அமெரிக்காவை முதன்மைபடுத்த அனைவரையும் ஒடுக்கு!
-ச.அருணாசலம்
டிரம்ப்பின் அறிவிப்புகள் திகைக்க வைக்கின்றன. கண்மூடித்தனமான கோர்ப்பரேட் அதரவு நிலை, கருணையில்லாத குடிஉரிமை சட்டம், இலட்சக்கணக்கில் இந்தியர்கள் வெளியேறும் சூழல், அமெரிக்காவை முதன்மைபடுத்த அனைவரையும் காலி செய்யும் டிரம்ப்பை கண்டு அவரை ஆதரித்த வலதுசாரிகளே தற்போது அலறுகிறார்கள்;
இரண்டாவது முறை அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் தன் இறுமாப்பு அறிவிப்புகளால் அதிரடி காட்டி வருகிறார். நிலையற்ற மனிதரான டிரம்ப் என்னென்ன குளறுபடிகளை அமெரிக்க ஆட்சி அமைப்பில், கொள்கைகளில் , பிற நாட்டுடனான உறவுகளில் கொண்டு வரப்போகிறார் என்ற அச்சத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவரது உத்தரவுகள் அமைந்துள்ளன.
# சுற்றுப்புற சூழல் குறித்த பாரீஸ் சர்வேதச கட்டமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்
# உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO)அமெரிக்கா விலகல்
# அமெரிக்க குடியுரிமை சட்ட திருத்தம் – அமெரிக்காவில் பிறக்கும் அகதிகளின் குழந்தைகளுக்கு குடியுரிமை மறுப்பு
# மரண தண்டனையை மீண்டும் அமுல் செய்தல்
# புதிய அரசு வேலைகளுக்கு தடை
# கடந்த 2021ல் கலவரத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களுக்கு பொது மன்னிப்பு
# சர்வதேச வணிக உறவுகளில் அமெரிக்காவுக்கு முதலிடத்தை நிலை நாட்டல்
# புதிய குடியேற்றங்களுக்கு தடை
போன்ற பல்வேறு கொள்கை அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு அங்கு கூடியிருந்த அவரது ஆதரவாளர்களை குதூகலப்படுத்தினார். குறிப்பாக பெருங் கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ், மெட்டா நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகிய மூவரும் எல்லையற்ற மகிழ்ச்சியை அங்கு வெளிப்படுத்தினர்.
ஆனால், அமெரிக்க நாட்டின் கூட்டாளிகளான மேற்கத்திய நாடுகளோ, ஐரோப்பிய நாட்டு தலைவர்களோ பெருங் கலக்கத்தில் மூழ்கத் தொடங்கினர்.
அமெரிக்காவை “சொர்க்க பூமி” என ஆர்ப்பரித்து வந்த படித்த கூட்டம், அமெரிக்கா ‘மனித சுதந்திரத்தின்‘ ஊற்றுக்கண் என்று புகழ்பாடிய பிற நாட்டு அரசியல் தலைவர்கள், இன்று, அமெரிக்கா தான் முதலில், மற்றவையெல்லாம் அதற்கு பின்னால் தான் என்ற டிரம்ப்பின் முன்னெடுப்பை கண்டு அஞ்சத் தொடங்கியுள்ளனர்.
பைடன் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட சுமார் 80 விதிமுறைகளை, டிரம்ப் இரத்து செய்தார். அமெரிக்காவின் பண்புகளான சுதந்திரம், பேச்சுரிமை, சட்டவழி ஆட்சி ஆகியவற்றுக்கு டிரம்ப் கொடுக்கும் மரண அடிகளை கண்டு அமெரிக்க ஜனநாயகவாதிகள் கொந்தளிக்கின்றனர்.
அமெரிக்காவை மீண்டும் மகோன்னத நாடாக மாற்றுவேன் (Make America Great Again) என்ற அறைகூவலை முன்னிறுத்தி, பிரச்சாரம் செய்து அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டிரம்ப் இன்று அதை தாறுமாறாகச் செயல்படுத்த முனைந்துள்ளார்.
அந்த மகோன்னதம் (greatness) என்பது, பிற நாட்டினரோடு, மற்ற மக்களோடு இணைந்து செயலாற்றுவதில் காட்டாமல், தனிக்காட்டு ராஜாவாக ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் அந்த முதல் மரியாதையை அமெரிக்க நிலைநாட்ட வேண்டும். அது தான் அமெரிக்காவின் மகோன்னதம் என்பதே டிரம்ப்பின் எண்ணமாகும்.
இதுவரை இருந்த அமெரிக்கா நிருவாகங்கள், சுதந்திரத்தின் பேரிலும் ஜனநாயகத்தின் பேரிலும், பிற நாடுகளில் ஆட்சி மாற்றத்தையும், கிளர்ச்சியையும் முடிவில்லா யுத்தங்களையும் (regime changes, color revolution and Endless wars) உலகில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தன.
அமெரிக்காவின் தலைமையிலான இத்தகைய ‘ஜனநாயக உலக கட்டமைப்பை’ (Liberal International Order) டிரம்ப் ரசிக்கவில்லை, ஆனால், அதற்காக அவர் அமெரிக்க அரசை அமெரிக்க சமூகத்தை, அமெரிக்க பொருளாதாரத்தை ‘உள்நோக்கிய பொருளாதாரமாக’ சொந்த பண்புகளில் திருப்தியடையும் நாடாக மாற்ற விரும்புகிறாரா? என்றால், இல்லை என்றே கூற வேண்டும்.
டிரம்ப் விரும்புவது, அமெரிக்காவின் “நலன்களை”, அவை உலகில் எங்கிருந்தாலும் பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு அமெரிக்கா தனது (இராணுவ) வலிமையை தன்னிச்சையாக வெளிக்காட்டுவதன் மூலம் நிலை நாட்ட வேண்டும் என விரும்புகிறார். இதனால் தான் முதலில் அமெரிக்கா , என்ற அமெரிக்காவின் ‘’தனியரிமை”யை, உலக சட்ட திட்டங்களுக்குள் அடங்காத அடங்காப் பிடாரித்தனத்தை வலிமை என முன்னிறுத்துகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க விரிவு படுத்தும் நடவடிக்கைகளான அமெரிக்க மெக்சிகன் யுத்தம் (1846-1848), அமெரிக்க ஸ்பானிஷ் யுத்தம் (1898) ஆகியவற்றை போல் இன்றும் பனாமா கால்வாயையும், மெக்சிகோ வளைகுடாவையும், கனடா நாட்டையும் கபளீகரம் செய்துவிடலாம் என மனப்பால் குடிக்கிறார் டிரம்ப் .
இரண்டாம் உலகப்போரின் முடிவில் இருந்த உலகிற்கும், இன்றுள்ள உலகிற்கும் உள்ள வேறுபாடுகளை , யதார்த்தங்களை மறந்துவிட்டு , அமெரிக்கா வருகிறது பராக் … பராக் என எல்லோரும் கைகட்டி இருக்க வேண்டும் , இல்லையேல் வரிச் சுமைதான் என கூறுகிறார் டிரம்ப்.
எல்லாவற்றிலும் அமெரிக்கா முதன்மை என்று முழங்கிக் கொண்டு அமெரிக்க விஸ்தரிப்பையும், அமெரிக்க தனியுரிமையையும் உலக நாடுகள் ஏற்றுக் கொள்ள போவதில்லை. ஆனால், அதற்கான டிரம்ப்பின் முயற்சிகள் ஏற்படுத்தும் அழிவே அனைவரின் கவலையையும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க பொருளாதாரம் தனது உற்பத்தி சக்திகளை இழந்து, தனது தேவைகளுக்கே பெரும்பாலும் இறக்குமதிகளை – அதிலும் குறிப்பாக சீனாவிலிருந்து- நம்பி வாழந்து கொண்டிருக்கின்ற வேளையில், உயர் தொழில் நுட்பத்தில் தனது முதன்மையை இழந்து சீனாவுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில், வாணிகப் போர் மூலமாக, கூடுதல் வரிகளை போடுவதன் மூலமாக அமெரிக்க பொருளாதாரத்தை நிமிர்த்து விடலாம் என கனவு காண்கிறார்.
பொதுவாக வெளிநாட்டினர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை பெறுவதை (கடைநிலை பணிகளுக்காக வரும் தென் அமெரிக்க நாட்டு மக்களானாலும் சரி, தொழில்நுட்பத்தில், மருத்துவ துறையில் இடைநிலை மற்றும் உயர்நிலை பணிகளுக்காக வரும் இந்தியர்களும், ஆசிய மக்களும் சரி ) அமெரிக்க மக்கள் வெறுக்க தொடங்கினர்.
இத்தகைய மனநிலையை (anti immigrant sentiment) தூண்டிவிட்டு அமெரிக்காவை மீண்டும் மகோன்னதமாக்குவேன் என வலைவிரித்தார் டிரம்ப், அதில் வெற்றியும் கண்டுவிட்டார்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் இத்தாலி, நார்வே, டென்மார்க், நியுசிலாந்து அவுஸ்திரேலியாபோன்ற வெள்ளை இன நாடுகளில் இன்று கிளம்பியுள்ள குடியேற்ற எதிர்ப்பு மனோபாவம் இன்று அமெரிக்காவையும் தொற்றிக்கொண்டது. முதலில் நாட்டின் எல்லையை மூட உத்திரவிட்டார். நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசரநிலையை பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திடும்போது “இது மிகப்பெரிய நடவடிக்கை” என டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தப் போவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க வட்டார தகவலின்படி, அந்த நாட்டு அரசின் கணக்குப்படி அங்கே 7 இலட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி உள்ளனர். இதில் கணிசமானோர் குஜராத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மெக்சிகோ வழியாக அமெரிக்கா சென்று அங்கே தஞ்சம் அடைந்து வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவிற்கு திருப்பி அனுப்பப்படுவோரை தங்கவைக்க மெக்சிகோ-அமெரிக்கா எல்லை அருகே அமைந்துள்ள டிஜுவானா, ரெய்னோசா, மடாமரோஸ், எல் புன்ட்டோ உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா இந்த சவாலை எப்படி எதிர் கொள்ள போகிறது?
இன்றளவில் அமெரிக்காவில் 53 இலட்சம் இந்தியர்கள் வாழுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஐ. டி . துறையில் உள்ளவர்களே, H1b என்ற தற்காலிக விசா பெற்றவர்களே
அதிகம். சென்ற இடங்களில், பணிபுரியும் இடங்களில் தனது வாழ்வை தொடங்கி கொண்டு செல்வதும் மனித இயல்பு.
ஆனால், இவர்களது இருப்பையும் தொடர்தலையும் டிரம்ப்பின் குடியுரிமை உத்தரவு வெகுவாக பாதித்துள்ளது. முன்பு அங்கு பணியிலிருக்கும் இந்தியர்கள் (அமெரிக்கரல்லாத வெளி நாட்டினர்) அமெரிக்காவில் குழந்தை பெற்றால் அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமைஇயல்பாக வழங்கப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தது. ஆனால் இன்று டிரம்ப் அதற்கு வேட்டு வைத்துள்ளார் , அதற்கு தடை விதித்துள்ளார். இது சட்டபூர்வமாக குடியேறியுள்ளஅமெரிக்கா வாழ் இந்தியர்களின் நிலைமை!
அடுத்து சட்ட விரோதமாக அங்கு குடியேறியுள்ள இந்தியர்கள் பல இலட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மோடியின் மாநிலமான குஜராத்திலிருந்து சென்றவர்களே ஆகும். இவர்களை உடனடியாக வெளியேற்ற டிரம்ப் முனைந்துள்ளார். இந்தியா என்ன செய்வது என அறியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.
தெளிவான பார்வை ஏதுமின்றி, இஸ்லாமிய நாடுகளுக்கெதிரான டிரம்பின் கடந்த கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, முஸ்லீம் மக்களுக்கெதிரான நிலைப்பாட்டில் டிரம்ப்புடன் நேசம் பாராட்டிய இந்திய அரசு. இந்து-பா.ஜ.க மற்றும் சங்கப்பரிவார அமைப்புகள்- அமைப்புகள் தங்களை தேசீயவாதிகள் என கூறிக் கொண்டு டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஹூஸ்டனில் நடந்த பேரணியில் ‘ஆப் கி பார் ..டிரம்ப் சர்க்கார்’ என மோடி எக்காளமிட்டார். ஆனால், அன்று (2020) தோல்வியடைந்த டிரம்ப் இப்பொழுது வெற்றி பெற்று தனது வேலையை காட்டத் தொடங்கியுள்ளார்.
அவரை – குடியேற்றங்களை எதிர்க்கும் டிரம்ப்பை- ஆதரித்த இந்திய பிரதமர் இன்று எங்கு போய் தனது முகத்தை வைத்துக் கொள்வார் என தெரியவில்லை.
டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழை்ப்பில்லையே என்றுதான் மோடி கவலைப்படுகிறாரே ஒழிய , இந்தியர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கும் டிரம்ப்பை கேள்வி கேட்கும் நேர்மையை பெற்றிருக்கிறாரா மோடி என்றால் இல்லை!
இது மட்டுமின்றி இந்திய பொருள்களின் மீது அதிக வரி விதிப்பேன் என டிரம்ப் எச்சரித்து உள்ளார் .
டிரம்ப் கூடாரத்திலேயே குடியேற்றங்களை எதிர்ப்பதில் இருவேறு நிலைப்பாடுகள் உள்ளன.
டெஸ்லா அதிபரும் உலகப்பெருங் கோடீஸ்வர்ருமான எலான் மஸ்க் மற்றும் இந்தியாவை சார்ந்த அமெரிக்கவாழ் தொழிலதிபரான விவேக் இராமசுவாமி ஒரு புறத்தில் h1b விசாக்களை அனுமதிக்கலாம் மற்ற பணிகளுக்கான விசாக்களை அனுமதிக்க கூடாது என்றும் மறுபுறத்தில் ஸ்டீவ் பான்னன் மற்றும் லாவுரு லூமர் போன்ற சாதாரண அரசியல் பிரமுகர்கள் எந்தவித வேலை வாய்ப்பும் வெளிநாட்டினருக்கு தரக்கூடாது என்றும் கூறி வருகின்றனர். இந்த மோதலின் ஊடே எலான் மஸ்க் மற்றும் இராமசுவாமி இடையிலே அரசின் ஆதிக்கத்தை குறைக்க ஏற்படுத்தப்பட்ட DOGE (Department of Government Efficiency) அமைப்பை வழி நடத்துவதிலும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
2020 நவம்பர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்பின் ஆதரவாளர்கள் டிரம்ப்பின் உந்துதலால் அமெரிக்க நாடாளுமன்றமான கேப்பிட்டல் ஹில் கட்டிடத்தை ஆயதங்களேந்தி முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர் . அன்று நாடாளுமன்றத்தை சேதப்படுத்தியவர்களுக்கு இன்று பொது மன்னிப்பு வழங்கி உள்ளார் டிரம்ப். அப்பொழுது அங்கு திரண்ட வெள்ளைநிற வெறியர்களான கன்பெடரேசன் அமைப்பினரோடு இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏந்தி கலவரத்தில் ஈடுபட்ட இந்திய சங்கிகள் இன்று என்ன செய்யப் போகின்றனர்?
இந்தியாவில் முஸ்லீம் மக்களை நசுக்கி பெரும்பான்மைவாதம் பேசும் சங்கிகளும் அவர்களின் ஆதரவாளர்களான அமெரிக்க வாழ் இந்தியர்களும் கொள்கை முரணில் சிக்கி உள்ளனர், தங்களது கோணல் புத்தி பல்லிளிப்பதை மறைக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் ஜனநாயகவாதிகளோடு, உழைக்கும் மக்களோடு இனம் ஜாதி மத வேறுபாடின்றி உரிமைகளுக்காக நிற்பதே இந்திய மக்களின் இந்திய அரசின் கொள்கையாக இருக்க வேண்டும். அத்தகைய சக்திகளுடன் தான் இணக்கம் பாராட்ட வேண்டும்.
உலகமயமாக்கல் வந்து உலகை மாற்றிய பின்னர் வரிகள் போட்டு நாட்டு பொருளாதாரங்களை பாதுகாக்க முடியாத நிலையில் அமெரிக்காவும் மேலை நாடுகளும் தங்களது நாட்டை , கலாச்சாரத்தை பாதுகாத்து கொள்ள பல முயற்சிகள் செய்வதன் வெளிப்பாடாக இன்று அடையாள அரசியல் ,மற்றும் கலாச்சார யுத்தம் மேலை நாடுகளில் அரசியலில் கோலோச்சுகின்றன.
இந்தியாவின் குடிகள் வேலை தேடி வெளிநாட்டிற்கு செல்லாதிருக்க, இந்திய பொருளாதாரம் மேம்பட வேண்டும் .
மோடியின் அனுக்கிரகத்தால் 2016 முதல் இறங்குமுகமாக உள்ள இந்திய பொருளாதாரத்தின் கோரப் பிடியில் இருந்து வெளியேறுவோரில் மத்திய தர வர்க்கத்தின் எண்ணிக்கை 18 இலட்சமாக இருக்கிறது, 2023 இல் மட்டும் 2,25,620 பேர் தங்களது கடவுச்சீட்டை(passport) திருப்பி ஒப்படைத்துள்ளனர் என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் .
இந்தியா தனது பொருளாதாரத்தை மட்டுமின்றி , அமெரிக்காவுடனான நமது உறவைஅண்டை நாடுகளுடனான உறவை, சக மக்களுடனான உறவை மறுபரீசீலனை செய்து சீரமைக்க வேண்டும்.
வெற்று கோஷங்கள் விடியலைத் தராது! விஷமக் கூட்டணிகள் வெற்றியை தராது!