிர்த்தது. அதிமுக எதிர்க்கவில்லை.

இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவது என்பது 2029 முதல் எனும் பட்சத்தில் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு  பொறுப்பேற்கும் அரசாங்கம் கலைக்கப்படும். வலிந்து சட்டமன்ற தேர்தல் நம் மீது திணிக்கப்படும். இது போன்ற சூழலை இந்தியாவின் பல சட்டமன்றங்கள் சந்திக்கும்.

சரி இப்படி ஒரே நேரத்தில் எல்லா தேர்தல்களையும் நடத்தி முடிக்க வேண்டும் ஏன் இந்த ஆட்சியாளர்கள் துடிக்கின்றனர் என்றால், சர்சைக்குரிய மக்கள் விரோத சட்டங்கள் கொண்டு வரும் போது, அடுத்த சில மாதங்களில் நான்கைந்து மாநிலங்களில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதற்கு பாடம் புகட்டுகின்றனர். இப்படி ஒரு  செளகரியம் இருக்கும் பட்சத்தில் அடுத்த  ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சியாளர்கள் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி மக்களுக்கு இல்லாமல் ஆகிவிடும்.

மேலும் மத்தியில் ஒரு கட்சியின் ஆட்சி, மாநிலத்தில் ஒரு கட்சியின் ஆட்சி என இருந்தால், அந்த மாநிலங்களுக்கு நல்ல நிதி உதவிகள் கிடைக்காது, சில இழப்புகளை நீங்கள் சந்திக்க நேரும். ஆகவே, மத்திய அரசை ஆளக் கூடிய வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனம் என நமக்கு உணர்த்த நினைக்கின்றனர். ஒரே கட்சியின் ஆட்சியே மத்தியிலும், மாநிலத்திலும்  ஆட்சி அதிகாரத்தை சுவைக்க வழி வகுப்பதே ஒரே நாடு ஒரே தேர்தல்.

உண்மையில் ஒரே நேரத்தில் நாடளுமன்றத் தேர்தலைக் கூட நடத்த முடியாது என்பதே தற்போதைய யதார்த்தம். ஆறேழு கட்டங்களாகத் தான் நடக்கிறது. ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்குமான தேர்தல் என்பது நிறுத்தப்படும் மக்களுக்கு தனி நபர்களின் தராதரத்தை எடை போடுவதற்கான வாய்ப்புக்கு மாறாக கட்சிக்கான வாக்கு என்பதை மையப்படுத்தியதாக கொண்டு செலுத்தப்படும் எனத் தெரிய வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த கையோடு உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலை உடனே நடத்தி முடிப்பது. அனைத்தையும் 100 நாட்களில் செய்து முடிப்பது என திட்டமிடுகிறார்கள். இந்த வகையில் ஒரு ஆண்டின் மூன்றில் ஒரு பங்கை தேர்தல் நடைமுறைகளுக்காக மக்கள் ஒப்புக் கொடுக்க நேரிடும். தேர்தல் கமிஷனின் அதிகாரமே இந்த 100 நாட்களும் கொடி கட்டிப் பறக்கும். வியாபாரிகளுக்கு சுதந்திரமாக பணப்பரிமாற்றம் என்பது இந்த நூறு நாட்களும் சவாலானதாக இருக்கும். இந்த நூறு நாட்களும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மக்கள் கேட்டே ஆக வேண்டும். நாட்டின் அன்றாட செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சிகளை இது கண்டிப்பாக பாதிக்கும்.

மத்திய ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு, தங்கள் சர்வாதிகாரத்தை நம் மீது தடையின்றி செலுத்துவதற்கு தோதான சூழலை உருவாக்கவே இவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பிறந்தவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் சாவு அமைவதில்லை.  தலைவர் ஒருவருக்கு முன் கூட்டியே சாவு ஏற்படுமானால், அதே நேரத்தில் பிறந்த அனைவருக்கும் சாவு கட்டாயப்படுத்தப்படும். ‘இது மக்கள் தொகையை கட்டுப்படுத்தி சமப்படுத்த உதவும்’ எனச் சொன்னாலும் சொல்வார்கள், இந்த சனாதனப் பற்றாளர்கள்! மத்திய அரசின் ஆயுள் முடிவுக்கு வந்தால், மாநில அரசின் ஆயுளும் கண்டிப்பாக முடிவுக்கு வர வேண்டும். ‘ஓட்டுப் போட்டு மக்கள் தேர்ந்தெடுத்திருந்தாலும், இன்னும் மாநில அரசின் ஆயுள் முடியச் சில ஆண்டுகள் இருந்தாலும் கண்டிப்பாக மரணித்தே ஆக வேண்டும்’ என்பது எப்படி இருக்கிறதென்றால், அந்தக் காலத்தில் கணவன் இறந்தால், அவனை எரியூட்டும் சிதையில் மனைவியையும் நிர்பந்தித்து இறக்கி மரணிக்க வைத்த உடன்கட்டை ஏறும் கதை தான்.

ஏற்கனவே குலத் தொழிலை ஊக்குவிக்கும் ‘விஸ்வகர்மா’வை கொண்டு வந்துள்ளனர். ஒரே நாடு, ஒரே கல்வி என ‘தேசிய கல்வித் திட்டத்தை’ அமுல்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே இருந்த ஐபிசி, சிஆர்பிசி மற்றும் ஐஇசி ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, சமஸ்கிருதப் பெயர்களில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா, மற்றும் பாரதிய சாக் ஷியா  ஆகிய  சட்டங்கள் கொண்டு வந்த சனாதனிகளே இவர்கள்!

இது போல அழித்தொழிக்கப்பட்ட பழைய அவலங்களை எல்லாம் மீளுருவாக்கம் செய்வதை நோக்கி இவர்கள் நகர்கிறார்கள் என்பதற்கு இவையே சான்றுகளாகும்.

ஆக, இவர்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு ஆபத்தானவர்கள்! மக்களுக்காக ஆட்சி என்பதை துடைத்தெறிந்துவிட்டு, ஆட்சிக்காக மக்கள் என்பதை நோக்கி நகர்கிறது பா.ஜ.க அரசு.

Tags: