தேசியவாத சிந்தனையால் மானுட விடுதலை சாத்தியமா?

-ராஜன் குறை

திராவிடவியம் என்ற கருத்தியல், அதனை உருவாக்கிய சமூக, அரசியல் இயக்கங்கள், திராவிட-தமிழர் என்ற தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதியை உருவாக்கி, அதனை கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியல் விழிப்புணர்விலும் மேம்பட்ட தொகுதியாக வளர்த்தெடுத்து வருகிறது. 

இந்த திராவிட-தமிழர் அரசியல் தன்னுணர்வு மாநில சுயாட்சி என்னும் அதிகாரப்பகிர்வு, சமதர்மம் என்ற சோஷலிச முற்போக்கு சிந்தனை, சமூக நீதி என்ற ஏற்றத்தாழ்வற்ற சமூக அமைப்பு ஆகிய குடியரசு விழுமியங்களால் கட்டப்பட்டுள்ளது. இந்திய குடியரசினுள் மக்களாட்சிக் களத்தில் இந்த விழுமியங்களை வலியுறுத்தி பொது மன்றத்தில் போராடி நிற்கும் மக்கள் தொகுதியாக தமிழ்நாட்டின் திராவிட-தமிழர் மக்கள் தொகுதி விளங்கி வருகிறது.

இந்தியக் குடியரசு உருவான சமயத்தில் தமிழ்நாட்டில் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சிகளை, ஆரிய வர்ண தர்ம சமூகத்தினை வலுப்படுத்தும் முயற்சியுடன் இணைத்துப் பார்த்த சமூக இயக்கமான திராவிடர் கழகம், அதிலிருந்து பிரிந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை, திராவிட நாடு என்ற தனியான தென்னிந்திய கூட்டாட்சிக் குடியரசை அமைப்பதைக் கொள்கையாகக் கொண்டன.

அதன்படி 1962 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்று இந்திய நாடாளுமன்றம் சென்ற அண்ணா, தான் திராவிட மக்கள் தொகுதியைச் சேர்ந்தவன் என்று கூறி, இந்தியாவிலுள்ள பல்வேறு மக்கள் தொகுதிகளுக்கு தங்களுக்கான குடியரசை அமைத்துக்கொள்ளும் சுய நிர்ணய உரிமை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய ஒன்றிய அரசு இந்தியக் குடியரசில் இவ்வாறு சுய நிர்ணய உரிமை கோரும் அமைப்புகள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவை, அவை தேர்தல்களில் பங்கெடுக்க இயலாது என்ற அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது.

மக்களாட்சிக் களத்தில் கட்சியை வலுப்படுத்தி மாநிலத்தில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதே திராவிட-தமிழ் மக்கள் தொகுதியின் தன்னுணர்வையும், வாழ்வையும் வளப்படுத்தி, வலுப்படுத்திக் குடியரசு விழுமியங்களை நிலைநிறுத்த உதவும் என்பதால், திராவிட நாடு கோரிக்கையை மாநில சுயாட்சிக் கோரிக்கையாக தகவமைத்து தனது கொள்கைப் பயணத்தைத் தொடர்ந்தது தி.மு.க. இந்தியக் குடியரசுடன் பிறந்த அந்தக் கட்சி, எழுபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, பிற பெரியாரிய, அம்பேத்கரிய, முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து இந்திய குடியரசின் சமூக நீதி, அதிகாரப் பரவல் விழுமியங்களைக் காத்து நிற்பதில் அரும்பங்காற்றி வருகிறது.

புத்தரும், மகாவீரரும், திருவள்ளுவரும், வள்ளலாரும் இன்னபிற ஆன்றோர்களும், சான்றோர்களும் உருவாக்கிய பண்பாட்டு விளைநிலத்தில் ஆரிய வர்ண தர்மத்திற்கு எதிராக சமதர்ம விழுமியத்தை மக்கள் தொகுதியின் தன்னுணர்வாக நிலைநிறுத்தும் நெடியதொரு வரலாற்றுப் போராட்டத்தில் எஃகு போன்ற உறுதியுடன் மக்களாட்சி முரண்களத்தில் முன்னேறி வரும் வன்முறையற்ற அரசியல் புரட்சிதான் திராவிடவிய கருத்தியல் புரட்சி.

இந்தப் புரட்சியின் அடித்தளமாக அடித்தட்டு மக்களும் தன்னுணர்வு கொள்ளும்படி பகுத்தறிவுப் புரட்சியை நிகழ்த்திய ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார். அவர் நடத்திய இரண்டு முக்கிய ஏடுகளின் பெயர்களான குடியரசு, விடுதலை ஆகியவற்றை சிந்தித்துப் பார்த்தால் அவருடைய அரசியல் தத்துவம் புரிந்துவிடும். அது குடியரசு விழுமியங்களை மக்கள் தன்னுணர்வில் வலுப்படுத்துவதால் பெறக்கூடிய அரசியல் விடுதலையாகும்.  

இந்த நிலையில் தமிழ் தேசியம் என்று தாங்கள் புரிந்துகொள்ளும் தேசியவாத அரசியலை திராவிட இயக்கம் முன்னெடுக்கவில்லை என்றும் அதனால் தமிழ்நாட்டு மக்களின் விடுதலை நிகழாமல் போய்விட்டது என்றும் பலவிதமான குதர்க்கமான, கொச்சை வாதங்களை பலர் முன்னெடுப்பது அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது.

இந்த குறுகிய பார்வையின் மிகப்பெரிய பிரச்சினை மானுட வரலாற்றில் தேசிய வாதத்தின் அல்லது தேசியத்தின் பங்களிப்பு என்ன, அது எங்காவது மானுட விடுதலையை வென்றடைய உதவியதா என்பதைக் குறித்த முழுமையான பரிசீலனையோ, அதைக் குறித்த ஆய்வோ இல்லாததாகும்.

கடந்த ஐந்நூறு, அறுநூறு ஆண்டுக்கால உலக வரலாற்றை ஒரு கட்டுரையில் சுருக்க முடியாது என்றாலும், ஒரு கோட்டோவியமாக மானுட முதிர்ச்சி (Human emancipation) என்ற கருதுகோள் என்ன, விடுதலை (Freedom) என்ற இலட்சியம் என்ன, அதனை அடைவதற்குத் தேவையான குடியரசு உருவாக்கம் என்றால் என்ன, குறுக்கே புகுந்து முதலீட்டிய சக்திகள் கைப்பற்றிய தேசியம் என்றால் என்ன என்பதை நாம் கோட்டோவியமாகப் பகுத்துப் பார்க்க வேண்டும்.

ஐரோப்பாவில் உருவான சில மாற்றங்கள் 

சிற்றரசர்கள், பேரரசர்கள், சாம்ராஜ்யங்கள், பெரும் படையணிகள் என உலகெங்கும் அரசுகள் உருவாவதும், விரிவடைவதும், சிதைவதுமாக இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகள் கடந்து போயின. இவற்றினூடாக பரவலான நில உடமைச் சமூகங்கள் உருவாகி நிலைபெற்றன. அவற்றில் மூவடுக்கு, நாலடுக்கு சமூகங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இது கிறிஸ்துவ பாதிரிமார்கள், அரசர்கள் / நிலப்பிரபுக்கள்/ பிற சாமானிய மக்கள் என்ற பிரிவினையாக நிலவியது. இந்தியாவில் நால்வர்ண சமூகமாக நிலவியது.

அநேகமாக எல்லா சமூகங்களிலுமே பூசாரிகள் / அரசர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான இயக்கங்கள் தோன்றத்தான் செய்தன. கடவுள் அனைத்து மக்களையும் உருவாக்கியதால் அனைவரும் சமம்தான் என்பன போன்ற சிந்தனைகள், பக்தி இயக்கங்கள் எல்லாம் மீண்டும், மீண்டும் துளிர்த்தன. அற்புதமான பண்பாட்டு விழுமியங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவற்றையெல்லாம் சமூகக் கட்டமைப்பு உள்ளிழுத்துக்கொண்டு மீண்டும் படிநிலை சமூகத்தை, ஏற்றத்தாழ்வுகளைக் கட்டமைத்தது.

ஐரோப்பாவில் நீடித்த நிலவுடமை சமூகத்தின் உபரியில் வர்த்தக நடவடிக்கைகள், தொழில் கூட்டமைப்புகள் பெருகின. அவற்றுடன் இணைந்த கல்வியாளர்களும் நகரத்தில் மாறுபட்ட சமூக சிந்தனைகளுக்கு வித்திட்டனர். இத்தாலிய நகர சமூகங்களில் வர்த்தகர்கள் வங்கித் தொழிலை துவங்கினர். இதனால் முதலீட்டிய திரட்சி என்பது உருவாகத் தொடங்கியது. இத்தாலிய நகர அரசுகளில் வர்த்தகக் குடும்பங்கள் செய்த அரசியல் பரிசோதனைகளில் பதினைந்தாம் நூற்றாண்டில் குடியரசு சிந்தனை வலுப்படத் துவங்கியது.

மனிதர்கள் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்றவர்கள் என்பதால், அவர்கள் மத அமைப்புகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் கட்டுப்பட்டு கீழ்படிந்து வாழாமல், சிந்தனை முதிர்ச்சி பெற வேண்டும். குழந்தைகள் பெற்றோரின் கட்டுப்பாட்டில் வாழ்வது போல வாழாமல், மனித சமூகங்கள் தங்களுக்கான விழுமியங்களைச் சிந்தித்து உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பன போன்ற சிந்தனைகள் மானுட முதிர்ச்சி (Human emancipation) குறித்த சிந்தனைகளாக மாறின.

அனைத்து மனிதர்களும் மரபுகளின் நுகத்தடியில் பூட்டப்பட்ட விலங்குகளாக இருக்காமல், தங்கள் வாழ்வைச் சிந்தித்து தகவமைத்துக்கொள்ள வேண்டும், தங்கள் ஆற்றல்களை விகசிக்க அனுமதிக்கும் சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே விடுதலைக் கருத்தியலை உருவாக்கியது.  

பதினைந்தாம் நூற்றாண்டின் மத்தியில் 1436-1456 ஆண்டுகளில் கூட்டன்பெர்க் (Johannes Gutenberg) உருவாக்கிய அச்சு இயந்திரம், அச்சுத் தொழில் பரவலின் மூலம் நூல்களை முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களிடையே பரவச் செய்ததில் மிகப் பெரிய சமூக மாற்றம் உருவாகத் தொடங்கியது.

இதனையொட்டி இந்தியாவிற்கு கடல்வழி கண்டுபிடிக்க முனைந்ததில் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டங்களை கண்டடைய காரணம் ஆனதும், ஆறாண்டுகளுக்குப் பின் 1498 ஆம் ஆண்டு வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல்வழி கண்டதும் வர்த்தகம் பன்மடங்கு பெருகவும், புதிய பண்டங்களும், தொழில்களும் பெருகவும் காரணமானது.  

தொடர்ந்து ஐரோப்பியர்கள் உலகம் முழுவதும் சென்றார்கள், வட அமெரிக்க, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். ஆசிய நாடுகளில் வர்த்தக மையங்களை உருவாக்கினார்கள். ஆபிரிக்காவிற்குள் புகுந்து, கருப்பின அடிமைகளை விலைக்கு வாங்கி அமெரிக்காவிற்கு கொண்டு சென்று தோட்டத் தொழில்களிலும், சுரங்கங்கள் தோண்டி கனிமங்களை எடுப்பதிலும் ஈடுபடுத்தினார்கள். ஐரோப்பா 1500 முதல் 1800 வரையிலான முந்நூறாண்டுகளில் பெரும் முதலீட்டிய திரட்சியைச் சாத்தியமாக்கியது. அறிவியல், தொழில்நுட்பம் வளர்ந்து தொழிற்புரட்சி உருவானது.

தேசியவாதம் பிறந்தது

கல்விப்பரவல், வர்த்தக தொழில் நடவடிக்கைகளால் உருவான மத்திய தர வர்க்கம், முதலீட்டிய சக்திகள் ஆகியவை பழைய மதகுருமார்கள் + அரசர்கள் + நிலப்பிரபுக்கள் என்ற கூட்டணியின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தபோது புதிய விழுமியங்கள் அடிப்படையில் குடியரசுகளை, அதாவது சட்டத்தின் ஆட்சியை, உருவாக்க முனைந்தன. ஏற்கனவே அரசவைகள் இருந்த இங்கிலாந்து, ஃபிரான்சு முதலிய நாடுகளில் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.  

ஐரோப்பியர்கள், குறிப்பாக பிரிட்டிஷ்காரர்கள் குடியேறிய வட அமெரிக்காவில் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் மன்னரில்லாத முதல் மக்களாட்சிக் குடியரசை 1776 ஆம் ஆண்டு உருவாக்கினார்கள். பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற அனைத்து மானுட விடுதலைக்கான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படி மக்கள் நல குடியரசு விழுமியங்களை உருவாக்க முனைந்தபோது அந்தக் குடியரசுக்கான தன்னுணர்வு பெற்ற மக்கள் தொகுதிகளை உருவாக்க வேண்டியிருந்தது. அதனையொட்டியே தேசியவாதம் தோன்றியது. பல்வேறு சிற்றரசுகளாக இருந்த ஜெர்மானிய மக்கள், ஒருங்கிணைந்த ஜெர்மானிய தேசத்தை உருவாக்கினர்.

அதைவிட உலக சிந்தனையாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது, இத்தாலியில் பிறந்த தேசியவாதம். இத்தாலியின் பல்வேறு நகர அரசுகள், சிற்றரசுகளை ஒற்றைக் குடியரசாக இணைக்க வேண்டும் என்ற சிந்தனையை ஜோசப்பே மாஜினி (1805-1872) முன்னெடுத்தார். அவர் இத்தாலியக் குடியரசு உருவாவதை ஐரோப்பாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் குடியரசு உருவாவதன் பகுதியாகவே பார்த்தார். இத்தாலிய தேசியவாதம் குடியரசை சாத்தியப்படுத்துவதற்கே என்று நினைத்தார்.
இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு படிக்கச் சென்ற காந்தி, சாவர்க்கர் இருவருமே மாஜினியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டனர். காந்தி, மாஜினி வலியுறுத்திய குடியரசு விழுமியங்களால் கவரப்பட்டார். சாவர்க்கர், இத்தாலிய தேசிய இறையாண்மையால் கவரப்பட்டார். இன்றைய இந்திய அரசியலில் இந்த முரணின் தொடர்ச்சியைக் காணலாம். விரிக்கில் பெருகும்.

போர் இயந்திரங்களான தேசங்கள்

குடியரசு விழுமியங்களுக்காக இலட்சியவாதிகள் உருவகித்த தேசங்கள், முதலீட்டிய திரட்சிக்கான அரசு இயந்திரங்களாக மாறின. காலனியாதிக்கப் போட்டி, வர்த்தகப் போட்டி ஆகியவற்றின் விளைவாக ஐரோப்பிய தேசங்கள் போர்களில் ஈடுபடத் துவங்கின. இதனால் முதல் உலகப்போர் 1914-1918 ஆகிய ஆண்டுகளில் பெரும் அழிவினை உருவாக்கியது.

இதனையடுத்து நடந்துதான் முக்கியம். பல கதைகளில் அழகிய பெண் போல தோற்றமளிக்கும் பேய், அருகில் சென்றதும் கோரமான வடிவைக் காட்டிக் கொல்வது போல, மானுட தன்னுணர்வின் விகசிப்பாகத் தெரிந்த இத்தாலிய, ஜெர்மானிய தேசியங்கள் பாசிசமாகவும், நாசிசமாகவும் உருவெடுத்தன. பேரழிவை உருவாக்கிய 1939-1945 ஆண்டுகளில் நிகழ்ந்த இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாயின.

அதே சமயம், ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்கத்திலிருந்த நாடுகள் சுய நிர்ணய உரிமையைப் பேசி, தேசிய விடுதலை இயக்கங்களை நடத்தி சுதந்திர குடியரசுகள் ஆனதால் தேசியவாதத்திற்கு விடுதலை அரசியல் போன்ற தோற்றம் மீண்டும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது.

என்ன பிரச்சினையென்றால் அவ்வாறு உருவான தேசங்களிலும் முதலீட்டிய உற்பத்தி முறை தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது. உள்நாட்டின் முரண்களைச் சமாளிக்க தேசியவாதம் பாசிச அவதாரங்களை எடுப்பதும், எதேச்சதிகார அரசுகளை உருவாக்குவதும் இயல்பானது. உள்நாட்டு முரண்களை அடக்க போலீஸ் துப்பாக்கி, வெளிநாட்டு முரண்களுக்கு இராணுவ துப்பாக்கி என இராணுவ-தொழில் கூட்டமைப்பில் சிக்கி (Military-industrial complex) குடியரசு விழுமியங்கள் திணறுகின்றன.

ஒரு தேசிய அரசு உருவாகிவிட்டால் அதனுள் இருக்கும் மக்கள் தொகுதி எதுவும் சுய நிர்ணய உரிமை கோரி தனி தேசமாக பிரிந்து செல்வது எளிதாக இருப்பதில்லை. அப்படியே பிரிந்து சென்றாலும், அது நல்லுறவுடன் நீடிக்க முடிவதில்லை. ஒவ்வொரு தேசத்தினுள்ளும் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் உருவாகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள் பெருகுகின்றன. குடியரசு விழுமியங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு பெரும்பான்மைவாதம் உருவாகிறது. ஏற்றத்தாழ்வு உருவாகிறது.

பொது உடமை அரசுகளாக உருவான தேசங்கள், உலக முதலீட்டிய இயக்கத்தில் இணைந்ததும் அதனால் அவற்றின் பொது உடமை விழுமியங்கள் சிதைந்ததும் தவிர்க்க முடியாமல் போனதில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உலகளாவிய முதலீட்டிய வலைப்பின்னலே வரலாற்றைக் கைப்பற்றியது எனலாம். முதலீட்டிய திரட்சியின் களங்களாகச் சுருங்கும் தேசங்கள், பரந்துபட்ட மக்கள் நலனை பாதுகாக்கத் திணறுகின்றன.

சமகாலத்தில் பொருளற்றுப் போகும் தேசியவாதம்

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் 1991 இற்குப் பிறகு, உலக அளவிலான முதலீட்டிய நடவடிக்கைகள் பன்மடங்கு தீவிரமடைந்துள்ளன. பெருகும் முதலீட்டிய ஏற்றுமதியும், தொழிலாளர் இடப்பெயர்வும் தேசங்களின் பொருளாதார வாழ்வைப் பிணைக்கின்றன. தகவல் தொழில்நுட்ப வலைப்பின்னல் கற்பனைக்கும் எட்டாத வேகத்தில் பெருகியுள்ளது. உலகளாவிய சூழலியல் சிதைவு மானுடத்தைப் பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில் ஒடுக்கப்படும் மக்கள் விடுதலை என்பது பழைய சுயநிர்ணய உரிமை, தேசியவாத நோக்கில் சாத்தியமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆயுதப் போராட்டமென்றால் கள்ள மார்க்கெட்டில் ஆயுதங்கள் கிடைக்கும். ஆனால், அது ஒரு காலும் சர்வதேச முதலீட்டிய வலைப்பின்னலின் ஆதரவு பெற்ற தேசிய அரசுகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கப் போதுமானதாக இருக்காது. ஆயுத வியாபாரிகள் நேரடிச் சந்தையில் விற்றுக் கொழுத்தது போதாதென்று, கள்ள மார்க்கெட்டிலும் விற்றுக் கொழுப்பார்கள்.

சரி, எப்படியோ மக்களைத் திரட்டி தேசிய விடுதலையைப் பெற்று இறையாண்மையுள்ள அரசை அமைத்தாலும், இன்றைய முதலீட்டிய வலைப்பின்னலில், தகவல் தொடர்பு வலைப்பின்னலில், உலகளாவிய சூழலியல் சீர்கேட்டில் அந்த இறையாண்மையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது அதைவிடப் பெரிய கேள்வி.

இத்தகைய சூழலில், மானுடத் தன்னுணர்வை எல்லா மொழிகளிலும் சமதர்மம், அதிகாரப் பரவல், வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் களமாக்கி சர்வதேச கூட்டாட்சிக் குடியரசை நோக்கி செல்வதே மானுடம் எதிர்நோக்கும் ஒரே சாத்தியம். சுயாட்சி உரிமைகளை அதிகரித்து மக்கள் தொகுதிகளின் தன்னுணர்வை வலுப்படுத்துவதே பரந்துபட்ட மக்கள் விடுதலையைக் கூடியவரை சாத்தியமாக்கும்.

தமிழ்நாட்டின் நல்வாய்ப்பாக பெரியாரும், அண்ணாவும், திராவிடவியமும் அத்தகைய குடியரசு விழுமிய அரசியலையே முன்னிறுத்தியிருப்பது தமிழர்கள் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய வரலாற்றுக் கொடையாகும். “யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதிய பண்பாட்டின் பயணம் அப்படித்தானே இருக்க வேண்டும்.  

Tags: