இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறும், தியாகங்களும்!
–எஸ். காசி விஸ்வநாதன்
எத்தனை தியாகங்கள், எவ்வளவு இழப்புகள், எவ்வளவு பெரும் ஆளுமைகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை திரும்பி பார்த்தால் பெரும் பிரமிப்பே ஏற்படுகிறது. ஏழை, எளிய விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற உழைக்கும் வர்க்க மக்கள் வாழ்க்கையில் கட்சி ஏற்படுத்திய தாக்கங்கள் அளவற்றவை;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் திகதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த நெடிய பயணம் என்று சொன்னாலும் அதனுடைய வேர்கள் அதற்கு முன்பே தொடங்கிவிட்டது.
கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு ஆளானது இல்லை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சட்டப் பூர்வமாக இயக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அனுமதிக்கவில்லை. கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது.
தமிழ்நாட்டில் கடந்த நூற்றாண்டில் மகாகவி பாரதி பொதுவுடைமை என்று சொல்லை அறிமுகப்படுத்தினார். ரஷ்யாவில் நடைபெற்ற போராட்டங்கள் பற்றி வ. உ. சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் எழுச்சி உரையாற்றி தொழிலாளர்களை தட்டி எழுப்பினார்கள். தொழிலாளர்களின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
முதல் உலக யுத்தத்தின் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் சிந்தனையுள்ள இளைஞர்கள் பல நகரங்களில் கம்யூனிஸ்ட் குழுக்களை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் அரசால் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டதன் காரணமாக பல இளம் புரட்சியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுதலை இயக்கத்தை தீவிர படுத்த முயன்றனர்.
இதில் முதன்மையானவர் எம். என்.ராய் 1919 இலேயே மாஸ்கோவுக்கு சென்று லெனினை சந்தித்து கம்யூனிஸ்டு அகிலத்தில் பணியாற்றிய முன்னோடி. இவருடைய மனைவி எவலின் ராய், அபானி முகர்ஜி, ரோசா எய்டிங்காஃப், முகமதுஅலி, முகமது ஷபிக், எம். பி. டி. ஆச்சார்யா ஆகியோர் கூடி தாஷ்கண்டில் 1920 ஒக்ரோபர் 17ஆம் திகதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒன்றை தொடங்கினார்கள்.
இதனைத் தான் சி.பி.எம் (CPM) கடந்த 1920 ஆம் ஆண்டே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறந்து விட்டது என்று நூற்றாண்டைக் கொண்டாடிவிட்டது.
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு 1959 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் நாள் மிகத் தெளிவாக இந்தியாவில் கட்சி பிறந்த தினத்தை இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதற்கிணங்க தெளிவுபடுத்த்தியது. இக்கூட்டத்தில் தோழர்கள் எம். பசவ புன்னையா, பி.சி.ஜோசி, இசட்.ஏ. அகமது, எஸ். ஏ. டாங்கே, பி.டி.ரணதேவ் மற்றும் ஏ.கே.கோபாலன் ஆகியோர் பங்கேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிறந்த தினம் 26. 12. 1925 என ஏக மனதாக முடிவு செய்து பி.டி ரணதேவ் கையெழுத்திட்டு பதில் அனுப்பினார்கள்.
கான்பூரில் நடைபெற்ற அமைப்பு நிலை மாநாட்டிற்கு தமிழ்நாட்டைச் சார்ந்த சிங்காரவேலர் தலைமை தாங்கினார். தலைவராக சிங்காரவேலரும், செயலாளராக எஸ்.வி.காட்டே வும் தேர்வு செய்யப்பட்டனர். ஜே.என். ஜோக்லேக்கர், ஆர். எஸ். நிம்ப்கர், முஸாபர் அகமது மற்றும் சிலர் தலைமைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அழைப்பு நிலை மாநாட்டில் கூடியவர்களுக்கும் ஒரு பின்னணி உண்டு. சென்னையில் சிங்காரவேலர் ‘இந்துஸ்தான் தொழிலாளர்- விவசாயி கட்சி’ என்று 1923 ல் தொடங்கினார். முதல் மே தினத்தையும் நடத்தினார். ‘தொழிலாளர் விவசாயி கெஜட்’ என்ற மாத இதழையும் நடத்தி வந்தார்.
எம்.என்.ராய் ‘மக்கள் கட்சி’ என்ற பெயரிலும், எஸ்.ஏ.டாங்கே ‘தொழிலாளர் சோசலிஸ்ட் கட்சி’ என்ற பெயரிலும் காங்கிரஸ் கட்சியின் உட்பிரிவாக தொடங்குவதற்கு 1922 இல் முயற்சிகளை மேற்கொண்டனர். சி.ஆர். தாஸ் தலைமையில் ‘சுயராஜ்ய கட்சி’யில் சேர்ந்து கம்யூனிஸ்டுகளில் பலர் பணியாற்றினர்.
இஸ்லாமிய புரட்சியாளர்கள் கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவர்களும் , ஹிஜ்ராத் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், கதார் கட்சியின் புரட்சியாளர்களும், பஞ்சாப், மகாராஷ்டிரா, வங்காளம், சென்னை மாகாணம்- இன்றைய கேரளம், ஆந்திரம், தெலுங்கானா – உட்பட இளம் புரட்சியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே பெஷவார் சதி வழக்கு, கான்பூர் போல்ஸ்விக் சதி வழக்கு ஆகியவை போடப்பட்டன.
1920 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏ.ஐ.டி.யூ.சி ) நாடெங்கிலும் பரவியது. தொழிலாளர் இயக்கமான ஏ.ஐ.டி.யூ.சி பூரணசுதந்திரம் , சோசலிசம் ஆகியவற்றை தனது இலட்சியமாக பிரகடனம் செய்தது. வேலை நிறுத்தங்கள் பெருகியது.
1927 மே மாதம் 29-31 திகதிகளில் கம்யூனிஸ்ட்களின் பேரவை பம்பாயில் கூடி புதிய அமைப்பு விதிகளை உருவாக்கியது.
இதன் தொடர்ச்சியாக 1929 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் பல தொழிற்சங்க தலைவர்களையும், கம்யூனிஸ்டுகளையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்தது. 32 தலைவர்கள் மீது சதிவழக்கு போடப்பட்டது. “அனைவரும் நாட்டின் எதிரிகள்; கடவுளின் எதிரிகள்; குடும்ப அமைப்பின் எதிரிகள்; ஒரு சராசரி மனிதன் கண்ணியமானது என்று கருதுவதற்கெல்லாம் எதிரியான போல்ஷ்விக்குகள்” என்று பிரிட்டிஷ் அரசு குற்றம் சாட்டியது. நீண்ட கால கடும் தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டில் இதனால் கொந்தளிப்பும் எழுந்தது. மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அன்சாரி போன்ற தேசிய தலைவர்கள் வழக்கறிஞர்களாக ஆஜர் ஆனார்கள். தேசத்தந்தை மகாத்மா காந்தி மீரத் சிறையில் தலைவர்களை சந்தித்தார். 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது. 1950 இல் அதே தினத்தை அரசியல் அமைப்புச் சட்டம் பிரகடனம் செய்த பின்னர் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
1934 ஜுலையில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கட்சிக் கிளையை தொடங்குவதற்காக மீரத் குற்றம் சாட்டப்பட்ட அமீர் ஐதர் கான் சென்னையில் குடியேறினார். ஆரம்பு கட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் போதே கைது செய்யப்பட்டார். சிங்காரவேலர் தான் 1922 ஆம் ஆண்டு தன்னை கம்யூனிஸ்ட் என்று பிரகடனம் செய்து கொண்டு கயா காங்கிரஸ் மகாசபையில் பூரண சுதந்திரத்திற்காக முழக்கமிட்டவர்.
1927 ஆம் ஆண்டு சோவியத் யூனியனுக்கு தந்தை பெரியார் சென்று வந்தார். அவரோடு இணைந்து ஜீவா, கிசன், கே, முருகேசன் போன்ற தோழர்கள் செயல் பட்டனர். சென்னை தொழிலாளர் சங்கம் (மெட்ராஸ் லேபர் யூனியன் ) 1918 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திரு.வி. கல்யாண சுந்தரனார், சிங்காரவேலர், வ.உ.சிதம்பரனார், சக்கரை செட்டியார், செல்வபதி செட்டியார், ராமானுஜர் நாயுடு ஆகியோர் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
சென்னையில் தங்கியிருந்த மத்திய கமிட்டி உறுப்பினர்கள் பி. சுந்தரையா, எஸ்..வி.. காட்டே ஆகியோரின் பரிந்துரையின் பேரில் முதல் கட்சிகளை உருவாக்கப்பட்டது. அது உருவாக்கப்பட்ட விதம் குறித்து தோழர் சி. எஸ். எழுதுகிறார்: ”பாஷ்யம், பி ராமமூர்த்தி, ஏ.எஸ்.கே, சி.எஸ். சுப்பிரமணியன், பி சீனிவாசராவ், கே.முருகேசன், டி.ஆர். சுப்பிரமணியன், திருத்துறைப்பூண்டி சுந்தரேசன், நாகர்கோவில் இளங்கோ ஆகியோர் முதல் கம்யூனிஸ்ட் கட்சி கிளையைத் தொடங்கினார்கள். இந்தக் கிளைக்கு செயலாளர் என்று யாரும் கிடையாது. கூட்ட நிகழ்ச்சிகளை மினிட்ஸ் எழுதுபவர் தான் அந்த சமயத்தில் கிளைச் செயலாளர். கூட்ட நிகழ்ச்சிகளை நான்தான் எழுதி வந்தேன்” அதன்படி சி.எஸ். தான் முதல் செயலாளர்.
ஜி. பார்த்தசாரதி, மோகன் குமார மங்களம் ஆகியோர் கட்சியின் தீவிர ஆர்வலர்களாக இருந்தனர்.
‘தொழிலாளன்’ என்ற பெயரில் சிங்காரவேலரும், ‘முன்னேற்றம்’ என்ற பெயரில் ராஜவேலுவின் மூலமாக அமீர் ஐதர் காணும் நடத்தி வந்தனர். 1935 இல் தொழிலாளர் பாதுகாப்பு லீக் என்ற அமைப்பின் பெயரில் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டது. காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்ற பெயரிலும் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டனர்.
பி. சீனிவாசராவ், ஜீவா, பி. ராமமூர்த்தி, கே. முருகேசன், ஏ. எஸ். கே. ஐயங்கார், சி.எஸ். சுப்பிரமணியம் ஆகியோர் முன்னோடி கம்யூனிஸ்டுகள். 1936 ஆம் ஆண்டு ஜனசக்தி பத்திரிகை தொடங்கப்பட்டது. 1931 ஆம் ஆண்டிலேயே மாணவர் பெருமன்றம், விவசாயிகள் சங்கம் போன்றவை உருவாக்கப்பட்டு தமிழகத்தின் கிளைகளும் உருவாக்கப்பட்டது. முதல் அமைப்பாளர் கே. பாலதண்டாயுதம் 1944 ஆம் ஆண்டு ப.மாணிக்கம் மாநில செயலாளர் எனப் பணியாற்றினார்.
1940 ஆம் ஆண்டு சென்னை, கோவை, நெல்லை சதி வழக்குகள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் போடப்பட்டது. மலையாள மண்ணில் இருந்து தமிழ்நாட்டில் கட்சியை வளர்ப்பதற்காக ராமச்சந்திரன் நெடுங்காடி, கே. சி. சேகர், கேரளீயன் உட்பட பல தலைவர்கள் வருகை தந்தார்கள். அமைப்பாளர்களாக பணியாற்றினார்கள். தமிழே தெரியாத சீனிவாச ராவ் காவிரி பாயும் தஞ்சை தரணிக்குச் சென்று விவசாயிகளை அணி திரட்டினார். வர்க்க போராட்டத்தின் உச்சமாக பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது. சாணிப்பால் சவுக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
1939 இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. சிறைக்கு சென்ற பலர் கம்யூனிஸ்ட்களாக வெளியே வந்தனர்.
1941 ஜூன் 22ஆம் திகதி புதிய கட்டத்திற்குள் இரண்டாம் உலகப் போர் நுழைந்தது. பாசிச ஹிட்லர் சோவியத் நாட்டின் மீது படையெடுத்தான். மக்கள் யுத்தமாக மாறியது. தொழிலாளி வர்க்கத்தின் முதல் நாட்டை பாதுகாப்பதற்காக இரண்டு கோடிக்கும் அதிகமான செஞ்சேனை வீரர்கள் உயிரிழந்தனர். பாசிசம் வீழ்த்தப்பட்டது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு செத்தான். பாசிசம் முறியடிக்கப்பட வேண்டும்; தேசிய ஒற்றுமையோடு சர்வதேச ஒற்றுமை கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வமாக்கப்பட்டது. வெள்ளியனே வெளியேறு இயக்கமும் அதே காலகட்டத்தில் தொடங்கியது. கட்சியின் போராட்டங்கள் வெடித்தன. மன்னர்களுக்கு எதிராக, ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, நில பிரபுத்துவத்திற்கு எதிராக, ஏகபோகத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளின் போராட்டம் தொடர்ந்தன. கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது.
மக்களுக்கான போராட்டங்களை நடத்துவதில் என்றைக்கும் பின் தங்கியதில்லை. தொழிலாளர் போராட்டங்களும், விவசாயிகள் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றன. தெலுங்கானாவில் நடந்த வீரம் செறிந்த போராட்டம் கம்யூனிஸ்ட்களின் தியாகத்திற்கு சான்றாகும். வயலார், கையூர் முதல் தஞ்சைத் தரணி வரை ஆயிரம் ஆயிரம் கம்யூனிஸ்டுகள் பல போராட்டங்களில் உயிரை கொடுத்தனர். காவியம் படைத்தனர்.
1946 ஆம் ஆண்டு கப்பற்படை எழுச்சி வெடித்தது. காங்கிரஸ் முஸ்லிம் லீக் கொடியுடன் செங்கொடியும் உயர்த்தப்பட்டது. துப்பாக்கிச் சூடுகள், சிறையடைப்பு, உயிர் இழப்பு என அளப்பரிய தியாகங்களை செய்தது கம்யூனிஸ்டுகள் தான். இந்தியா 1947 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை பெற்றது. கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையும் நீங்கியது.
1948 இல் கல்கத்தாவில் நடைபெற்ற கட்சிக் காங்கிரஸில் இந்திய விடுதலைப் பற்றிய அதீத மதிப்பீடு காரணமாக பலாத்காரத்தில் இறங்க முடிவெடுக்கப்பட்டது. மீண்டும் கட்சி தடை செய்யப்பட்டது பல்லாயிரக்கணக்கானவர்கள் சிறையிலே வாடினார்கள். அளப்பரிய தியாகங்கள் செய்து உயிர் துறந்தவர்களும் பலர் கம்யூனிஸ்ட் கட்சியில் உண்டு. பல சதி வழக்குகள் போடப்பட்டன. தியாகத்தை தேடிச் சென்றார்கள்.
1950 இல் தடை நீக்கப்பட்டது. மீண்டும் மக்கள் நீரோட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கலந்தது.
கேரளத்தில் 1957 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது அரசியல் முடிவுகளை எடுப்பதில் சரியான நிலை ஏற்படாத காரணத்தாலும், உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளாலும் 1964 இல் கட்சி பிரிவுபட்டது.
பிளவு வரலாறு காணாத தவறு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியது.
பிளவு பட்டவர்கள் மேலும் மேலும் பிளவு பட்டார்கள். எண்ணற்ற உயிரிழப்புக்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் விளைவாக வகுப்புவாதத்தின் கை ஓங்கி இருக்கின்றது.
இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பொதுத்துறை உருவாக, மன்னர்கள் வீழ்ச்சியடைய, உழைக்கும் மக்கள் வாழ்வுரிமை பெற, நவீன பாசிசத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடர்கின்றன. உழைக்கும் தொழிலாளர் விவசாயிகள் மக்களின் நலன் காண்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது.
மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகள் ஒன்று இணைய வேண்டும் என்ற குரல் இப்பொழுது ஓங்கி ஒலிக்கிறது.
நமது நாட்டின் உழைக்கும் மக்கள் சுரண்டும் வர்க்கங்களையும், வீணர்களையும் வீழ்த்துவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெருப்பாற்றில் கடந்து வந்தது. உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்று சர்வதேசியம் பேசுகின்ற கம்யூனிஸ்டுகள் இந்திய மக்களை திரட்டி போராட அணி திரண்டு கொண்டிருக்கின்றது. அசைப்பது கடினம் என கருதப்பட்ட சக்திகளை வீழ்த்தி வெற்றி பெற்ற இயக்கம் எதிர்கால மாற்றத்திற்காக கடந்த கால அனுபவத்தை ஏற்று புதிய கடமைகளை உணர்ந்து அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராவோம்! என நூற்றாண்டு தினத்தில் சபதம் ஏற்கிறோம்!