இத்தனை சூழ்ச்சிகளா? இமாலய உள் குத்துக்களா?

-சாவித்திரி கண்ணன், ச.அருணாசலம்

டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின்  மிருகத்தனமான அதிகார பலம், கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சின் களப்பணிகள்..என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பா.ஜ.க (பாரதீய ஜனதா கட்சி)வின்  ‘சிஸ்ட மேட்டி’ (Systematic)க்கான சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன;

ஊழல் குறைந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான மருத்துவம், சீரான குடிநீர் விநியோகம், நியாயமான மின் கட்டணம் ஆகியவற்றை சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மியை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற வைத்தனர் டெல்லி மக்கள். அந்த ஆம் ஆத்மியை பா.ஜ.க தற்போது எப்படி தோற்கடித்தது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை;

அரவிந்த கெஜ்ரிவால் மட்டுமின்றி, முன்னாள் துணை முதல்வரான மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சவுரப் பரத்வாஜ் , அவாத் ஓஜா, மிகிந்தர் கோயல் போன்ற முன்னணி தலைவர்களும் இத் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.

கடந்த சட்ட மன்றத்தில் 62 இடங்களை வென்றிருந்த இந்த தேர்தலில் 22 இடங்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 53 லிருந்து 43 சதவிகிதமாக குறைந்துள்ளது.

# முதலாவதாக பா.ஜ.க செய்தது என்னவென்றால், டெல்லியில் உள்ள வாக்காளர் லிஸ்ட்டை கையில் எடுத்து, அதில் ஆம் ஆத்மியின் விசுவாசிகளை அடையாளம் கண்டு வாக்காளர் லிஸ்ட்டில் இருந்தே அப்புறப்படுத்தியது தான். இது குறித்த எந்த புகார்களையும் தேர்தல் கமிஷன் கவனத்தில் கொள்ள மறுத்தது!

உதாரணத்திற்கு வெறும் 4,000 சொச்சம் ஓட்டுகளில் தோற்றுள்ள கெஜ்ரிவால் தொகுதியான புது டெல்லி தொகுதியை எடுத்துக் கொண்டால் 2020 இல் இருந்த வாக்காளர்கள் 1,46,122. ஆனால், இந்த எண்ணிக்கை 2024 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலேயே 1,06365 என்பதாக குறைக்கப்பட்டது. அத்துடன் தற்போதைய சட்டமன்ற தேர்தலுக்குள் புதிதாக தன் ஆதரவாளர்கள் 2,209 பேரை வாக்காளர் லிஸ்டில் இணைத்துவிட்டது. இது ஒரு சாம்பிள். இந்த வகையில் ஒவ்வொரு தொகுதிலும் பல்லாயிரக்கணக்கில் கணக்கில் நீக்கப்பட்டுள்ளனர். போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

# தேர்தல் விதிமுறைகளை மீறி மத்திய அரசின் ஆட்சி பிரதேசமான டெல்லி தேர்தல் நேரத்தில் மத்திய பட்ஜெட் அறிவிப்பும், அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் மற்றும் 12 இலட்சம் வரை வருமான வரிவிலக்கு ஆகியவை அறிவிக்கப்பட்டன.

# ஆம் ஆத்மியில் சீட் மறுக்கப்பட்ட எட்டு எம்.எல்.ஏக்களை தூக்கிச் சென்று வாய்ப்பளித்தது..! மற்றும் தேர்தல் களப் பணியில் இருந்த ஆம் ஆத்மி செயல் வீரர்களை விலை பேசியது..!

# டெல்லியில் குடி இருக்கும் ஒவ்வொரு மொழி பேசும் மாநிலத்தை சேர்ந்த முதல்வர்களை அழைத்து பிரச்சாரம் செய்ய வைத்த வகையில் சந்திரபாபு நாயுடு, நிதீஸ்குமார், ஹரியானா முதல்வர், உபி முதல்வர், குஜராத் முதல்வர் உள்ளிட்ட பலரை களம் இறக்கி ஓட்டு வேட்டையாடியது.

# மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் சில இடங்களை பொறுப்பேற்று அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் ஓட்டுக்கு 2,000 முதல் 3,000 வரை பணப்பட்டுவாடா செய்தது.

# அதிகார வர்க்கம் முழுமையாக பா.ஜ.கவை சார்ந்து செயல்பட்டது. டெல்லி குடி நீர் கலங்கலாக தரப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கும் வரை தரமான குடி நீர் சாத்தியமில்லாமல் போய்விடும். ஆகவே, இரட்டை என்ஞின் ஆட்சி வந்தால் தான் தரமான குடி நீர் நமக்கு விடுவார்கள் என உண்மையிலேயே மக்கள் நம்பும் நிலை உருவாக்கப்பட்டது.

# தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் சுதந்திரமாக மக்களை சந்திக்கவிடாமல் பல தடைகளை ஏற்படுத்தி வழக்குகள் பதிந்தது. அதே சமயம் பா.ஜ.கவின் பண விநியோகம் உள்ளிட்ட எந்த அத்துமீறலையும் தேர்தல் கமிஷன் கண்டும் காணாமல் விட்டது.

# குறிப்பிட்ட ஆம் ஆத்மி தலைவர்கள் நிற்கும் முக்கிய தொகுதிகளில் இ.வி.எம் எந்திரத்தில் செய்யப்பட்ட தகிடு தத்தங்கள்..!

ஆக, கடந்த 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை நெருங்க முடியாமல் இருந்த பா.ஜ கட்சி, இந்த முறை 48 இடங்களில் வெற்றி பெறுவதற்காக சாம , பேத, தான , தண்டம் என அனைத்து ஆயுதங்களையும் பிரயோகித்து, அதிகார அத்து மீறல்களையும், பொய் பிரச்சாரங்களையும் நியாயப்படுத்தும் வகையில் சட்டங்களை வளைத்தும், திருத்தியும் தனது இலக்கை பாரதீய ஜனதா கட்சி அடைந்துள்ளது.

இதற்கு உறுதுணையாக இருந்தது, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளும், நீதி மன்றங்களும். ஆர் எஸ் எஸ் ஸும், அதன் பரிவார அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் , ராமர் சேனா போன்றவற்றின் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் களத்தில் ஆற்றிய பணிகள் இதை சாத்தியமாக்கியுள்ளது.

மேற்படி யாவையும் தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட அராஜகங்கள் என்றால், அதற்கும் முன்பாகவே ஆம் அத்மியை முடக்க பா.ஜ.க என்னெவெல்லாம் செய்தது என்பதை சற்றே பின் நோக்கிச் சென்று பார்ப்போம்.

# டெல்லி முதல்வரின் முதன்மை செயலர் ராஜேந்திர குமார் மற்றும் துணை செயலர் தருண் சர்மா ஆகியோரை சி பி ஐ கைது செய்து மோடியின் அதிகாரம் (power) என்ன என்பதை கெஜ்ரிவாலுக்கு உணர்த்தி அடிபணிய மிரட்டியது.

# கெஜ்ரிவாலுக்கு உண்மையாக இருக்கும் அதிகாரிகளை மிரட்டுவதும், வேவு பார்க்க தூண்டுவதும் மோடி அரசின் கைவந்த கலையாக தொடர்ந்தும் கெஜ்ரிவாலை முடக்க முடியவில்லை.

# தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் நிருவாக மேலாண்மையை முறியடிக்க , 2023 இல்  டெல்லி அரசாங்க சட்டத்தில் (GNCTD Act ) திருத்தங்களை கொண்டு வந்து துணைநிலை ஆளுனருக்கு வானாளாவ அதிகாரங்களை கொடுத்தன் மூலம் டெல்லி அரசாங்கம் எந்த ஒரு அதிகாரியையும் மாற்றவோ நியமிக்கவோ கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.

# அடுத்து புது டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ கட்சியின் தகிடு தத்தங்களை முறியடித்து ஆம் ஆத்மி கட்சி வென்றவுடன் , நகரவை குழுக்களில் (municipal committee) ஆல்டர்மேன் என்ற நபர்களை நியமித்து நகர நிருவாகத்தை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுனருக்கு “அதிகாரம்” வழங்கினர். இதன் மூலம் துணைநிலை ஆளுனர் நியமித்த ஆல்டர்மென்களின் ஒப்புதலின்றி மாநகராட்சி உறுப்பினர்கள் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்ற நிலை உருவானது. டெல்லி மாநகராட்சியில் ஐந்து கோடிக்கு மேலான எந்த வேலைகளையும் ஆம்ஆத்மி கட்சி மேயரால் நகராட்சியில் நடைமுறைபடுத்த முடியாமல் முடக்கப்பட்டது.

# இது போதாதென்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்களின் மேல் ‘மதுபானக் கொள்கை‘ ஊழல் குற்றச்சாட்டை கிளப்பி வழக்குகள் தொடுத்து மொத்த கட்சித் தலைமையையே முடக்கியது மோடி அரசு.

இந்த முனைப்புகளில் ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடும் , நீதிமன்றங்களின் செயல்பாடும் நியாயமாக இருந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி குறியாகும் . நடைமுறையே தண்டனை (process is the punishment) என்ற நிலையில் இவ்வழக்குகள் மோடி அரசின் அறம் பிறழ்ந்த செயல்களாக அறியப்பட்டன.

உளவியல் ரீதியாக கெஜ்ரிவாலின் நன்மதிப்பை (image) களங்கப்படுத்தும் முயற்சியில் அதிகாரத்தில் இருக்கும் மோடி தன்னை யாரும் தொட முடியாது என்ற மமதையில் இத்தனை இழி செயல்களையும் அரங்கேற்றினார்.

45 கோடி செலவில் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டிய முதல்வர் இல்லம் அவரது சாமான்ய மனிதன் என்ற இமேஜை சாய்த்தது. மோடியின் ஆடம்பர ஆடைகளை, பிரதமர் மாளிகை செலவுகளை ஊதாரித்தனமான போட்டோ ஷூட்டுகளை பின்னுக்கு தள்ளி கெஜ்ரிவால்  மீதான குற்றச்சாட்டே மக்களின் கவனத்தை ஈர்த்தது.

யமுனை நதியை சுத்தபடுத்துதல், டெல்லியின் மாசுள்ள காற்றை கட்டுக்கு கொண்டு வருதல், குப்பைகள் மற்றும் கழிவு, மேலாண்மை சுகாதாரம் போன்ற விஷயங்களில் ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கும், டெல்லி தெருக்களின் நெருக்கடிக்கு, போக்குவரத்து நெரிசலுக்கு என அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய பா.ஜ.க அரசு முட்டுக்கட்டை போடுவதால் இரட்டை என்ஞின் ஆட்சியைத் தவிர வேறு வழியில்லை என மக்கள் உணர வைக்கப்பட்டனர்.

ஊழலுக்கெதிரான கட்சி என அறியப்பட்ட ஆம் ஆத்மியின் தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் , துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின், செய்தி தொடர்பாளர் விஜய் நாயர், மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகிய அனைவரும் “ஊழல் குற்றச்சாட்டில்” கைது செய்யப்பட்டு ஏப்ரல் 2024 இல் சிறையில் அடைத்தன் மூலம் அவர்கள் இமேஜை சிதைத்தனர் மத்திய ஆட்சியாளர்கள்!

இத்தனை இன்னல்களையும் மீறி களத்தில் நின்ற கெஜ்ரிவால் எங்கு கோட்டை விட்டார்?

இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்கு விழுக்காடு 43.5% ஆகும், காங்கிரஸ் கட்சி பெற்ற விழுக்காடோ 6.4 % ஆகும் , இரண்டு கட்சிகளின் மொத்த வாக்கு 49.9% விழுக்காடாகும். பா.ஜ கட்சியின் வாக்கு 47.2% ஆக இருப்பதை எண்ணுகையில் இக்கட்சிகள் கோட்டை விட்டதை அறிய முடிகிறது.

13 தொகுதிகளில் ஆம் ஆத்மி தோல்விக்கு காரணமான காங்கிரஸ் வாக்குகள்

பெறக்கூடிய இடங்களும் 36 ஐத் தொடுவதைக் காணலாம் , பா.ஜ.கவை 34 தொகுதிகளுக்குள் அடைத்திருக்கலாம்.

இன்னும் சரியாக சொல்வதென்றால் 13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு காங்கிரஸ் காரணமாக இருந்துள்ளது.

ஒரு தொகுதியைக் கூட பெற முடியாத காங்கிரஸ் ஆம் ஆத்மியுன் கூட்டு கண்டிருந்தால் ஏழெட்டு எம்.எல்.ஏக்களை பெற்று இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், இதெல்லாம் நடைபெற இரு கட்சிகளிடமும் அதற்கான தேவையின் புரிதல் இருந்திருக்க வேண்டும், பா.ஜ.கவை வீழ்த்தும் முனைப்பு இருந்திருக்க வேண்டும்! அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவாலும் தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும். தனது பழைய நேர்மையான தோழர்கள் வழ்க்கறிஞர் பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோர் விலகலுக்கு காரணமான அம்சங்கள் குறித்து சிந்திக்க வேண்டும்.

Tags: