அமெரிக்கத் தாக்குதல்களும் எதிர்வினைகளும்
-க.சுவாமிநாதன்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன் இந்தியா உள்ளிட்ட “பிரிக்ஸ்” நாடுகள் மீது 100 சதவீதம் இறக்குமதி வரி போடப்படும் என்று அறிவித்துள்ளார். டொலர் வர்த்தகத்தை விட்டு விலகிச் சென்றாலோ, அமெரிக்க வர்த்தக நலன்களுக்கு ஒத்திசைவோடு தங்கள் அயல் வர்த்தகத்தை வைத்துக் கொள்ளாவிட்டாலோ இத்தகைய வரிச்சுமையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் இத்தகைய தாக்குதல்கள் குறித்த புரிதலுக்கு பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் (Prabhat Patnaik) பீப்பிள்ஸ் டெமாக்ரசி 2025, ஜனவரி 13 – 19, 2025 இதழில் எழுதி உள்ள “அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பொருளாதார வினைகள்” – Economic Response to US Imperialism – என்ற கட்டுரை உதவுகிறது.
உலகப் பொருளாதார போக்குகள் குறித்த வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் தருகிறது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளின் மூலமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. நீண்ட காலமாக சின்னஞ்சிறு நாடுகளை அச்சுறுத்திய போது அவை ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து போனதுதான் வரலாறு. ஆனால் அண்மைக் காலமாக சீனா போன்ற பெரிய நாடுகளை அமெரிக்கா குறிவைத்து பொருளாதாரத் தடைகளை ஏவுகிறது.
சிறிய நாடுகளைப் போல எதிர்வினையின்றி நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொள்கிற நிலையில் சீனா போன்ற நாடுகள் இல்லை. ஆகவே பொருளாதாரத் தடைகளுக்கு எதிராகத் திருப்பி அடிக்கின்றன. புதிய வர்த்தக இணைப்புகளை தேடுகின்றன. டொலரை தவிர்த்து சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட முனைப்பு காண்பிக்கின்றன. டொலரின் மேலாதிக்கத்தை அவ்வளவு எளிதில் சரித்து விட முடியாது என்றாலும், டொலர் மேலாதிக்கத்திற்கு எதிராக குறிப்பி டத்தக்க நகர்வுகளை இந்த நாடுகள் செய்கின்றன. இதன் காரணமாக தெற்கு உலக நாடுகளுக்கும் நவீன தாராளமய கட்டமைப்பை உடைத்து முன்னேறுவ தற்கான நம்பிக்கையும் வாய்ப்புகளும் கிடைக்கின்றன என்பதே அக்கட்டுரையின் சாரம். இனி கட்டுரையின் உள்ளடக்கத்திற்குள் செல்வோம்.
நடுத்தெரு வழிப்பறி
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் தொடுத்து வரும் பொருளாதாரத் தடைகளுக்கு ஐ.நா சபையின் ஒப்புதலெல்லாம் கிடையாது. யார் யார் தங்களின் கட்டளைகளுக்கு அடிபணிய மறுக்கிறார்களோ அவர்களை நோக்கியெல்லாம் பொருளாதாரத் தடைகள் பாயும். அனேகமாக உலகத்தின் மூன்றில் ஒரு பங்கு நாடுகளின் மீது ஏதோ ஒரு நேரத்தில் பொருளாதாரத் தடைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடைகளில் ஒரு குறிப்பிடத்தக்க வடிவம், மேலை நாடுகளின் நிதி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள நிதிச் சொத்துக்களை முடக்குவதாகும். ஏற்கனவே ஈரான், கியூபா, வெனிசுலா நாடுகளின் நிதிச் சொத்துக்கள் இப்படி முடக்கப்பட்டன. அண்மைக் காலத்தில் ரஷ்யா இத்தகைய முடக்கத்தை சந்தித்துள்ளது.
இப்படியெல்லாம் முடக்குவது கூட முதலாளித்துவ நெறிகளுக்கே முரணானதுதான். உண்மையில் இது நட்ட நடுத் தெருவில் செய்யப்படும் வழிப்பறியாகும். ஆனாலும் ஏகாதிபத்திய நாடுகள் எந்தவித தயக்கமும் இல்லாமல் இதைச் செய்கின்றன. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சவும் செய்கின்றன. நிதிச் சொத்துக்களை முடக்குவது என்றால் வட்டி வருமானம் கூட சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு போகாது என்று அர்த்தம். ரஷ்ய நிதிச் சொத்துக்களை முடக்கியதால் கிட்டிய வட்டி வருமானத்தை நேட்டோவுக்காக ரஷ்யாவுக்கு எதிராகப் போர் நடத்தும் உக்ரைனின் போர்ச்செலவுகளுக்கு அமெரிக்கா தந்தது என்பதே அந்த குரூரம்.

ஊருக்குதான் உபதேசம்
நவீன தாராளமயக் கொள்கைகளை தெற்குலகின் மீது சுமத்திய போது திரும்பத் திரும்பச் சொன்ன காரணம் அந்தக் கொள்கைகள் அந்த நாடுகளுக்கு பயனளிக்கும் என்பதே. ஆனால் அமெரிக்காவே இப்போது சந்தை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சொந்த நாட்டின் வேலை வாய்ப்புகளை பாதுகாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும் இவ்வாறு செய்கிறது. அத்தகைய சந்தை பாதுகாப்பு என்பது பெரும்பாலும் சீனாவைக் குறி வைத்தே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப், தான் பதவிக்கு வந்தவுடன் இத்தகைய நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்துவேன் என பிரகடனம் செய்துள்ளார். சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எல்லா பொருள்களின் மீதும் கூடுதல் 10% இறக்கு மதி வரி போடப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்காக அவர் கற்பிக்கிற காரணம், சீனாவில் இருந்து போலி மருந்துகள் வருகின்றன. அவற்றை சீன அரசு கட்டுப்படுத்துவதாகக் கூறினாலும் செய்வதில்லை என்பதுதான்.
உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ன கருதுகிறது என்றால், அது நினைப்பதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதுதான். அதாவது சட்டம் என் கையில் என்கிற அணுகுமுறை. அது முதலாளித்துவ நெறிகளுக்கு முரணானது என்றாலும், தான் உலக நாடுகளுக்கு செய்த உபதேசத்திற்கு மாறானது என்றாலும் அது பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால் அமெரிக்காவின் இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகள் தற்போது சவாலுக்குள்ளாகின்றன. அவர்கள் அடித்த பந்து அவர்களை நோக்கியே வருகிறது.
சீனாவின் ரிட்டர்ன் ஷாட்
அமெரிக்கா சீனாவுக்கான கம்ப்யூட்டர் சிப் (Semi Conductor) ஏற்று மதியை தடை செய்து நிறுத்தியது. சீனா பதிலுக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு பெரிதும் பயன்படும் அமெரிக்காவுக்கான “ஆன்டிமோனி” ஏற்றுமதிகளை தடை செய்துவிட்டது. இதனால் அமெரிக்காவில் “ஆன்டிமோனி” விலைகள் கிடு கிடுவென்று உயர்ந்துவிட்டன. அத்தோடு சீனா நிற்கவில்லை. அமெரிக்காவிடமிருந்து வாங்கும் பெட்ரோலிய அளவை வெகுவாகக் குறைத்துவிட்டது. இது அமெரிக்காவுக்கு பலத்த அடி. சீனாவின் பெட்ரோலிய இறக்குமதி 2023 இல் 15 கோடி பேரல் எனில் 2024 இல் 8 கோடி பேரல் ஆகக் குறைந்து விட்டது.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பெட்ரோலிய இறக்குமதி நாடாக இருந்த சீனா இப்போது ஆறாவது இடத்திற்கு சென்று விட்டது. அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலிய இறக்குமதி செய்வதை முற்றிலுமாக நிறுத்துகிற முடிவை நோக்கி சீனா போய்க்கொண்டிருக்கிறது. சீனாவின் இந்த முடிவு டிரம்பை கோபப்படுத்தி உள்ளது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உலகத்தின் முதன்மை இடத்திற்கு வருவதற்கு அவர் செய்தது கொஞ்சமா நஞ்சமா? ரஷ்யாவில் இருந்து ஜெர்மனி வரை செல்கிற “நார்டு ஸ்ட்ரீம் கேஸ் பைப் லைனை” (Nord Stream pipeline) 2022 இல் தகர்த்தது சி.ஐ.ஏ வேலைதான் என்று அமெரிக்க ஊடகவி யலாளார் செய்மோர் ஹெர்ஸ் குற்றம் சாட்டினார். அதன் நோக்கம் ரஷ்ய எரிவாயுவை சார்ந்து ஐரோப்பிய நாடுகள் இருக்கக் கூடாது என்பதும் அமெரிக்கா வைச் சார்ந்து இருக்க வேண்டும் என்பதும்தான். பின்னர் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு நிகழவும் செய்தது.

திசை மாறும் வர்த்தகம்
சீனா அமெரிக்க பெட்ரோலிய இறக்குமதியை நிறுத்துவது என்பது அமெரிக்காவின் சந்தை வேட்டையை தடுத்து நிறுத்துகிற செயலாகும். உண்மையில் இது அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளுக்கு சீனாவின் பதிலடி என்பது மட்டுமல்ல, அமெரிக்காவை சார்ந்து நிற்பதை விட்டுவிட்டு விலகி வருவதும் ஆகும். இல்லையெனில் ஒரு கட்டத்தில் அமெரிக்கா இத்தகைய சார்ந்த நிலையை பயன்படுத்தி சீனாவின் கையை முறுக்கும் என்பதே காரணம்.
அமெரிக்காவிடமிருந்து பெட்ரோலிய இறக்குமதியைக் குறைத்த சீனா, எவ்வாறு தனது தேவையை நிறைவு செய்து கொள்கிறது என்பதும் முக்கியம். அது இப்போது ரஷ்யா, ஈரான், வெனிசுவேலா நாடுகளிலிருந்து பெட்ரோலிய இறக்குமதியைச் செய்கிறது. இந்த மூன்றுமே அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளால் குறி வைத்துத் தாக்கப்படும் நாடுகளாகும். வர்த்தகத் தடைகள் காரணமாக இந்த நாடுகளிடமிருந்து பெட்ரோலியம் மலிவான விலையில் சீனாவுக்கு கிடைக்கிறது. இதனால் அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதில் இருந்து சீனா விடுபடுவது மட்டுமல்ல, அதனால் பயனடையவும் செய்கிறது.
அமெரிக்காவும் சீனாவிடம் இழந்த சந்தையை மீட்பதற்கு ஐரோப்பிய சந்தையை கைப்பற்றி ஈடு செய்துள்ளது. எது வினை, எது எதிர்வினை? சீனாவின் இத்தகைய நிலை டொனால்டு டிரம்புக்கு கோபத்தை ஊட்டுவது ஆச்சரியம் இல்லை. சீனா வர்த்தக யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் உண்மையில் அமெரிக்கா கட்டவிழ்த்து விட்ட வர்த்தக யுத்தத்தையே சீனா எதிர்கொள்கிறது, தன்னை தற்காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கிறது.
இவ்வளவு காலம் சின்னச் சின்ன அப்பாவி நாடுகளை வர்த்தகத் தடைகள் மூலம் அமெரிக்கா மிரட்டி வந்தது. அந்த நாடுகளும் வேறு வழி இல்லாமல் அடி பணிந்து அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டி வந்தது. ஆனால் இப்போதோ பெரிய நாடுகளை அமெரிக்கா குறி வைக்கிறது. அந்த நாடுகள் எதிர்ப்பு இல்லாமல் அடிபணியத் தயாராக இல்லை. ஆகவே அமெரிக்காவின் மேலாதிக்க முயற்சிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் மாற்று ஏற்பாடுகளும் உருவெடுக்கத் துவங்கியுள்ளன. இதனால் மூன்றில் ஒரு பங்கு உலகத்தை வர்த்தகத் தடைகள் மூலம் அச்சுறுத்த முனைந்த அமெரிக்காவின் முயற்சிகள் ஆட்டம் காணத் துவங்கி உள்ளன. இது மான் வேட்டை அல்ல, யானை வேட்டை என்பதை அமெரிக்கா களத்தில் சந்திக்கிறது.

டொலர் தடுமாற்றம்
இத்தகைய நிகழ்ச்சிப் போக்குகள் டொலரின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. சீனா தற்போது பெட்ரோலிய இறக்குமதி செய்யும் ரஷ்யாவும், ஈரானும் “பிரிக்ஸ்” கூட்டமைப்பில் உள்ள நாடுகள். வெனிசுவேலாவும் அதன் எதிர்கால உறுப்பினராக ஆக வாய்ப்புள்ளது. “பிரிக்ஸ்” நாடுகளுக்குள்ளான வர்த்தகம் அதிகரிக்கும் போது அவை டொலரைச் சார்ந்து நடப்பதில்லை. பிரிக்ஸ் நாடுகள் எந்த நாணயத்தை மையமாகக் கொண்டு இயங்குகின்றன என்பதில் முடிவு வராவிட்டாலும், அது டொலராக இல்லை என்பது மட்டும் தெளிவு. இதுவே பிரிக்ஸ் நாடுகளின் கசான் உச்சி மாநாடு தந்த செய்தி.
ஆகவே அமெரிக்காவிடம் இருந்து செய்யப்படும் இறக்குமதியை சீனா தடை செய்வது பிரிக்ஸ் நாடுகளுக்குள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவது மட்டுமல்ல, மாற்று நாணய ஏற்பாட்டை வலுப்படுத்துகிற செயலும் ஆகும். இது டொலரின் மேலாதிக்கத்தைப் பாதிக்கும். உலக வர்த்தகத்தில் டொலரின் இடத்தை பறிப்பது என்பது ஓர் இரவில் நடந்தேறும் செயலல்ல என்றாலும் அதன் மேலாதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குகிற பயணம் துவங்கிவிட்டது என்பது உண்மை.
தெற்குலகுக்கு நம்பிக்கை
தெற்கு உலகின் கழுத்தை நெரித்து வைத்துள்ள நவீன தாராளமயப்பாதை ஓர் முட்டுச்சந்தை எட்டி நிற்கிறது என்பதே இன்றைய நிலை. இது உழைப்பாளி மக்கள் மீது கடும் சுமைகளை ஏற்றி உள்ளது. நவீன தாராளமயக் கட்டமைப்பை விட்டு வெளியேறாமல் நவீன தாராளமயம் உருவாக்குகிற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடையாது. ஆகவே அதை விட்டு வெளியே வந்தாக வேண்டி இருக்கிறது. ஆனால் அவ்வாறு நவீன தாராளமயப் பாதையை விட்டு வெளியே வருவது வலிகள் நிறைந்த மாற்றமாக (Transition al Pain) இருக்கும். அதுவும் குறிப்பாக எந்த பகுதி மக்கள் நவீன தாராளமய நுகத்தடியை விட்டு விடுபட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களே அந்த வலியை அனுபவிக்க நேரிடும். இதற்குக் காரணம் நவீன தாராளமயம் தன்னை விட்டு விலகுவதை அவ்வளவு எளிதாக அனுமதிக்காது, தன் முனைப்பாக தாக்குதல் தொடுக்கும், அத்தகைய தாக்குதலுக்கு ஏகாதிபத்தியத்தின் வர்த்தகத் தடைகள் துணை நிற்கும் என்பதே.
உதாரணமாக தெற்குலக நாடுகள் நவீன தாராளமய பொருளாதாரப் பாதையை விட்டு விலகுவதற்காக – பொருளாதாரத்தை மீட்பதற்காக – தேசிய அரசின் சுய செயல்பாட்டை மீண்டும் நிறுவுவதற்காக, மூலதனத்தின் மீதான கட்டுப்பாடுகளை விதிக்குமேயானால் மூலதனம் தேசத்தை விட்டு வெளியேறத் துவங்கும். இதற்கு அச்சப்படாமல் இந்த நாடுகள் மக்கள் நலனுக்கான பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, வர்த்தகப் பற்றாக்குறையையும் எதிர்கொள்ள நேரிடும். மூலதனம் உள்ளே வராத நிலையில் வர்த்தகக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டி இருக்கும். இதனால் சில சரக்குகள் உள் நாட்டில் கிடைக்காத நிலை ஏற்படும். இத்தகைய மாறுகிற கட்டத்தில் உழைப்பாளி மக்களின் கிராக்கி மீதும் சில சுருக்கங்களை ஏற்படுத்த வேண்டி இருக்கும். இதற்கெல்லாம் மக்களை தயார் செய்ய வேண்டி இருக்கும்.

வலியும் இதமும்
ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு எதிராக சீனா உள்ளிட்ட நாடுகள் ஆற்றும் எதிர்வினைகள், தெற்குலக நாடுகளின் வலி மிகுந்த பயணத்தை ஓரளவு மட்டுப்படுத்தி, சற்று இதம் தருகிற சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த இதம் முன்னேறுவதற்கான உந்துதலை வளரும் நாடுகளுக்கு தரக்கூடும். சந்தைக்கும், நாணய ஏற்பாட்டுக்கும் மாற்று வழிகளை உருவாக்குவது இத்தகைய வலியை முற்றிலும் போக்காவிட்டாலும் குறைக்கவல்லதாகும். குறிப்பாக இத்தகைய ஏற்பாடு இருதரப்பு உடன்பாடுகளாக, மலர்வது என்பது பெரிதும் பயன்படக்கூடும். சோவியத் யூனியன் இத்தகைய ஏற்பாடுகளை தெற்கு உலக நாடுகளோடு முந்தைய காலத்தில் வைத்திருந்தது. ஆகவே இத்தகைய உலக பொருளாதாரப் போக்குகள், நவீன தாராளமயப் பாதையில் இருந்து முறித்துக் கொள்வதற்கான சக்தியை தெற்கு உலக நாடுகளுக்கு அதிகரிக்கும். சீனா செய்து கொண்டுள்ள மாற்று பெட்ரோலிய இறக்குமதி ஏற்பாடுகள் இத்தகைய வாய்ப்புகளுக்கான வாசலை அழுத்தமாகச் சுட்டிக் காட்டுகின்றன.