DeepSeek அதிரடி வெற்றியும் ஆயிரம் கேள்விகளும்
-சைபர் சிம்மன்

உலகம் முழுவதையும் கிழக்கு நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சீனாவின் ‘டீப்சீக்’ செயலி. அதோடு, செயற்கை நுண்ணறிவுத் துறையின் (AI – ஏஐ) எதிர்காலம் தொடர்பான விவாதத்தில் சீனாவை மையத்துக்குக் கொண்டுவந்துள்ளது. டீப்சீக் (DeepSeek) ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மட்டத்தில் தொடர்கின்றன. கூடவே, பலவிதமான கேள்விகளும் தொடரவே செய்கின்றன!
அறிமுகமான வேகத்தில் டீப்சீக் பெற்றுள்ள வெற்றி, ஏஐ துறையில், குறிப்பாக ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் (Chatbots) பிரிவில் அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சரியான போட்டியாகவும் அதிர்ச்சி வைத்தியமாகவும் பேசப்படுகிறது.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளுக்கு ஏற்பட்ட இரத்தக்களரி நிலையில் இருந்தே டீப்சீக்கின் தாக்கத்தை உணரலாம். மேலும், ‘அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணி இது’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இதன் அரசியல் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளலாம்.
சீனப் போட்டி:
ஏஐ துறையில் சீனாவின் போட்டி தொடர்பான விவாதங்கள் புதிதல்ல என்றாலும், அதிகம் அறியப்படாத சீன புத்தாக்க நிறுவனமான டீப்சீக் தனது ‘ஆர்1’ சாட்பாட் (R1 Chatbot) மூலம், அமெரிக்க ஏஐ ஆதிக்கத்துக்கு எதிரான சவாலை உறுதிசெய்துள்ளது, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
அத்துடன், சராசரிப் பயனாளிகள் முதல் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் வரை பலதரப்பினரும் டீப்சீக் மூலம் சீனாவின் கை ஓங்குவதற்கான வாய்ப்பு பற்றிப் பரபரப்பாகப் பேசிவருகின்றனர். ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), ‘கிளாடு’ (Claude), ‘கூகுள் ஜெமினி’ (Google Gemini), ‘கிராக்’ போன்ற இன்னொரு ஏஐ சாட்பாட் தான் என்றாலும், டீப்சீக் வேறு எந்த ஏஐ சாட்பாட்டும் பெறாத கவனத்தைப் பெற்றுள்ளது.

தடையும் செலவும்!
இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. ஏஐ ஆய்வில் சீனா முன்னிலை பெற்றுவிடக் கூடாது என்னும் நோக்கத்தில், அந்நாட்டுக்கு அதிதிறன் வாய்ந்த ஏஐ சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்திருந்தது. ஏஐ செயலிகளை உருவாக்க வேண்டும் என்றால், பெரும் ஆற்றல் கொண்ட சிப்கள் அவசியம் எனக் கருதப்படுகிறது. இத்தகைய சிப் தயாரிப்பில் அமெரிக்காவின் என்விடியா (NVIDIA) நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இந்தத் தடையை மீறி, முன்னணி ஏஐ சாட்பாட்களுக்கு நிகரான சாட்பாட்டை டீப்சீக் சத்தம் இல்லாமல் உருவாக்கிக் காண்பித்துள்ளது.
இரண்டாவது காரணம், டீப்சீக் உருவாக ஆன செலவு. அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பில்லியன் டொலர் கணக்கில் முதலீடு பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, டீப்சீக் வெறும் 5.6 மில்லியன் டொலரில் (இந்திய ரூ.48.77 கோடியில்) சாட்பாட்டை உருவாக்கியிருக்கிறது. ஏஐ சாட்பாட்களை இயக்கும் மொழி மாதிரிகளை உருவாக்கவும், அவற்றுக்குப் பயிற்சி அளிக்கவும் பெரும் பொருள்செலவு தேவைப்படும் எனக் கருதப்படும் நிலையில், சொற்ப முதலீட்டில் டீப்சீக் தயாராகி உள்ளது. ஆனால், அதன் ஆற்றலும் செயல்பாடும் சாட்ஜிபிடிக்கே சவால் விடுகிறது.
ஏஐ உலகின் தற்போதைய நிலையைக் குலைக்க இந்த இரண்டு காரணங்களுமே போதுமானது. வன்பொருள் தடை, பெரும் முதலீடு தேவை ஆகிய இரண்டு சவால்களையுமே, தொழில்நுட்பம் சார்ந்த புதுமையான அணுகுமுறையால் டீப்சீக் வென்றெடுத்திருக்கிறது. டீப்சீக் நிறுவனர் லியான் வென்பென் (Liang Wenfeng), தன்வசம் இருந்த பழைய ஆற்றல் குறைந்த என்விடியா சிப்களைக் கொண்டே, ஏஐ சாட்பாட் செயல்பாட்டுக்குத் தேவையான செயல்திறனைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருக்கிறார். அதேபோல, பயிற்சி செயல்பாடுகளுக்கும் தொழில்நுட்பப் புதுமையாக்கத்தின் மூலம் செலவைப் பல மடங்கு குறைத்து, முதலீடு ஒரு பொருட்டல்ல என உணர்த்தியிருக்கிறார்.
பொதுவெளித் தன்மை:
பொதுவாக, புதிய தொழில்நுட்பச் சேவைகளின் செயல்பாடு ரகசியமாக வைக்கப்படும். ஆனால் டீப்சீக், தனது செயல்முறை தொடர்பான நுட்பங்களை மிக விரிவாக ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டு, சாட்பாட்டையும் பொதுவெளியில் ஓபன் சோர்ஸ் (Open Source) தன்மையில் வெளியிட்டுள்ளது.
அத்துடன், டீப்சீக் சாட்பாட்டை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, தங்கள் விருப்பம் போலப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்பாட் நுட்பங்களைப் பயன்படுத்தப் பலவிதமான கட்டணம் கட்டப்பட வேண்டிய நிலையில், டீப்சீக் இலவசமாகக் கிடைப்பது கவனிக்கத்தக்கது.
தணிக்கை சர்ச்சை:
சாட்ஜிபிடியுடனான ஒப்பீட்டில் டீப்சீக் அதிக மதிப்பெண்கள் பெறக்கூடியதாக இருந்தாலும், சர்ச்சைக்குரிய தலைப்புகள் தொடர்பான கேள்விகளுக்கான அதன் பதில்கள் அல்லது பதில் அற்ற தன்மை கவலையளிக்கிறது. உதாரணமாக, சீனாவின் டியான்மென் சதுக்கம் போராட்டம் தொடர்பான கேள்விக்கு இந்த சாட்பாட் பதில் அளிக்காமல் நழுவிச்செல்கிறது. இதேபோலவே, சீனா தொடர்பான எந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கும் இதன் பதில்கள் தணிக்கைக்கு உள்ளாகியிருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசம் போன்ற கேள்விகளுக்கும் டீப்சீக் சேவையின் பதில்கள் இதே வகையில் அமைந்துள்ளன. இணைய உலகில், சீனாவின் ‘ஃபயர்வால்’ தடுப்புகள் நன்கு அறியப்பட்டவை என்பதால், அதேபோன்ற தணிக்கை கொண்ட டீப்சீக் எப்படிச் சிறந்த சேவையாக இருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது. அதேவேளையில், எல்லா சாட்பாட்களுமே பலவித சர்ச்சைக் கேள்விகளுக்குப் பதில் சொல்லி வம்பில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கப் பயிற்சி அளிக்கப்பட்டவைதான்.
எனவே, தகவல் தணிக்கை என்பது சாட்பாட்களின் பொதுவான பிரச்சினை. ஆனால், டீப்சீக்கைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, மற்ற ஏஐ செயலிகள் அளவுக்குத் தணிக்கை செய்யப்படவில்லை என்கிற கருத்தும் இருக்கிறது. அதேபோல சீனா சார்பில் டீப்சீக் தகவல்களைத் திரட்டலாம் எனும் தனியுரிமை சார்ந்த அச்சமும் இருக்கிறது.
இந்தக் காரணத்தால் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் டீப்சீக் பிரச்சினைக்கு உள்ளாகியிருக்கிறது. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகள் திரட்டும் தகவல்கள் தொடர்பான தனியுரிமைப் பிரச்சினை எல்லா சேவைகளுக்கும் பொதுவானதே. சீன செயலிகள் விஷயத்தில் இது கூடுதலாக இருப்பதாகக் கருதலாம்.
இதனிடையே டீப்சீக் பயிற்சிக்காகத் தனது மொழிமாதிரி நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; இது காப்புரிமை மீறல் என்றும் ஓபன் ஏஐ (Open AI) குற்றம்சாட்டியுள்ளது. சாட்ஜிபிடி பயிற்சிக்கான தகவல் திரட்டலில், காப்புரிமை மீறல் புகார்களுக்கு இலக்காகியிருக்கும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் இந்தக் குற்றச்சாட்டு முரண்நகை என்றாலும், ஏஐ பயிற்சியில் காப்புரிமை தொடர்பான கேள்விகளின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது.

இந்தியாவுக்கு வாய்ப்பு:
டீப்சீக் தொடர்பான விவாதங்கள் இப்படிப் பலவிதமாக அமைந்தாலும், ஏஐ தளத்தில் இது ஓர் எச்சரிக்கை மணி என்னும் கருத்தை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒருவிதமான செய்தியை உணர்த்தும் எச்சரிக்கை மணி. உதாரணமாக, ஏஐ சேவைகள் உருவாக்கத்துக்குப் பெரும் தொழில்நுட்ப ஆற்றலும், மாபெரும் முதலீடும் தேவை என்னும் எண்ணத்தை இது தகர்த்திருக்கிறது. ஏஐ சந்தையை இது அகலத் திறந்திருக்கிறது.
சொற்பமான முதலீட்டில் சீன நிறுவனத்தால், வெற்றிகரமான ஏஐ சாட்பாட்டை உருவாக்க முடியும் என்றால், மற்ற நாடுகளுக்கும் இது சாத்தியமே என்னும் நம்பிக்கையையும் அளிக்கிறது. குறிப்பாக, இந்தியா கவனிக்க வேண்டிய விஷயம் இது. ஆனால், ஏஐ சேவைகள் செயலாக்கம் இன்னமும் மின்சார வடிவில் பெரும் ஆற்றலைக் கோருவதாகவே இருக்கிறது. இது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கமும் கணிசமானது.
இந்த அம்சத்தில் டீப்சீக் எப்படி என்பது தெரியவில்லை. ஏஐ சேவைகளை இயக்கும் தரவு மையங்களின் அகோர மின்பசி நிச்சயம் ஒரு முக்கியப் பிரச்சினை. ஆக, ஏஐ ஆய்வு – சேவைகள் தொடர்பான பிரச்சினைகள் மீது டீப்சீக் புதிய வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லலாம்!
-இந்து தமிழ் திசை
2025.02.06