அலைபேசியும் அழுகும் மூளையும்

-ஜி. ராமானுஜம்

தினமும் பல மணி நேரம் அலைபேசியில் இலக்கின்றி ரீல்களையும் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்களா? இரண்டு, மூன்று மணிநேரம் அலைபேசியைப் பார்த்தும் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என நினைக்கிறீர்களா? உங்களுக்கு ‘மூளை அழுகல்’ பாதிப்பு இருக்கக்கூடும்.

மூளை என்ன முட்டைக்கோஸா அழுகிப் போவதற்கு என நீங்கள் கேட்கக்கூடும். ஆனால், மூளை அழுகுதல் எனப் பொருள்படும் ‘Brain Rot’ என்கிற சொல்லை ஒக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அகராதி (Oxford University Dictionary) 2024 ஆம் ஆண்டுக்கான வார்த்தையாகத் தேர்வு செய்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் மக்களிடம், குறிப்பாக இணையத்தின் உரையாடல்களில் மிகவும் பிரபலமாக இருந்த வார்த்தையாக ‘பிரெயின் ரொட்’ என்னும் மூளை அழுகல் இருந்திருக்கிறது.

மூளை அழுகல் என்கிற வார்த்தை இப்போது உருவாகவில்லை. புகழ்பெற்ற தத்துவ அறிஞர் ஹென்றி தேரோ (Henry David Thoreau) 1854 இல் இந்த வார்த்தையை உருவாக்கியிருக்கிறார். மூளையின் செயல்திறன்கள் குறைவதைத்தான் அச்சொல் குறிக்கிறது. அதீத இணையதள, அலைபேசி மற்றும் சமூக ஊடகப் பயன்பாட்டால் மனித மூளையின் சிந்தனை, உணர்வுகள், செயல்பாடுகள் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளை இச்சொல் குறிக்கிறது.

அறிகுறிகள்:

மூளை அழுகலில் மிக முக்கியமான அறிகுறி கவனச் சிதறல். ஒரு விஷயத்தில் சிறிது நேரத்திற்கு மேல் கவனம் குவிக்க முடியாமல் போய்விடும். முக்கியமான ஒரு விஷயத்தைச் செய்வதற்காகக் கணனியைத் திறந்து பார்க்கும்போது சமூக ஊடகத்திலிருந்து ஏதோ ஓர் அறிவிப்புச் செய்தி எட்டிப் பார்க்கும். ஒரே ஒரு நொடி அதைத் திறந்து பார்ப்போம் எனத் தீண்டினால் ஓரிரு மணி நேரம் கழித்துத்தான் நமக்குச் சுயநினைவே வரும்.

அந்த ஓரிரு மணி நேரமும் உருப்படியாக எதையும் செய்திருக்க மாட்டோம். ஒரு வீடியோவிலிருந்து அடுத்த ரீல்; ஒரு சமூக ஊடகத்திலிருந்து அடுத்தது எனச் சென்றுவிடுவோம். இதனால், தொடர்ச்சியாக எதையும் செய்யவோ, வாசிக்கவோ, எழுதவோ முடியாமல் அடிக்கடி நமது கவனம் வேறுபக்கம் சென்றுகொண்டே இருக்கும். விளைவு? ஆழமாகச் சில விஷயங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதில் மேலோட்டமாக நமது கவனம் சிதறுகிறது. இதனால் ஆராய்ந்து சிந்திப்பது, புதிதாக உருவாக்குவது, கற்பனைத் திறன் போன்ற செயல்பாடுகள் பாதிப்படைகின்றன என்கின்றன ஆய்வுகள்.

டிஜிட்டல் டிமென்ஷியா:

செயற்கை நுண்ணறிவே இப்போது மனித மூளை செய்ய வேண்டிய பல செயல்களைச் செய்வதால், மனிதனின் பல திறன்கள் காலப்போக்கில் குறைந்துவிடும் என எச்சரிக்கின்றனர். ஒரு விடுமுறைக் கடிதம் எழுத வேண்டுமானால்கூடச் செயற்கை அறிவுச் செயலியிடம், “இன்றைக்கு என் பாட்டி செத்து விட்டதாக ஒரு நாள் விடுமுறை கேட்டுக் கடிதம் எழுது” எனச் சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.

கைபேசிகள் வந்ததும் கைபேசி எண்களை மனப்பாடம் செய்யவேண்டிய அவசியம் இல்லாமல் போவதுபோல் நினைவுத்திறன், கவனக் குவிப்பு, கற்பனைத் திறன் போன்றவை பாதிக்கப்படும். இதை மருத்துவ உலகில் டிஜிட்டல் டிமென்ஷியா (Digital Dementia) என்கின்றனர். அதாவது மூளையின் செயல்பாடுகள் சுருங்குதல்.

உணர்வுகளும் உறவுச் சிக்கல்களும்:

மூளை அழுகல் பாதிப்பில் அறிவுசார் செயல்களில் மட்டுமல்ல, உணர்வுசார் செயல்களிலும் மாற் றங்கள் ஏற்படுகின்றன. கவனக் குறைபாடு, தொடர்ச்சியாக மேலோட்டமாக எதையோ செய்து கொண்டிருப்பதால் எதையும் உருப் படியாகச் செய்ய முடியாமல் எரிச்சல், கோபம், சலிப்பு, விரக்தி போன்றவை ஏற்படுகின்றன.

மேலும் சமூக ஊடகங்களில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளும் பல சமயங்களில் ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருக்கின்றன. ஒருவருடன் நேரில் பேசும்போது அவரது உடல்மொழி, முகபாவனை, குரலின் ஏற்ற இறக்கங்கள் போன்றவை உணர்வுகளைக் கடத்துவதிலும் புரிந்து கொள்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், இப்போதோ எமோஜிகள் (Emojis) எனப்படும் உணர்வு வெளிப்பாட்டு உருவங்கள், செய்திகள் மூலமுமே தகவல் பரிமாற்றம் நிகழ்த்த விரும்புகிறோம்.

நேரில் சந்தித்தோ அல்லது குறைந்த பட்சம் அலைபேசியில் அழைத்துப் பேசவோகூடச் செய்யாமல் இருப்ப தால் எதிராளிக்கு நமது உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் போகிறது. அதேபோல் அவர்களது உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறது. நேரில் பார்த்தால் சொல்லியிருக்க முடியாத விஷயங்களை எளிதாகச் செய்திகளில் சொல்லிவிடுகிறோம். இதனாலும் உறவுகளில் சிக்கல்கள் நிகழ்கின்றன.

மேலும், சமூக ஊடகப் பயன் பாட்டிற்கென்றே பிரத்யேகமான வார்த்தைப் பிரயோகங்களும், சுருக்கங்களும் மொழித்திறனிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உதாரணத்திற்கு ‘உரக்கச் சிரித்தேன்’ என்பதை (LOL – laughing out loud) என்று மூன்றெழுத்தில் சொல்லிவிடுகிறார்கள். நன்றாக இருக்கிறது என்றெல்லாம் இப்போது யாரும் சொல்வதில்லை. ஒரு கட்டைவிரல் உயர்த்தல் குறியீடு மட்டும்தான்! இவையெல்லாம் உரையாடல் மற்றும் எழுதும் திறன்களில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

காரணம் என்ன?

மூளையும் நமது தசைகளைப் போன்றதே. எப்படி உடற்பயிற்சி, கடினமான உடலுழைப்பில் ஈடுபடுபவர்களின் தசைகள் வலுவாக ஆகின்றனவோ அது போன்றே நமது மூளையின் நரம்பு இணைப்புகளும் நாம் செய்யும் அறிவுபூர்வமான, ஆழமான, கவனமான செயல்களில் ஈடுபடும்போது வலுவடைகின்றன.

பல காலம் பயன்படுத்தாமல் இருந்தால் கை கால்களில் உள்ள தசைகள் வலுவிழந்து விடுவதைப் போன்றே ஆழ்ந்த பயிற்சி இல்லாமல் மேலோட்டமாக ஈடுபட்டுக்கொண்டே இருப்பதால் மூளை நரம்பிணைப்புகளும் வலுவிழந்து அவற்றின் திறன்கள் குறைகின்றன.

மேலும், புதிதாக ஒரு தூண்டுதல் வரும்போது மூளை நரம்புகளில் டோபமைன் என்கிற வேதிப்பொருள் சுரக்கும். இது கவனத்தை அதன் பக்கம் திருப்ப உதவும். ஏகப்பட்ட தூண்டுதல்கள் இருக்கும்போது டோபமைன் செய்யும் அதீதத் தூண்டுதலால் ஒரே விஷயத்தில் கவனம் குவியாமல் கவனம் சிதறிக் கொண்டே இருக்கும்.

தவிர்க்கும் வழிகள்:

மூளை அழுகல் பாதிப்பைத் தவிர்க்க வேண்டுமென்றால் முதலில் அது வராமல் பாதுகாத்துக் கொள்வது தான் மிகச் சிறந்த வழி. குறிப்பாகக் குழந்தைகளுக்கு அதிக நேரம் திறன்பேசிகளைக் கொடுத்துப் பழக்கிவிட்டால் பின்னர் அந்தப் பாதிப்பிலிருந்து வெளியே வர மிகவும் கஷ்டப்பட நேரிடும்.

திறன்பேசிகள், சமூக ஊடகங்கள் பார்க்கும் நேரத்தை நெறிப்படுத்தி ஒரு வரைமுறைக்குள் கொண்டுவர வேண்டும். குறிப்பிட்ட நேரம் தவிர, மற்ற நேரத்தில் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் அந்த நேரமும் இலக்கில்லாமல் பார்ப்பதைவிட என்ன பார்க்கப் போகிறோம் எனத் தெளிவாக முடிவெடுத்துக்கொண்டு அதை மட்டுமே பார்க்க வேண்டும். இது நமது கவனம் திசைதிரும்பாமல் ஒரே பக்கம் குவிய உதவும்.

பெரும்பாலான அறிவிப்புகளை (notifications) வர விடாமல் நமது அலைபேசியின் செயல்பாட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடிக்கடி நாம் அதை எடுத்துப் பார்ப்பதை இது தவிர்க்கும். புத்தகங்கள் வாசிப்பது (அச்சுப் புத்தகம்), நாளிதழ்கள் வாசிப்பது, குறுக்கெழுத்துப் புதிர்கள் போன்றவை நமது மூளைக்கு வேலை கொடுப்பவை.

எல்லா விஷயங்களையும் அலைபேசியில் பதிந்து வைக்காமல் நினைவில் வைக்கவும் பழகுங்கள். உங்களுக்கு நெருங்கிய பத்து, இருபது நபர்களின் அலைபேசி எண்களை மனப்பாடம் செய்யப் பழகுங்கள். பழைய பாடல்கள், செய்யுள்கள் போன்றவற்றை மனப்பாடம் செய்வது நல்லது.

புதிதாக இசைக்கருவி பயில்வது, புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்றவற்றில் ஈடுபடலாம். முக்கியமாக உடற்பயிற்சி செய்வதும் நல்ல தூக்கமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க உதவும். இக்கட்டுரையை அலைபேசியில் படித்துக் கொண்டிருந்தால் கொஞ்சம் மூடிவிட்டுக் காலாரக் (கண்ணார) கொஞ்சம் வெளியே நடந்து செல்லுங்கள். அழகான மூளையை அழுக விடாமல் காக்கலாம்.

இந்து தமிழ்
2025.01.04

Tags: