கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் அனிதா ஆனந்த்

Anita Anand

னடா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதில் யார் புதிய பிரதமராக வருவார்கள் என்ற கேள்வி விவாதிக்கப்பட்டு வருகிறது.

கனடாவில் அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான விலை உயர்வு, வீட்டு வசதிக்கான விலை உயர்வு, அதிகரித்து வரும் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா உடனான கனடாவின் உறவுச் சிக்கலானதும் ட்ரூடோவுக்கு எதிராக திரும்பியது. ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்து வருவதை அடுத்து, மார்ச் மாதம் கூட உள்ள நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரப்போவதாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தற்போது ஆளும் லிபரல் கட்சிக்கு போதிய பெரும்பான்மை இல்லை. பெரும்பான்மைக்கு 170 உறுப்பினர்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், லிபரல் கட்சி 153 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. சில சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ ஆட்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த அறிவிப்பு அவருக்கும் லிபரல் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ட்ரூடோவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

இந்தப் பின்னணியில், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை பதவியில் தொடரப் போவதாகவும் ட்ரூடோ நேற்று (06.01.2025) அறிவித்தார். அதேநேரத்தில், புதிய பிரதமராக யார் பொறுப்பேற்றாலும், அவரின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்கால சவாலை லிபரல் கட்சி எதிர்கொண்டு வருகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த் (Anita Anand), அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லிபரல் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய அந்தக் கட்சி முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக லிபரல் கட்சி தொண்டர்களிடையே விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார். இப்போதைய சூழலில் கனடா போக்குவரத்துத் துறை அமைச்சரும் லிபரல் கட்சியின் மூத்த தலைவருமான அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். இவரது தந்தை ஆனந்த், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர். தாய் சரோஜ் ராம் பஞ்சாபை சேர்ந்தவர் ஆவர்.

யார் இந்த அனிதா ஆனந்த்? – ட்ரூடோ பதவி விலகி நிலையில், அடுத்த கனடா அதிபர் ஆகும் போட்டியில் ஐந்து பேர் முன்னிலையில் உள்ளனர். அதில் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அனிதா ஆனந்தும் உள்ளார். 57 வயதான அவர், தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ளார். இதற்கு முன்பு பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். கடந்த 2019 இல் அவர் அரசியலில் காலடி வைத்தார். அப்போது முதலே அவர் லிபரல் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக உள்ளார்.

குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் (Queen’s University) அரசியல் விஞ்ஞானத்தில் இளங்கலை முடித்துள்ளார். ஒக்ஸ்போர்டு (Oxford) மற்றும் டல்ஹவுசி பல்கலைக்கழகங்களில் (Dalhousie University) இளங்கலை சட்டம் பயின்றவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (Toronto University) சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நோவா ஸ்கோடியாவின் (Nova Scotia) கென்ட்வில்லில் (Kent Ville) அவர் பிறந்தார். அவரது பெற்றோர் எஸ்.வி.ஆனந்த் – சரோஜ் டி. ராம் என இருவரும் மருத்துவர்கள். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

அனிதா ஆனந்த் கணவருடன்

அரசியல் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளார். பொது சேவைத் துறை அமைச்சராக இருந்தபோது கொரோனா தடுப்பூசிகளை உறுதி செய்த செயலுக்காக மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றவர். அவர் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த போதுதான் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனை ஆதரிப்பது என்ற முடிவை கனடா எடுத்தது.

அமைச்சரவை மாற்றத்தின்போது அவர் கருவூல வாரிய பொறுப்புக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் அமைச்சரவை அளவில் முக்கியஸ்தராக இருந்தார். கடந்த டிசம்பரில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

அதேபோல், இந்திய வம்சாவளியை சேர்ந்த லிபரல் கட்சியின் மூத்த தலைவர் ஜோர்ஜ் சாஹலும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளார். இவர்கள் தவிர லிபரல் கட்சியின் மூத்த தலைவர்கள் மெலானி ஜோலி, கிறிஸ்டி கிளார்க், மார்க் கார்னி, கிறிஸ்டியா பிரீலேண்ட், டோமினிக் லீபிளாங்க் ஆகியோரும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி கனடா நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது ஆளும் லிபரல் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்டு உள்ளது. இதன்படி வரும் மார்ச் மாதம் கனடா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இப்போதைய நிலையில் ஆளும் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறும்போது, “நம்பிக்கை வாக்கெடுப்பில் லிபரல் கட்சியின் ஆட்சி கவிழுமா அல்லது அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்குமா என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை. அரசு கவிழ்ந்து உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் அல்லது லிபரல் கட்சியின் புதிய பிரதமர் பதவியேற்று வரும் ஒக்ரோபரில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படலாம்” என்று தெரிவித்துள்ளனர்.

Tags: